ஆசைத்தம்பி அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னதற்காக, கைது செய்து சிறைச்சாலையில் அடைத்து, மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி அவரை சங்கடப்படுத்தினார்கள் அன்று!
அந்தமானில் அவர் மறைந்ததும் அவருடைய உடலைக் கொண்டுவருவதற்கு குடியரசுத் தலைவர் சொல்லி, தனி விமானத்தில் கொண்டுவரப்பட்டது என்றால்,
இந்தக் கொள்கை ஒருபோதும் தோற்காது, நிச்சயமாக வெற்றியடையும் – மற்றவர்களுக்கு வழிகாட்டும்!
சென்னை, அக்.14 ஆசைத்தம்பி அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னதற்காக, கைது செய்து சிறைச் சாலையில் அடைத்து, மொட்டையடித்து, நிர்வாணப் படுத்தி அவரை சங்கடப்படுத்தினார்கள் அன்று. அந்தமானில் அவர் மறைந்ததும் அவருடைய உடலை அங்கிருந்து கொண்டுவருவதற்கு குடியரசுத் தலைவர் சொல்லி, தனி விமானத்தில் கொண்டு வரப்பட்டது என்றால், இந்தக் கொள்கை ஒருபோதும் தோற்காது, நிச்சயமாக வெற்றியடையும் – மற்றவர்களுக்கு வழி காட்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா
கடந்த 1.10.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிட இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இந்த இயக்கம் அந்தக் காலத்தில் எப்படி நடந் திருக்கிறது, எப்படி வளர்ந்திருக்கிறது என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
கலைஞர், அன்றைக்கே பேசினார்.
ஆசைத்தம்பியின் புத்தகம் தடை செய்யப்பட்டதும் – திருச்செங்கோட்டில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் மழை பெய்தபோதும் நடந்தது.
‘‘சிறைச்சாலை என்ன செய்யும்?
சிரைக்கச் செய்யும்’’
‘‘சிறைச்சாலை என்ன செய்யும் என்று கொடுமுடி கோகிலம் (கே.பி.சுந்தராம்பாள்) பாடிய பாட்டை இன்றைக்கு நாம் திருப்பிக் கூறுகிறோம். களங்காணத் துடித்து நிற்கும் காளையாகிய நம் கர்ஜனையைக் கேட்கும் காருண்ய சர்க்காரே, நமக்கு வேடிக்கையான பதிலைத் தருகிறது. ‘‘சிறைச்சாலை என்ன செய்யும்? சிரைக்கச் செய்யும்” என்று நடத்திக் கொண்டிருக்கிறது” என்றார் கலைஞர்.
ஆசைத்தம்பி சிறைச்சாலைக்குள் போய்விட்டார். அதற்குப் பிறகு அவருடைய புத்தகத்தை அச்சடித்து வெளியிட்டார்கள். தடை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் மீண்டும் அச்சடித்து வெளியிடப்பட்டது.
இந்த இயக்கம் இன்றைக்கு எப்படி ஆட்சிக்கு வந்தது? எப்படி இன்றைக்குக் கோட்டையில் இருக் கிறது? சில பேர் இந்த இயக்கத்தை அசைத்துப் பார்க்க லாம் என்று நினைக்கின்ற பைத்தியக்காரர்கள் தெரிந்து கொள்வதற்காகச் சொல்கிறோம் – இந்த இயக்கம் ஆயிரங்காலத்துப் பயிர். இதனுடைய அடித்தளம் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது.
இந்த இயக்கத்திற்குக் குழிதோண்டலாம் என்று யாரா வது நினைத்தால், அவர்கள்தான் குழிக்குள் போவார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலை இந்த இயக்கத்தில் ஆசைத் தம்பி போன்றவர்களின் உழைப்பினால் மிகப்பெரிய அளவிற்கு இருக்கிறது. சிறைச்சாலைக்குள் இருந்து ஆசைத்தம்பி அவர்கள் வெளியே வருகிறார்.
ஆயிரம் விளக்குத் தொகுதியில்
போட்டியிட்டு வெற்றி பெற்றார்
விருதுநகரைச் சேர்ந்த நம்முடைய ஏ.வி.பி.ஆசைத் தம்பி அவர்கள் சென்னைக்கு வந்து குடியேறுகிறார். சென்னையில் அப்பா அன்ட் கோ நிறுவனம் நடத்திய வெங்கடசாமி நாயுடு என்பவர் சென்னையில் செல்வாக் குள்ளவர். அவரை எதிர்த்து, ஏ.வி.பி.ஆசைத்தம்பி சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆசைத்தம்பி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்று இங்கே சொன்னார்கள். அது ஒரு வேடிக்கையான கதை.
நெருக்கடி காலத்தில் எங்களையெல்லாம் கைது செய்து சிறைச்சாலைக்குள் வைத்திருந்தார்கள். நாங்கள் எல்லாம் ஒரு குழுமம் போன்று இருந்தோம். திராவிடர் கழகத்துக்காரர்கள் 12 பேர்; தி.முக..வில் நூற்றுக்கும் மேற் பட்டோர். ஓராண்டு சிறைச்சாலையில் இருந்தபொழுது, நாள்தோறும் ஒன்றாகத்தான் சாப்பிடுவோம். மதிய சாப்பாட்டிற்கு வரிசையில் நின்றுதான் சாப்பாடு வாங்கவேண்டும். என்னையும், ஆசைத்தம்பியையும் பார்த்து,‘‘நீங்கள் வரிசையில் நிற்கவேண்டாம்; நாங்கள் வாங்கித் தருகிறோம்” என்று சொல்லி, சாப்பாட்டை வாங்கி என்னுடைய அறையில் வைத்துவிடுவார்கள்.
எதைப்பற்றியும் கவலைப்படாதவர்!
ஆசைத்தம்பி அவர்கள், திராவிடர் கழகத்துக் காரர்களோடுதான் அமர்ந்து சாப்பிடுவார்.
ஆசைத்தம்பி அவர்கள் எதைப்பற்றியும் கவலைப் படாதவர். மிகவும் கலகலப்பானவர். தோழர்கள் சிலர் அமைதியாகவும், கவலையோடும் இருப்பார்கள்.
அவர்களைப் பார்த்து இவர், ‘‘என்னய்யா, எப்படி இருக்கிறீர்கள்? எப்பொழுது வீட்டிற்குப் போகலாம் என்றுதானே, யோசிக்கிறீர்கள். நாளைக்குப் போகப் போகிறோம், கவலைப்படாதீர்கள், மகிழ்ச்சியாக, நிம்மதி யாக இருங்கள்” என்று சொல்வார்.
நாங்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடு வோம். சாப்பிடும்பொழுது ஆசைத்தம்பி அவர்களைத் திரும்பிப் பார்ப்பேன் – அந்தக் காட்சி எனக்கு இன்னமும் மறக்கவில்லை – 1976, ஜனவரி மாதம்.
2 ஆம் தேதி நாங்கள் எல்லோரும் சிறைச்சாலையில் தாக்கப்பட்டோம். அன்றைக்குத்தான் நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தாக்கப்பட்டார். சிட்டிபாபுவுக்கு நடைபெற்ற கொடுமைகளையெல்லாம் சொன்னார்கள்.
இவ்வளவு கொடுமைகள் நடந்த சூழ்நிலையில், மேயராக இருந்தவரை வேண்டுமென்றே, திட்டமிட்டு அவமானப்படுத்தினார்கள்.
இதையெல்லாம் தாங்கிக் கொண்டிருந்தோம். எங்க ளுடைய சாப்பாட்டில் வேப்பெண்ணையை ஊற்றிக் கொடுப்பார்கள். இதையெல்லாம் தாண்டி ஓரளவிற்கு வந்த பிறகு, அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
‘விடுதலை’ அலுவலகத்திலிருந்து சொந்த செலவில் பத்திரிகைகளை வாங்கி அனுப்பி விடுவார்கள்
‘‘சார், என்ன செய்தி?” என்று ஆசைத்தம்பி கேட்பார்.
என்னுடைய அறை என்பது ‘ரீடிங் ரூம்’ போன்றது. எல்லா பத்தரிகைகளையும், ‘விடுதலை’ அலுவலகத்தில் இருந்து சொந்த செலவில் வாங்கி அனுப்பி விடுவார்கள். அப்படி வருகின்ற பத்திரி கைகளில் கருப்பு மையைத் தடவவேண்டிய இடத்தில், தடவித்தான் கொடுப்பார்கள்.
திராவிடர் கழகத்தில் மாவட்டச் செயலாளராக இருந்த குணசீலன் அவர்கள், ‘‘ஏங்க, ஆசைத்தம்பி சார், ஆசிரியருக்குத்தான் இத்தனை பத்திரிகை வருகிறதே, இங்கே வந்து அமர்ந்து, பத்திரிகைகளைப் படிக்கலாம் அல்லவா! ஒவ்வொரு முறையும் சாப்பிடும்பொழுது, என்ன தகவல் என்று ஆசிரியரிடம் கேட்கிறீர்களே?” என்றார்.
சிறைச்சாலையில் கஷ்டமான சூழ்நிலையை – கலகலப்பான வாழ்க்கை முறையாக மாற்றிக்கொண்டோம்!
மிகவும் நகைச்சுவையாகவும், கலகலப்பாகவும் இருந்தது சிறைச்சாலை வாழ்க்கை என்பதற்காகச் உங்களுக்குச் சொல்கிறேன். கஷ்டமான வாழ்க்கையாக அதை நாங்கள் தள்ளவில்லை. கஷ்டமான சூழ்நிலை யைத்தான் அவர்கள் ஏற்படுத்தினார்கள். அதை நாங்கள் கலகலப்பான வாழ்க்கை முறையாக மாற்றிக்கொண் டோம். நம்முடைய மனப்பான்மையைப் பொறுத்ததுதான் அது.
உடனே ஆசைத்தம்பி அவர்கள் சிரித்துக்கொண்டே, ‘‘யோவ், குணசீலன்! அவர் நமக்கு ஆசிரியர். அவர்தான் செய்திகளையெல்லாம் படித்துவிடுகிறார் அல்லவா – பிறகு ஏன் நாம் இன்னொரு முறை படிக்கவேண்டும். அவர் படித்துவிட்டு, நமக்குச் சொல்கிறார் அல்லவா, அது போதும்” என்பார்.
தேர்தல் வரப் போகிறது – நாங்களும் வெளியில் போகப் போகிறோம்.
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நில்லுங்கள் என்றேன்!
நாங்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்பொழுது பல செய்திகளைப்பற்றி பேசுவோம். அப்படி பேசிக் கொண்டிருந்த பொழுது, ‘‘ஏ.வி.பி. சார், ஒரு முக்கியமான யோசனை” என்பேன்.
‘‘என்ன சார், சொல்லுங்கள்” என்பார் அவர்.
‘‘அடுத்து தேர்தல் வரப் போகிறது; நீங்கள் மறுபடியும் சட்டப்பேரவை உறுப்பினராகவேண்டாம்; நீங்கள், பார்லிமெண்டிற்குப் போகவேண்டும்; வடசென்னை தொகுதியில் நில்லுங்கள்” என்றேன்.
‘‘நல்ல யோசனைதான்!” என்றார்.
அதேபோன்று, வடசென்னையில் நின்றார், வென்றார்.
அவரிடம் ஏதாவது முக்கியமான கருத்துகளை சொன்னால், உடனே அவர், அதை அப்படியே நாடாளு மன்றத்தில் பதிவு செய்துவிடுவார்.
ஆசைத்தம்பி அவர்களை
தந்தை பெரியார் மிகவும் பாராட்டுவார்
தந்தை பெரியார் அவர்கள், ஆசைத்தம்பி அவர் களை மிகவும் பாராட்டுவார். ஆசைத்தம்பி அவர்கள் வீடு வாங்கியதும், முதலில் அய்யாவையும், மணியம் மையாரையும் அழைத்து விருந்து வைத்தார். அவருடைய இல்ல நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்.
எனவே, ஆசைத்தம்பி அவர்களை, சுற்றுலாத் துறையின் வாரியத் தலைவராக கலைஞர் அவர்கள் நியமித்தார்.
பதவி என்பது அவருக்கு மிகச் சாதாரணம்; பதவியை எதிர்பார்த்து இந்த இயக்கத்திற்கு யாரும் போகவில்லை.
அடக்குமுறை, எவ்வளவு பெரிய அடக்குமுறை என்றால், அது சாதாரணமா? எவ்வளவு பெரிய அசிங்கங் கள் அன்றைக்கு நடைபெற்றன.
ஒரு பெரிய வரலாற்றை
உருவாக்கியவர் ஆசைத்தம்பி!
இவ்வளவையும் தாங்கிக்கொண்டிருந்தவர்கள், தனக்கு இந்தப் பதவி வரவில்லையே, அந்தப் பதவி வரவில்லையே என்றெல்லாம் கவலைப் பட்டவர்கள் கிடையாது.
கொள்கைக்காகத்தான் நாம் வாழ்கிறோம்; அந்தக் கொள்கையைத்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஒரு பெரிய வரலாற்றை அவர்கள் உருவாக்கினார்.
எனவேதான், அவருடைய நூற்றாண்டு விழாவை நாம் இங்கே கொண்டாடுகிறோம் என்று சொன்னால், அவருடைய படத்தினை இங்கே திறந்து வைத்திருக்கிறோம் என்று சொன்னால், இந்தப் படத்தை இன்றைய இளைய தலைமுறை யினர் பார்க்கும்பொழுது, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும் என்பதை உணர்வார்கள்.
அதற்குரிய விலை கொடுத்து வாங்கவேண்டும்!
பெரியார்தான் சொல்வார், ‘‘ஒரு லட்சியம் ஒரு மனிதனுக்கு இருந்தால், அந்த லட்சியத்தை அவன் இலவசமாகப் பெறக்கூடாது; அதற்குரிய விலை கொடுத்து வாங்கவேண்டும்” என்பார்.
அதற்குரிய விலைதான் சிறைவாசம்; அதற்குரிய விலைதான் அடக்குமுறை; அதற்குரிய விலைதான் அவருடைய வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்டது.
ஒரே ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால், கவிஞர் அவர்கள் இங்கே சொன்னதுபோன்று, ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள் நீண்ட காலம் இருந்திருக்கவேண்டும்; கெட்ட வாய்ப்பு அவர் நீண்ட காலம் இல்லாததுதான். பேராசிரியர் போன்று, கலைஞர் போன்று, அய்யா போன்று அவர் வாழ்ந்திருக்கவேண்டும். அப்படி அவர் வாழ்ந்திருந்தால், நமக்கு நிறைய செய்தி கள் கிடைத்திருக்கும். இயக்கத்தை எப்படி வேகமாகக் கொண்டு செல்வது போன்ற பணிகளை செய்திருப்பார்.
மனதில் பட்டதை
மிகவும் துணிச்சலாக எடுத்துச் சொல்வார்!
ஏனென்றால், எதைப்பற்றியும் அவர் கவலைப்பட மாட்டார்; மனதில் பட்டதை மிகவும் துணிச்சலாக எடுத்துச் சொல்வார்.
அவருடைய குடும்பத்தினரை இன்றைக்குச் சந்தித்தில் மகிழ்ச்சி. வெயிலுமுத்து அவர்களானாலும் சரி, அவருடைய வாழ்விணையராக இருந்தாலும் சரி, இங்கே தொடர்புடன்தான் இருந்தார்கள். ஒரு சிறிய பிரச்சினையாக இருந்தாலும், அந்த அம்மையாரும், அந்த அய்யாவும் இங்கே வருவார்கள்.
கொள்கை உறவு, குருதி உறவு என்று சொல்கிறோமே – ஆசைத்தம்பி அவர்கள் அந்தமானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்குச் செல்கிறார். அங்கே அவருக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்துவிடுகிறார்.
அப்பொழுது கலைஞர் அவர்கள் எவ்வளவு துடித்துப் போனார் என்பது எங்களுக்குத் தெரியும்.
அந்தமானிலிருந்து அவரது உடலைக் கொண்டுவர
கலைஞர் அரும்பாடுபட்டார்!
அந்தக் காலகட்டத்தில், அந்தமானுக்குத் தொலைப்பேசியில் தொடர்பு கொள்வதற்குக்கூட வசதிகள் கிடையாது. அவருடைய உடலை இங்கே கொண்டுவரவேண்டும் என்பதற்காக அரும்பாடு பட்டார் கலைஞர் அவர்கள்.
எந்த அளவிற்குக் கலைஞர் அவர்கள் தொண்டர் நாதனாக இருப்பார். ‘‘உடன்பிறப்பே!’ என்று எழுதுகிறார் பாருங்கள், அதற்கு பெரிய அளவிற்கு, அவரை மதிக்கிறார்கள்; ஏன் இயக்கத் தோழர்கள் அவரிடம் பாசத்தோடு இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் என்னவென்றால்,
குடியரசுத் தலைவராக இருந்த சஞ்சீவிரெட் டியை தொலைப்பேசியில் தொடர்புகொண்டார், நேரிடையாக கலைஞரே பேசினார்; ஆசைத்தம்பி யினுடைய உடல் தனி விமானத்தில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற் குரிய ஏற்பாடுகளை குடியரசுத் தலைவர் செய்தார்.
அதற்குப் பிறகுதான் ஆசைத்தம்பி அவர்களு டைய உடல் தமிழ்நாட்டிற்கு வந்தது.
இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கின்றபொழுது, நாம் நினைத்துப்பார்க்கவே முடியாது.
இந்தக் கொள்கை ஒருபோதும் தோற்காது- நிச்சயமாக வெற்றியடையும்!
இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஒரு கருத்தைச் சொன்னதற்காக, கைது செய்து சிறைச்சாலையில் அடைத்து, மொட்டையடித்து, நிர் வாணப்படுத்தி அவரை சங்கடப்படுத்தினார்கள்.
இன்னொன்று, அந்தமானிலிருந்து அவருடைய உடலைக் கொண்டுவருவதற்கு குடியரசுத் தலைவர் சொல்லி, தனி விமானத்தில் கொண்டுவரப்பட்டது என் றால், இந்தக் கொள்கை ஒருபோதும் தோற்காது. நிச்ச யமாக வெற்றி யடையும். மற்றவர்களுக்கு வழிகாட்டும்.
ஏனென்றால், இந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தால், நாம் கண்டிப்பாக வெற்றியடைவோம். வெற்றி – தோல்வி என்பது மனதைப் பொறுத்ததுதானே தவிர, நமக்கொன்றும் பரிசைப் பொறுத்ததல்ல.
இந்த உணர்வுகளுக்காகத்தான் இந்த நூற்றாண்டு விழா. இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரியவேண்டும்; இந்தப் பாதை எப்படிப்பட்டது என்று.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதை!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஒரு கவிதை எழுதினார் – சோலையைப் பார்க்கிறார் – மற்ற கவிஞர் கள் அதைப் பார்த்தவுடன், சோலையில் பூக்கள் பூத்திருக்கின்றன; காதலன் வந்தான், காதலி போனாள் என்றெல்லாம் எழுதுவார்கள்.
ஆனால், பாரதிதாசன், புரட்சிக்கவிஞர் ஆயிற்றே – அவர் எழுதுகிறார்,
‘‘சித்திரச் சோலைகளே,
உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே- முன்னர்
எத்தனைத் தோழர்கள் இரத்தம்
சொரிந்தனரோ, உங்கள் வேரினிலே!” என்று.
இவ்வளவு அழகான பூங்கா ஏற்பட்டு இருக்கிறதே, இதனை உருவாக்க எத்தனைப் பேர் பாடுபட்டிருப்பார்கள்; அவர்களுடைய ரத்தம் எவ்வளவு சிந்தியிருக்கும்.
திராவிட இயக்கக் கொள்கைகள்
நடைமுறைக்கு வந்திருக்கிறதே!
அதுபோன்று இந்த இயக்கத்தில் ஆசைத்தம்பி போன்றவர்களுடைய உழைப்பு – இவ்வளவு பெரிய இயக்கமாக, உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய இயக்கமாக இன்றைக்கு ஆக்கி இருக்கிறது. அந்தக் கொள்கைகள் எல்லாம் வெற்றியடைந்து, இன்றைக்குத் திராவிட இயக்கத்தில், பெண்ணுரிமைகளாக இருந்தாலும், மற்றவர்கள் என்னென்ன நினைத்தார்களோ, அத்தனை கொள்கைகளும் – ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு எல்லாம் நடைமுறைக்கு வந்துவிட்டதே!
இந்த இயக்கத்தைப் பார்த்து இன்றைக்கு ஏன் பார்ப்பனர்கள் அலறுகிறார்கள்? ஸநாதனம் என்ற பெயரில் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? என்பதை நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.
நாளைக்கு காந்தியாரின் பிறந்த நாள் (அக்.2) – ‘‘காந்தியார் சாந்தி அடைய” என்ற புத்தகத்தில் தெளிவாக கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்.
கடைசி காலகட்டத்தில்
காந்தியார் உணர்ந்தார்!
காந்தியாருடைய தத்துவங்கள் என்ன? என்று வரும்பொழுது, ‘‘நான் நினைப்பது வேறு; நீங்கள் (பார்ப்பனர்கள்) செய்திருப்பது வேறு” என்று கடைசி காலகட்டத்தில் காந்தியார் உணர்ந்தார். அதைத்தான் பெரியார் அய்யா டைரியில் எழுதி வைத்திருக்கிறார்.
காந்தியார் கேட்டார், ‘‘வேதம் ஓதுதல்தானே வேதியர்க்கு அழகு; உங்களுக்கு எதற்கு மெடிக்கல் காலேஜில் இடம் கிடைக்கவில்லை என்ற கவலை; உனக்கு எதற்கு என்ஜினியரிங் காலேஜில் இடம் கிடைக்கவில்லை என்ற கவலை” என்று கேட்டார்.
இனிமேல் காந்தியாரை விட்டு வைத்தால், அது சரியாக இருக்காது என்று நினைத்தார்கள் பார்ப்பனர்கள்.
ஆங்கிலேயர்களுக்குப்பின் ஆட்சியை நாம் வைத்திருந்தோம். ஆனால், அந்த ஆட்சி ஒருபோதும் மதச்சார்புள்ள ஆட்சியாக இருக்கக் கூடாது என்று சொன்னார்.
தந்தை பெரியார் எழுதிய டைரியில்…
தந்தை பெரியார் அவர்கள் டைரியில் இதை எழுதி வைத்திருக்கிறார். இப்படி சொன்ன காந்தியார், 28 நாள்களில் கொல்லப்பட்டார் என்று.
இந்தக் கருத்தை தெளிவாக அன்றைக்கே மிகத் தெளிவாக இளைஞர்கள் மத்தியில் சொல்லி, இன்றைக்கும் அதுதான் நமக்கு சவாலாக இருக்கிறது.
எல்லா உரிமை பறிப்புகளையும் எதிர்க்கவேண்டும்!
அன்றைக்கு ஆசைத்தம்பி எதை மய்யப்படுத்தினாரோ – ஆசைத்தம்பி அவர்களுடைய கருத்து – ‘‘காந்தியார் சாந்தி அடைய” என்ற தலைப்பில் வெளிவந்த புத்தகத்தில், என்னென்ன ஆபத்துகள் அடுத்து வரவிருக்கிறது என்று சொல்லி, எந்த ஆபத்துகள்பற்றி எச்சரிக்கை செய்தாரோ, அந்த ஆபத்துதான் பின்னாளில், ஒரு மதம், ஜாதிப் பிரிவுகள் என்ற அடிப்படையில், எல்லா உரிமை பறிப்புகளையும் எதிர்க்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தார்கள்.
எனவேதான், ஆசைத்தம்பி அவர்களுடைய நூற்றாண்டு விழா என்பது வெறும் பகட்டான விழா மட்டுமல்ல; அவருடைய படத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய பாடம் இவை அத்தனையும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆசைத்தம்பியின் நூற்றாண்டு விழா!
இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், பாராட்டவேண்டிய விஷயம் என்னவென்றால், முதலில் தாய்க்கழகம் அவருடைய நூற்றாண்டை நடத்துகிறது; இரண்டாவதாக, திராவிட முன்னேற்றக் கழகம் வருகின்ற 13 ஆம் தேதி நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆசைத்தம்பி அவர்களுடைய படத்தினைத் திறந்து வைத்து, நூற்றாண்டு விழாவினை நடத்தவிருக்கிறார் என்பது பெருமைக்குரிய ஒரு செய்தியாகும்.
உறவுகள் எப்பொழுதும் பிரிக்கப்பட முடியாதவை – பலமானவை!
மீண்டும் இந்தக் குடும்பத்து உறவுகளுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், எப்பொழுதும் போல் திராவிட இயக்கத்திற்கு உங்களுடைய பங்கை அளித்து, சிறப்பான நல்ல அளவிற்கு இந்த உறவுகளைப் புதுப்பித்தது மட்டுமல்ல – உறவுகள் எப்பொழுதும் பிரிக்கப்பட முடியாதவை – பலமானவை என்று சொல்லக்கூடிய உணர்வைக் காட்டுங்கள்.
எங்கள் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!!
வாழ்க பெரியார்!
வாழ்க ஆசைத்தம்பி அவர்களுடைய நற்றொண்டு!
வருக அவர் காண விரும்பிய சமுதாயம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.