சென்னை,அக்.14- இமாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரீந்தர்பால் சிங். தொழில் அதிபரான இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
என்னுடைய தொழில் நிறுவன வளர்ச்சிக்காக ரூ.70 கோடி கடன் பெற்று தருவதாகவும், அதற்கு பதிவு கட்டணம் மற்றும் முத்திரை தாள் கட்டணம் என ரூ.1.40 கோடி வாங்கி, ஒரு கும்பல் மோசடி செய்து விட்டது. ரூ.70 கோடிக்கான போலி வரைவோலையை காட்டி அவர்கள் என்னை மோசம் செய்துவிட்டனர். அந்த மோசடி கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, என்னிடம் பறித்த ரூ.1.40 கோடி பணத்தை மீட்டுத் தரும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது-.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ரேவதி, உதவி ஆய்வாளர் லோகேஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் காரைக் குடியைச்சேர்ந்த ராஜசேகர் (வயது 65), சென்னை போரூர், ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ரஜிதா (36), கலை ஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த ராமு (36), வளசர வாக்கத்தைச் சேர்ந்த தசரதன் (30) ஆகியோர் அதிரடி யாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 1 லட்சம் ரொக்கப்பணம், 2 கார் மற்றும் போலியான ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டவர் ராஜசேகர். இவர் பல்வேறு கட்சிகளில் இருந்துள்ளார். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டி யிட்டதாக கூறப்படுகிறது. தற்போது பா.ஜ.க. மாநில விவசாய அணி நிர்வாகியாக இருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.
நாகை – இலங்கை துறைமுகங்களுக்கிடையே
பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது
நாகை,அக்.14- நாகை துறைமுகத்தில் நடை பெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து கப்பல் சேவையை தொடங்கிவைத்தனர்.
நாகையிலிருந்து காங்கேசன் துறைக்குச் செல்ல ரூ.7,670 கட்டணமாகும். தொடக்க விழாவை முன்னிட்டு, இன்று ஒரு நாள் மட்டும் கட்டணச் சலுகையாக, இலங்கை செல்லும் பயணிகளுக்கு (சிங்கிள் ட்ரிப்) பயணச்சீட்டு விலை ரூ.3 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இலங்கையில் இருந்து நாகைக்குவர வழக்கம்போல ரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக் கட்டணம் ஜிஎஸ்டி வரி உட்பட ரூ.7.670 ஆகும்.
150 பயணிகள் வரை பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ள இந்த கப்பலில் இன்று (14.10.2023) 50 பயணிகள் இலங்கைக்குப் புறப்பட்டனர்.
பயண நேரம்: நாகையில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன் துறையை இந்த கப்பல் 3.30 மணி நேரத்தில் சென்றடையும். இந்த கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் தினமும் தலா ஒருமுறை இயக்கப்படும். இந்தக் கப்பல் பயணத்தின்போது பயணிகள் அதிகபட்சம் 52 கிலோ எடை கொண்ட உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும்.
இந்தப் பயணிகள் கப்பல் அன்றாடம் காலை 7 மணிக்கு நாகையில் இருந்து புறப்படும் இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பகல் 12 மணிக் குச் சென்றடையும். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும்.