சேலம் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் சீரும் சிறப்புமான 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

viduthalai
6 Min Read

♦ உயிர்ப் பலி ‘நீட்’ ஒழிக்கப்படும்வரை நம் போராட்டம் ஓயாது! ஷிஇந்துக்களின் முக்கியமான எதிரி பி.ஜே.பி.யே!
♦கலைஞரின் மாநில சுயாட்சித் தீர்மானம் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிகாரங்களை வழங்கிடுக!
♦மாநிலப் பட்டியலில் கல்வி, மருத்துவத்தைக் கொண்டு வருக! ஷிஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிடுக!

மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை
ஏற்படுத்திட சூளுரைப்போம்! சூளுரைப்போம்!!
சேலம் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் சீரும் சிறப்புமான 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சேலம், ஜன.22 மாநில சுயாட்சி, ‘நீட்’ ஒழிப்பு, ஆளுநர் பதவி அறவே அகற்றம், மாநிலப் பட்டியலில் கல்வி, மருத்துவம், மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் உள்ளிட்ட 25 சிறப்பான தீர்மானங்கள் சேலத்தில் நேற்று (21.1.2024) நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
அவை வருமாறு:

உயிர்ப்பலி நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது!

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத் துத் தங்கை அரியலூர் அனிதா முதல் சென்னை ஜெகதீஸ்வரன் வரை 22 உயிர்களைப் பறித்துள்ள நீட் தேர்வு, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பல மாண வர்களின் உயிர்களைப் பறித்து வருவதுடன், ஒன்றிய பா.ஜ.க அரசின் ஆதரவு பெற்ற பயிற்சி நிறுவனங்கள், ஒவ்வொரு மாணவரிடமும் லட்சக்கணக்கில் கட்டணம்அரசு, தமிழ்நாடு

வசூலித்து கொள்ளை லாபம் அடைவதற்கு மட்டுமே துணை போகிறது என்பதால், நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும் என்கிற உறுதியினை வழங்கி, 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதியின்படி, நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் பேராதரவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இரண்டு முறை நிறைவேற்றியும், ஜனநாயக மாண்புகளை மதிக்காமல் செயல்பட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு முழுவதும் 2023 ஆகஸ்ட் 20 அன்று உண்ணாநிலை அறப்போரை முன்னெடுத்த இளைஞரணி, அதனைத் தொடர்ந்து நீட் விலக்கு-நம் இலக்கு என்ற முழக்கத்துடன் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முதல் கையெழுத்துடன் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நேரடியாகவும் ஆன்லைனிலும் நடத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 50 இலட்சம் கையெழுத்துகளுக்கும் அதிகமாகப் பெற்று மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டியுள்ள நிலையில், நீட் ஒழிக்கப்படும்வரை ஜனநாயக முறையிலான போராட்டங்களையும், சட்ட வழியிலான போராட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தைப் பலி கொடுக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொடூர மனப்பான்மையை இந்திய அளவில் அம்பலப்படுத்தி, நீட் தேர்வு ஒழிப்பில் இறுதி வெற்றியை முழுமையாகப் பெற்றே தீரும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

மாநிலப் பட்டியலுக்குக் கல்வி-மருத்துவத்தை மாற்றுக!

நீட் தேர்வு, முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடங்களுக்கான இடஒதுக்கீடு, தேசிய கல்விக் கொள்கை வாயிலாக இந்தி ஆதிக்கம் என பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்திலும் ஒன்றிய அரசின் ஆதிக்கம் நீடிப்பது என்பது அந்தந்த மாநிலத்தின் மொழி- பண்பாடு-திறன் மேம்பாடு ஆகியவற்றைச் சிதைக்கும் நோக்கத்தில் இருப்பதாலும், இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு நேரெதிரானது என்பதாலும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியையும் மருத்துவத்தையும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கான சட்ட வழிமுறைகளை இளைஞரணி முன்னெடுக்கும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிடுக!

மக்களாட்சியின் மாண்பு என்பது ஜனநாயகப் பூர்வமான தேர்தல் களத்தில் வாக்காளர்களாகிய மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றத்தின் சுயாட்சிமிக்கச் செயல்பாடுகளேயாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சியில்லாத மாநில அரசுகளை, நியமனப் பதவியான ஆளுநர் பதவியைக் கொண்டு செயல்படவிடாமல் தடுக்க முயற்சித்து, ஆளுநர்களைக் கொண்டு இணை அரசாங்கம் நடத்துவதற்குத் திட்டமிடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கினைக் கண்டிப்பதுடன், ஆளுநர் பதவி என்ற ‘தொங்கு சதை’யை நிரந்தரமாக அகற்றுவதே, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தீர்வு என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

கலைஞரின் மாநில சுயாட்சித் தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிடுக!

மாநிலங்களின் ஒன்றியமாகத் திகழும் இந்தியா, உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை நோக்கி முன்னேற வேண்டுமென்றால், மாநில அரசுகள் வலிமை கொண்டவையாகத் திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் 1969 ஆம் ஆண்டு முதன் முதலாக முதலமைச்சரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நீதியரசர் ராஜமன்னார் தலைமையிலான குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளைப் பெற்று, ஆலோசனைகள் மேற்கொண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1974 ஆம் ஆண்டில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களிலும் மாநில சுயாட்சிக்கான குரல் ஒலித்து வருகிறது. கூட்டாட்சி அடிப்படையிலான இந்திய ஒன்றிய அரசு, சுயாட்சிமிக்க மாநில அரசுகள் என்பதே ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும். அதிகாரக் குவிப்பைத் தகர்த்து, அதிகார பரவலாக்கத்தை முன்னெடுக்கும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய மாநில சுயாட்சி தீர்மானத்தின் அடிப்படையில், தற்போதைய தேவைகளையும் இணைத்து, மாநில அரசுகளின் அதிகாரத்தை வலிமைப்படுத்திட வேண்டும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.
இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான் என்பதை அம்பலப்படுத்துவோம்.

10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சமையல் சிலிண்டர் விலை, பெட்ரோல்-டீசல் விலை ஆகியவற்றைக் கடுமையாக உயர்த்தி, மக்களை வாட்டி வதைப்பதும், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வதாரத்தைப் பாதிக்கச் செய்ததுமே வேதனை மிகுந்த சாதனைகளாக இருக்கின்றன. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காகும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், ஏழை-எளிய மக்களை நடுஇரவில் நடுரோட்டில் நிறுத்திய ஒன்றிய பா.ஜக. அரசு, கறுப்புப் பணத்தையும் ஒழிக்கவில்லை, கறுப்புப் பணத்தை ஒழித்து, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாய் போடுவதாகக்கூறி, சல்லிப் பைசாவையும் போடவில்லை. தனது வாக்குறுதிகள் அனைத்திலும் தோல்வியடைந்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, மக்களுக்குச் செய்த துரோகங்களை மறைக்க, மதவாத அரசியலை முன்னெடுத்து, அயோத்தி இராமர் கோவிலை வைத்து வாக்குகள் பெற்றுவிடலாம் என நினைப்பது ஆன்மிகவாதிகளையும் ஏமாற்றும் செயலாகும். நாட்டில் உள்ள இந்துக்களில் பெரும்பான்மையான மக்களை 10 ஆண்டுகாலமாக ஏமாற்றிவிட்டு, இராமர் கோவிலைக் காட்டி, இந்துக்கள் ஓட்டுகளை வாங்கிவிடலாம் என அரசியல் கணக்குடன், கடவுளையும் ஏமாற்ற நினைக்கும் இந்து மக்களின் உண்மையான எதிரியான பா.ஜ.க.வின் மதவாத அரசியலை வீடு வீடாக அம்பலப்படுத்தும் பரப்புரையை இளைஞர் அணி மேற்கொள்ளும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான சூளுரை

சமூக நீதி- மத நல்லிணக்கம்-சமத்துவம்-மாநிலங்களின் உரிமைகள்-தாய்மொழி வளர்ச்சி, பரவலான பொருளாதாரக் கட்டமைப்பு, மனித உரிமை இவற்றைக் கொள்கைகளாகக் கொண்ட இயக்கங்களின் ஒருங்கிணைப்பான ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்குவதிலும், வழிகாட்டுவதிலும் முன்னணி பங்காற்றி வருபவரும், மனிதநேய சக்திகளை ஒன்றிணைத்தால், பாசிசத்தை வீழ்த்திக் காட்ட முடியும் என 2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டியவருமான ‘திராவிட மாடல்’ முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், இயங்கும் கழக இளைஞர் அணி, கழகத் தலைவரின் கட்டளைக்கேற்ப 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் முன்னின்று செயலாற்றி, தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, ‘ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்’ என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும் வகையில், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டும் எனச் சூளுரைக்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *