தொடங்கியது தி.மு.க. இளைஞரணி எழுச்சி மாநாடு!
இலட்சக்கணக்கில் இளைஞர்கள், பொதுமக்கள் கடல்!
நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு
இந்தியாவையே ஒருங்கிணைக்கும் ‘திராவிட மாடல்’ மாநாடு!
‘‘சேலம் செயலாற்றும் காலம்” என்ற அண்ணாவின் கருத்துக்குக் கட்டியம் கூறியது!
சேலம், ஜன.21 தொடங்கியது தி.மு.க. இளைஞரணி எழுச்சி மாநாடு! இலட்சக்கணக்கில் இளைஞர்கள், பொதுமக்கள் கடல்! நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு இந்தியாவையே ஒருங்கிணைக்கும் ‘திராவிட மாடல்’ மாநாடு! ‘‘சேலம் செயலாற்றும் காலம்” என்ற அண்ணாவின் கருத்துக்குக் கட்டியம் கூறியது!
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத் தில் இன்று (21.1.2024) திமுக இளைஞரணியின் 2ஆவது மாநில மாநாடு தொடங்கியுள்ளது. பிரம் மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு அரங் கில் சுமார் 5 லட்சம் பேர் வரை குழுமியுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்குமுன் நடக்கும் தி.மு.க. இளைஞரணி மாநாடு
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை திமுக தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் நாடாளுமன்றத் தேர் தலுக்கு முன்பாக திமுக இளைஞரணி மாநில மாநாட்டை நடத்த திமுக தலைமை முடிவு செய்தது.
இந்த மாநாட்டை சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன் பாளையத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது திமுக இளைஞரணியின் 2 ஆவது மாநில மாநாடாகும். ஆனால், மிக்ஜாம் புயல் பாதிப்பால் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற இருந்த இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து டிசம்பர் 24 ஆம் தேதி மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட சேலம் திமுக இளைஞரணியின் மாநில மாநாடு இன்று (21.1.2024) நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களும், உதயநிதி ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் பேச உள்ளனர்.
மாநாட்டுச் சுடரை ஏற்றி வைத்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
இந்த மாநாட்டுக்கான நிகழ்ச்சி என்பது நேற்றே (20.1.2024) தொடங்கி விட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதாவது திமுக இளைஞரணி மாநாட்டின் சுடரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றி உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இதேபோல் நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள 1,500 பேர் கொண்ட இருசக்கர வாகனப் பேரணியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தலைவர்களின் ட்ரோன் ஷோ!
இதன் பிறகு மாநாட்டு திடலில், 1,500 ட்ரோன்களைக் கொண்டு ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது. திராவிட இயக்க தலைவர் தந்தை பெரியார், சட்ட மேதை அம்பேத்கர், மேனாள் முதலமைச்சர்களான அண்ணா, கலைஞர் ஆகியோரின் உருவங்கள் வானில் ஜொலித்தன. இவர்கள் தவிர திமுகவின் சின்னமான உதயநிதி சூரியன், தமிழ்நாடு வரைபடம் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டன. இது அனைவரையும் கவரும் வகையில் வித்தியாசமாக இருந்தது.
மேலும் தாரை தப்பட்டை, கரகாட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதையடுத்து இன்று (21.1.2024) திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. திமுக எம்பியும், கட்சியின் பொதுச்செயலாளருமான கவிஞர் கனிமொழி, மாநாட்டுத் திடலில் உள்ள கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, மாநாட்டுப் பந்தலை மாணவரணிச் செயலாளர் எழிலரசன் திறந்து வைத்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு மேடைக்கு வந்தார். இதன்மூலம் மாநாடு தொடங்கியது.
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
தீர்மானங்கள் வாசிப்பு, மொழிப் போர் தியாகிகளின் படத்திறப்பு, திமுக முன்னணி தலைவர்கள் உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
மாநாட்டில் திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி உரையாற்றினர். தொடர்ந்து எழுத்தாளர் வே.மதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், திருநங்கை ரியா, ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் ஆகியோரைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினர்.
இந்த மாநாட்டுக்காக பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு பந்தலில் 1.25 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டு நிகழ்ச்சிகளை அனைவரும் காணும் வகையில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கே ஒளிவீசும் ‘திராவிட மாடல்’ மாநாடு!
திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் அறுசுவை அசைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும் எதிர்பார்ப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்த திமுகவின் மாநில இளைஞரணி மாநாடு திமுகவிற்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் ‘திராவிட மாடல்’ வழிகாட்டும், ஒன்றிணைக்கும் மாநாடக – நன்னம்பிக்கை ஊட்டும் மாநாடாக வரலாறு சொல்லும், திராவிடம் வெல்லும் மாநாடு என்ற முத்திரையைப் பொறிக்கும் மாநாடு இது! ‘‘சேலம் செயலாற்றும் காலம்” என்றார் அறிஞர் அண்ணா அதற்கான வடிவமே இம்மாநாடு என்பதில் அய்யமில்லை.