பொங்கல் விழா ஊட்டும் விஞ்சிய உணர்வு
திராவிடர் உரிமையே! உழவர் அருமையே!
கவிஞர் நந்தலாலா தலைமையில் பட்டிமன்றம்!
தொகுப்பு: வி.சி.வில்வம்
தஞ்சாவூர் மாவட்டம் கண்ணந்தங்குடி கீழையூரில், ஆண்டுதோறும் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்!
குறிப்பாக மோகனா வீரமணி அறக்கட்டளை சார்பாகப் பல்வேறு நலத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன!
இருபது ஆண்டுகளாக மோகனா வீரமணி அறக் கட்டளை கிராம மக்களை ஒருங்கிணைத்துத் திராவிடர் திருநாளைக் கொண்டாடுவதுடன், உரத்தநாட்டில் இருக்கும் அரசுப் பள்ளிக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்! குறிப்பாக சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் பள்ளியில் நடைபெற்று வருகின்றன. அதற்கான செலவு களையும் மோகனா வீரமணி அறக்கட்டளையே ஏற்றுக் கொள்கிறது. தவிர 10, 12 ஆம் மாணவர்களுக்குப் பரிசு வழங்குவதும் தொடர்ந்து நடைபெறுகிறது!
திராவிடர் கழகத் தோழர்கள் கடவுள் இல்லை என்பார்கள், மதம், ஜாதி வேண்டாம் என்பார்கள் என யாரும் கோபித்துக் கொள்வதில்லை. காரணம் தோழர்கள் செய்யும் கல்விப் பணிகள், மாணவர்களை நாம் கொண்டாடும் விதம், அனைத்துக் குடும்பங்களிலும் நாம் காட்டும் அன்பு, பாசம், இதுதவிர இயல்பான நமது மனிதநேயச் செயல்பாடுகள் என ஒவ்வொன்றும் மறுக்க முடியாத சிறப்பாக இருந்து வருகிறது! அப்படித்தான் கண்ணந்தங்குடி கீழையூரில் 20 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது மோகனா வீரமணி அறக் கட்டளை விழா!
சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பட்டிமன்றம்!
ஒவ்வோர் ஆண்டும் கலை நிகழ்ச்சிகளும், உரை வீச்சுகளும் இருக்கும்! இந்தாண்டு பட்டிமன்றமும், பாட்டு மன்றமுமாகக் கலந்து, கிராமத்தையே சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துவிட்டனர்! ஜனவரி 15 அன்று, கவிஞர் நந்தலாலா தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தின் தலைப்பு, “பொங்கல் விழா ஊட்டும் விஞ்சிய உணர்வு… திராவிடர் உரிமையே! உழவர் அருமையே! என்பதாக இருந்தது. ‘திராவிடர் உரிமையே’ என்கிற அணியில் மாநிலக் கிராமப் பிரச்சார அமைப்பாளர் அதிரடி அன்பழகன், கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா இருவரும் பேச, ‘உழவர் அருமையே’ என்கிற அணியில் கழகப் பேச்சாளர்கள் இராம.அன்பழகன், வழக்குரைஞர் சு.சிங்காரவேலர் பேசினர்.
தொடக்கத்திலும், இறுதியிலும் பேசிய கவிஞர் நந்தலாலா உரையின் சாராம்சம் வருமாறு: அறிவார்ந்த பட்டிமன்றம் தொடங்க இருக்கிறது எனப் பலமுறை இங்கே குறிப்பிட்டார்கள். ஆக இது வெறும் பட்டிமன்றம் அல்ல; அறிவார்ந்த பட்டிமன்றம் என்பதே இதன் பொருள்!
ஆக அறிவை வளர்க்காத பட்டிமன்றங்களும் இருக்கிறது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். பொதுவாகத் திராவிடர் கழகக் கூட்டங்களில் பேசுவது என்பது மனசோடு பேசுவதைப் போன்றது! எந்தத் தயக்கமும் இல்லாமல், மனதில் உள்ளதை அப்படியே பேச எல்லா மேடைகளும் ஒத்துழைப்பதில்லை! திராவிடர் கழகக் கூட்டங்கள், சொந்த வீட்டில் பேசுகின்ற சுதந்திரத்தைத் தரும்!
ஆச்சரியப்படுத்தும் வாசிப்புப் பழக்கம்!
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்விணையர் மோகனா அம்மையார் பெயரில் 20 ஆண்டு காலமாக அறக்கட்டளை நடத்தி, கல்விப் பணிகள் செய்வது போற்றக்கூடிய ஒன்று! அம்மையார் அவர்களை மிகவும் மதிக்கக் கூடியவன் நான்! ஆசிரியர் அவர்கள் கூட ஒருமுறை கூறினார்கள். தம் வாழ்விணையர் எல்லா கூட்டத்திற்கும் வருவதில்லை. ஆனால் நீங்கள் பேசினால் அவர்கள் வருவார்கள் என்றார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது!
பொதுவாகத் தமிழ்நாட்டில் அறிவுப் பரப்பலைத் தொடர்ந்து செய்து வருபவர் நம் ஆசிரியர் அவர்கள்! அரசியல் மற்றும் சமூகம் சார்ந்து வாழும் தமிழ்நாட்டுத் தலைவர்களில், நேற்று வந்த புத்தகத்தை இன்றே படித்து விடுகிற ஒரே தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தான்! ஆச்சரியப்படுத்துகிற வாசிப்புப் பழக்கம் அவரிடம் இருக்கிறது!
யார் தலைவர்?
இங்கே அருமையான தலைப்புக் கொடுத் திருக்கிறார்கள்! “பொங்கல் விழா ஊட்டும் விஞ்சிய உணர்வு திராவிடர் உரிமையே! உழவர் அருமையே! நண்பர்களே! தமிழ்நாட்டில் பெரியாரின் தாக்கம் இல்லாமல் எதுவுமே நடைபெற்றதில்லை! யார் சிறந்த தலைவர் தெரியுமா? பாடப் புத்தகத்தில் பிறப்பு, இறப்பு குறிப்பிட்டு, அவரின் பணிகளை எழுதினால் இரண்டு மதிப்பெண்கள் என்பார்களே அவர்கள் தலைவர்கள் இல்லை. மாறாக ஒருவர் எழுப்பிய கேள்விகளிலும், செய்த செயல்களிலும் எந்தச் சமூகம் ஊறித் திளைக்கிறதோ, அவருக்குப் பெயர் தான் தலைவர்!
கண்ணந்தங்குடி கீழையூரில் பேசுகின்ற இந்த வாய்ப்பிற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கு மற்றொரு காரணமும் உண்டு. நான் பெரிதும் மதிக்கிற, எனது நூலில் அவர் குறித்து ஒரு கட்டுரை கூட எழுதி இருக்கிறேன், “மக்கள் கலெக்டர் மலையப்பன்!” என்று. அவரது ஊரில் பேசுகிறேன். தந்தை பெரியார் வாழ்வில் சந்தித்த முதல் நீதிமன்ற அவமதிப்பு கலெக்டர் மலையப்பன் தொடர்பானது தான்!
தீர்ப்பைக் கண்டித்து எழுதிய பெரியார்!
திருச்சியில் 3 ஆண்டுகள் மாவட்ட ஆட்சித் தலைவராக மலையப்பன் அவர்கள் இருந்த போது, நிலம் சம்பந்தமாக ஒரு பிரச்சினை வந்தது. மிராசு தாரர்களுக்கும், உழவர்களுக்கும் ஏற்பட்ட சிக்கலில் மலையப்பன் நியாயமாக நடந்து கொண்டார். இதை எதிர்த்து நிலவுடைமையாளர்கள் நீதிமன்றம் சென்றனர்.
அங்கிருந்த இரண்டு பார்ப்பன நீதிபதிகள், சம்பந்தமே இல்லாமல் “இவர் கலெக்டராக இருப்பதற்குத் தகுதி உள்ளவரா?’, எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இச்செய்தி வெளியானவுடன், முதல் நபராக ‘விடுதலை’யில் கண்டித்து எழுதினார் பெரியார்! அதுவே பின்னாளில் நீதிமன்ற வழக்காக மாறியது. பெரியார் நீதிமன்றத்தில் கூறினார், “கலெக்டர் மலையப்பன் அவர்களை நான் பார்த்தது இல்லை, பேசியதும் இல்லை, எங்களுக்குள் எந்த அறிமுகமும் இல்லை. எனினும் அவர் நியாயமானவர் என்பதை அறிகிறேன். அதே நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பார்ப்பனர்களே மாவட்ட ஆட்சிய ராக இருக்க, பார்ப்பனர் அல்லாதவராக ஒரே ஒரு மலையப்பன் தான் இருக்கிறார். அவரையும் நீக்கப் பார்க்கிறீர்களா?” எனக் கேட்டார்.
நாதஸ்வர சக்கரவர்த்தி
டி.என்.இராஜரத்தினம்!
தமிழ்நாட்டு விசயங்களில் பெரியார் மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால், இவ்வளவு மாற்றத்தை நாம் கண்டிருக்க முடியாது! பெரியார் செல்வாக்கு செலுத்தாத எதுவும் தமிழ்நாட்டு வரலாற்றில் கிடையாது! அரசியல் முதல் இசை வரை அனைத்திலுமே பெரியாருக்குப் பங்குண்டு! இதோ… தஞ்சாவூருக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது திருவையாறு. அங்கே தியாகராஜருக்குச் சமாதி இருக்கிறது. அந்த இடத்தில் கூடித்தான் கர்நாடக சங்கீத வித்வான்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடுவார்கள். அது இன்றளவும் பெருமிதமாகப் பார்க்கப்படுகிறது. அந்த தியாகராஜர் சமாதிக்கு அருகே பார்ப்பனர் அல்லாதோர் போக முடியாத காலம் ஒன்றிருந்தது. புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.இராஜரத்தினம் (பிள்ளை) ஒருமுறை உள்ளே போக முயற்சி செய்தார். பார்ப்பனர்கள் தடுத்து நிறுத்திவிட்டனர்.
பார்ப்பனர் அல்லாதோர் உள்ளே போகக் கூடாது என வெளிப்படையாக சொல்ல முடியாதல்லவா? எனவே ஒரு நிபந்தனை விதித்தார்கள். தம்புரா சுதிக்கு ஏற்ப, நாதஸ்வரம் வாசித்தால் உள்ளே போகலாம் எனக் கூறினர். அப்படி வாசித்து தான் டி.என்.இராஜரத்தினம் (பிள்ளை) உள்ளே சென்றார். பார்ப்பனர் அல்லாத ஒருவர் உள்ளே சென்றதிற்கு பின்னால் இருந்தவர் பெரியார் தான்!
புனிதமும் இல்லை!
புடலங்காயும் இல்லை!!
பெரியார் என்ன செய்தார் என இப்போது சிலர் கேட்கிறார்கள். கணவனை இழந்த பெண் சதியில் விழும்போது, படுகிறபாடு இருக்கிறதே, அதைவிட கொடுமை வேறு இருக்கிறதா? உடன்கட்டை ஏறும் நிகழ்வை ஒரு பிரிட்டிஷ்காரர் நேரில் பார்த்துச் சில குறிப்புகள் எழுதினார். இந்தியா புனித நாடு என்று கோவில், கோவிலாகக் கட்டுகிறார்கள். இங்கே புனிதமும் இல்லை; புடலங்காயும் இல்லை என்பதே உண்மை.
வயதான ஒரு கிழவன் மரணம் அடைகிறார். அவரின் இளம் வயது மனைவி உடன்கட்டை ஏற தயாராக இருக்கிறார். அந்தப் பெண்ணிடம் எந்த அசைவுகளும் காணப்படவில்லை. இரண்டு பேர் நம்மை அடித்தால், சிறிய எதிர்ப்பையாவது நாம் வெளிப்படுத்துவோம். ஆனால் அந்தப் பெண் அப்படியே அமர்ந்துள்ளார். ஈரப் புடவை ஒன்றைப் பெண்ணின் மீது சுற்றுகிறார்கள். அந்தக் கிழவனின் உடலின் அருகே இந்தப் பெண் தானாகச் சென்று படுத்துக் கொள்கிறார். சிறிது நேரத்தில் மந்திரங்கள் ஓதப்படுகின்றன, சாஸ்திரங்கள் சொல்லப்படுகிறது. பிறகு நெய் ஊற்றி, நெருப்பு வைத்துக் கொளுத்தி விடுகிறார்கள். “இது என்ன நாடு தானா?”, என அந்த வெள்ளைக்காரர் எழுதுகிறார். இந்தப் பதிவிற்குப் பிறகு இந்தியாவில் ‘சதி’ குறித்த விழிப்புணர்வுகள் வரத் தொடங்கின. இப்படியான ‘சதி’யை ஒழித்து, சொத்துரிமை வரை பெண்களுக்கு ஆதரவாக இருந்தது திராவிடர் இயக்கம்!
ஓடும் ரயிலுக்கு யாது மந்திரம்?
‘யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது உருவான இடம் தமிழ்நாடு தானே! தமிழ்மொழியில் உருவான சிந்தனைகள் தானே இவை! ஒரு செய்தி சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படக் கூடும்! “ஓடும் ரயிலுக்கு யாது மந்திரம்? நீராவி யந்திரம் வேதியர் கண்டதா?”. இப்படி ஒரு கேள்வியை 1882 இல் அத்திவாக்கம் வெங்கடாசல நாயகர் என்பவர் கேட்டுள்ளார். ஹிந்து மத ஆசார ஆபாச தர்ஷினி என்கிற நூலை அவர் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தையும் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்தவர் பெரியார் தான்! அதேபோல உடன்கட்டை ஏறும் பெண்களின் நகைகளை வேதியர் எடுத்துச் செல்வதைத் “திருட்டு” என்று வெங்கடாசல நாயகர் பதிவு செய்கிறார். அதேபோல விந்தன் என்பவர் ஒரு அறிவுச்சுவடி ஒன்றை எழுதினார். அதை ஆசிரியர் தான் வெளியிட்டார்கள். “ஊழ்வினை என்பது உன்னை ஏய்க்கவே! சொர்க்கம் என்பது சுரண்டி வாழவே!’ என எழுதினார். இதைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்றார் விந்தன். ஆக வெங்கடாசல நாயகர், வள்ளலார், பெரியார் போன்ற சிந்தனைகளின் தொடர்ச்சி தான் தமிழை, தமிழ்நாட்டை, திராவிடர்களைக் காப்பாற்றி வருகிறது என்பதை நாம் அறிய வேண்டும்!
கடவுள் ஒரு கல் முதலாளி!
இந்தியாவில் பலவகையான சுரண்டல்கள் உண்டு. நான் நேர்மையாக சொல்கிறேன்! பொருளாதாரச் சுரண்டலை விட, பண்பாட்டுச் சுரண்டலே இங்கு அதிகமாக நடந்துள்ளது. இதை ஆய்வு நோக்கில் , கிராம்சி என்கிற மார்க்சிய அறிஞரும் கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன்னரே கடவுளை “கல் முதலாளி” என்றவர் பெரியார். கடவுளை ஏன் பெரியார் எதிர்த்தார் என்பதைத் தொழிலாளர்கள் சிந்திக்க வேண்டும். ஒரு முதலாளி எப்படி தொழிலாளர்களைச் சுரண்டுவாரோ, அப்படித்தான் இந்தக் கல்லை வைத்து பார்ப்பனர்கள் சுரண்டி வருகிறார்கள். இப்படியான நிலையில் இருந்து நாம் மீள வேண்டும். நம் பொருளாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்!
இன்றைக்கு உழவர்கள் இந்த அளவிற்குப் போற்றப்படுகிறார்கள் என்றால், அதற்குத் திராவிட சித்தாந்தமே காரணம். ஏனெனில் உழவை ‘நீஷ’ தொழில் என்றார்கள் பார்ப்பனர்கள். உழவே தலை என்றார் வள்ளுவர்! வான்சிறப்பு என்கிற ஒரு அதிகாரம் போதும் வள்ளுவருக்கு! நீரின் தோற்றத்தை, அதன் சிறப்பை உலகம் முழுவதும் பலர் பேசினார்கள். ஆனால் இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நீரின்றி அமையாது உலகு என்று சொன்னவர் வள்ளுவர். அதுவும் மழைக்கான ஆதாரம் வானிலிருந்தே கிடைக்கிறது என்பதையும் கூறியவர். எனவே இப்பட்டிமன்றத்தின் தீர்ப்பாக, பொங்கல் விழா ஊட்டும் விஞ்சிய உணர்வு திராவிடர் உரிமையா, உழவர் அருமையா என்றால், உழவர்களின் அருமை யையும் ஏற்றுக் கொண்ட திராவிடர் உரிமையே எனக் கூறி முடிக்கிறேன்”.
இவ்வாறு கவிஞர் நந்தலாலா பேசினார்.