சுயமரியாதைத் திருமணமும் – சட்டமும்

viduthalai
3 Min Read

இசையின்பன்

1928ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி அருப்புக்கோட்டை அருகில் உள்ள சுக்கிலநத்தம் கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது.
மிகப் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. 5000க்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்து, நடக்கவிருக்கும் அதிசயத்தைக் காண ஆவலாக பார்த்திருந்தனர்.
அப்படியென்ன நடக்கப் போகிறது? பெரிய பெரிய தலைவர்களெல்லாம் வருகிறார்களாமே, குறிப்பாக, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வர்றாராமே!
அதுவும் எதற்கு? அய்ய ரெல்லாம் இல்லாமல், அருந்ததி பார்க்காமல், அம்மி மிதிக்காமல் ஒரு கல்யாணம் நடக்கப் போகுதாமே!
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அய்யா நடத்தி வைக்க போகிறாராமே!
கூடியிருந்த மக்கள் சலசலத்துக் கொண்டே இருந்தனர்.
ஊர் எல்லையிலிருந்து மாபெரும் வரவேற்புடன் தந்தை பெரியாரும், தலைவர்களும் ஊர்வலமாக 3 கி.மீ. வரை அழைத்து வரப்பட்டனர்.
விழா மேடையில் மணமகன் – மண மகள்கள் மேடைக்கு வந்த தலைவர்களை வணங்கினர். மணமக்கள் கதராடை அணிந்திருந்தனர். ஆடம்பரமான ஆடையோ, அணிகலன் களோ கிடையாது.
மணமகன் பெயர் ரெங்கசாமி ரெட்டியார்.
மணமகள்கள் நாகரத்தினம், ரத்தினத்தாயம்மாள் என இருவர்.

ஞாயிறு மலர்

வியப்பாக உள்ளது அல்லவா!!
அந்தக் காலத்தில் இருதார மணமெல்லாம் தடை செய்யப்படவில்லை.
மணமகள்கள் இருவருமே அரங்கசாமியைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாது என்று உறுதியாக இருந்ததால் அவர்கள் விருப்பப்படியே இந்தத் திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் உறுதிமொழி கூற, மணமக்களும் உறுதி மொழியேற்று மாலை மாற்றி தாலி கட்டிக் கொண்டனர்.
அப்போது, “சுயமரியாதைக்கு ஜே! வைக்கம் வீரருக்கு ஜே!!” என்ற முழக்கங்கள் கிராமத்தையே அதிரவைத்தன.
வரலாற்றுப் பெருமை வாய்ந்த முதல் சுயமரியாதைத் திருமணம் என்கிற சிறப்போடு தந்தை பெரியார் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.
பின் அந்த மேடையிலேயே கோபால்சாமி ரெட்டியார் – கமலத்தம்மாள், சிரோன்மணி அம்மாள் என்ற இரு பெண்களை இதே போன்று சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.

ஞாயிறு மலர்

பின்பு, அதே நாளில் பார்ப்பனரை வைத்து சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்யவிருந்த மாரி செட்டியார் என்பவர், “எனக்கும் இந்த முறையிலேயே சடங்குகளில்லாமல் திருமணம் நடக்க வேண்டும், இந்த மேடையிலேயே செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்க, ஏற்கெனவே திருமணம் செய்த இரு வீட்டாரும் பெரிய மனதுடன் ஒத்துக்கொள்ள பகல் 12 மணியளவில் கூடியிருந்த பெருமக்கள் திரள வாழ்த்துகளுடன் மூன்றாவதாக சுயமரியாதைத் திருமணமும் நடைபெற்றது.
இப்படியாக 28-5-1928 வரலாற்று சிறப்புமிக்க நாளாக மாறிப் போயிற்று. அதன்பிறகு பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் தந்தை பெரியார் தலைமையில், திராவிட இயக்கத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றன. கெடு வாய்ப்பாக, அப்போ திருந்த காங்கிரஸ் அரசோ, நீதிமன்றங்களோ இந்தத் திருமண முறையை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால், அன்றைய சுயமரியாதை இயக்கத் தோழர்களும், பிற்காலங்களில் திராவிடர் கழகத் தோழர்களும், சட்ட அங்கீகாரத்தைப் பற்றி கவலைப்படாமல் சுயமரியாதைத் திருமணங்களை செய்து கொண்டே இருந்தனர். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் முறை தவறி (Illegitimate Child) பிறந்தவர்களாக சட்டம் கருதியது.
நல்வாய்ப்பாக 1967ஆம் ஆண்டு தி.மு.க. அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ஆட்சிக்கு வந்தது. தந்தை பெரியார் அவர்களுக்கே இந்த ஆட்சி காணிக்கை என்று கூறிய முதலமைச்சர் அண்ணா அவர்கள், பெரியாருடைய கொள்கைகளை நிறைவேற்றுவதே எங்கள் இலட்சியம் என்று வாய்ச் சொற்களாக இல்லாமல் நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

ஞாயிறு மலர்

அதில் முக்கியமானதாக சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரத்தை அளிப்பதை தன் தலையாய பணியாக எடுத்துச் செய்தார்.
சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்து, விவாதங்கள் நடைபெற்று, அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு 27-11-1967 அன்று சுயமரியாதைத் திருமணம் சட்டமன்ற அவையிலும், பிறகு அப்போதிருந்த மேலவையிலும் நிறைவேற்றி 17-1-1968 குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று 20-1-1968 அரசிதழில் வெளியிடப்பட்டு சட்ட வடிவமானது.
இதோ, இப்போது பெரியார் திடலில் இயங்குகின்ற பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் வாயிலாக ஆயிரக்கணக்கான ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணங்களாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழி காட்டுதலின்படி செவ்வனே நடைபெற்று வருகின்றது.
இதோ, 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற சுயமரியாதை ஜாதி மறுப்புத் திருமணங்கள் எண்ணிக்கை:
96 ஆண்டுகளுக்கு முன் ஒரே ஜாதிக்குள்ளே தொடங்கப் பெற்று சுயமரியாதைத் திருமணம் இப்போது ஜாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்கும் மிக முக்கிய காரணியாக இருந்து வருகிறது.
வாழ்க சுயமரியாதைத் திருமணம்!
வளர்க ஜாதிகளற்ற மனித நேயம்!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *