‘பிரதமராக பதவியேற்றதும் மாநிலங்களுக்கான வரி வருவாயின் அளவைக் குறைக்க நிதி கமிஷனை நிர்பந்திக்க மோடி முயன்றார்’ என நிட்டி ஆயோக்கின் தலைவர் பி.வி.ஆர்.சுப்ரமணியம் கூறியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளிவந்துள்ள செய்தியில் கூறப் பட்டுள்ளதாவது:
“2014-இல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற உடன், மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கணிசமாகக் குறைக்க இந்திய நிட்டி ஆயோக்கிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
எனினும், ஒன்றிய வரிகளிலிருந்து மாநிலங்களின் பங்குகளை தீர்மானிக்கும் தன்னாட்சி அரசியலமைப்பான நிட்டி ஆயோக் இதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து பிரதமர் மோடி பின்வாங்க வேண்டிய தாயிற்று.
அத்துடன், மோடி அரசாங்கம் தனது முதல் முழு நிதி நிலை அறிக்கையை 48 மணி நேரத்தில் அவசரமாக மறுசீரமைத்தது. மேலும், ஒன்றிய வரிகளில் பெரும்பகுதியை தக்கவைத்துக்கொள்ளும் அதன் நோக்கம் நிறைவேறாததால், நலத்திட்டங்களுக்கு வழங்கும் நிதியின்மீது கை வைத்தது.
அதே நேரத்தில், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வரிப் பங்குகள் குறித்த நிதி கமிஷனின் பரிந்துரைகளை வரவேற்பதாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறாகக் கூறினார்.
ஒன்றிய நிதி நிலை அறிக்கை தயாரிப்பில் நிதி பேரம் மற்றும் திரைக்குப் பின்னால் நடந்த நிகழ்வுகள் பற்றிய இந்த தகவல்கள் அரசாங்க நிதி ஆலோசனைக் குழுவான நிட்டி ஆயோக்கின் தலைவர் பி.வி.ஆர். சுப்ரமணியத்திடமிருந்து வந்தது. பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக இருந்த அவர், பிரதமர் மோடிக்கும் நிட்டி ஆயோக் தலைவர் ஒய்.வி.ரெட்டிக்கும் இடையே நடந்த பின்கதவுப் பேச்சுவார்த்தையில் தொடர்பாளராக இருந்தார்.
பிரதமரும் அவரது குழுவும் தொடக்கத்தில் இருந்தே மாநிலங்களின் நிதியைக் குறைக்க முயல்கின்றனர் என்பது மாநிலங்களால் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டாக இருந்து வரும் நிலையில், தற்போது இந்திய அரசாங்கத்தில் உள்ள ஓர் உயர் அரசு அதிகாரியே பகிரங்கமாக அந்தக் குற்றச்சாட்டை அம்பலப்படுத்தி விட்டார். இந்தப் பிரச்சினை பேருரு எடுத்துள்ளது.
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மய்யம் (சிஎஸ்இபி) என்ற அரசு சாரா சிந்தனைக் குழுவால் கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியாவின் நிதிநிலை அறிக்கை குறித்த கருத்தரங்கில் குழு உறுப்பினராகப் பேசும் போது சுப்ரமணியம் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
அவரது கருத்துகளில் அரசின் வரவு செலவுத் திட்டங்கள் எவ்வாறு “உண்மையை மறைக்கும் முயற்சியின் அடுக்குகளாக உள்ளன” என்பதை அவர் வெளிப்படுத்தினார். இவ்வாறு அரசு அதிகாரி ஒருவர் பகிரங்கமாக தகவலை வெளிப்படுத்தியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
கணக்குகள் வெளிப்படையாக இருந்தால், அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய கணக்கியல் நடைமுறைகளை கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் எவ்வாறு வெளிப்படுத்தியதோ, அதேபோன்று அரசாங்கத்தின் நிதி நிலையின் உண்மையும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் என்று கூறியிருந்தார்.
பத்தாண்டுகளுக்கு முந்தைய நிதி நிலை அறிக்கை மற்றும் பிற ஆவணங்களுக்கு எதிரான சுப்ரமணியத்தின் கூற்றுக் களை “ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்” சுயாதீனமாக சரிபார்த்தது.
அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டத்தில் கையாடல் மற்றும் நிதி மோசடி பற்றிய விவரங் களையும் சுப்பிரமணியம் வெளியிட்டிருந்தார்.
இவர் பேசியது இணையதளம் ஒன்றில் நேரடியாக ஒளி பரப்பாகியது சிறிது நேரத்தில் அந்த ஒளிபரப்பு நிறுத்தப் பட்டது.”
இந்த விவகாரம் அரசியல் அரங்கில் விவாதங்களை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிப்படையான அரசு என்று மார்தட்டிக் கொள்ளும் மோடி அரசின் உள்ளீடான குற்றங்கள் மற்றும் இரகசிய செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. மக்களவைத் தேர்தலுக்குள் இன்னும் இன்னும் எத்தனைப் பூகம்பங்கள் வெடிக்குமோ!