ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள “ஒரே நாடு ஒரே தேர்தல்” முறை குறித்து அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவிற்கு திராவிடர் கழகத்தின் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேனாள் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களை தலைவராகக் கொண்டுள்ள குழுவிற்கு திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய கடிதத்தில் உள்ள கருத்துகள் பின்வருமாறு:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்னும் பெயர் பெற்ற இந்தியாவின் தேர்தல்களை ஜனநாயகத் திருவிழா என்று சுட்டுவதுண்டு.
பல்வேறு தேசிய இன, மொழி, மத, கலாச்சாரமிக்க மக்கள் வாழும் பன்மைத்துவமிக்க ஒன்றியமாக இருப் பதால் தான், இதனை இந்தியத் துணைக்கண்டம் என்றும் அழைக்கிறோம்.
பன்மைத்துவம் தான் இந்தியாவின் பலம். அதைப் பாதுகாப்பதில் தான் இந்திய மக்களின் நலம் மட்டுமல்ல… இந்தியா என்ற கட்டமைப்பின் நலமும் இருக்கிறது.
இதற்கு முற்றிலும் குந்தகம் விளைவிக்கும் யோசனைதான் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதாகும்.
பல்வேறு ஆட்சிகளின் கீழ் இருந்த மாநிலங்களை ஒன்று திரட்டி, நிர்வாக வசதிக்காகப் பிரிட்டிஷ் இந்தியா என்ற பெயரில் ஆட்சி செய்த நிலப்பரப்பை வைத்தே, ஏறக்குறைய அதே வடிவில் சுதந்திர இந்தியா உருவாக்கப்பட்டது.
அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டு, அதன் அடிப் படையில் உருவான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று மதச்சார்பற்ற, ஜனநாயக, சோசலிசக் குடியரசு நாடாக இந்தியா உருவாக்கப்பட்டது. அதன் பின் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டாலும், அவை இந்திய நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்ட பின்னரே திருத்தப்பட்டிருக்கின்றன.
இந்த ஆரோக்கியமான போக்கு அண்மைக் காலத்தில் அருகி வருகிறது. இந்திய நாடாளுமன்றத்தில் முன்வைத்து விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங் களையும், நாடாளுமன்றத்துக்கு உள்ளே விவாதிக்கும் சூழலைத் தவிர்க்கும் போக்கை ஆளும் அரசு கடைப் பிடித்து வருகிறது.
இந்நிலையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்னும் ஆபத்தான திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக உயர் மட்டக் குழு உருவாக்கப்பட்டு அதன் மீது கருத்துத் தெரிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டமே விவாதத்திற்குரிய ஒன்றாகும். அதைச் செயல்படுத்துவது என்னும் எண்ணமே இந்தியாவுக்கு ஆபத்தான ஒன்றாகும். ஆனால், உயர்மட்டக் குழுவோ, இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதன் நடைமுறைகளைப் பற்றியும், ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதன் சாதக பாதகங்களை ஆராய்வதற்கும் மட்டுமே அமைக்கப் பட்டுள்ளது. முதலில் சிந்திக்கப்பட வேண்டியது இத்திட்டத்தின் அடிப்படை சரியா தவறா என்பதைத் தான்.
1. இந்திய மக்களவைக்கும் மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது,
2. அதன் மூலம் தேர்தல் நடத்துவதற்கான செலவு களைக் குறைப்பது
3. இந்திய மக்களவைக்கும், மாநில சட்டமன்றங் களுக்கும் பதவிக் காலத்தை நிர்ணயிப்பது ஆகியன இத் திட்டத்தின் அடிப்படை நோக்கங்களாகும்.
மக்களவையும், மாநிலங்களவையும் 5 ஆண்டு களுக்கு மிகாமல் செயல்படும் என்பதைத் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது.Article 83(2) in The Constitution Of India 1949
Article 83(2) in The Constitution Of India 1949
(2) The House of the People, unless sooner dissolved, shall continue for five years from the date appointed for its first meeting and no longer and the expiration of the said period of five years shall operate as a dissolution of the House: Provided that the said period may, while a Proclamation of Emergency is in operation, be extended by Parliament by law for a period not exceeding one year at a time and not extending in any case beyond a period of six months after s the Proclamation has ceased to operate.
Article 172(1) in The Constitution Of India 1949
(1) Every Legislative Assembly of every State, unless sooner dissolved, shall continue for five years from the date appointed for its first meeting and no longer and the expiration of the said period of five years shall operate as a dissolution of the Assembly: Provided that the said period may, while a Proclamation of Emergency is in operation, be extended by Parliament by law for a period not exceeding one year at a time and not extending in any case beyond a period of six months after the Proclamation has ceased to operate.
71 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்துவரும் சுதந்திர இந்தியாவின் தேர்தல்கள் மூலம் நாம் தெரிந்து கொண்டிருப்பதும் இதைத் தான்.
5 ஆண்டு காலம் முழுமையாகப் பதவி வகிக்க முடியாத நிலைமை இந்திய நாடாளுமன்ற மக்கள வைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் பல முறை ஏற்பட்டுள்ளது.
மக்களவை / சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழத்தல், ஆட்சிக் கலைப்பு, கட்சிகள் உடைவு/ உடைப்பு ஆகியவற்றின் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சிகள் அதிக பட்ச பதவிக் காலமான 5 ஆண்டுகள் என்ற இலக்கை எட்டத் தவறிய நிகழ்வுகள் ஏராளம்.
ஆறு மாத கால இடைவெளியின்றி, சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ மீண்டும் கூட வேண்டும். காலம் முடிவதற்குள் மீண்டும் கூடும் வகையில் அதற்கேற்ப தேர்தல் நடைபெறும்.
ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் பெயரில் நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்துவதற்காக தற்போது ஆட்சியிலிருக்கும் மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலத்திற்கு முன்பு ஒரு நாள் குறைத்தாலும் அது ஜனநாயக விரோதம்; அரசியலமைப்புச் சட்ட விரோதமே!
மாநில சட்டமன்றங்களில் பெரும்பான்மை பெற்று ஆட்சி நடத்தும் கட்சி, தனது பெரும்பான்மையை இழந்தால் நிலை என்ன? எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை இல்லாத நிலை ஏற்பட்டால் மீண்டும் அங்கு தேர்தல் நடத்தாமல் ஆளுநர் ஆட்சியை நடைமுறைப் படுத்தி, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் காலம் வரை மக்கள் பிரதிநிதிகளும், மாநில அரசும் இன்றி மறை முகமாக ஒன்றிய அரசு ஆள்வது இந்திய அரசியலமைப்புக்கும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் பேராபத்து ஆகாதா?
இந்திய அரசியலமைப்பின்படியே மாநில அரசுகளுக்குத்தானே ஆள்வதற்கு மக்கள் உண்டு. தங்களின் உண்மையான அரசைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை மறுப்பது எப்படி ஜனநாயகமாகும்.
மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சியை உடைத்து, ஒன்றியத்தில் ஆளும் கட்சியே மாநிலத்தில் ஆளும் வகையில், கட்சித் தாவலை ஊக்குவித்து, ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கும் அவலம் – ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் கொடுமை அண்மைக் காலமாக இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தங்களுக்கு ஆதரவான அரசை அமைக்க முடியாவிட்டால், மாநிலத்தில் அரசமைக்கும் வாய்ப்பை எவருக்கும் வழங்காமல் ஆளுநர் மூலம் பறித்து, ஒன்றிய அரசே 5 ஆண்டு காலம் ஆள்வதற்கு இந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை வழிவகுக்கும்.
சட்டமன்றங்களைப் போலவே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் போனால் நிலை என்ன?
ஆட்சியின் நடுவிலேயே ஒன்றிய அரசு பெரும்பான்மை இழந்தால் நிலை என்ன?
5 ஆண்டுகாலம் தேர்தல் இல்லாமல், அமைச்சரவை இல்லாமல் குடியரசுத் தலைவரே ஆள இந்த முறை வழிவகுக்கிறதா?
அல்லது நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து மாநில அரசுகளையும் கலைக்க முடியுமா?
பல சட்டத் திருத்தங்களும் மாநிலங்களின் ஒப்புதலும் தேவைப்படுகின்றன. அவை நீதிமன்ற பரிசீலனையின் பொழுது தாக்குப் பிடிக்க முடியுமா?
இந்திய ஜனநாயகத்தை முற்றிலும் இல்லாமல் செய்யும் நடவடிக்கை இது என்பதற்கு இந்த இரண்டு சூழ்நிலைகள் மட்டுமே போதுமான சான்றுகளாக அமையாதா?
தேர்தல்கள் என்பவை நாடாளுமன்றம் சட்டமன்றத்திற்கு மாத்திரம் அல்லாமல் பஞ்சாயத்து அளவிலும் உண்டு. அவை குறித்து இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்ன கருத்து வைத்திருக்கிறது?
நாட்டின் அனைத்து மட்டங்களிலும் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி குடியரசு வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தி வரும் இந்தியாவுக்கு இது எத்தகைய பேராபத்து என்பதை உணர்ந்து கொள்ள முடியுமே!
சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்கள் பஞ்சாயத்து என ஒவ்வொரு அமைப்புக்கும் வெவ்வேறு தேவைகளும் அமைப்பு முறையும் வேறு வேறு. மாநிலத்தில் தங்களை ஆள வேண்டியவர் யார் என்பதற்கும் ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்க வேண்டியவர் யார் என்பதற்கும் மக்கள் முடிவெடுப் பதற்கான காரணங்கள் வேறு வேறு.
நடைமுறையில் இவை அனைத்தையும் முக்கால் நூற்றாண்டு காலமாக செயல்முறைப்படுத்திக் கொண்டு வரும்போது இந்தியாவிற்கும் சிறிதும் பொருந்தாத ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாசிசத்திற்கும் ஒற்றை ஆட்சிக்கும் வழி வகுப்பதாகும்.
இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை பாதுகாக்கும் மாநிலங்களின் சமூக வரலாற்று தேவைகளை மறுதலித்து அவற்றை வெறும் நிர்வாக அலகுகளாக மாற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செயல் திட்டமே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை ஆகும்
மாநில உரிமைகளை மட்டுமல்ல மாநிலங்களையே ஒழிப்பதற்கான செயல்முறை தான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையாகும். நாட்டின் ஒற்றுமை என்பது ஓர்மை என்பதிலிருந்து வேறுபட்டது. ஓர்மை எனும் கோட்பாட்டை நோக்கித்தான் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை இட்டுச் செல்லும். ஜனநாயகத்தின் உணர்வுகளை தட்டிப் பறிப்பதாகவே அது அமையும். எனவே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையினை ஏற்க கடுமையாக மறுக்கிறோம்.