குளிர் பிரதேசங்களில் வீடுகள், சாலைகள், வாகனங்கள் ஆகிய அனைத்தின் மீதும் பனி படரும். பல நேரங்களில் காற்றாலைகளிலும் பனி படரும். இவ்வாறு பனி சேர்ந்து கட்டிகளாக மாறும்போது, காற்றாலைகளின் சுற்றும் வேகம் குறையும். பனி மூன்று விசிறிகளிலும் ஒரே அளவில் இல்லாவிட்டால் நிலைதடுமாறி காற்றாலையே உடைந்து போகும் சாத்தியமும் உள்ளது.
பனி படராதபடி தடுப்பதற்கு ஏதுவாக, காற்றாலையை உருவாக்கும் போதே, அவற்றின் உள்ளே சில வெப்பமூட்டிகள் வைக்கப்படுவது வழக்கம்.
சில நேரங்களில் பனி ஒட்டாதபடி ரசாயனங்களை ஹெலிகாப்டர் மூலம் விசிறிகளில் தெளிக்கும் முறையும் பின்பற்றப்படுகிறது. ஆனால், இவை இரண்டுமே அதிக செலவுமிக்கவை. இதற்கு மாற்றாகத் தான் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் ஆய்வுக் குழு, ட்ரோன்களைப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளது. இந்த முறையில் யூரியா, மெழுகு அல்லது சில குறிப்பிட்ட ரசாயனங்களை ட்ரோனில் அனுப்பி அதிக அழுத்தத்தில் விசிறிகள் மீது பாய்ச்சுகின்றனர்.
இவை பூசப்பட்ட பின்னர், சில வாரங்கள் வரை, இவற்றின் மீது படரும் பனி வழுக்கிக் கீழே விழுந்துவிடும். இதற்குப் பின் மீண்டும் ரசாயனங்கள் பூசப்படும். இவ்வாறு செய்வது அதிக செலவு இல்லாதது என்பதால் இந்த ட்ரோன் முறை நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பனியை பணியவைக்கும் ட்ரோன்
Leave a Comment