சென்னை பெரியார் திடலில் இன உணர்ச்சி மேலோங்கிய திராவிடர் திருநாள் எழுச்சி!
சென்னை,ஜன.18- தந்தை பெரியார் முத் தமிழ் மன்றத்தின் 30 ஆம் ஆண்டு, திராவிடர் திருநாள், தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா, ‘பெரியார் விருது’ வழங்கும் விழா நேற்று (17.1.2024) காலை தொடங்கி நாள் முழுவதும் கலை பண்பாட்டு மீட்டுருவாக்க பெருவிழாவாக நடைபெற்றது.
திராவிடன் நிதி, குடும்பவிளக்கு நிதி ஒருங் கிணைந்து வழங்கிய இவ்விழாவில் சுயமரி யாதை குடும்பங்களின் சங்கமம் நிகழ்வை திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மகளிர் தோழர்கள், பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமத்தில் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்றனர்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள் – வீர விளையாட்டுகள்
பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகிலிருந்து தலைமைக்கழக அமைப் பாளர் வி.பன்னீர்செல்வம் தொடங்கிவைக்க, பறை இசை முழங்க கலைக்குழுவினர், கழகப்பொறுப்பாளர்கள் ஊர்வலமாக பெரியார் திடல் அடைந்தனர்.
பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் 21 அடி உயர முழு உருவச்சிலை முன்பாக பெரியார் பிஞ்சுகள், இளைஞர்கள், மாணவச்செல்வங்கள், கழகத் தோழர்கள் குவிந்தனர். பறையிசை முழங்க உற்சாக மிகுதியில் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் ஆடிப் பாடினர்.
பெரியார் வீரவிளையாட்டுக்கழகம் சார்பில் சிலம்பாட்டம், தீப்பந்தாட்டம் நடைபெற்றன.
நாள் முழுவதும் பிஞ்சுகள் முதல் இளை ஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப் பினருக்கும் பல்வேறு விளையாட்டுப் போட் டிகள் நடத்தப்பட்டன. அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளையும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.
சுனில் வசீகரனின் விளரி இசைத்திரள் குழுவினரின் நாட்டுப்புறக்கலைகள், இன எழுச்சி பறை முழக்கம், துடும்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால்குதிரை, மாடாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாலை நிகழ்வாக நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தந்தைபெரியார் முத்தமிழ் மன்றத் தின் 30 ஆம் ஆண்டு, திராவிடர் திருநாள், ‘பெரியார் விருது’ வழங்கும் விழா கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.
எவ்வித கருவியுமில்லாமல் விசில் ஒலிமூலமாகவே, தமிழுக்கும் அமுதென்று பேர், அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே, ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே… ஆகிய பாடல்களை பொறியாளர் பெரியாரியல் ஆய் வாளர் பொ.நாகராசன் விசில் இசையாக இசைத்து பெரிதும் வரவேற்பையும் பாராட் டையும் பெற்றார்.
கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரை ஆற்றினார். ‘உண்மை’ பொறுப்பா சிரியர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் தொடக்க உரையாற்றினார்.
குன்றக்குடி அடிகளார் படத் திறப்பு
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் படத்தைத் திறந்து வைத்து, தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்துள் ளதைக் குறிப்பிட்டு விழா நிறைவுப்பேருரை ஆற்றினார்.
துணைப் பொதுச் செயலாளர்கள் பொறி யாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதி வதனி, தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், பகுத்தறி வாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ் செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்க டேசன், வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் தளபதி பாண்டியன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், கும்மிடிப் பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே.பாண்டு, மாணவர் கழகம் செ.பெ.தொண்டறம், வி.தங்க மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பெரியார் விருது
கவிஞர் கடவூர் மணிமாறன், கவிமாமணி வாணியம்பாடி அப்துல் காதர் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘பெரியார் விருது’ வழங்கி பாராட்டி சிறப்பு செய்தார். பயனாடை அணிவித்து, தந்தை பெரியார் முழு உருவச்சிலையுடன் இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.
விருதாளர்கள் ஏற்புரை ஆற்றினார்கள்.
தமிழ்நாடு அரசின் ‘காமராசர் விருது’ பெற்ற காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரும், சட்ட மன்ற மேனாள் உறுப்பினருமாகிய உ.பலராமன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளி யீடுகளை வழங்கி பாராட்டி சிறப்பு செய்தார்.
நூல் வெளியீடு
எழுத்தாளர் மஞ்சை வசந்தன் எழுதிய ‘தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி மனு’ புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட உ.பலராமன் பெற்றுக்கொண்டார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய ஆர்.எஸ்.எஸ். பற்றி… புத்தகம், கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு எழுதிய நீதிக்கட்சியும், சமூக நீதியும் புத்தகம், மஞ்சை வசந்தன் எழுதிய ‘தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி மனு’ ஆகிய 3 நூல்களின் நன் கொடை மதிப்பு ரூ.250. விழாவில் ரூ.200க்கு வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து கழகப்பொறுப்பாளர்கள், தோழர்கள், கழக ஆர்வலர்கள் என பலரும் வரிசையில் சென்று புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.
ஆ.வெங்கடேசன், தாம்பரம் ப.முத்தையன், த.கு.திவாகரன், கவிஞர் கண்மதியன், வி.பன்னீர் செல்வம், பொ.நாகராஜன், கொரட்டூர் பன்னீர் செல்வம் ,அயன்புரம் துரைராஜ், சே.மெ.மதிவ தனி, புரசை அன்புசெல்வன், செ.பெ.தொண் டறம், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி உள்பட ஏராளமானவர்கள் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.
கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, புலவர் பா.வீரமணி, வழக்குரைஞர் த.வீரசேகரன், ஊடகவியலாளர் கோவி.லெனின், மருத்துவர் மீனாம்பாள், சி.வெற்றிசெல்வி, பசும் பொன், செந்தில்குமாரி, வி.வளர்மதி, நாகவல்லி, பூவை செல்வி, இறைவி உள்பட பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.
விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து சான்றிதழ் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் மறைவுற்ற திரைக்கலைஞர் மாரிமுத்துவுக்கு புரட்சிக்கவிஞர் விழாவில் ‘பெரியார் விருது’ வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
விழா முடிவில் கழகப்பொருளாளர் வீ.குமரேசன் நன்றி கூறினார்.