சென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு
அண்ணா அவர்கள் தந்தை பெரியாரை முதல் பேராசிரியர் என்றார் – 20ஆம் நூற்றாண்டின் புத்தர் தந்தை பெரியார்
தமிழர் தலைவர் புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றினார்
சென்னை, ஜன. 17 சென்னை இராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. அரங்கில் நடைபெற்று வரும் 47 ஆவது சென்னை புத்தகக்காட்சியில் நேற்று (16.1.2024) மாலை 3 மணியளவில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் மூன்று முக்கிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
பெரியார் புத்தக நிலையத்தின் மேலாளர் பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் தலைமை வகித்தார். அவரது தலைமை உரையில் தந்தை பெரியார் அவர்கள் உலகத் தலைவராக திகழ்வதை சுட்டிக் காட்டினார். அறிவியல் மனப்பான்மையின் அவசியத் தையும், அதனை இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்து வதையும் எடுத்துக்காட்டினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் படைப்பான “உலகத் தலைவர் பெரியார் தொகுதி – 8” நூலை ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா. எழிலன் வெளியிட, திராவிடர் வரலாற்று மய்யத்தின் செய லாளர் பேராசிரியர் அ.கருணானந்தன் பெற்றுக்கொண்டார். இரண்டாம் படியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிட மிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையப் பொறுப்பாளர் பாலசிங்கம் பெற்றுக்கொண்டார்.
இந்த நூல் தந்தை பெரியாரின் கொள்கைப் பயணத்தின் 8 ஆம் தொகுதியாகும். இதில் 1960 ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு வரையிலான அவரது வாழ்க்கையில் கொள்கை பயணத்தின் முக்கியப் பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இரண்டாவது நூலான சந்திராயன்-1 திட்ட இயக்குநர் அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் “பெரியாரும் அறிவியலும்” புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, தமிழ்நாடு அரசு திட்டக்குழு உறுப்பினரும், ஆயிரம்விளக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான மருத்துவர் நா. எழிலன் பெற்றுக் கொண்டார்.
இந்த நூல் மயில்சாமி அண்ணாதுரையின் சிங்கப்பூர் சமூக சேவை மன்றத்தின் சார்பில் நடந்த விழாவில் ‘பெரியாரும் அறிவியலும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் எழுத்துரையாகும்.
மூன்றாவது நூல் திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு எழுதிய ‘நீதிக்கட்சியும் சமூகநீதியும்’ நூலை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் அ.கருணானந்தன் பெற்றுக்கொண்டார். இந்த நூல் நீதிக் கட்சி தொடங்கப்பட வேண்டிய தேவையாக சமூகத்தில் நிலவிய கொடுமைகளையும், நீதிக் கட்சி தோன்றியவுடன், வெளியிடப் பட்ட பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை, அந்த அறிக் கையை மக்களிடமும் அரசிடமும் கொண்டு செல்ல நடத் தப்பட்ட மாநாடுகள், வகுப்புவாரி உரிமைக்கு நீதிக்கட்சியும் அதன் தலைவர்களும் செய்த பங்களிப்புகள், பின்னர் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பின் ஒடுக்கப்பட்ட, எளிய மக்க ளுக்கு ஆற்றிய தொண்டுகள் ஆகியவற்றை விளக்கும் நூலாகும். பின்னர் முன்னிலை வகித்த திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொது செயலாளர் ஆ.வெங்கடேசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு மூதறிஞர் குழுத் தலைவர் சுவாமிநாதன் தேவதாஸ், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும் வாசகர்களும் நீண்ட வரிசையில் நின்று புத்தகங்களை பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் அ.கருணானந்தன். செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் “நீதி கட்சியின் சமூக நீதியும்” புத்தகத்தை திறனாய்வு செய்தார். அவர் அந்த நூலில் அமைந்துள்ள முக்கிய செய்திகளை குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் ‘பெரியாரும் அறிவியலும்’ நூலினை திறனாய்வு செய்து உரையாற்றினார்.
அவரது உரையில், அறிவியல் மனப்பான்மையின் தேவை குறித்தும் அந்த நூலில் மயில்சாமி அண்ணாதுரை தன்னுடைய வாழ்க்கையின் பாதையில் தந்தை பெரியாரின் தாக்கம் எவ்வாறு உந்து சக்தியாக திகழ்ந்தது என்று குறிப்பிடுவதை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை நிறைவுரையாற்றினார். அவரது உரையில் “அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரை தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் என்று அழைத்ததையும், கல்லூரிக்குப் போகாத தந்தை பெரியார் எப்படி அவ்வாறு அழைக்கப்படுகிறார் என்பதையும் விளக்கினார்.பேராசிரியர் எப்படி என்றால், அவரது பாடம் கல்லூரி வளாகங்களுக்கு வராது. அன்றாடம் மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்களில் தொடங்கும்” என்று தெரிவித்தார். அதன் எட்டாவது பாகம் இந்த நூல் இது. தந்தை பெரியார் ஒவ்வொரு கூட்டத்திலும் “நான் பேசியிருக்கிறேன். அதை அப்படியே ஏற்கச் சொல்லவில்லை உங்கள் அறிவைப் பயன்படுத்தி பாருங்கள்” என்பார். அறிவுக்கு அவ்வளவு மதிப்புத் தருவார் பெரியார் என்று குறிப்பிட்டார். அவ்வாறு அறிவுக்கு மதிப்பளித்தவர்களில் முதன்மையானவர் புத்தர் – அந்தப் பெயரே புத்தியை அடிப்படையாகக் கொண்டதுதான். அவருடைய இயற்பெயர் சித்தார்த்தன். என்பதை தந்தை பெரியார் ஒரு முறை எழும்பூர் புத்த மகாசபையில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதைக் குறிப்பிட்டார்.
‘என்னை இருபதாம் நூற்றாண்டின் புத்தர் என்றார்கள். நான் மட்டும் புத்தர் அல்ல. இங்கு புத்தியைப் பயன்படுத்தும் அனைவரும் புத்தர்தான்’ என்று உரையாற்றினார். நான் ஒரு முறை நாக்பூர் பல்கலைக்கழக அம்பேத்கர் அறக்கட்டளைச் சொற்பொழிவில் இந்த கருத்தை சொல்லும்போது அங்கிருந்த பாலி மொழி பேராசிரியர்களே வியப்போடு தந்தை பெரியாரின் சிந்தனையை நோக்கினார்கள். ஒரு பாலி மொழி பேராசிரியர் உற்சாகமாக சத்தம் போட்டு கைத்தட்டி எழுந்து வந்து என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு சொன்னார் நான் பாலி மொழியை பல ஆண்டுகளாக கற்பிக்கிறேன். எனக்கு இப்படித் தோன்றிய தில்லை என்று பெரியாரின் சிந்தனைக் கூர்மையை வியந்தார்.
தந்தை பெரியாரும் அறிவியல் மனப்பான்மையும் பிரிக்க முடியாதவை. அறிவியல் என்றால் ஏதோ புரியாத ஒன்று என்று எண்ணுபவர்களுக்கு எளிமையாக புரியும்படி மருத்துவர் எழிலன் விளக்கினார்.
சிந்தனையின் கூர்மைக்கு அடிப்படையான அய்ந்து கேள்விகள் முக்கியமானவை. ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எவ்வாறு?. இந்த கேள்விகளின் விடை தான் இந்த வளர்ச்சி. முதலில் ஆடியோ, பிறகு வீடியோ இது எங்கே போகும். நானே ஆள் இல்லாவிட்டாலும் என்னைவிட வேகமாக பேசும் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) பிரதமரே வியந்து போகிறார். இவற்றை எல்லாம் கண்டுபிடித்தவர் யார்?
புத்தகக் கண்காட்சியில் கடந்த ஆண்டை விட கூட்டம் குறைவு. மழை மற்றும் தொடர்ச்சியான புத்தகக்காட்சிகள் காரணமாக உள்ளன. ஆனால் அய்யப்பன் கோயிலுக்கு கூட்டம் கூட்டமாக போகிறார்கள். எப்போதும் மருத்துவத்தை விட நோய் வேகமாகப் பரவும். என்று குறிப்பிட்டார்.
தந்தை பெரியார் தம் கருத்தை தெரிவிக்கும்போது அறிவு அறிவுக்கு மட்டுமல்ல, செயலுக்கு என்று தெரிவித்ததையும், இதன் மூலம் அறிவை மக்களுடமையாக்கியதையும் குறிப் பிட்டார். (விரிவான உரை பின்னர்) இறுதியாக வை.கலையரசன் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், வெளியீட் டுப் பிரிவு மேலாளர் க.சரவணன், ஆடிட்டர் அர.இராமச்சந்திரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வட சென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன், ஆவடி மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு, சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே. பாண்டு உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்துகொண்டனர்.