யாரை உரையாற்றக் கூடாது என்று சொன்னார்களோ, அதே இடத்தில், மூன்று குழந்தைகளுக்கு ‘‘வீரமணி” என்று பெயர்!
மனிதன் சாகிறான்; ஜாதி சாவதில்லை- இதனை ஒழிப்பதற்காகத்தான் திராவிட இயக்கம் பாடுபட்டு, முன் நிற்கிறது!
கோவை: வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு பரப்புரை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சிறப்புரை
கோவை, ஜன.17 யாரை உரையாற்றக் கூடாது என்று சொன்னார்களோ, அதே இடத்தில், மூன்று குழந்தை களுக்கு ‘‘வீரமணி’’ என்று பெயர்! மனிதன் சாகிறான்; ஜாதி சாவதில்லை- இதனை ஒழிப்பதற்காகத்தான் திராவிட இயக்கம் பாடுபட்டு, முன் நிற்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு’’ பரப்புரைக் கூட்டம்
கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த 11.1.2024 அன்று மாலை கோவை புலியகுளம் ரெட் பீல்டு சாலையில் ‘‘வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு” பரப்புரை சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு…
மிக நீண்ட இடைவெளிக்குப் பின், இந்தப் பெரிய குளம் பகுதியில் உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு. கழகத் தோழர்களிடம் காலையில் கேட்டேன், இந்தப் பகுதியில் நான் உரையாற்றியதற்குப் பிறகு – ஏழாண்டுகள் ஆகி, இன்றைக்கு நீங்கள் உரையாற்றவிருக்கிறீர்கள் என்றனர்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், மக்களை சந்திப்பதிலேயே என்னுடைய வாழ்நாளைக் கழிக்கக் கூடியவன் – திராவிட இயக்கமும் அத்தன்மையானது.
‘‘தோழர்களே!’’ என்று மீண்டும் தன்னுடைய உரையைத் தொடங்கினார் தந்தை பெரியார்!
95 வயதுவரை வாழ்ந்த தந்தை பெரியார் அவர்கள், வாழ்நாளெல்லாம் தன்னுடைய இயற்கை வழியிலே சிறுநீர் கழிக்க முடியாத அளவிற்கு, அதற்கு ஒரு டியூப்பை போட்டு, அந்தக் குழாயை ஒரு பிளாஸ்டிக் வாளியில் வைத்து, தன்னுடைய 94 வயது முடிந்து 95 வயதை நோக்கிச் செல்லுகின்றபொழுதுகூட, நாடு தவ றாமல் சுற்றிச் சுற்றி அலைந்தார்கள். வலி ஏற்படும் பொழுதுகூட தன்னுடைய உரையை நிறுத்தாமல், ‘‘அம்மா, அம்மா” என்று படுத்துப் புரண்டு, மீண்டும் உரையாற்றத் தொடங்கும்பொழுது, ‘‘அய்யா உரையை நிறுத்துங்கள்; போதும், போதும் எங்களுக்கு நீங்கள் தேவை” என்று மக்கள் உணர்ச்சிவயப்பட்டு கூறியபோது கூட, பெரியார் அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘‘தோழர் களே!” என்று மீண்டும் தன்னுடைய உரையைத் தொடங்கிய தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய இயக்கம் இந்த இயக்கம்.
இந்தக் கோவை பகுதியிலேயே மிக நீண்ட பகுதி யாக, ஆரம்பப் பகுதியாக இருந்த ஒரு பகுதி- அப்படிப் பட்ட இயக்க உணர்வுக்கு ஆட்பட்டது. இந்தப் புலிய குளம் பகுதி என்பதை இந்தத் திராவிட இயக்க வரலாற் றில் அறிந்தவன் என்கின்ற வகையில் பெருமையோடு குறிப்பிடுகிறேன்.
எவ்வளவு பெரிய பலூனாக இருந்தாலும், ஒரு சிறிய குண்டூசி – திராவிட இயக்க உணர்வுள்ள குண்டூசி!
எனக்கு முன் மிகச் சிறந்த ஓர் உரையை, சுருக்கமாக ஆனால், சுருக்கென்று எவருக்கும் தைக்கக்கூடிய விளங்கக்கூடிய ஓர் அற்புதமான உரையை, எங்களுடைய ஆற்றல்மிகு சிறப்பு மிகுந்த திராவிட ஏவுகணைகளாக இருக்கக்கூடிய ஏவுகணைகளில் மிக முக்கியமான இந்த ஏவுகணை, அது நீலகிரியில் இருக்கும்; டில்லியைத் தாக்கும், வேறு இடங்களையெல்லாம் தாக்கும்; அதனால், இவரை நேருக்கு நேர் சந்திக்க முடியாது – எந்த வகையிலும் இவருடைய வாதங்களுக்குப் பதில் சொல்ல முடியாது என்று தெரிந்தவர்கள், இவரையே ஏவுகணையாகப் பயன்படுத்தி, இந்த இயக்கத்தையே ஒழிக்கலாமா என்று நினைத்து, பூஜ்ஜியத்தைப் போட்டு ராஜ்ஜியத்தைப் பிடிக்க நினைத்தார்கள். நடந்ததா? அவர்களையெல்லாம் ஊதிவிட்டார்; எவ்வளவு பெரிய பலூனாக இருந்தாலும், ஒரு சிறிய குண்டூசி – திராவிட இயக்க உணர்வுள்ள குண்டூசி அந்தப் பெரிய பலூனைக் காலி செய்யும் என்று சொல்லி, சட்டப்பூர்வமாக சந்தித்து அதனை ஒன்றுமில்லாமல் செய்த பெருமை நம்முடைய அருமை ஆ.இராசா அவர் களுக்கு உண்டு.
இன்னுங்கேட்டால், அபாண்டமாக, அருவருப்பாக, அவதூறாக, பூஜ்ஜியம் பூஜ்ஜியமாகப் போட்டு, இவரால் தான் 2-ஜியில் பெரிய அளவிற்கு இழப்பு ஏற்பட்டது என்று சொன்னார்கள். அதை இன்று நினைத்தாலும் நமக்கு வேதனையாக இருக்கிறது. எங்கள் சகோதரர்கள் எங்கே இருந்தாலும், இந்த வரலாற்றை எண்ணிப் பாருங்கள்.
மன உறுதி, மனத் திண்மையைக் கொண்டவர்கள் உள்ள இயக்கம் இந்த இயக்கம்!
திடீரென்று அவர்கள் இந்த இயக்கத்திற்கோ, பொறுப் பிற்கோ வரவில்லை. இந்த இயக்கம் எப்படிப் பட்ட மன உறுதி, மனத் திண்மையைக் கொண்டவர்கள் உள்ள இயக்கம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டு மானால், செய்யாத குற்றத்திற்காக திகார் சிறையில் ஒன்றரை ஆண்டுகாலம் இருந்தார்; அவர் ஜாமீனுக்குக் கூட விண்ணப்பிக்கவில்லை. அப்படிப்பட்ட மன உறுதி படைத்த ஓர் இளைஞர்.
காரணம் என்ன?
திராவிடத்தால் செதுக்கப்பட்டவர் – சுயமரியாதைக் கொள்கையால் உருவாக்கப்பட்டவர். அப்படிப்பட்ட அருமை இராசா அவர்களே –
நாடாளுமன்றத்தில் வேறு யார் எழுந்துப் பேசினாலும் இன எதிரிகள் கவலைப்படமாட்டார்கள்; ஆனால், இராசா அவர்கள் உரையாற்ற எழுந்தவுடன், ‘‘ஜெய்ராம் கோஷம்” போடுபவர்கள் எந்த அளவிற்கு, எப்படி ஆவார்கள் என்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான, அருமைத் தோழ ராக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக, எதையும் தாங்கக்கூடிய அளவிற்கு, அநேகமாக எதிரிகள் அதிகமாகக் கண் வைத்திருக்கக் கூடியவராக இருக்கக் கூடியவர்தான் அருமைச் சகோதரர் மானமிகு எதிர்நீச்சல் இராசா அவர்கள்.
அந்த வகையில், சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு பரப்புரை சிறப்புக் கூட்டத்திற்கு வந்துள்ள கழகப் பொறுப்பாளர் களே, பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பழைய நினைவுகளை மறக்க முடியவில்லை…
இந்தப் புலியகுளம் பகுதிக்கு இன்றைக்கு நான் வரும் பொழுது, பழைய நினைவுகளை மறக்க முடி யாமல், அந்த நினைவோடு வந்தேன்.
1946 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில், என்னுடைய மாணவப் பருவத்தில், திராவிட மாணவர் கழகப் பயிற்சிக்காக வந்தபோது, உரையாற்றினேன்.
அப்பொழுது இங்கே நான் வந்தபொழுது, இன்றைக்கு இருப்பதுபோன்று அமைதியான வரவேற்பு இல்லை.
ஈரோட்டிலிருந்து பயிற்சி முகாமிற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மாணவர்களை அனுப்புவார்கள்.
ஈரோடு மாநாடு முடிந்து, திராவிடர் கழகமாக சேலத் தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, தந்தை பெரியார் அவர்கள் ஆணைப்படி, ‘‘கருப்புச் சட்டைப் படை” அமைப்பு தொடங்கப்படக் கூடிய வாய்ப்பு அன்றைக்கு வந்தது.
எனவே, கருப்புச் சட்டையை அன்றைக்குத் தோழர் கள் நிறைய பேர் அணிந்துகொண்டார்கள். நாங்கள் எல்லாம் கருப்புச் சட்டையோடுதான் இங்கே வந்தோம்.
ஒரு பக்கம் பெரிய பெரிய எதிர்ப்புக் கேள்விகள் எழுந்தன; கூட்டத்தில் கற்கள் வந்து விழுவது என்பது சாதாரணம்.
எனக்கு தைரியத்தை உண்டாக்கிய ஊர் இந்தப் புலியகுளம்!
என்னுடைய மாணவப் பருவத்திலேயே, ஒரு பெரிய தைரியத்தை எனக்கு உண்டாக்கிய ஊர் இந்தப் புலிய குளம்.
இன்றைக்குக் கோவை அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது.
அன்றைக்கு நடைபெற்ற கூட்டத்தில் எனக்குமுன் நிறைய பேர் உரையாற்றினார்கள். அந்தக் கூட்டத்தில் உரையாற்றியவர்களிலேயே நான்தான் இளைஞன். அதனால், ‘‘ஆட்டுக்கார அலமேலு திரைப்படத்தில், ஆட்டைப் பார்ப்பதற்கு மிகவும் ஆசையாக இருப்பது போன்று” நடிகரைவிட, இந்த ஆடுதான் நடித்ததா? என்று வியப்போடு பார்ப்பதுபோன்று, ‘‘ஓ, இந்த சிறுவன் தான் இப்படி உரையாற்றுகிறாரா?” என்று நினைத்தனர் பலர். நாங்கள் உரையாற்றத் தொடங்கியவுடன், எதிர்ப் பான பல கேள்விகளைக் கேட்ட ஒருவர், ஒரு பெரிய பட்டத்தை எங்களுக்குக் கொடுத்தார்.
‘‘ஏய், கரி மூட்டை, பேசாதே!” என்று.
இந்த ஊரில் எனக்குக் கொடுத்த பட்டம் – அந்தப் பட்டம். எம்.பி., பட்டம், எம்.எல்.ஏ,. பட்டத்தைவிட மிகப்பெரிய பட்டமாகும்.
அப்படிப் பேசிய ஊரில், தொடர்ந்து நாங்கள் பதில் சொன்னோம். நாங்கள் அதைப்பற்றி கவலைப்பட வில்லை. இப்பொழுது காரில் வருகிற மாதிரி, வரவில்லை. பேருந்தில்தான் வந்தோம். பழைய டவுன் ஹாலுக்கு எதிரில்தான் தங்க வைத்திருந்தார்கள்.
யாரை உரையாற்றக் கூடாது என்று சொன்னார்களோ, அதே இடத்தில், மூன்று குழந்தைகளுக்கு வீரமணி என்று பெயர்!
இந்த ஊரில் இயக்கம் மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்திருக்கிறது. அதைவிட ஒரு வேடிக்கை என்னவென்றால், அன்றைக்குக் கேள்வி கேட்ட வர்கள், இந்த இயக்கத்திற்கு வந்து, தந்தை பெரி யாருடைய தொண்டர்களாக மாறியது மட்டுமல்ல, இதே இடத்தில் யாரை உரையாற்றக் கூடாது என்று சொன்னார்களோ, அதே இடத்தில், மூன்று குழந் தைகளுக்கு வீரமணி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
தோழர் பெரியசாமி, வீரமணி ஆகியோர் எங்களோடு நிழல் போன்று இருந்தவர்கள்!
மீசை வைத்துக்கொண்டிருக்கும் தோழர் பெரியசாமி, அதேபோல, வீரமணி அவர்கள். இருவரும் இப்பொழுது இல்லை. அவர்களுடைய நினைவைப் போற்றவேண்டும். எங்களோடு நிழல் போன்று -மெய்க்காப்பாளர்கள் போன்று இருந்தவர்கள். எத்தனையோ முறை சிறைச் சாலைக்குப் போனவர்கள்.
அவர் ஒரு வீரமணி; இந்தக் கூட்டத்திற்கு வரவேற் புரையாற்றியவர் ஒரு வீரமணி.
இந்தக் கொள்கையை அழிக்க எவராலும் முடியாது; அந்த அளவிற்கு அஸ்திவாரத்தைக் கொண்டது!
ஆக, ஒரு வீரமணிக்கு எதிர்ப்புக் காட்டி, ஊரிலேயே வளர்ந்த குழந்தைக்கு வீரமணி என்ற பெயரிட்டு வளர்ந்தார் என்று சொன்னால், நம்முடைய சகோதரர் இராசா அவர்கள், ‘‘இவருக்குப் பிறகு யார்?” என்று கவலையோடு சொன்னார் அல்லவா – நிச்சயம், இந்தக் கொள்கையை அழிக்க எவராலும் முடியாது; அந்த அளவிற்கு அஸ்திவாரத்தைக் கொண்டது. இந்தக் கொள்கையை அழிக்கலாம் என்று நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள்.
காரணம், இந்த இயக்கம் எதிர்நீச்சலில் வளர்ந்த இயக்கம்; அடிக்க அடிக்க எழும்பும் பந்துபோல, எதிர்க்க எதிர்க்க வளரும் இயக்கம்.
கூட்டத்திற்காக நாங்கள் ஒரு போஸ்டர் அடித்தாலே, தந்தை பெரியார் அவர்கள்தான் சொல்வார், ‘‘கூட்டத்தின் விளம்பரத்திற்காக நீங்கள் பணம் செலவு செய்யாதீர்கள். நம்முடைய இன எதிரிகள் நம்முடைய கூட்டத்தைப்பற்றி விளம்பரம் செய்வார்கள். அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்கள்” என்று.
அப்படிப்பட்ட இயக்கம் இந்த இயக்கம்.
யாருக்காக? மண்டல் சொன்னதைப்போல, ‘‘உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளுக்காக, சமுதாயத்திற்காக!”
தந்தை பெரியார் பிறருந்திருக்காவிட்டால், தோழர் களே! நம்முடைய தோளிலே துண்டு போட முடியுமா?
‘நாங்கள் 50 சதவிகிதம் மாமன்றத்தில் அமர்ந்திருக்கின்றோம்”: மாமன்ற உறுப்பினர்!
இங்கே உரையாற்றிய மாமன்ற உறுப்பினரான மகளிர் தோழர் சொன்னார், ‘‘நாங்கள் 50 சதவிகிதம் மாமன்றத்தில் அமர்ந்திருக்கின்றோம்” என்று.
பி.ஜே.பி.க்கு முதல் எழுத்து ‘பி’ – பித்தலாட்டதிற்கும் முதல் எழுத்து ‘பி’-தான்!
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சத விகிதத்திற்கே இவ்வளவு நாள் திணறல் – அதிலும் பி.ஜே.பி. பித்தலாட்டம் செய்கிறது. பி.ஜே.பி.க்கு முதல் எழுத்து பி – பித்தலாட்டதிற்கும் முதல் எழுத்து பி-தான்.
புதிய நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி, பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுகிறோம் என்று வேக வேகமாக நிறைவேற்றிவிட்டு, அந்த சட்டம் எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்றால், யாருக்கும் தெரியாது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தல், அடுத்த தேர்தலுக்கு அடுத்த நாடாளுமன்றத் தேர்தல். ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் ஒருவர் சொல்வார், ‘‘வரும், ஆனால், வராது!” என்று. அதுபோலத்தான் இருக்கிறது, பி.ஜே.பி. யின் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு.
இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஓர் ஆட்சி – ‘திராவிட மாடல்’ ஆட்சி!
ஆனால், மகளிர் கேட்காமலேயே, போராடாமலேயே, உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்று அறிவித்த, இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஓர் ஆட்சி – ‘திராவிட மாடல்’ ஆட்சி – எடுத்துக்காட்டான ஒப்பற்ற ஆட்சி – அதனை செய்து முடித்த ஆற்றலாளர் – இன்றைக்கு இந்தியாவிலேயே இருக்கின்ற சமூகநீதிக்கான சரித்திர நாயகர் எங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற அந்த மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் அவர்கள்தான்.
அவருடைய ஆட்சியில்தானே மகளிர் 50 சதவிகிதம் உள்ளாட்சி மன்றங்களில் அமர்ந்திருக்கின்றனர்.
இங்கே உரையாற்றிய மாமன்ற உறுப்பினர், ‘‘நான் முதன்முதலாக பொது மேடையில் உரையாற்றுகிறேன்” என்றார். முதன் முறை என்றாலும், கருத்தோடு உரை யாற்றி இருக்கிறீர்கள். நான்கு முறை பொது மேடையில் உரையாற்றினீர்கள் என்றால், அது இயல்பாகிவிடும்.
இங்கே மேடையில் மகளிர் அமர்ந்திருக்கிறார்கள்; மகளிர் பொறுப்பில் இருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் என்ன நிலை இருந்தது – பெண்கள் சிரிப்பதற்குக்கூட உரிமை இல்லாமல் இருந்தார்கள்.
திராவிட இயக்கத்தில் எல்லோரும் சேரவேண்டும் என்று ஏன் சொல்லுகிறோம்?
திராவிட இயக்கம் என்ன செய்தது? என்று கேட்பவர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்.
கலைஞருக்கு ஏன் நூற்றாண்டு விழா?
வைக்கத்தற்கு ஏன் நூற்றாண்டு விழா?
திராவிட இயக்கத்தில் எல்லோரும் சேரவேண்டும் என்று ஏன் சொல்லுகிறோம்?
சமுதாயத்தில் சரி பகுதியாக இருக்கக்கூடிய பெண்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை.
குழந்தையை சுமக்கிறார்கள்; பிள்ளையைப் பெற்றுத் தருகிறார்கள்; பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்று அந்தத் தாயை வார்த்தைகளில் பேசுகிறீர்களே தவிர, நடைமுறையில் அந்தப் பெண்களை எந்த அளவிற்கு மதிக்கிறீர்கள்?
ஒரு சிறிய உதாரணம் சொல்லுகிறேன்,
‘‘வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்!” என்ற பழமொழி உண்டு. ஆனால், பெண்களுக்கு என்ன பழமொழி சொன்னார்கள் என்றால்,
‘‘பெண் சிரித்தால் போயிற்று; புகையிலை விரித்தால் போயிற்று” என்றார்கள்.
பெண்கள் சிரிக்கவே கூடாது என்று சொல்கிறார்கள். சிரிப்பதற்குக்கூட உரிமை இல்லாத பெண் சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதற்குப் பெயர்தான் ஸநாதனம்.
பெண்களை மூலையில் உட்கார வைக்கவேண்டும் – இதுதான் ஸநாதனம்!
‘‘எந்த நிகழ்ச்சியிலும் பெண்கள் முன்னால் வரக் கூடாது; பெண்கள் படிக்கக் கூடாது; பெண் பூப்பெய்துவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்க வேண்டும்; அப்படி திருமணம் செய்யப் பட்ட பெண்ணின் கணவன், நோயினாலோ, விபத்தினாலோ இறந்து விட்டால், அந்தப் பெண்ணை மூலையில் உட்கார வைக்கவேண்டும்” – இதுதான் ஸநாதனம்.
இன்றைக்கு என்ன சூழ்நிலை?
இன்றைக்கு எப்பேர்ப்பட்ட சூழ்நிலை வந்திருக்கிறது?
இன்றைக்குப் பெண்கள் அதுபோன்று இருக் கிறார்களா?
இந்த இயக்கம் யாருக்காக?
மனிதர்களுக்காக! இன்னுங்கேட்டால் வேறுபாடு கிடையாது!
நாம் தத்துவ ரீதியாகத்தான் பிரித்துக் காட்டுகின்றோம்.
‘‘சமூகநீதி நாள்’’ – ‘‘சமத்துவ நாள்’’
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளை – நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ‘‘சமூகநீதி நாள்” என்று அறிவித்தார்.
பாபா சாகேப் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் நாளை – ‘‘சமத்துவ நாள்” என்று அறிவித்தார்.
‘‘சமூகநீதி நாளில்” அரசு அலுவலகங்களில், அரசு ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுக்கவேண்டும்.
அந்த உறுதிமொழி வாசகங்கள் என்னவென்றால்,
தந்தை பெரியார் என்ன உறுதிமொழி சொன்னாரோ, அந்த வாசகங்களையே கொண்டுள்ளது.
சமூகநீதி நாளில் – அரசு ஊழியர்கள் எடுக்கும் உறுதிமொழி!
“‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அன்பு நெறியையும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத்திறனும் – பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்ட மாக அமையும். சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்” என்று.
கலைஞருடைய நூற்றாண்டை ஏன் கொண்டாடு கிறோம்? இப்படி ஒருவரை – நம்முடைய முதலமைச்சரை உருவாக்கித் தந்தார். அவருடைய சாதனைகளில் மிக முக்கியமானதாகும்.
பெரியாருடைய சமூகநீதிக்கு இரண்டே வார்த்தைதான் – ‘‘அனைவருக்கும் அனைத்தும்!”
சமூகநீதி நாளில் எந்த அளவிற்கு அந்த உறுதி மொழியில் குறிப்பிட்டார் என்றால், ‘‘அனை வருக்கும் அனைத்தும்” – இதுதான் சமூகநீதி.
சமூகநீதி என்பது இரண்டே வார்த்தைதான். திருக்குறள்கூட ஏழு வார்த்தைகள். ஆனால், பெரி யாருடைய சமூகநீதிக்கு இரண்டே வார்த்தைதான் – ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்பதுதான்.
அதைத்தான் நம்முடைய அருமைச் சகோதரர் இராசா அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது சொன் னார் – இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், யிஹிஷிஜிமிசிணி, JUSTICE, social, economic and political என்று உள்ளததைக் குறிப்பிட்டார் அல்லவா!
இதுதான் மிக முக்கியம். நமக்கு நாமே என்று சொல் லக்கூடிய அளவிற்கு ‘‘அனைவருக்கும் அனைத்தும்.”
சமுதாயத்தில் 50 சதவிகிதம் உள்ள பெண்களுக்குரிய வாய்ப்பு வரவேண்டாமா? அந்த வாய்ப்பைத் தந்தார்களா, என்றால், இல்லையே!
மனுதர்மம் என்ன சொல்கிறது, ‘‘பெண்கள் உயர் ஜாதிப் பெண்களாக இருந்தாலும், அவர்களும் ‘‘நமோ சூத்திரர்கள்”தான்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தை வைப்பதுதான் அவர்களுடைய திட்டம்!
இப்பொழுது வர விருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில், இராமனையோ அல்லது இன்னொரு வரையோ காட்டி மக்களை ஏமாற்றி, மீண்டும் ஒன்றிய ஆட்சியில் அமர்ந்துவிட்டார்கள் என் றால், இப்பொழுது இருக்கின்ற இந்திய அர சமைப்புச் சட்டத்தை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தை வைப்பதுதான் அவர்களுடைய திட்டம்.
அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்திய அர சமைப்புச் சட்டப்படி, தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று மட்டும் சொல்லக்கூடாது; ஜாதியைப் பாது காக்கின்ற நிலை இருக்கிறது அரசமைப்புச் சட்டத்தில் என்று சொல்லி, பெரியார் அவர்கள் அதனைக் கொளுத்தினார்.
முன்பகுதியில், சகோதரத் தத்துவத்தை வலியுறுத்தக் கூடிய பகுதியை உண்டாக்கினார்.
பகிரங்கமாக சொல்கிறது ஆர்.எஸ்.எஸ்.!
இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஆறு பேர் உருவாக்கினார்கள்.
அதில், நான்கு பேர் பார்ப்பனர்கள். ஒருவர் முஸ்லிம் – இன்னொருவர் அம்பேத்கர்.
அம்பேத்கர் அவர்கள், அவ்வளவு மூச்சுத் திணறும் நிலை இருந்த காலத்தில், அந்தச் சாதனையை செய்துவிட்டுப் போகிறேன் என்று சொன்னார். இங்கே இராசா அவர்களும், மற்ற நண்பர்களும் உரையாற்றிய பொழுது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக் கட்டுமானத்தை மாற்ற முடியாது.
அரசாங்கங்கள் மாறலாம்; ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தை மாற்ற முடியாது. அதை இப்பொழுது தூக்கி எறிந்துவிட்டு, பகிரங்கமாக சொல்கிறது ஆர்.எஸ்.எஸ். ‘‘மனுதர்மம் இருக்கின்ற பொழுது, எதற்கு இந்திய அரசமைப்புச் சட்டம்” என்று.
தோழர்களே, நாம் ஏன் வைக்கம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்றோம்?
தெருக்களில் நடக்கின்ற உரிமையைக் கேட்டாரே தந்தை பெரியார் அவர்கள்.
நூறு ஆண்டிற்குப் பிறகுதான் அந்த உரிமைகளை நாம் இன்றைக்குப் பெற்றிருக்கின்றோம். இன்னமும் பார்த்தீர்களேயானால், தீண்டாமைக் கொடுமைகள் இருக்கின்றன; மனிதாபிமானம் இல்லாமல் ஊர்க் மக்கள் குடிக்கின்ற தண்ணீர்த் தொட்டியில் மலத்தைப் போடுகிறார்கள்; இறந்தவர்களைத் தூக்கிக்கொண்டு சுடுகாட்டுக்குப் போவதற்கு வழியில்லை. சுடுகாட்டில்கூட ஜாதி வெறியை உண்டாக்கி குறுக்கே நிற்கிறார்கள்.
மனிதன் சாகிறான்; ஜாதி சாவதில்லை. இதனை ஒழிப்பதற்காகத்தான் இந்த இயக்கம் பாடுபட்டு, முன் நிற்கிறது!
மனிதன் சாகிறான்; ஜாதி சாவதில்லை. இதனை ஒழிப்பதற்காகத்தான் இந்த இயக்கம் பாடுபட்டு, முன் நிற்கிறது. மனிதாபிமானத்தோடுதானே கேட்கிறோம். அரசியல் கட்சிகள் பதவிக்குப் போகும்; நாங்கள் பத விக்குப் போகிறவர்கள் அல்ல! எங்களுடைய பணி என்ன?
நம்முடைய முதலமைச்சர் அவர்கள், என்னுடைய 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் நான் உரையாற்றும்பொழுது, ‘‘எங் களுடைய பணி, உங்கள் ஆட்சியைப் பாதுகாப்பதுதான்” என்றேன்.
நாங்கள் கோட்டைக்குள் போகமாட்டோம்; உங்களையெல்லாம் கோட்டைக்குள் அனுப்புவதுதான் எங்கள் பணி!
திராவிடர் கழகத்திற்கு என்ன வேலை – ‘‘கருப்புச் சட்டைக்காரன், காவலுக்குக் கெட்டிக்காரன்” – நாங்கள் காவல்காரர்கள். நாங்கள் கோட்டைக்குள் போகமாட் டோம்; உங்களையெல்லாம் கோட்டைக்குள், டில்லி செங்கோட்டைக்கு அனுப்புவதற்கு என்ன பணியோ அதனை செய்கிறவர்கள்தான் நாங்கள்.
மக்களிடம் சொல்லுவோம், புத்திசாலியான மக்கள் உரியவர்களை அனுப்புவார்கள்; ஏமாந்தால், நட்டம் யாருக்கு? மக்களுக்குத்தான்.
‘‘என்ட்ரி வேலை உங்களுக்கு; சென்ட்ரி வேலை எங்களுக்கு!”
என்னுடைய பிறந்த நாள் விழாவில் உரை யாற்றும் பொழுது வேடிக்கையாக சொன்னேன், ‘‘என்ட்ரி வேலை உங்களுக்கு; சென்ட்ரி வேலை எங்களுக்கு” என்றேன்.
இதைக் கேட்டுத்தானே இன எதிரிகள் ஆத்திரப்படு கிறார்கள். அவர்களுடைய மதம், ஜாதி எல்லாம் என்ன சொல்லுகிறது – ‘அனைவருக்கும் அனைத்தும்’ கிடைக் கக்கூடாது என்று சொல்வதுதானே! மனுதர்மத்தில் என்ன சொல்லி வைத்திருக்கிறார்கள் – ‘‘இன்னாருக்கு இதுதான்!” உயர்ஜாதிக்காரர்களுக்கு மட்டும்தான் படிப்பு! உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும், அவர்களுக்கும் அந்த உரிமை கிடையாது.
இன்றைக்கு இந்த இயக்கத்தினால்தான், பெண்கள் பயனடைந்திருக்கிறார்கள். ‘‘நமோ சூத்திரர்கள்” என சொல்லப்படும் பெண்கள் உள்பட.
நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் ஏமாந்தால், மீண்டும் பி.ஜே.பி. ஆட்சியில் அமர்ந்தால்…
2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளு மன்றத் தேர்தலில், மக்கள் ஏமாந்தால், மீண்டும் பி.ஜே.பி. ஆட்சியில் அமர்ந்தால், ‘‘மனுதர்மம்தான் இந்திய அரசமைப்புச் சட்டமாக வரும்” என்பது உறுதி.
ஒரு உதாரணம் சொல்கிறேன்,
‘‘சூத்திரன், சொர்க்கத்திற்காவது, ஜீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவது பிராமணனையே தொழ வேண்டும்” மனுதர்மம், 10 ஆவது அத்தியாயம், 122 ஆவது சுலோகம்.
அவர்கள் மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால், இதுதான் நாளைக்கு சட்டமாக வரப் போகிறது.
பழைய கிரிமினல்களாக இருந்தவர்கள் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக காவிக் கட்சியில் சேருகிறார்கள்!
ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிக்க வேண்டும் நினைக்கிறார்கள், அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்?
உணர்ச்சி இல்லாத தமிழன் கூலிக்காகவும், மற்ற வற்றிற்காகவும், பழைய கிரிமினல்களாக இருந்தவர்கள் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக காவிக் கட்சியில் சேருகிறார்கள் என்பதை உணர்ந்து பார்க்கவேண்டாமா?
உங்களுடைய பிள்ளைகளுடைய கதி என்ன? உங்களுடைய பேரப் பிள்ளைகளுடைய கதி என்ன? என்பதை நினைத்துப் பாருங்கள்.
‘‘சூத்திரன் சுவர்க்கத்திற்காவது , ஜீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவது, பிராமணனையே தொழ வேண்டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம்!”
‘‘பிராமணனை உபசரிப்பதே சூத்திரனுக்கு எல்லாத் தொழிலைவிட, மேலான தர்மம்”
ஆகவே, கடவுள் என்று சொன்னால், பிராமணர் கள்தானாம்!
நிதி நெருக்கடிகள் இருந்தாலும், பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்குக்
காலைச் சிற்றுண்டித் திட்டம்!
இங்கே உரையாற்றிய நம்முடைய சகோதரர் கோவை இராமகிருஷ்ணன் சொன்னார். ‘‘தமிழ் நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சி, நிதி நெருக்கடிகள் இருந்தாலும், பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்குக் காலைச் சிற்றுண்டி திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது” என்றார்.
திராவிட இயக்க ஆட்சியின் தொடர்ச்சி…
இதுவரையில் மதிய உணவுத் திட்டம்தான் இருந்தது. அதனைத் திராவிட இயக்கம்தான் தொடங்கி வைத்தது. தியாகராயர்தான் அந்தத் திட்டத்தை சென்னை கார்ப்ப ரேசனில் உருவாக்கினார். அந்தத் திட்டத்திற்கு வெள்ளைக்காரர்களின் ஆட்சி பணம் கொடுக்க மறுத்தது. அதற்குப் பிறகு பச்சைத் தமிழர் காமராசர் கொண்டு வந்த ‘‘பகல் உணவுத் திட்டம்” – அதற்குப் பிறகு, எம்.ஜி.ஆர். கொண்டு வந்த ‘‘சத்துணவுத் திட்டம்” – அதற்குப் பிறகு கலைஞர் அவர்கள், ‘‘சத்துணவு என்பது உண்மையான சத்துணவாக இருக்கவேண்டும் என்பதற்காக, இரண்டு முட்டை போடும் திட்ட”த்தைக் கொண்டு வந்தார்.
இரண்டு முட்டை போடுகிறார்கள் என்றவுடன், அதற்கும் ஒரு குறுக்குச்சால் ஓட்டுவதுபோன்று, ‘‘பார்த்தீர்களா, நம்முடைய மதத்தை அழிப்பதற்காக கருணாநிதி இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார். நாமெல்லாம் சைவம் – சைவப் பிள்ளைகளிடம் முட்டை யைக் கொடுத்து, சாப்பிடச் சொல்கிறாரே?” என்று சொன்னார்கள்.
விவசாயிகள் பலர் பயன்பெற்றனர்!
கலைஞர் படித்தது ஈரோட்டுக் குருகுலத்தில் அல்லவா! உடனே அவர், ‘‘நீங்கள் முட்டை சாப்பிட மாட்டீர்கள். அதே சத்தைக் கொடுப்பதற்காக இரண்டு வாழைப் பழங்களை வைத்திருக்கிறேன்” என்றார்.
அந்த வாழைப்பழம் கொடுக்கும் திட்டத்தினால், விவசாயிகள் பலர் பயன்பெற்றனர்.
ஒரு கல்லில், பல மாங்காய்களை அடிப்பதற்குப் பெயர்தான் திராவிட இயக்க ஆட்சி.
அதற்குப் பிறகு இன்றைக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி – இவ்வளவு நிதி நெருக்கடியிலும் 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ‘‘காலை உணவுத் திட்டம்” கொண்டு வந்தார் நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தாய்மார்கள், சகோதரிகளுக்குத் தெரியுமே – எவ் வளவுதான் வசதி இருந்தாலும், பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள் காலையில் சாப்பிடுவதே இல்லை. அவர் களுடைய தாய்மார்கள், ஓடிக்கொண்டே, ‘‘சாப்பிட்டு விட்டுப் போ, சாப்பிட்டுவிட்டுப் போ” என்று வாசற்படி வரைக்கும் வந்து சொல்வார்கள்.
பிள்ளைகள் அதனை மறுத்துவிட்டு, நேரமாகி விட்டது எனக்கு என்று பள்ளிக்கூடத்திற்குப் புறப்பட்டு விடுவார்கள்.
காலை உணவுத் திட்டத்தால் ஜாதியும் ஒழிந்தது; பசியும் தீர்ந்தது!
ஆனால், இன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் அமர்ந்து சமமாக சாப்பிடுகிறார்கள். அதனால், ஜாதியும் ஒழிந்தது; பசியும் தீர்ந்தது.
இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி – இதனைக் கண்டு தான் நம்முடைய இன எதிரிகள் வயிறு எரிகிறார்கள்.
ஏனென்றால், சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், படிப்பைக் கொடுக்கக் கூடாது என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.
ஜாதி, தீண்டாமையை எதிர்த்து நடைபெற்றதுதானே வைக்கம் போராட்டம்!
ஜாதியை எதிர்த்து, தீண்டாமையை எதிர்த்து நடை பெற்றதுதானே வைக்கம் போராட்டம்.
அதை செய்தவர்தானே கலைஞர் – இந்தியாவில், தமிழ்நாட்டில் அவருடைய ஆட்சியில்தானே ‘‘பெரியார் நினைவு சமத்துவபுர”த்தினைக் கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தில், பார்ப்பனர்களுக்கு வீடு ஒதுக்க முடி யுமா? என்று கேட்டார்கள்.
அவர்களுக்கும் வீடுகளை ஒதுக்கித் தந்தார்.
‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்பது இதுதான். ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்ன ஆதாரம் என்று சொன்னால், அவர்களுக்கும் வீடு கொடுத்தார் கலைஞர்.
இன்றைக்கு இந்தியாவில், தமிழ்நாட்டைத் தவிர சமத்துவபுரம் உண்டா?
இந்த நாடே சமத்துவபுரமாக ஆகவேண்டும்!
கலைஞர்தான் சொன்னார், ‘‘எனக்கு நம்முடைய மாநிலம் மட்டும் சமத்துவம்புரம் ஆனால் போதாது; இந்த நாடே சமத்துவபுரமாக ஆகவேண்டும்” என்றார்.
இதற்கு நேர் எதிரானதுதானே மனுதர்மம்!
அதனை செய்வதற்காகத்தானே இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி. அதனால்தானே, இந்த ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்பதற்காகப் பல பொய்யான காரணங்களைச் சொல்லுகிறார்கள்.
மனுதர்மம் என்ன சொல்கிறது,
பெண்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது; பெண்கள் கீழானவர்கள். நான்கு ஜாதிகளுக்கும் கீழே – உழைக் கின்ற நம்முடைய சகோதரர்கள் பஞ்சமன் – அய்ந்தாம் ஜாதி. ‘பறையன், பள்ளன்’ என்றெல்லாம் கேவலப் படுத்தினார்கள்.
ஜாதிப் பெயரைப் போட்டு – அதிலிருந்து பின்வாங்கியது அமலாக்கத் துறை!
இன்றைக்குக்கூட அமலாக்கத் துறையினர் நம்முடைய விவசாயத் தோழர்களுக்கு ‘சம்மன்’ அனுப்பியிருக்கிறார்கள். அதில் ‘பள்ளன்’ என்கிற ஜாதிப் பெயரைப் போட்டு அனுப்பினார்கள். அதைக் கண்டு, அவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவிற்கு எழுச்சி ஏற்பட்டவுடன், அதிலிருந்து பின்வாங்கியது அமலாக்கத் துறை.
அமலாக்கத் துறை ஜாதிப் பட்டத்தைப் போடுகின்ற அவசியம் ஏன் வந்தது?
ஒன்றிய அரசாங்கத் துறை என்பதால் இப்படிப் போடுகிறார்களா?
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில்,
‘மோடி வித்தை’யில் மயங்கி நீங்கள் ஏமாந்தால்…
இவையெல்லாம் சின்ன சின்ன விஷயம்தானே என்று நீங்கள் நினைக்கக்கூடாது; இந்த ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், ‘மோடி வித்தை’யில் மயங்கி நீங்கள் ஏமாந்தால், என்ன நடக்கும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள்.
திராவிட இயக்கத்தினால், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் நிறைய பேர் படித்தார்கள். இங்கே படித்ததினால், மற்ற மற்ற இடங்களுக்குச் சென்றார்கள். படிப்புத் துறையில் வளர்ந்தவுடன், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும். அந்த வாய்ப்புகள் இளைஞர்களுக்குக் கிடைக்கவில்லை.
(தொடரும்)