*ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மத்தியில் தமிழர் தலைவர்
*பெரியார் கல்வி நிறுவனங்களில் படித்தோர் பல்லாயிரவர் – உலகெங்கும் தனித் தன்மையுடன் ஒளி வீசுகின்றனர்
சிதம்பரம் – ரங்கம்மாள் அர்ப்பணிப்பு!
பெரியார் நிறுவனங்கள் என்பது கல்வி மட்டுமின்றி ஒற்றுமை, சுயமரியாதை, தன்னம்பிக்கை, மனிதநேயம், சமத்துவம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒரு கலைக் கூடமாகவே காட்சி அளிக்கிறது. அப்படியான இந்த திருச்சி கல்வி வளாகம் வந்த வரலாறு தெரியுமா?
இன்றைக்கு கலைஞர் கருணாநிதி நகராக, திருச்சியின் முக்கியப் பகுதியாக இருக்கும் இந்த இடம் அன்றைக்கு ஊராட்சிப் பகுதியாக இருந்தது. இன்னும் சொன்னால் திருச்சியின் சுற்றுப்புற கிராமங்களில் ஒன்று! அப்படியான இந்த இடத்தில் தகரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை ஷேக் மொய்தீன் ராவுத்தர் என்பவர் வைத்திருந்தார். தொழிலில் நட்டம் ஏற்படவே, வாங்கிய கடனை வங்கியில் அடைக்க முடியவில்லை. இந்நிலையில் 20 ஏக்கர் கொண்ட இந்த இடம் ஏலத்திற்கு வந்தது. 50 ஆயிரத்திற்கு வந்தால் வாங்கலாம் எனப் பெரியார் நினைக்க, அது 55 ஆயிரத்தைக் கடந்து போனது. எனவே இடம் வேண்டாம் எனப் பெரியார் முடிவு செய்துவிட்டார்.
இந்நிலையில் ஆசிரியர் அவர்களின் மாமனார் சிதம்பரம், மாமியார் ரங்கம்மாள் இருவரும் இயல்பாகத் திருச்சியில் இருந்துள்ளனர். 55 ஆயிரம் என்றாலும் வாங்கிவிடுங்கள் எனப் பெரியாரிடம் அவர்கள் இருவரும் கூறியுள்ளனர். ஆனால் பெரியார் வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார். இச்சூழலில் 55 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு, அதற்கு முன்பணமும் கொடுத்து, இடத்தையும் உறுதி செய்துவிட்டனர் சிதம்பரம் – ரங்கம்மாள் இணையர்! இந்தச் செய்தியை மாளிகையில் இருந்த பெரியாரிடம் கூறி, இடம் வாங்கப்பட்ட விவரத்தையும், அதுவும் பெரியார் பிரச்சார அறக்கட்டளையின் பெயருக்கே வாங்கிய விவரத்தையும் கூறியுள்ளனர். இதற்கான பணத்தை நீங்கள் பொறுமையாகக் கொடுக்கலாம் என்றும், ஒருவேளை கொடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை எனவும் சிதம்பரம் – ரங்கம்மாள் இணையர் கூறியுள்ளனர்.
அப்படி வாங்கப்பட்ட இந்த 20 ஏக்கர் நிலத்தில் தான் பெரியார் தொடக்கப் பள்ளி, நாகம்மையார் குழந்தைகள் இல்லம், நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் மணியம்மை பெண்கள் நடுநிலைப் பள்ளி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளி, பெரியார் மருந்தியல் கல்லூரி, சாமி கைவல்யம் முதியோர் இல்லம், பெரியார் மருத்துவமனை, பெரியார் மழலையர் பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் ஆலமரம் போல வேர் பரப்பி நிற்கின்றன. இங்கே படித்த மாணவர்கள் உலகம் முழுவதும் பணி செய்கிறார்கள். பெரியார் உலகமயம் என்பதில் இந்தக் கல்விப் பணிகளும் அடக்கம்! பெரியாரின் கொள்கைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்றுக் கொண்டவர்கள் இலட்சோப லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது வேடிக்கைப் பேச்சல்ல; அது வீழ்த்த முடியாத திராவிட இயக்க வரலாறு!
இது எங்கள் வீட்டு நிகழ்ச்சி!
பெரியார் தொடக்கப் பள்ளி தலைமை யாசிரியர் ப.விஜயலட்சுமி அவர்கள் கூறும்போது, நான் பணியில் சேர்ந்து 21 ஆண்டுகள் ஆகின்றன. தலைமையாசிரிய ராக 11 ஆண்டுகள் பணி செய்கிறேன். தற்போது 40 மாணவர்கள் படிக்கிறார்கள். இதுவரை 6,800 மாணவர்கள் கல்வி முடித் துப் போயிருக்கிறார்கள். இந்த ஆண்டு ஆசிரியர் வந்தது பெரும் மகிழ்ச்சி. அனைத்து நிறுவனங்களும் ஒரு குடும் பமாக, ஒற்றுமையாக செய்தோம். நம் வீட்டு நிகழ்ச்சி போன்ற உணர்வைப் பெற் றோம். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த தமிழர் திருநாள் நிகழ்ச்சி அருமையாக முடிந்திருக்கிறது”, என்றார்.
எப்போதும் எங்களுக்குப் பெருமிதம்!
இந்நிகழ்ச்சி குறித்து, பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை அவர்களிடம் கேட்டபோது, “நான் பணிக்குச் சேர்ந்து 35 ஆண்டுகள் ஆகின்றன. முதல்வர் பொறுப்பை ஏற்று 17 ஆண்டுகள் முடிந்துள்ளது. எங்கள் கல்லூரியில் 430 மாணவர்கள் படிக்கின்றனர். இதுவரை 4,345 மாணவர்கள் படித்து, முடித்து வெளியேறி இருக்கிறார்கள். சமூகநீதிப் போராளியாக, ஒப்பற்றத் தலைவராக இருந்தவர் தந்தை பெரியார். அவரின் அடியொற்றி, தொய்வில்லாமல் பயணம் செய்பவர் ஆசிரியர் அவர்கள். இந்தச் சமத்துவப் பொங்கலுக்கு ஆசிரியர் மற்றும் மோகனா அம்மையாரும் வந்தது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி! ஒரு குடும்ப நிகழ்வு போல, பாசப் பிணைப்பாக இருந்தது. பெரியார் நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது எங்களுக்கு எப்போதும் பெருமிதம் தான்” என்றார்.
மனநிறைவு பெற்றோம்!
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் க.வனிதா அவர்களிடம் கேட்டபோது, எங்கள் பள்ளியில் 1330 மாணவர்கள் பயில்கின்றனர். நான் பணிக்குச் சேர்ந்து 6 ஆண்டுகள் ஆகின்றன. ஒன்று முதல் அய்ந்தாவது வரை இதே பள்ளியிலும், 6 முதல் 12 வரை மணியம்மை மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன் என்றார். இதுவரை எங்கள் பள்ளியில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துச் சென்றுள்ளனர். பொங்கல் விழா ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக முடிந்துள்ளது. மாண வர்களுக்கு இது பிடித்தமான விடயமாகவும் இருக் கிறது. நாங்களும் மனநிறைவோடு இருக்கிறோம்.
மாணவர்களின் உற்சாகம்!
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சு.பாக்கியலட்சுமி அவர்கள் கூறும் போது, “எங்கள் பள்ளியில் 1005 மாணவர்கள் பயில்கின்றனர். இதுவரை 55,156 மாணவர்கள் முடித்துப் போயிருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக நான் தலைமையாசிரியர் பொறுப்பில் இருக்கிறேன். இப்போதுதான் தமிழர் திருநாள் நிகழ் வைப் பார்க்கிறேன். தமிழ்ப் புத்தாண்டு என்றாலே, ‘தை’ ஒன்றுதான் என்பது மனதில் நிற்கிறது. அனைத்து நிறுவனங்களும் ஒன்றுபட்டு நடத்தியது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் சீருடை இல்லாமல் வண்ண, வண்ண ஆடைகளுடன் பங்கேற்று, அளவு கடந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்”,
பாரம்பரிய நிறுவனங்கள்!
நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மா.செண்பகவள்ளி அவர்கள், “பணியில் சேர்ந்து 27 ஆண்டுகளையும், முதல்வர் பொறுப்பேற்று 13 ஆண்டுகளையும் நிறைவு செய்துள்ளேன். தற்சமயம் நமது நிறுவனத்தில் 25 மாணவர்கள் பயில்கின்றனர். இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஆசிரியர் பயிற்சி முடித்துச் சென்றுள்ளனர். இத்தனை ஆண்டை விட, அய்யா வந்த இந்த ஆண்டுதான் எங்களுக்குச் சிறப்பே! பெண்கள் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காகவே மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தைப் பெரியார் தொடங்கினார். சென்ற வாரம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா அவர்கள் நிறுவனத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களின் மாமனார் பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தான் படித்தாராம். அத்துடன் பெரியார் தொடக்கப் பள்ளி, நாகம்மை ஆசிரியர் பயிற்சிப் பள்ளி போன்றவை “பாரம்பரிய நிறுவனங்கள்” என இயக்குநர் லதா கூறினார்கள். இதைவிட நமக்கு சிறப்பேது.