தைநீயும் வருவாயே!
தமிழேந்தித் தருவாயே
மெய்நீதான் தமிழர்க்கே ஆண்டு – இந்த
மேதினியைப் புத்தாக்கு நீண்டு!!
வெயில்கண்டு மழைகண்டு
வினைநின்று போகாமல்
பயிர்கண்டு விளைப்பாரைப் பாடு – உழைத்துப்
பசியாற்றும் தோள்பற்றி ஆடு!!
முப்பாலின் அறமோதி
முக்கனியின் சுவைமாந்தி
தப்பாமல் திராவிடத்தைப் போற்று! – உன்
தகையாலே இந்நிலத்தை மாற்று!!
பெண்ணுக்கும் ஆணுக்கும்
பேதஞ்செய் நூலகற்றி
மண்ணுக்குப் புத்தாடை போர்த்து! – நீ
மனிதஞ்செய் புதுநீதி வார்த்து!!
கீழ்மேலாய் மானுடத்தைக்
கிழித்தாரின் முகங்கிழித்து
பாழ்மடமைத் தீயிட்டு முழங்கு! – நீ
பகுத்தறிவால் பொங்கலிட்டே வழங்கு!!
பொய்யான மொழிபேசி
புரட்டான கதைகூறிக்
கைவாயை வீசுவாரை ஓட்டு! – தைநீ
கடையருக்கும் கடைத்தேற்றம் காட்டு!!
எல்லோர்க்கும் எல்லாமும்
இனிதாக்கி நீதந்தே
வல்லாண்மை செய்வாரை நீக்கு! – நாளும்
வளங்கூட்டிப் புத்துலகை யாக்கு!!
பெரியாரின் நெறிநடக்கப்
பிழையாவும் தொலையுமெனும்
சரியாணை ஒன்றைநீ விடுத்து – உலகைச்
சமத்துவத்தின் வழியில்நீ நடத்து!!
– சுப.முருகானந்தம்.
மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு.