சென்னை, ஜன.12- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாடு அனைத்துக்கட்சி குழுவினர், தி.மு.க. பொரு ளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு தலைமையில் நாளை (13.1.2024 சனிக்கிழமை) சந்திக்க உள்ளனர். தமிழ்நாடு அரசு கோரிய 37 ஆயிரத்து 907கோடி ரூபாய் வெள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்குமாறு அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 3,4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக அதி கனமழை வெளுத்து வாங்கியது. பாதிக்கப்பட்ட மக் களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 6 ஆயி ரம் ரூபாய் நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கியது. மற்ற மூன்று மாவட்டங் களில் பாதிப்புகளை சந்தித்த வட்டங்களில் மட்டும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
இதேபோல், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சென்று பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
வெள்ள சேதங்களை பார்வையிட நெல்லை சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் அதிக பாதிப்புள்ள இடங்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள பகுதிகளுக்கு ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 19ஆம் தேதி டில்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் கனமழை, வெள்ளத்தால் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் அடுத் தடுத்து பாதிக்கப்பட்டிருப்பதை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்ய கோரியபடி, தற்காலிக நிவாரணமாக 7ஆயிரத்து 33 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரண தொகையாக 12ஆயிரத்து 659 கோடி ரூபாயும் வழங்குமாறும் முதல மைச்சர் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்துவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித்ஷாவை தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் குழு நாளை (13.1.2024) சந்திக்க உள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான இக்குழுவில், காங்கிரஸ் சார்பில் ஜெயகுமார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சுப்பராயன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிகுமார், முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சின்ராஜ் ஆகியோர் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.