ஆசிரியர் அய்யா அவர்களே, நீங்கள் ஊட்டி வளர்த்திருக்கக் கூடிய உறவுகளாகிய எங்களுக்குத் தாய்க்கழகத்திலிருந்து நீங்கள் கொடுக்கக் கூடிய இந்த உணர்வுதான், எங்களுக்குப் படை வரிசையில் செல்வதற்கு மாபெரும் பலமாக இன்றைக்கு இருக்கிறது!
உங்கள் அருகில் வருகிறபொழுதுதான் எதிர்த்து வரக்கூடிய துன்பங்கள், பகைகள் எதுவாக இருந்தாலும், அவற்றைச் சமாளிக்கக் கூடிய திராணியும், தெம்பையும் பெற்றவர்களாக நாங்கள் இருக்கிறோம்!
எங்களை உருவாக்கியிருக்கிறீர்கள், உங்களுக்கு எங்களுடைய நன்றி!
திருநெல்வேலி, அக்.17 ஆசிரியர் அய்யா அவர்களே, நீங்கள் ஊட்டி வளர்த்திருக்கக் கூடிய உறவுகளாகிய எங்களுக்குத் தாய்க்கழகத்தில் இருந்து நீங்கள் கொடுக்கக் கூடிய இந்த உணர்வுதான், எங்களுக்குப் படை வரிசையில் செல்வதற்கு மாபெரும் பலமாக இன்றைக்கு இருக்கிறது. போர்க் களத்திற்குச் செல்லக் கூடிய சிப்பாய், பாசறைக்குத் திரும்பி வருகிற பொழுதுதான், மீண்டும் உத்வேகம் பெற்றுச் செல்வதைப்போல, உங்கள் அருகில் நாங்கள் வருகிற பொழுதுதான், எதிர்த்து வரக்கூடிய துன்பங்கள், எதிர்த்து வரக்கூடிய பகைகள் எதுவாக இருந்தாலும், அவற்றைச் சமாளிக்கக் கூடிய திராணியும், தெம்பையும் பெற்ற வர்களாக நாங்கள் இருக்கிறோம்; எங்களை உரு வாக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு என்னுடைய நன்றி என்றார் தமிழ்நாடு நிதியமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் மாண்புமிகு மானமிகு தங்கம்.தென்னரசு அவர்கள்.
சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா – பத்தமடை ந.பரமசிவம் அவர்களுக்குப் பாராட்டு விழா –
‘‘தாய்வீட்டில் கலைஞர்” நூல் வெளியீட்டு விழா
நேற்று (16.10.2023) மாலை திருநெல்வேலியில் நடைபெற்ற சேரன்மாதேவி நூற்றாண்டு விழா – பத்தமடை ந.பரமசிவம் அவர்களுக்குப் பாராட்டு விழா – ‘‘தாய்வீட்டில் கலைஞர்” நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு நிதியமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் மாண்புமிகு மானமிகு தங்கம்.தென்னரசு அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
ஆசிரியருடைய கருத்துச் செறிவுமிக்க உரையைக் கேட்பதற்கு நானும் ஆவலோடு காத்திருக்கின்றேன்!
உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மழை மிரட்டிக் கொண்டிருக்கும் வேளையில், நீண்ட நேரம் என்னுடைய உரையை அமைத்துக் கொள்வது சிறப்பானதாக இருக்காது. இன்னும் சொல்லவேண்டும் என்றால், ஆசிரியருடைய ஆழமான உரையை, கருத்துச் செறிவுமிக்க ஓர் உரையைக் கேட்பதற்கு நானும் உங்களோடு இணைந்து மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றேன்.
இந்த அரிய வாய்ப்பு எனக்கு ஆசிரியர் அவர்கள் வழங்கியிருக்கக் கூடிய வாய்ப்பாகும். பல ஆண்டு களுக்கு முன்பு, அவரோடு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கின்றேன்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் எனக்குப் பெருமை!
இப்பொழுது மீண்டும் எனக்கு அந்த வாய்ப்பினை வழங்கி, இந்த நிகழ்ச்சியில், அதுவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இரண்டு நிகழ்ச்சிகளை இணைத்து நடை பெறக்கூடிய நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதில் எனக்குப் பெரிய பெருமை.
இந்நிகழ்ச்சியில் ஒன்று, நம்முடைய மரியாதைக்குரிய பத்தமடை பரமசிவம் அவர்களைப் பாராட்டக் கூடிய நிகழ்ச்சி.
பெரியவர் அவர்களை நான் மிக நன்றாக அறிவேன். என்னுடைய தந்தையார் தங்கபாண்டியனார் அவர்கள், மறைந்துவிட்ட சிறுகதை மன்னர் தென்னரசு அவர்கள், கழகத்தில் புதிய மருது என்று அழைக்கப்பட்ட மதுரை முத்தண்ணன் அவர்கள் போன்றவர்களோடு அந்தக் காலகட்டத்தில், தென்பகுதி மண்டலத்தில் இயக்கம் வளர்க்கத் தொடங்கிய அந்தத் தொடக்கக் காலங்களில் இருந்து, தலைவர்மீது பத்தமடையார் கொண்டிருக்கக் கூடிய தணியாத பாசத்தால், தலைவர் கலைஞர் தென்பகுதிக்கு வருகிறபொழுதெல்லாம், எதை மறந்தாலும், யாரை மறந்தாலும், கலைஞர் அவர்கள் இறுதி மூச்சு இருக்கின்ற வரை, அவர் மறக்காமல் நினைவில் வைத்திருந்த பெயர் பத்தமடை பரமசிவம் என்பது கழகத்தில் இருக்கக் கூடிய அத்துணை பேருக்கும் தெரிந்த ஒன்று.
தாய்க்கழகத்திலிருந்து மிகுந்த பரிவோடு, பத்தமடையார் உழைப்பினைப் பாராட்டி விழா!
அவருடைய முதுமை பருவத்தில், இன்றும் அவர் கழகத்தினுடய உணர்வோடு, இன்றைக்குக் கலைஞர் அவர்களுடைய நினைவுகளைத் தேக்கிக்கொண்டு, கழகத்தினுடைய கொள்கைகளைத் தன்னுடைய நெஞ்சிலே உரமாக வைத்திருக்கக் கூடிய அவருக்கு, ஆசிரியர் அவர்கள், ‘‘தாயின் சாலப் பரிந்து” என்று சொல்வார்களே, அதுபோல தாய்க்கழகத்தில் இருந்து மிகுந்த பரிவோடு, அவருடைய உழைப்பினை, அவர் நல்கியிருக்கக் கூடிய பங்களிப்பினை, இந்த இயக்கத்திற்கு அவர் ஆற்றியிருக்கக் கூடிய தொண்டினை, நிறைவேற்றக் கூடிய வகையில், அவருக்குப் பாராட்டு விழாவாக இன்றைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற விழாவில், நானும் கலந்துகொள்ளக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
நான், 2006 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலகட்டத்தில், அய்யா பத்தமடையார் அவர்கள் சென்னைக்கு வருகின்றபொழுதெல்லாம் கோட்டையில் என்னை சந்திப்பார்கள். அப்படி சந்திக்கின்றபொழுதெல்லாம் இந்தக் கிராமத்திற்கும், இந்தத் தொகுதிக்கும் வேண்டிய என்னென்ன கோரிக்கைகள் இருக்கிறதோ, அதையெல்லாம் அவர் எடுத்துச் சொல்வார். என்னிடம் தனிப்பட்ட முறையில் மிகுந்த பாசமும், நேசமும் கொண்டவராக இருந்தார்.
இப்பொழுதுகூட நான் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட காலகட்டத்தில், எனக்கு வாழ்த்துத் தெரிவித்து அவர்கள் நேரிடையாக ஒரு மடலை அனுப்பியிருந்தார்.
இன்னும் நூறாண்டு காலம் வாழவேண்டும்!
அந்த அளவிற்குக் கழகத்தில் வளர்ந்து வரக்கூடிய இளைய தலைமுறை, அடுத்த தலைமுறையைச் சார்ந்திருக்கக் கூடிய எங்களுக்கு, ஆக்கமும், ஊக்கமும் கொடுக்கக்கூடிய முதல் தலைமுறையைச் சேர்ந்த அவர், எங்களுடைய வளர்ச்சியில் அவர்கள் காட்டக்கூடிய அன்பும், அக்கறையும் எங்களை எப்பொழுதும் மகிழ்ச்சிக் கொள்ளத்தக்க செய்தியாக அமைந்திருக்கிறது. அவர்கள் இன்னும் நூறாண்டு காலம் வாழவேண்டும்.
அய்யா ஆசிரியரின் வாழ்த்து!
நம்முடைய ஆசிரியர் அவர்கள் பத்தமடையாரை வாழ்த்துகிறபொழுது, இன்றைக்கு நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோம்; அதேநேரத்தில், இந்த மேடையில் இருக்கக்கூடிய எல்லோரும், ‘‘மீண்டும் உங்கள் நூற்றாண்டு விழாவிற்கு வந்து, உங்களை வாழ்த்துவோம், பாராட்டுவோம், அந்த வாய்ப்பை நாங்கள் பெறுவோம்” என்று ஆசிரியர் அவர்கள் வாழ்த்தியிருக்கிறார். அதுதான் நமக்குக் கிடைத்திருக்கக் கூடிய பெருமை. அவர் வாழ்த்தி இருக்கக்கூடிய அந்த வாழ்த்துதலோடு, நானும் என்னுடைய வயதின் காரணமாக, வாழ்த்துதல் இல்லையென்றாலும், என்னுடைய வணக்கத்தினை அய்யா அவர்களுக்குத் தெரிவித்து, நீங்கள் வாழ்வாங்கு வாழவேண்டும்.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞர் அவர்களும் எந்தக் கொள்கையை நமக்குப் போதித்தார்களோ, அந்தக் கொள்கை உரமேந்தி, வரக்கூடிய தலைமுறைக்கு வழிகாட்டக்கூடிய வகையில், நீங்கள் சிறப்புற்று வாழவேண்டும்; நோய் நொடியின்றி வாழவேண்டும் என்று, வந்திருக்கக்கூடிய உங்கள் அனைவருடைய வாழ்த்துதலோடு, அய்யா அவர்களை ‘‘வாழ்க, வாழ்க!” என்று நானும் இணைந்து வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்.
அடுத்து, இந்த நிகழ்ச்சியினுடைய மிக முக்கியமான ஒன்று – சேரன்மாதேவியில் நடைபெற்ற குருகுலப் போராட்டத்தினுடைய நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சி!
நாட்டு மக்களுக்கு நாம் நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கின்றோம்
இன்றைக்கு நம்மிடத்தில் குருகுலப் போராட்ட வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும் என்று சொன்னால், வரலாற்றுச் சம்பவங்களை அவ்வப்பொழுது நாம் நினைவூட்டிக் கொண்டிருந்தால்தான், எத்தகைய சோதனைகளையெல்லாம் இந்தச் சமுதாயம் தாண்டியிருக்கிறது? எத்தகைய கீழ்மை நிலையிலிருந்த இந்த சமுதாயத்தைத் தந்தை பெரியார் அவர்கள், தன் உழைப்பால், தன்னுடைய பேச்சால், ஊர் ஊராக அவர் அலைந்து திரிந்து அவர் செய்திருக்கக் கூடிய மகத்தான காரியங்களால் அவை நிறைவேறி இருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு நாம் நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.
கொள்கைச் சுடரை ஏந்தி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் அய்யா ஆசிரியர்!
தந்தை பெரியார் மறைந்துவிட்டார், பேரறிஞர் அண்ணா மறைந்துவிட்டார்; தலைவர் கலைஞர் மறைந்துவிட்டார் – ஆனால், நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியரைப் போன்றவர்கள்தான் இன்றைக்கும் அந்தக் கொள்கைச் சுடரை ஏந்தி, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இப்பொழுதும் அந்தக் கொள்கைகளை மக்களிடையே நினைவூட்டுகிறார்களே, ஆசிரியர் அவர்களே, உங்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுதான் பெரியார் காட்டிய பாதை என்று வழிநடத்தக் கூடிய உங்களோடு நாங்கள் கலந்துகொள்கிறோம்!
எங்களுக்கெல்லாம் கொள்கைகளைக் கற்பித்துக் கொடுக்கக் கூடியவராக, கொள்கைவழியில் நடப்பதற்கு எங்களுக்கெல்லாம் ஊக்கம் தரக்கூடியவராக, இதுதான் பெரியார் காட்டிய பாதை என்று வழிநடத்தக் கூடிய உங்களோடு நாங்கள் கலந்துகொள்கிறோம்; எங்களுக்கு நீங்கள் அறிவூட்டுகிறீர்கள்.
இந்தக் குருகுலம் எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்தது. தந்தை பெரியார் அவர்கள் இந்தக் குருகுலத்தைத் தொடங்க வேண்டும் என்று, அவரே தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு முன்வந்தார். பெரியாருடைய சிக்கனத்தைப்பற்றி நாடறிந்தது. இருந்தாலும்கூட, அன்றைய சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியினுடைய நிலைப்பாட்டினையொட்டி, இத்தகைய குருகுலங்களை ஏற்படுத்திடவேண்டும் என்ற காரணத்திற்காக உருவாக்கப்பட்ட குருகுலத்தில், ஏற்பட்டு இருந்த அந்த ஜாதி வேறுபாடுகள். நான் மேலான ஜாதி, நீ கீழான ஜாதி என்று வேறுபாடுகள் வந்திருக்கக் கூடிய அந்தக் காலகட்டத்திலே, உணவிலேகூட அந்த வேறுபாடு; மனிதன் சாப்பிடக் கூடிய சாப்பாட்டில் அந்த வேறுபாடு என்கிறபொழுது, அதைக் கண்டித்து எழுந்த முதல் குரல், தந்தை பெரியாருடைய குரல் -அந்தக் குரலுக்குத்தான் இன்றைக்கு நூறாண்டு காலமாகி இருக்கிறது. நூறாண்டு காலம் பெரியாருடைய குரல், அன்றைக்கு எழுப்பிய குரல், இன்றைக்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது என்று சொன்னால், அந்த ஜாதிய வேறுபாடுகளை மறந்து, சமத்துவமான ஒரு நிலை உருவாகவேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் குரலை இன்றைக்கும் நாம் ஒலித்துக் கொண்டிருக்கின்றோம்.
எந்தக் காரணத்திற்காக இந்தப் போராட்டம் வந்தது?
பெரியார் அவர்கள் ஒருமுறை சொன்னார், ‘‘வைக்கம் போராட்டத்தில், இந்தத் தெருவில் நாம் நடக்கவேண்டும் என்று சொன்னால், ஏதோ இந்தத் தெருவிலே மட்டும் நடப்பதற்கான போராட்டம் கிடையாது. குருகுலத்தில் சமபந்தி போஜனம் நடைபெறவேண்டும் என்றால், ஏதோ அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவேண்டும் என்பதற்காக மட்டும் இந்தப் போராட்டம் கிடையாது. எந்தக் காரணத்தினால் இந்தப் போராட்டம் வந்தது? அதற்குப் பின்னணியில் என்ன காரணங்கள் இருக்கின்றன? என்ன ஜாதி வேறுபாடுகள் இருக்கின்றன? யார், யாரை கீழே தள்ளுகிறார்கள்? என்பவற்றைக் கண்டித்து நடைபெறக்கூடிய போராட்டங்கள்தான், இந்தப் போராட்டங்கள்” என்று பெரியார் அவர்கள் முழங்கினார்.
பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்!
அதற்காகத்தான் தலைவர் கலைஞர் அவர்கள், எந்தத் தெருவிலே நீங்கள் நடக்கக்கூடாது என்று சொன்னார்களோ, இப்பொழுது ஒவ்வொரு மாவட்டங்களிலும், தமிழ்நாட்டினுடைய மூலைமுடுக்குகளில் எல்லாம் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்கி, அத்துணை பேரையும் ஒரே இடத்தில் குடியேற்றுவேன் என்று நம்முடைய தலைவர் கலைஞர் உருவாக்கினார்.
எந்த இடத்தில், ஒருவர் பக்கத்தில் உயர்ஜாதிக்காரர்கள் சாப்பிடக்கூடாது; சாப்பாட்டில் இருவருக்கும் வேறுபாடு காட்டினீர்களோ, அந்தத் தமிழ்நாட்டில்தான், காலையில் பள்ளிக்கூடம் வரும் மாணவர்களுக்கு, காலை உணவுத் திட்டத்தை அத்துணை பேருக்கும் சமமாக உருவாக்கித் தந்திருக்கின்றவராக நம்முடைய முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார்கள்.
சமதர்ம சமத்துவ சமுதாயமாக உருவாகவேண்டும் என்பது பெரியார் கண்ட கனவு
எனவே, உணவிலே இருக்கக்கூடிய அரசியல்; உணவில் இருக்கக்கூடிய வேற்றுமைகளையெல்லாம் ஒழித்துவிட்டு, எல்லோரும் ஒரு குலம்; எல்லோரும் சமதர்ம சமத்துவ சமுதாயமாக உருவாகவேண்டும் என்பது பெரியார் கண்ட கனவு – நம்முடைய ஆசிரியர் அவர்கள் எழுதியிருக்கக்கூடிய வரலாற்றுச் சுவடு நூலை நான் மேடையில் படித்துக் கொண்டிருந்தேன்.
இன்றைக்கு நாம் வளர்ந்திருக்கின்றோம்;
சமதர்ம சமதாயத்தைக் கண்டிருக்கின்றோம்!
பெரியார் அவர்கள் 1937 ஆம் ஆண்டு ‘நவமணி’ ஏட்டில் எழுதுகிறார்: அவர் சிறுவனாக இருந்த காலத்தில், தண்ணீர் குடிப்பதற்குக்கூட ஒரு வீட்டில் போய் குடிக்க முடியாது; இன்ன ஜாதியார் வீட்டில், இன்ன ஜாதிக்காரப் பிள்ளைகள் தண்ணீர் குடிக்க முடியாது. பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு மாணவனை அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்று சொன்னால்கூட, வாத்தியாரே வந்து, ‘‘ஏன், அந்த ஜாதிப் பையனை நீ கூட்டிக் கொண்டு போகிறாய்?” என்றெல்லாம் சொல்லக்கூடிய ஒரு காலகட்டம் இருந்தது என்று பெரியார் அவர்களே குறிப்பிடுகிறார் என்று சொன்னால், இன்றைக்கு நாம் வளர்ந்திருக்கின்றோம்; சமதர்ம சமதாயத்தைக் கண்டிருக்கின்றோம்.
நம்மையெல்லாம் மனிதனாக உருவாக்குவதற்கு பெரியார் அவர்கள் அளித்திருக்கின்ற ஒரு பெருங்கொடை
மேடையிலும், மேடைக்கு முன்பாகவும் ஜாதி வேறுபாடுகளையெல்லாம் தள்ளிவிட்டு, நாம் அனைவரும் தமிழர்கள் – தமிழால் ஒன்றுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்ச் சமுதாயத்தை, தமிழ் ஜாதியைச் சார்ந்தவர்கள் என்ற அந்த ஒருமைப்பாட்டு உணர்வோடு நாம் இங்கே இருக்கிறோம் என்று சொன்னால், அது தந்தை பெரியார் அவர்கள், நம்மையெல்லாம் மனிதனாக உருவாக்குவதற்கு அவர் அளித்திருக்கின்ற ஒரு பெருங்கொடை என்பதை மட்டும் நான் இந்த நேரத்தில் நினைவூட்டி, நீங்கள் ஊட்டி வளர்த்திருக்கக் கூடிய உறவுகள், ஆசிரியர் அய்யா அவர்களே, தாய்க்கழகத்தில் இருந்து நீங்கள் கொடுக்கக் கூடிய இந்த உணர்வுதான், எங்களுக்குப் படை வரிசையில் செல்வதற்கு மாபெரும் பலமாக இன்றைக்கு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் நாங்கள் வருகிறபொழுதுதான்….
போர்க் களத்திற்குச் செல்லக்கூடிய சிப்பாய், பாசறைக்குத் திரும்பி வருகிறபொழுதுதான், மீண்டும் உத்வேகம் பெற்றுச் செல்வதைப்போல, உங்கள் அருகாமையில் நாங்கள் வருகிறபொழுதுதான், எதிர்த்து வரக்கூடிய துன்பங்கள், எதிர்த்து வரக்கூடிய பகைகள் எதுவாக இருந்தாலும், அவற்றைச் சமாளிக்கக் கூடிய திராணியும், தெம்பையும் பெற்றவர்களாக நாங்கள் இருக்கிறோம்; எங்களை உருவாக்கியிருக்கிறீர்கள்.
உங்களுக்கு எங்களுடைய நன்றியினை தெரிவித்து,வணங்கி விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்!
இவ்வாறு தமிழ்நாடு நிதியமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் மாண்புமிகு மானமிகு தங்கம்.தென்னரசு அவர்கள் சிறப்புரையாற்றினார்.