ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்களும், பிஜேபியினரும் வீராப்புப் பேசுவதெல்லாம் தங்களுடைய ’22 காரட்’ தேச பக்தி பற்றிய அளப்புதான்.
அவர்களுடைய அந்தத் தேசப் பக்தி என்பதற்கு அடையாளம் எது என்றால் தங்களுடைய பார்ப்பன இந்து மதத்தவர்களைத் தவிர மற்றவர்களை மூர்க்கத்தனமாக மிருகத்தனமாக எதிர்ப்பது தான்! (இந்து மதத்தில்கூட உயர் ஜாதியினரின் ஆதிக்கப் பீடமாக இருக்குமே தவிர, இந்து மதத்தவர் என்று சொல்லப்படும் பார்ப்பனர் அல்லாதாரை – அதிலும் குறிப்பாகப் பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் கூட்டம்தான் இது).
குஜராத்தில் – அகமதாபாத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் இந்தியா – பாகிஸ்தானுக்கிடையிலான – உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. (15.10.2023)
அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது – விளையாட்டுப் போட்டியில் வெற்றி – தோல்வி என்பது இயல்பான ஒன்றாகும்.
இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்ததும் உண்டு. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றால், ஏதோ இரண்டு நாடுகளுக்கிடையிலான யுத்தம் என்பது போன்ற ஒரு மனப்பான்மை உருவாக்கப்பட்டது என்பது வெட்கக் கேட்டுக்குப் பிறந்த வெட்கக் கேடாகும்!
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் விளையாட்டுக்காரர் முகம்மது ரிஸ்வான் ஓய்வறையை நோக்கி நடந்து சென்றபோது, ரிஸ்வானை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்!’ என்று வெறித்தனமாக முழக்கமிட்டனர்.
இந்தப் பிரச்சினை உலகளவில் விமர்சிக்கப்படுகிறது – சமூக வலைதளங்களில் வெகுவாக – இந்தியாவைப் பற்றி மிகக் கேவலமாக விமர்சிக்கப்படுகிறது. சகிப்புத்தன்மையற்ற செயல் என்று கண்டிக்கப்படுகிறது.
பாகிஸ்தானோடு இந்தியா விளையாடுகிறது என்றாலே – சங்பரிவார் கும்பலுக்கு குடலைப் புரட்டிக் கொண்டு வரும் கட்டுக் கடங்காத அப்படியொரு எரிச்சல்!
1989ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி, பாகிஸ்தான் செல்வதில்லை. அதே போல பாகிஸ்தான் அணியும் 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு வருவதில்லை.
1991இல் ஒரு கேவலமான நிகழ்வு! மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கிரிக்கெட் நடப்பதாக இருந்தது.
அப்பொழுது நடைபெற்றது என்ன? சிவசேனாவைப் பிளந்து பிஜேபியோடு கூட்டணி சேர்ந்து மகாராட்டிர மாநிலத்தில் முதலமைச்சராக இருக்கும் ஏக்நாத் சிண்டேயும் அவரது உறவினரும் சட்டப் பேரவை உறுப்பினருமான ஷிசிர் சிண்டேயும் மற்ற சிவசேனைக் குண்டர்களும், பாகிஸ்தான் விளையாடவிருந்த வான்கடே மைதானத்தில் உள்ளே திடு திப்பென்று புகுந்து ஆடுகளத்தைச் சேதப்படுத்தினர்.
1999ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரமான டில்லி யிலும் இந்த ஆபாசம் – அநாகரிகம் – அரங்கேறியதுண்டு.
டில்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் பந்தயம் நடக்க இருந்த சூழலில் சங்பரிவார்கள் அந்த மைதானத்துக்குள் புகுந்து ஆடு களத்தை முற்றிலுமாக சேதப்படுத்தினர்.
அதேபோல 2006ஆம் ஆண்டில் மொகாலியில் (இமாச்சல பிரதேசத்தில்) நியூசிலாந்து – பாகிஸ்தானுக்கிடையே கிரிக்கெட் பந்தயம் நடக்கவிருந்த நிலையில் இதே காவிக் கும்பல் மைதானத்தில் புகுந்து ஆடுகளத்தை உண்டு இல்லை என்று செய்து விட்டனர்.
இந்தியாவோடு பாகிஸ்தான் விளையாடுவதையும் கடந்து, பாகிஸ்தான் என்றாலே அப்படியொரு வெறித்தனத்தில் வேட்டையாடக் கிளம்பி விடுகின்றனர். காரணம் சங்பரிவார் கையில் எடுத்துள்ள ஆயுதம் – முஸ்லிம் எதிர்ப்பு என்ற கொடூரமான வெறுப்புப் புத்திதான்.
அன்று மும்பை வான்கடே மைதானத்தை சேதப்படுத்திய கும்பலுக்குத் தலைமை வகித்த இன்றைய மகாராட்டிர மாநில அமைச்சரான ஷிசிர்சிண்டேயிடம் ‘இன்னும் சில நாட்களில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா -பாகிஸ்தானுக்கிடையே கிரிக்கெட் பந்தயம் நடக்கப் போகிறதே என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டபோது அப்போதிருந்த காலம் வேறு, தற்போதைய காலம் வேறு என்று சமாளித்தார்.
வேறு ஒன்றும் இல்லை – இப்போது ஆளும் கட்சியாக இவர்கள் இருப்பதுதான் இதற்குள் இருக்கும் காரணமாகும்.
நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடந்த அநாகரிகம் குறித்து செய்தியாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய அரசின் இணை அமைச்சர் திரு. எல். முருகனிடம் கேட்டபோது முறையாகப் பதில் சொல்ல வக்கில்லாமல், ‘ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்!’ என்று சொல்லிசெய்தியாளர்களைச் சந்திக்க முடியாமல் கோழைத்தனமாக ஓடிய காட்சியும் சமூக வலைதளங்களில் ஓடிக் கொண்டும் தான் இருக்கிறது.
உலக நாடுகள் முன் இந்தியாவைத் தலைக்குனிய செய்வதற்கென்றே ஓர் ஆட்சி இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
எப்படிப்பட்ட பெருமைக்குரிய மாமனிதர்கள் எல்லாம் பிரதமராக இருந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்கள் என்பதையும், அந்தப் பெருமைகளையெல்லாம் நாசப் படுத்தும் வகையில் ஓர் ஆட்சி இப்பொழுது நடைபெறு வதையும் எண்ணிப் பார்க்கும்போது; நமது தலைகள் குனியத் தான் செய்யும்.
நமது தலைகள் நிமிர வேண்டுமென்றால் 2024இல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பிஜேபி மற்றும் அதன் கூட்டணியைக் கட்சிகளுக்கு வலுவான நல்லதோர் பாடத்தைக் கற்பித்தால்தான் உண்டு!
விளையாட்டில்கூட இந்த மதவெறி விளையாட்டு என்றால், எவ்வளவுக் கேவலம்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!