பரந்த மனப்பான்மைக்கு நெய்வேலி ஜெயராமன் ஓர் எடுத்துக்காட்டு!
அவரது விழிகளும் – உடலும் கொடையாகக் கொடுக்கப்பட்டன!
இறந்தும் வாழ்கிறார் நெய்வேலி ஜெயராமன்!
படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் புகழாரம்!
திருவையாறு, ஜன.9 பரந்த மனப்பான்மைக்கு நெய் வேலி ஜெயராமன் ஓர் எடுத்துக்காட்டு! அவரது விழிகளும் – உடலும் கொடையாகக் கொடுக்கப்பட்டன! ‘‘இறந்தும் வாழ்கிறார் நெய்வேலி ஜெயராமன்” என்றார் அவரது படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வில் திரா விடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நெய்வேலி ஜெயராமன் படத்திறப்பு – நினைவேந்தல்
கடந்த 3.1.2024 அன்று மாலை தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம் நடுக்கடை, ஜமாத்மகாலில் நடைபெற்ற மறைந்த பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி ஜெயராமன் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.
அவரது நினைவேந்தல் உரை வருமாறு:
எந்தவிதமான எதிர்ப்பு வந்தாலும், அதனைத் துணிந்து எதிர்கொள்ளக்கூடியவர்!
செயல் வீரர்களில் ஒருவராகவும், எதிர்ப்பு என்பதைப்பற்றி கவலைப்படாமல், எங்கே, எந்த விதமான எதிர்ப்பு வந்தாலும், அதனைத் துணிந்து எதிர்கொள்ளக்கூடிய, அச்சம் என்பதை அறியாத, வீரத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கக் கூடிய ஓர் அற்புதமான சிறந்த கொள்கை வீரர்தாம் நெய் வேலி ஜெயராமன் அவர்கள் – வாழ்நாள் பெரியார் தொண்டர்.
இன்றைக்குப் படமாக மட்டுமல்ல,
நமக்குப் பாடமாகி விட்ட அந்த அருமைத் தோழர் சுயமரியாதை வீரர்!
அவர், தான் மட்டும் அந்தக் கொள்கைக்கு ஆளா காமல், அவர் வழிப்பட்ட குடும்பங்கள், அவரோடு நெருங்கிப் பழகிய தோழர்கள் அனைவரையும் பெரியார் கொள்கை வழிப்பட்டவர்களாக ஆக்கக்கூடிய அந்த முயற்சியில், இடையறாது ஈடுபட்டு, இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில், அந்தக் கொள்கை உணர்வின் வடிவமாகவே இருந்து, இன்றைக்குப் படமாக மட்டுமல்ல, நமக்குப் பாடமாகி விட்ட அந்த அருமைத் தோழர் சுயமரியாதை வீரர் – நெய்வேலி ஜெயராமன் என்ற அந்த அடைமொழியோடு இருக்கக்கூடியவர்.
அவருடைய ஊர் மாத்தூராக இருந்தாலும், நெய் வேலி ஜெயராமனாகவே, எல்லாத் தோழர்களுக்கும் அறிமுகமானவர். அவருடைய நினைவைப் போற்று வதற்கும், படத்திறப்பு என்பதின்மூலமாக அவருக்கு வீர வணக்கம் செலுத்துவதற்கும், அதேநேரத்தில், நாமெல் லாம் சோகத்தின் நடுவில் இருக்கக்கூடிய அந்தத் துன்பத்தை, துயரத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இங்கே சிறப்பாக உரையாற்றிய அருமைத் தோழர் கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொரு ளாளர் செந்திலதிபன் அவர்களே,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள் கைப் பரப்புச் செயலாளர் வந்தியத்தேவன் அவர்களே,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் முனைவர் தமிழ்ச்செல்வன் அவர்களே,
ஜெயராமன் அவர்களை கண்ணை இமை காப்பதைப்போல…
அய்யா ஜெயராமன் அவர்களை கண்ணை இமை காப்பதைப்போல என்று சொல்லலாம் – மருத்துவர்கள் எப்படியெல்லாம் நோயாளியைக் காப்பாற்றவேண்டும் என்பதற்கு ஓர் இலக்கணம் போல மிகச் சிறப்பாக இருந்து, அவரை இவ்வளவு காலம், இரண்டு, மூன்று ஆபத்தான அலைகள் – கரோனா காலகட்டத்தில் – மறுபடியும் கரோனா தொற்று தாக்கியபொழுது, மிகவும் கவலையோடு அவரைப்பற்றி விசாரித்தோம்.
அப்பொழுதுதான், இங்கே பேசிய டாக்டர் மருது துரை அவர்களையும், டாக்டர் அரவிந்தன் அவர்களை யும்பற்றிச் சொல்லி, அவர்களின் மருத்துவ சிகிச்சையைப் பற்றி மிக ஆழமாக, நன்றி உணர்ச்சியோடு சொல்லி, ‘‘அய்யா, அந்த மருத்துவர்கள்தான் என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்; நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்று உணர்ச்சிப்பூர்வமாக என்னிடத்தில் தொலைப் பேசியில் சொல்லி, ‘‘நீங்கள் கவலைப்படவேண்டாம்” என்றும் சொன்னார்.
அந்த அளவிற்குக் கடமையாற்றிய அருமை மருத் துவச் செல்வங்களான மருதுதுரை அவர்களே, அர விந்தன் அவர்களே,
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் கழகப் பொறுப் பாளர்களே, தோழர்களே, பெரியோர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொள்கைத் தளபதியாக, சுயமரியாதை வீரராக நெய்வேலி ஜெயராமன் அவர்கள் திகழ்ந்தார்!
நாடு தழுவிய அளவில், நல்ல அளவிற்கு அறிமுக மான ஒரு கொள்கைத் தளபதியாக, சுயமரியாதை வீரராக என்றைக்கும் நெய்வேலி ஜெயராமன் அவர்கள் திகழ்ந்தார் என்பதற்கு அடையாளமே, இத்தனை மாவட்டத் தலைவர்கள், இத்தனைக் கழகப் பொறுப் பாளர்கள் எல்லாம் அவருடைய இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு, அவருக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற இந்நிகழ்ச்சியே எடுத்துக்காட்டாகும்.
அவரை நாம் எல்லோரும் இழந்திருக்கின்றோம்; அந்தத் துயரத்திலிருந்து, துன்பத்திலிருந்து விடுபட முடியாத அளவிற்கு, நாம் சிக்குண்டு இருக்கிறோம்; அவருடைய பல்வேறு பணிகள், பல்வேறு ஆக்கங்கள், ஊக்கங்கள் அவையெல்லாம் எடுத்துக்காட்டானவை என்று எல்லோரும் நினைத்திருந்தாலும், அதன் காரணமாக, நம்முடைய துன்பமும், துயரமும், சோகமும் அதிகமாக இருந்தாலும், நேரிடையாக பாதிப்பிற்கு உள்ளானவர் அருமை சகோதரியார் அவருடைய வாழ்விணையர் தேவகி ஜெயராமன் அவர்களாவார்கள்.
அவர் அதைத் தாங்கிக்கொண்டிருந்த நிலையில், ஜெயராமன் அவர்கள் மறைவுற்ற அன்று, நான் வர முடியாத சூழலில், தொலைப்பேசியில் அவருடன் தொடர்புகொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரி வித்தேன். இறுதி நிகழ்விற்கு கழகப் பொதுச்செயலாளர், கழகப் பொறுப்பாளர்களை அனுப்பினோம். நம்முடைய மருத்துவர்களும் நான், அன்றைக்குத் தொலைப்பேசியில் பேசியதை இன்றைக்கு இங்கே சொன்னார்கள்.
என்னுடைய வாழ்விணையரும், தேவகி அம்மை யார் அவர்களும் நெருக்கமானவர்கள். உடல்நிலைக் குறைவின் காரணமாக என்னுடைய வாழ்விணையர் இங்கே வர முடியாத சூழல். நாங்கள் எல்லாம் குடும்பப் பாசத்தோடு இருக்கக் கூடியவர்கள்.
எங்கள் துயரத்தை, எங்களுடைய சோகத்தைப் பகிர்ந்து ஆறுதல் கூற…
அப்படிப்பட்ட உணர்வோடு இருக்கக்கூடிய அருமைச் சகோதரியார் தேவகி அவர்களே, சகோதரி செந்தமிழ்ச்செல்வி- யோகவனம் அவர்களே, சகோதரர் ஞானசேகரன்- மதன்விழி அவர்களே, அவருடைய சகோதரர் இராவணன்- கயல்விழி அவர்களே, நெய்வேலி ஜெயராமன் அவர்களுடைய மைத்துனர் முருகேசன்- உமா அவர்களே, மருமகன் இராமச்சந்திரன்- வாசுகி அவர்களே, மருமகன் செந்தில்- கயல்விழி அவர்களே, மைத்துனர் முத்து – காவியா அவர்களே, மகள்கள் தமிழ்எழில்- வெங்கடேசன், தமிழ் ஈழமணி -பிரவீன்குமார், தமிழ்ப்பொழில் – குலோத்துங்கன், சகோதரி மகள்கள் செந்தில் அரசி, கனிமொழி – வெங்கடேசன், யாழினி- கணேஷ், மகன் தென்னரசு ஆகிய அருமைத் தோழர்களே, குடும்பத்தவர்களே, பல்வேறு துறைகளிலிருந்து வந்திருக்கக் கூடிய நண் பர்களே, அவருடன் பணியாற்றி, அவருக்கு இறுதியாக வீர வணக்கம் செலுத்துகின்ற இந்த நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும் என்று உணர்ச்சியோடு வந்திருக்கின்ற தோழர்களே மற்றும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடிய அத்துணைப் பெருமக்களே, எங்கள் துயரத்தை, எங்களுடைய சோகத்தைப் பகிர்ந்து ஆறுதல் கூற வந்திருக்கின்ற அத்துணை பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் குடும்பம் எங்கள் குடும்பம். நாங்கள் ரத்தத் தால் உறவு உள்ளவர்கள் என்பதைவிட, கொள்கையால் என்றைக்கும் பிரிக்கப்பட முடியாத உறவுள்ள குடும்பம் தான் சுயமரியாதைக் குடும்பம்.
ரத்தத்தைக் விடக் கெட்டியானதுதான் திராவிடக் கொள்கைகள், சுயமரியாதைக் கொள்கைகள்!
நான் அடிக்கடி சொல்வது உண்டு – ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை சொல்வார்கள் – ‘‘தண்ணீரை விட கெட்டி யானது ரத்தம்” – ஆனால், ரத்தத்தைக் விடக் கெட்டி யானதுதான் திராவிடக் கொள்கைகள், சுயமரியாதைக் கொள்கைகள்.
அந்த உணர்வோடுதான் – அண்ணன், தம்பி, சகோ தரர்கள், சகோதரி என்ற பாசத்தோடு நாங்கள் இருக் கிறோம்.
யார், என்ன ஜாதி? என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஜெயராமன் அவர்களை 50 ஆண்டுகளாக நான் அறிவேன். அவர் பணியாற்றிய காலத்திலிருந்து நான் அறிவேன்.
‘‘நெய்வேலியா? பூணூல் வேலியா?’’
‘‘நெய்வேலியா? பூணூல் வேலியா?” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை அச்சிட்டு, அய்யா ஜெயராமன் அவர்களை அழைத்துக்கொண்டு போனோம். எட்டணா அந்தப் புத்தகம்.
தென்னார்க்காடு மாவட்டத் தலைவர் கிருஷ்ண சாமி அவர்கள் அங்கே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே கூட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டனர்.
‘‘கூட்டத்திற்கு அனுமதி இல்லை” என்று சொன்னவுடன், அய்யா அவர்கள், ‘‘அனுமதி, உள்ளேதான் கிடையாது என்று சொல்கிறார்கள்; வெளியே கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய் யுங்கள்” என்று சொன்னார். அய்யாவினுடைய சாமர்த்தியத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
அன்றைய காலகட்டத்தில் ஜெயராமன் போன் றவர்கள் இளைஞராக இருந்து பணியாற்றினார்.
நெய்வேலி நிறுவனம் சமூகநீதிக்கு விரோதமாக இருக்கிறது!
நான், இன்னும் மூன்று பேர் சென்று, அந்தக் கூட்டத் தைத் தொடங்கினோம். அந்தக் கூட்டத்தில் அய்யா வினுடைய உரையை ஆங்காங்கே திட்டுத் திட்டாக தூரமாக இருந்தே கேட்டனர். யாரும் கிட்டே வரவில்லை.
அன்னை மணியம்மையார் அவர்களும், நாங்களும் புத்தகங்களை விற்பனை செய்துகொண்டிருந்தோம்.
அய்யா அவர்கள் உரையாற்றும்பொழுது, ‘‘இங்கே நான் ஏன் பேச வந்திருக்கிறேன் என்பதை புள்ளி விவரத்தோடு இந்தப் புத்தகத்தில் விளக்கமாகப் பதிவிட் டிருக்கின்றோம். அதனை வாங்கி நீங்கள் படியுங்கள்” என்று சொல்லிவிட்டு, இந்நிறுவனம் சமூகநீதிக்கு விரோதமாக இருக்கிறது என்று சொல்லி, தன்னுடைய உரையைத் தொடங்கினார். சுமார் இரண்டரை மணி நேரம் தந்தை பெரியார் அவர்கள் பேசினார். தள்ளி யிருந்த கூட்டத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தனர்.
கூட்டம் பேசி முடித்து களைப்பாக இருந்தாலும், திரும்பிப் பார்த்து, அம்மாவையோ அல்லது அருகில் இருக்கும் எங்களைப் போன்றவர்களையோ பார்த்து, ‘‘புத்தகங்கள் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனையாயிற்று?” என்று தந்தை பெரியார் அவர்கள் கேட்பது வழக்கம்.
தந்தை பெரியார் அவர்கள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியடைவார்!
புதிதாக அதைக் கேட்பவர்கள் என்ன நினைப் பார்கள் என்றால், ‘‘எவ்வளவு பணத்தாசை பாருங் கள் அவருக்கு -புத்தக வியாபாரத்தைப்பற்றி கேட் கிறார்?” என்று நினைப்பார்கள்.
200 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றன என்று சொல்வோம். ஒவ்வொரு புத்தகமும் 2 அணா அளவிற்குத்தான் இருக்கும்.
அதைக் கேட்டவுடன், அவருடைய கைகளைத் தட்டிக்கொண்டு, ‘‘அப்படியா! கூட்டம் வெற்றி – கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்று சொன்னார் களே, இப்பொழுது இந்த அளவிற்குப் புத்தகங்கள் விற்பனையாகியிருக்கிறதே, அந்தப் புத்தகத்தை எவ்வளவு பேர் படிப்பார்கள்?” என்று சொல்வார்.
அந்தக் காலகட்டத்தில், ஜெயராமன் போன்றவர் கள்தான், அங்கே களத்திற்கு வரக்கூடிய வீரர்களாக கொஞ்சம் கொஞ்சமாக வந்தார்கள்.
ஒரு நல்ல கொள்கைக் குடும்பம் – சீரிய கொள்கைக் குடும்பம்!
அந்தக் காலத்திலிருந்து, அவர் மறைவடைகின்ற வரையில், இந்தக் குடும்பம் ஒரு நல்ல கொள்கைக் குடும்பம் – சீரிய கொள்கைக் குடும்பம்.
அவர் ஒருமுறை சொன்னார், திருச்சி துறையூர் வழக்குரைஞர் ரங்கசாமி ரெட்டியாரிடம், ஜூனியராக இருந்து, பிற்காலத்தில் பிரபல வழக்குரைஞராகவும், அரசாங்க வழக்குரைஞராகவும் இருந்தவர் தோழர் ராமையா அவர்கள்.
ராமையா அவர்கள் தூரத்து உறவினர். அப்பொழுது, அய்யா அவர்களுக்கு, வழக்குரைஞர் ராமையா அவர் கள் செல்லப்பிள்ளை போன்றவர்.
இங்கே நண்பர்கள் சொன்னதுபோன்று, ஜெயராமன் அவர்களுடைய துணிச்சல் என்பது அசாத்தியமான துணிச்சலாகும்.
கோபக்காரர், மிக வேகமாகப் பேசுவார். நடுவில் நிற்பது என்பதே ஜெயராமனுக்குக் கிடையாது. ஒன்று இந்தக் கடைசியில் இருப்பார்; அல்லது அந்தக் கடைசியில் இருப்பார். அதுதான் எதார்த்தமான சூழல்.
பாராட்டு என்றாலும் அதுபோன்றுதான்; எங்களைத் தாக்குவது என்றாலும், அதுபோன்றுதான். அவருடைய தாக்குதலுக்கு ஆளானவன் நான். அது கொள்கைப் பூர்வமானது. தனிப்பட்ட முறையில் எந்தவிதமான ஆசாபாசங்களும் அதில் இல்லை.
இந்த இயக்கம் எத்தனையோ நிகழ்வுகளைப் பார்த் திருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் இன்றைக்குப் படமாகிவிட்டார்.
இயக்கத்தின் சார்பிலும், அனைவரின் சார்பிலும் நன்றி!
ஜெயராமன் அவர்களை இவ்வளவுக் காலம் காப் பாற்றி வந்த மருத்துவர்களுக்கு மீண்டும் ஒருமுறை இயக்கத்தின் சார்பிலும், அனைவரின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய மக்கள் மத்தியில் பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது – அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவ மனை என்றால், அங்கே செல்ல விரும்பமாட்டார்கள். தனியார் மருத்துவமனைக்குச் சென்றால்தான், நன்றாகக் கவனிப்பார்கள் – கடன் வாங்கியாவது அங்கேதான் செல்லவேண்டும் என்று.
அந்த எண்ணத்தை மாற்றிய ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சிதான். அதற்குக் காரணம், நம்முடைய மருத் துவர்கள். கடமை உணர்ச்சியோடு பணியாற்றுகிறார்கள்.
ஜெயராமன் அவர்களிடம் நான் கேட்கும்பொழுது, அவருடைய நோய்பற்றி சொல்வதைவிட, அவரைக் கவனித்த மருத்துவர்களைப்பற்றிதான் அதிகம் சொல் வார்.
தனித்தன்மையோடு பேசுபவர்!
ஜெயராமன் அவர்கள், ஒரு துணிச்சல் மிகுந்தவர். எதிர்ப்பைப்பற்றி கவலைப்படாதவர். எந்த ஒரு பிரச் சினை என்றாலும், அங்கே வந்து நிற்பார். தனித்தன்மை யோடு பேசுவார்.
மற்றவர்கள் கருத்து சொல்வதற்கும், ஜெயராமன் அவர்களுடைய கருத்துக்கும் வித்தியாசம் இருக்கும்.
அதை ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது ஏற்றுக் கொள்ளவில்லையா? அவருடைய கருத்து முரட்டுத் தனமாக இருக்கிறதா? என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார் அவர்.
‘‘நெஞ்சில் நினைப்பதை செயலில் நாட்டுவது நீசமன்று மறக்குல மாட்சியாம்!” என்று புரட்சிக்கவிஞர் தெளிவாகச் சொன்னார்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான, சிறப்பான தகுதி யானவர் ஜெயராமன் அவர்கள். அவருடைய இழப்பு என்பது சொல்லொணாத ஓர் இழப்பாகும்.
முற்போக்காளர்கள் அத்துணை பேரும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நிற்கவேண்டும்!
ஒரு படை வீரன், பெரிய போர் நடந்துகொண்டிருக்கும் வேளை இது. ஒரு பக்கத்தில் மதவெறி, இன்னொரு பக்கத்தில் பதவி வெறி, மற்றொரு பக்கத்தில் ஜாதிவெறி – எல்லா வெறிகளும் சேர்ந்திருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், அதை எதிர்க்கின்ற ஒரு பெரிய வாய்ப்பு, தேவை, கட்டாயம், சரித்திரக் கட்டாயம் இது. இன்றைக்கு முற்போக்காளர்கள் அத்துணை பேரும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நிற்கவேண்டும்.
ஒரு மிக முக்கியமான கட்டத்தில், ஜெயராமனைப் போன்ற தளபதிகள் இல்லையே என்று நினைக்கின்ற நேரத்தில்தான், அந்த சோகத்தின் அளவு மிக அதிகமாக நமக்குத் தெரிகிறது. அதுவும் எங்களைப் போன்றவர்கள், ஒரு சுயமரியாதை வீரரை, அதுவும் பக்குவப்பட்ட சுயமரியாதை வீரரை – களத்தில் நின்று போராடக்கூடிய தளபதி போன்றவரை, வழிகாட்டக் கூடியவரை, துணிச்சல் மிகுந்தவர்களையெல்லாம் இழப்பது என்பது இருக்கிறதே, அது மிகமிகக் கொடுமையானதாகும்.
இங்கே நம்முடைய வந்தியத்தேவன் அவர்களும், மற்ற நண்பர்களும் உரையாற்றும்பொழுது சொன் னார்கள்.
எதைத் தவிர்க்க முடியாதோ, அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது தந்தை பெரியாருடைய சிந்தனை!
அதேபோன்று, காலையில், தொலைப்பேசி மணி சத்தம் கேட்டாலே, மகிழ்ச்சியோடு எடுப்ப தில்லை; அதிர்ச்சியோடுதான் எடுப்பேன்.
ஜெயராமன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டபொழுது, அதிலிருந்து மீண்டு வருவதற்கு எங்களைப் போன்றவர்களுக்குக் கொஞ்ச நேரம் ஆனது.
ஆனால், அய்யா அவர்கள் வழியில் வந்ததி னால், எதைத் தவிர்க்க முடியாதோ, அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற தந்தை பெரியாருடைய சிந்தனை, நம்மைக் கைகொடுத்து, அதிலிருந்து மீள வைக்கும்.
உங்கள் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள்!
நம்முடைய மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் போன்றவர்கள், அய்யனார் போன்றவர்கள் என்னிடத்தில் பேசும்பொழுது, அவரது உடல்நிலைப் பற்றி கேட்டேன். ஜெயராமன் அவர்களிடமும் சொன்னேன் – உங்கள் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, அந்தப் பொறுப்பில் இருந்து அவரை மாற்றினேன். ஏனென்றால், அதிகமாக அவர் சுற்றுப்பயணம் செய்யக்கூடாது; ஊரிலேயே இருந்து இயக்கப் பணியாற்றவேணடும் என்பதற்காக!
அவர் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்பொழு தெல்லாம், அந்தப் பாதிப்பிலிருந்து அவரை மீட்டெ டுத்துக் கொண்டு வந்தது நம்முடைய மருத்துவர்களு டைய சாதனையாகும்.
ஆனால், வேதனை என்னவென்றால், இவ்வளவு பெரிய களம் அமைத்து போர் நடைபெறக்கூடிய சூழ லில், தளபதி இல்லை என்பதுதான். மிக முக்கியமான வர்கள் இல்லை.
இயக்கத்தைத் தலைமையேற்று நடத்திக் கொண்டி ருக்கும் எங்களைப் போன்றவர்களுக்குத்தான் அந்த வேதனை எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தெரியும்.
ஒரு கொள்கை வீரரை இழந்துவிட்டோம் என்றால், அது ஒரு விஞ்ஞானியை இழந்ததைப்போல…
அவருடைய குடும்பத்தினருக்கு அவர் மறைந்தார் என்ற வேதனை எங்களைவிட அதிகம் இருக்கும் என் பதையும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், ஒரு சுயமரி யாதைக்காரரை, ஒரு கொள்கை வீரரை இழந்துவிட் டோம் என்றால், அது ஒரு விஞ்ஞானியை இழந்ததைப் போல, ஒரு படைத் தளபதியை இழந்ததைப்போல.
ஏனென்றால், மானம் பாராத தொண்டு – நன்றி பாராத தன்மான இயக்கம் இது.
சமுதாயப் பணிகளில், தன்மானம் முக்கியமா? இன மானம் முக்கியமா? என்றால், இனமானம்தான் என்று சொல்கிற இயக்கம் இந்த இயக்கம்..
‘‘ஏச்சு பேச்சு, இழிவார்ந்த நிலையா? ஏற்றுக்கொள்; சமூகப் பணிகளில் இருந்து பின்வாங்காதே!’’
எனவேதான், ‘‘ஏச்சு பேச்சு, இழிவார்ந்த நிலையா? ஏற்றுக்கொள். சமூகப் பணிகளில் இருந்து பின்வாங்காதே” என்று தந்தை பெரியார் சொன்ன பாடத்தை ஏற்றவர்கள் அத்துணை கருஞ்சட்டைக்காரர்கள் – அத்துணை கழக வீரர்கள்.
அதில் பக்குவப்பட்டு இருக்கின்ற தோழர்களை இழந்தால், இந்த அளவிற்கு இன்னொருவர் இந்த இயக்கத்திற்கு வந்து, அந்த காலி இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு எளிதா? என்பதை நினைக்கும் பொழுதுதான், எங்களுடைய துன்பம், துயரத்தினுடைய அளவு சொல்லொணாத அளவிற்கு இருக்கிறது.
என்றாலும், வேறுவழியில்லை. அய்யா ஜெயராமன் அவர்களுடைய தனிப்பட்ட குணம், அவருடைய கொள்கை உணர்வுகள் ஒருபக்கத்தில் இருந்தாலும் – அவருடைய மனிதநேயம் என்பது மிகவும் சிறப் பானதாகும். எல்லோருக்கும் உதவி செய்யவேண்டும் என்று நினைப்பார்.
பல பேரை அழைத்துக்கொண்டு வந்து, ‘‘அய்யா, இவர் இந்த மாதிரி, இவருக்கு இதை செய்யவேண்டும்” என்று சொல்லக்கூடிய அளவில் இருப்பார்.
அந்தத் துன்பத்தை, துயரத்தை எல்லாம் போக்கக் கூடிய அளவிற்கு, உழைக்கக்கூடிய ஒரு நல்ல தொண்டர்.
அவருடைய வாழ்க்கை ஒரு பகுதி இல்லறம்; இன்னொரு பகுதி கொள்கை வாழ்க்கை!
அவருடைய வாழ்க்கை ஒரு பகுதி இல்லறம்; இன்னொரு பகுதி கொள்கை வாழ்க்கை. இன்னொரு பகுதி, யாராக இருந்தாலும், அவரை அணுகினால், உடனே இயக்கத் தலைமையிடத்திற்கு அழைத்து வந்து, ‘‘அய்யா, இவருக்கு இந்த உதவியைச் செய்யலாம்” என்று எத்தனையோ பேரை அழைத்து வந்திருக்கின்றார். உரிமை எடுத்துக்கொண்டு சொல்வார்; மிகவும் வற்புறுத்தி சொல்வார். சொந்தப் பிரச்சினை என்றால்கூட, அப்படி சொல்லமாட்டார். அப்படிப்பட்ட ஓர் அற்புத மான மனிதநேயர். நல்ல மனிதம்!
ஜாதி, மதம் இவையெல்லாம் இருக்கின்ற நாட்டில், அந்த உணர்விற்கே இடமில்லாமல் இருப்பார்.
பொது இடத்தில் சந்திக்கும்பொழுது, அவரிடத்தில் உரிமை எடுத்துக்கொண்டு நான், ‘‘என்ன ஜெயராமன் வாங்க, உங்களுக்கு ஏற்ற உணவு இருக்கிறதா? இந்த விருந்தில் என்பது சந்தேகம்தான், நீங்கள் காய்கறிகளை சாப்பிடுகிறவர். உங்களுக்கு இறைச்சி உணவு சாப்பிட்டு பழக்கமில்லையே” என்பேன்.
‘‘இல்லீங்க, தயிர் சோறு இருக்கிறதாம்” என்று சொல் வார்.
மைனாரிட்டியைப்பற்றித்தான் நாம் அதிகமாகக் கவலைப்படுகிறவர்கள்!
இயக்க கமிட்டி நடத்துவதற்குமுன்பு நான் பொறுப் பாளர்களிடம் சொல்வேன், ‘‘ஜெயராமன் போன்றவர்கள் இருக்கிறார்கள்; நீங்கள் பிரியாணியை மட்டும் ஏற்பாடு செய்துவிடாதீர்கள்; அவர் போன்றவர்கள் சாப்பிடு வதற்குமான உணவையும் ஏற்பாடு செய்யுங்கள்” என்று. ஏனென்றால், மைனாரிட்டியைப்பற்றித்தான் நாம் அதிக மாகக் கவலைப்படுகிறவர்கள்.
ஆனால், அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப் படமாட்டார்; ‘‘சோறு எடுத்து வைத்தாகிவிட்டது, தயிர் போட்டு சாப்பிட்டுக் கொள்கிறேன்” என்பார்.
ஓர் இயக்கத்தில் பணியாற்றுபவர்களுக்குத் தந்தை பெரியார் திருக்குறளை மேற்கோள்காட்டி கூறுவார்,
‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.”
பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நேரம் காலம் கிடையாது. எந்த நேரமும் அவர்கள் தொண் டாற்றவேண்டும் என்பது ஒன்று.
மூடநம்பிக்கைகளை – மறக்க, துறக்க நாம் தயாராக இருக்கவேண்டும்!
இரண்டாவது, அவர்கள் மானம், ஈனம் பார்க்கக் கூடாது. மானத்தைப்பற்றி சொல்லிக் கொடுத்த தந்தை பெரியார் அவர்கள், மானத்தைப் பாராதே என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
கற்றுக்கொள் என்று சொல்லிக் கொடுத்த தந்தை பெரியார், நீ கற்றதை அல்லது வழக்கமாக இருப்பதை மறந்துவிடு என்கிறார்.
சில விஷயங்களை நாம் படிப்பதைவிட, கைவிடுவது மிகவும் முக்கியமாகும்.
தவறான பழக்கவழக்கங்கள்; அல்லது நாம் அறியாமல், நம் குடும்பத்திற்குள்ளோ, மற்ற இடங் களிலோ உள்ள மூடநம்பிக்கைகளை – இவற்றை மறக்க, துறக்க நாம் தயாராக இருக்கவேண்டும்.
ஒருவருக்கு வயிற்றில் ஏதாவது கோளாறு என்றால், ஸ்கேன் எடுப்பதற்கு வயிறு காலியாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். அதுபோன்று, நம் சமூகத்தை அடைத்துக் கொண்டிருக்கின்ற விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதையெல்லாம் காலி செய்து, சிந்திக்க வேண்டும்.
ஜெயராமன் அவர்கள், ஞானசேகரனுக்கு நன்றாகப் பயிற்சி கொடுத்திருக்கிறார்!
அதேபோன்று, நம்முடைய ஞானசேகரன் அவர்கள். நாங்கள் உத்தரவு போட்டதுபோன்று இழுத்துப் பிடிப்போம். மிக வேகமாகப் பேசுவார் அவர்.
அவர் ஓய்வு பெற்று வந்த பிறகு, சென்னையில் பொறுப்புகளைக் கொடுத்தோம். ஜெயராமன் அவர்கள், ஞானசேகரனுக்கு நன்றாகப் பயிற்சி கொடுத்திருக்கிறார்.
நெய்வேலியில் இருந்த ஞானசேகரன் வேறு; சென் னைக்கு வந்த ஞானசேகரன் வேறு. பிள்ளைகள் எல் லாம் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு வந்திருக்கிறார்கள். வெளிநாடுகளிலும் பணியாற்றுகிறார்கள்.
இவ்வளவுக்கும் என்ன காரணம்? சூத்திரப் பட்டம்தான் மிஞ்சியிருக்கும்!
தந்தை பெரியார் என்ற ஒருவர் பிறந்திருக்காவிட்டால், எந்தப் பட்டத்தையும் நாம் வாங்கியிருக்க முடியாது; சூத்திரப் பட்டம்தான் மிஞ்சியிருக்குமே தவிர – ‘பள்ளன்’, ‘பறையன்’, ‘கீழ்ஜாதி’ என்கிற பட்டம்தான் மீதியிருக்குமே தவிர, மனிதன் என்ற பட்டமே வந்திருக்காது. அதற்காக ஒத்துழைத்தவர்கள்தான் ஜெயராமன், ஞானசேகரன் போன்றவர்கள்.
அய்யா மருத்துவர் அவர்கள் இங்கே ஒரு செய்தியை சொன்னார்.
தென்னாட்டில் மருத்துவத் துறை வளர்ந்திருப் பதுபோன்று வடநாட்டில் ஏன் வளரவில்லை என்று. அதற்கு ஓர் அடித்தளம்தான் காரணம் என்றார்.
அஸ்திவாரம்தான் திராவிடர் இயக்கம், தந்தை பெரியார்!
அந்த அடித்தளம் கண்ணுக்குத் தெரியாத அஸ்தி வாரம் போன்றது. அந்த அஸ்திவாரம்தான் திராவிடர் இயக்கம், தந்தை பெரியார்.
குலக்கல்வித் திட்டம் என்ற ஒன்று தொடர்ந்திருந்தால், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் படித்திருக்க முடி யுமா? அவரவர் ஜாதித் தொழிலை, அப்பன் தொழிலைத் தான் செய்யவேண்டும் என்றும், படிக்கக்கூடாது என்ற நிலை நீடித்திருந்தால் இன்றைக்கு என்னாகியிருக்கும்?
‘‘விஸ்வகர்மா யோஜனா’’ என்ற பெயரில் மீண்டும் ஒரு குலக்கல்வி திணிப்புத் திட்டம்!
இன்றைக்கு மீண்டும் அந்தத் திட்டத்தை நவீன முறையில் புகுத்தவிருக்கிறார்களே! ‘‘விஸ்வகர்மா யோஜனா” என்ற திட்டத்தைக் கொண்டு வந்து, 18 வயது நிரம்பிய இளைஞர்களை – கல்லூரிக்குப் படிக்கப் போகாதே – உன்னுடைய அப்பன் தொழிலான செருப்பு தைப்பதோ, சவரம் செய்வதோ, பானை செய்வதோ அதனை செய் என்று சொல்லி, அதை சட்டப்பூர்வமாக ஆக்கக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், இதுபோன்ற நேரத்தில், ஜெயராமன் போன்றவர்கள் இல்லையே, போராட என்று நினைக்க வேண்டிய அவசியம், இங்கே இந்தப் படத்தைப் பார்க்கும்பொழுது ஏற்படுகிறது. ஆனாலும், அந்தப் படம் நமக்குப் பாடம்.
திராவிடர் கழகத்துக்காரர்கள் செய்யக்கூடிய பணி என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியாது. நாம் சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம். யாராவது நீண்ட நேரம் தூங்கினால், அவர் எழுந்திருக்கவில்லை என்றவுடன், நேரே சென்று அவருடைய மூக்கின் அருகே கை வைத்துப் பார்க்கின்றோம். மூச்சு வருகிறதா? இல்லையா? என்று சொல்லக்கூடிய அளவில்.
சுவாசத்தினுடைய அருமை நமக்கு எப்பொழுது தெரியும்?
நாம் சுவாசித்துக்கொண்டே இருக்கிறோம், எந்த நிலையிலும்! ஆக்சிஜன் வாயு உள்ளே சென்று, கரிமில வாயு வெளியே வருகிறதே, அதனுடைய முக்கியத்துவம் யாருக்காவது தெரியுமா? என்றால், தெரியாது. எப் பொழுது அதனுடைய முக்கியத்துவம் தெரியும் என்றால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைக்குச் சென்ற வுடன், ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு, நெபுலைசர் வைத்தவுடன்தான், ‘‘மூச்சு வருகிறது” என்றும், அந்த சுவாசத்தினுடைய அருமையும் நமக்குத் தெரியும்.
அதுபோன்று, நெருக்கடி வரும்பொழுதுதான் சுவா சிப்பினுடைய அவசியம் நமக்குத் தெரியும். அதற்குரிய ஆக்சிஜன் சிலிண்டரின் முக்கியத்துவமும் நமக்குத் தெரியும்.
குடும்பத்தில், எத்தனையோ பட்டதாரிகளை உருவாக்கியிருக்கிறார்!
ஜெயராமன் போன்ற தோழர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவர்கள், இந்த சமுதாயத்தில். சமூகத் திற்காகப் பாடுபடக் கூடியவர்கள். ஆகவே அவர் களுடைய உழைப்பால் எத்தனையோ பட்டதாரிகளை உருவாக்கியிருக்கிறார். அவர் பட்டதாரியல்ல. இன் றைக்கு இந்தக் குடும்பத்தில் பார்த்தீர்களேயானால், அவருடைய பிள்ளைகள், அந்தப் பிள்ளைகளின் பிள்ளைகள் நிறைய பேர் பட்டதாரிகளாக உள்ளனர்.
சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு – அதனை நிறைவாக வாழ்ந்திருக்கிறார்!
இவை எல்லாவற்றிற்கும் காரணம், தந்தை பெரியார், சுயமரியாதைக் கொள்கை. அந்த அடிப்படையில்தான், அந்த நெறியில் வாழ்ந்த ஜெயராமன் அவர்கள், ‘‘சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு” என்று சொன்னார். அந்த சுகவாழ்வை அவர் நிறைவாக வாழ்ந்திருக்கிறார்.
இனிமேல் நாம் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்க முடியாது. அவர் விட்ட பணிகளை நாம் செய்யவேண்டும்.
இங்கே படமாக இருப்பவரைப் பார்த்து, நாம் பாடம் பெறவேண்டும்.
அவர் போன்று உழைக்கவில்லை என்றாலும், இந்த இயக்கத்திற்கு, இந்தக் கொள்கைக்கு, எல்லோரும் கருப் புச் சட்டை அணிந்துகொண்டு வாருங்கள் என்று சொல்ல முடியாது. அதற்கான வாய்ப்பும் பல பேருக்கு இருக்காது.
கொள்கை எதிரிகளுக்குக் கையாட்களாகவோ,
பயன்படக் கூடியவர்களாகவோ இல்லாமல் இருக்கவேண்டும்!
ஆனால், இந்தக் கொள்கைக்கு யார் எதிரிகள்; அந்த எதிரிகளுக்குக் கையாட்களாகவோ, அந்த எதிரிகளுக்குப் பயன்படக் கூடியவர்களாகவோ இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் மிக வும் முக்கியமானது.
நேரிடையாக இந்த இயக்கத்திற்கு வரவேண் டாம்; ஆனால், இந்தக் கொள்கை பரவவில்லை என்றால், எங்களுக்கொன்றும் நட்டமில்லை. ஆனால், நம்முடைய வழிவழி வருகின்ற சமு தாயத்தினர் இன்றைக்குப் பெற்ற வாய்ப்புகள் அத்தனையும் தலைகீழாக மாறிப்போய்விடும். இருப்பதைக் காப்பாற்றவேண்டும்; வளருவது முக்கியம்தான், முன்னேறுவது முக்கியம்தான். ஆனால், இருப்பதைக் காப்பாற்றவேண்டும் என்பது அதைவிட முக்கியம்.
‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’ என்பதுதான் சமூகநீதி!
அதுபோன்றவர்களுக்கு ஜெயராமன் அவர்களு டைய படம் இருக்கிறதே, அந்தப் படத்தைப் பார்த்தால், நம்முடைய பங்களிப்பு என்ன இந்த சமுதாயத்திற்கு – இந்த சமுதாய மாற்றத்திற்கு என்று நினைக்கவேண்டும்.
‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்பதுதான் சமூக நீதி! நாம் யாரையும் வெறுக்கவேண்டுமோ, மறுக்க வேண்டுமோ என்பதல்ல.
அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லக்கூடிய சமூகநீதிக்காகத்தான் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
இன்றைக்கு இதே நெய்வேலியில், நம்முடைய இயக்கம் பலமானது மட்டுமல்ல, போராட்டக் களம் என்று சொன்னால், நம்முடைய தோழர்கள் முன்னால் நிற்பார்கள். அடுத்தபடியாக, எல்லாக் கட்சிக்காரர்களும் முன்னால் வரக்கூடிய அளவிற்கு, அந்த உணர்வுகள் வந்தால், நெய்வேலி ஜெயராமன் போன்றவர்கள் நிலைத்திருக்கிறார்கள்.
‘‘இறந்தும் வாழ்பவராக இருக்கிறார்- ஜெயராமன்!’’
இந்தக் கொள்கை உணர்வு எவ்வளவு பயனுள்ளது – சுயமரியாதை வாழ்க்கை எவ்வளவு பயனுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு, தேவகி அம்மையாருடைய ஒத்துழைப்பு – கொள்கையோடு இணைந்த வாழ்க்கை – உற்றார் உறவினர், சகோதரர்கள் எல்லாம் அவருக்கு மரியாதை காட்டியது மட்டுமல்லாமல், அந்தக் கொள்கை வழியில் இருந்ததினுடைய விளைவுதான், ‘‘இறந்தும் வாழ்பவராக இருக்கிறார்” – அவர் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண் டிருக்கிறார் – எப்படி என்று சொன்னால், விழிக்கொடை கொடுத்திருக்கிறார்.
கண்கள் கொடையாக அளிக்கப்பட்டன!
பெரியார் விழிக்கொடை அமைப்பு பல ஆண்டு களாக செயல்பட்டு வருகிறது. அதில், இவர் பதிவு செய்து வைத்திருக்கிறார். அதனால், அவருடைய கண்கள் கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
அவர் விழிகள் கொடையாக இருவருக்குப் பொருத் தப்பட்டுள்ளது. அப்படியென்றால், ஜெயராமன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் – மற்றவர்களின் பார்வை யின்மூலமாக.
வைதீக முறையில் இறுதி நிகழ்வு செய்கிறவர்கள் என்ன சொல்வார்கள், ‘‘வைகுண்ட பதவி”, ‘‘சிவலோக பதவி” அடைந்தார் என்று.
ஆனால், இங்கே பார்த்தீர்களேயானால், ‘‘கடவுளை மற, மனிதனை நினை!” என்றார்.
எப்பொழுது ஒருவர் இறந்த பிறகும், மற்றவர்களுக்குப் பயன்படுகிறார்.
மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை!
இன்னொருபக்கம் உடற்கொடை கொடுத்தார்கள். மருத்துவத் தோழர்களுக்குத் தெரியும். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க உடல் தேவைப்படும். பல மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தர உடல்கள் கிடைப்பதில்லை.
பெரியார் திடலில் ஒருமுறை மருத்துவரை அழைத்து ஒரு கூட்டம் நடத்தினோம். அவர் அந்தக் கூட்டத்தில் உரையாற்றும்பொழுது, ‘‘நம்முடைய நாட்டில் ஒரு பெரிய குறைபாடு என்னவென்றால், மருத்துவத் துறை யில் பயிலும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு, மனித உடல்கள் கிடைப்பதில்லை. இறந்த மனிதர்களின் உடலை ஒன்று புதைக்கின்றார்கள்; அல்லது எரிக்கின்றனர். அதனால், நாங்கள் உடலை விலைக்கு வாங்கவேண்டிய நிலைமை இருக்கிறது” என்றார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மனித உடல்களை விலை கொடுத்து வாங்குகின்றன!
தனியார் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மாண வர்களுக்குப் பாடம் நடத்துவதற்காக மனித உடல்களை விலை கொடுத்து வாங்குகின்றனர். 10 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து இறந்த மனித உடல்களை வாங்கித்தான் பாடம் நடத்துகின்றனர். இந்தத் தகவல் உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்.
பரந்த மனப்பான்மைக்கு ஜெயராமன் ஓர் எடுத்துக்காட்டு!
இப்படிப்பட்ட நிலை இருக்கும்பொழுது, நம்முடைய தோழர்களின் மனிதநேயத்தைப் பாருங்கள். இறந்தவரின் உடலை புதைக்கவேண்டும் அல்லது எரிக்கவேண்டும் என்றில்லாமல், அந்த உடல் மற்றவர்களுக்குப் பயன் பட்டு, பல மருத்துவர்களை உருவாக்குவதற்குப் பயன் பட்டு, அதன்மூலம் பல பேருடைய நோயைப் போக்க முடியும் என்கிற பரந்த மனப்பான்மைக்கு இவர் ஓர் எடுத்துக்காட்டாக, அடித்தளமாக இருக்கிறார்.
இதுதான் மனிதநேயம்!
எனவேதான், ‘‘இறந்தும் வாழ்கிறார்!” என்று சொன்னேன்.
அவர் மறையவில்லை. மறைந்தாலும், வாழ்ந்து கொண்டிருக்கிறார்; பலருக்கும் பயன்படக் கூடிய அளவிற்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
பெரியார் கொடுத்த பகுத்தறிவு!
இதற்கெல்லாம் அடித்தளம் என்ன?
இதற்கான தைரியம் எப்படி வருகிறது?
பெரியார் கொடுத்த பகுத்தறிவு!
பெரியாருடைய சுயமரியாதை உணர்வு!
பெரியாருடைய கொள்கை வழி வந்ததினால்!
ஒரு குடும்பம் தயாராக இருக்கிறது; எனவே, நல்ல குடும்பம், ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம்!
சகோதரியாருக்கு, ஒத்துழைத்த தோழர்களுக்கு, குடும்பத்தவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லிக்கொள் கிறேன்.
ஜெயராமன் நினைத்த சமூகம் வரவேண்டும் என்று உறுதியேற்போம்!
ஜெயராமன் எந்த சமூகம் வரவேண்டும் என்று நினைத்தாரோ, அந்தக் கொள்கையை நாம் காப்போம்! அதனைத் தொடருவோம்!
அதுதான் நாம் இன்றைக்கு எடுக்கும் சூளுரை! அதுதான் இந்தப் படத்திலிருந்து நாம் பெறுகின்ற பாடம் என்று சொல்லி, அனைவரும் ஆறுதல் அடையவேண்டும் என்று சொல்லி, அவருக்கு வீர வணக்கம் செலுத்த அனைவரும் எழுந்து நிற்குமாறு கேட்டுக்கொண்டு, என் நினைவேந்தல் உரையை முடிக்கின்றேன்.
வாழ்க பெரியார்!
வாழ்க ஜெயராமன் புகழ்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.