ஒருவரின் வாழ்க்கைக்கு சேமிப்பு என்பது மிகவும் அவசியம். நகர பெண்களுக்கு போதிய அறிவு இதுபற்றி உள்ளது. ஆனால் கிராமத்தில் உள்ளவர்களுக்கு சேமிப்பு குறித்த திட்டங்கள் பற்றி தெரியவில்லை. சிறுதொழில் செய்வதன் மூலம் தங்களின் சேமிப்பு வருமானத்தினை அதிகப்படுத்தலாம் என்பதை குறிப்பாக பெண்களுக்கு உணர்த்தி வருகிறார்கள் துவாரா ரிநிதிஷி என்ற சுய உதவிக்குழு.இந்த நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரியான ஹுமா இதன் திட்டங்கள் மற்றும் பெண்கள் இதன் மூலம் அடையும் பலன்கள் குறித்து விவரித்தார்.
‘‘எனக்கு இந்த துறையில் 25 வருஷ அனுபவம் உண்டு. பல கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்திருந்தாலும், சிறு நிதி வங்கிகளிலும் நான் பணியாற்றி இருக்கேன். அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த திட்டம் வகுத்திருக்கிறேன். இந்த அனுபவம் தான் என்னை துவாராவில் இணைய வழிவகுத்தது. இது சுய உதவிக் குழு நிறுவனமாக செயல்பட்டு வந்தாலும், வங்கித் துறையிலும் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கிராம மக்கள் – குறிப்பாக பெண்களின் நலனுக்காகவும் அவர்களின் சேமிப்பு அதிகரிக்கவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதுவரை 28 கிராம மக்களுடன் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக பெண்கள் தான் எங்களின் வாடிக்கையாளர்கள்.
பெண்களுக்காகவே இயக்கப்படுவது தான் சுய உதவிக்குழு. ஒவ்வொரு கிராமத்திலும் மகளிர் குழு என்று இயங்கி வரும். இந்தக் குழுவினை கண்காணிக்க மேலாளர் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் வேலையே பெண்களை ஒருங்கிணைத்து அவர்களை குழுவில் இணைப்பதுதான். ஒருவர் குறைந்தபட்சம் பத்து குழுக்களை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கும் போது குழுவில் இணையும் பெண்கள் குறித்த முழு விவரங்களை சேகரிக்க வேண்டும்.
மேலும் அவர்கள் கடன் உதவிப் பெற்றாலும், எதற்காக பெறுகிறார்கள், அதனால் அவர்கள் பலன் அடைந்தார்களா? அதைக் கொண்டு அவர்கள் புது தொழில் ஒன்றை அமைத்தார்களா? மேலும் வாங்கிய கடனை அவர்கள் திரும்ப தவணை முறையில் செலுத்தினார்களா? அவ்வாறு செலுத்தத் தவறினால் அதனைப் பெறுவதும் இவர்களின் வேலைதான். இவ்வாறு அந்த குழுவினைக் குறித்து அனைத்து விவரங்களும் மேலாளர் தெரிந்த வைத்திருப்பது அவசியம்.
குறைந்த பட்சம் பத்து பேர் இணைந்தால் தான் குழுவினை அமைக்க முடியும். அவ்வாறு இணையும் பெண்கள் சுயதொழில் செய்வதற்காக குழுக் கடன் பெறுவார்கள். அவ்வாறு பெறும் போது, செய்யும் தொழிலில் லாபம் பார்க்க வேண்டும். அப்போது தான் அவர்களால் அந்தக் கடனை திரும்ப செலுத்த முடியும். ஒரு வேளை நட்டம் ஏற்பட்டால், மேலாளர் நட்டம் ஏற்படக் காரணம் என்ன? அதற்கான தீர்வு குறித்து ஆலோசனை அளிக்க வேண்டும்.
குழுக் கடனைப் பொறுத்தவரை, தனி நபராகவும் பெறலாம், அல்லது குழுவில் உள்ள அனைவரும் சேர்ந்து பெறலாம். சேர்ந்து பெறும் போது அனைவரும் அதற்கான கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். இதில் மிகவும் முக்கியமானது, குழுவில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் ஒருவர் கடனை செலுத்தவில்லை என்றால், அதனை மற்றவர்களால் திரும்பப் பெற முடியும். இவர்கள் அனைவரும் வாங்கிய கடனை சரியாக செலுத்துகின்றனரா… என்று பார்ப்பது தான் மேலாளரின் முக்கிய வேலை. மேலும் குழு அமைக்க முக்கிய காரணம் பெண்களுக்கான பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது தான்’’ என்றவர் குழுவில் எதற்கெல்லாம் கடன் உதவி பெறலாம் என்பது பற்றி விவரித்தார்.
‘‘சுய உதவிக் குழுப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைதான் கடனாக வழங்கப்படும். காரணம், பெரிய தொகையினை அளிக்கும் போது அவர்களால் அதனை திரும்பி செலுத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது. துவாரா சுய உதவிக் குழுவாக மட்டுமில்லாமல் சிறு நிதி அளிக்கும் வங்கியாகவும் செயல்படுவதால், இதில் கடன் பெறுவதற்கான பல திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது காய்கறிக் கடை வைக்க, விவசாயத்திற்கு அக்ரி கடன், மாடுகள் வாங்க எண்டர்பிரைசஸ் கடன் என பல உள்ளன. சிலர் தங்களிடம் இருக்கும் நகை மற்றும் நிலத்தை அடமானம் வைத்தும் கடன் பெறுவார்கள். இவ்வாறு ஹீமா விளக்கினார்.