‘‘ஒரு சமூகத்தில் வளர்ச்சி என்பதை அந்த சமூகத்தில் வாழும் பெண்களின் வளர்ச்சியை பொறுத்துதான் என்பது டாக்டர் அம்பேத்கரின் கூற்று. இந்த வார்த்தைகள்தான் என்னை இந்த சமூகத்தில் வாழும் பெண்களுக்காக வேலை செய்ய வைத்தது’’ என்கிறார் கல்யாணந்தி.
சென்னையை சேர்ந்த இவர் தமிழ்நாடு அரசின் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியத்தின் அரசு சாரா உறுப்பினராக இருக்கிறார். பல பெண்களையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அந்த பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக வேலை செய்து வருகிறார். மழை வெள்ள காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அடிப்படைப் பொருட்களையும் வீடு தேடி, கொண்டு சேர்த்து, அந்த மக்களுக்காக துணையாக இருந்து வருகிறார்.
அவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். படித்தது பாராமெடிசன். அடுத்து முதுகலை படிப்பு சைக்காலஜி. தன்னுடைய குடும்பத்தில் எல்லாருமே பொது வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். அதனால் அவருக்கும் எளிய மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் சிறு வயதில் இருந்தே இருந்தது. படித்த துறையில் சில நாட்கள் வேலை செய்தார். ஆனால், அவரால் ஒருவரின் கீழ வேலை செய்ய முடியவில்லை. மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அதனால் பார்த்து வந்த வேலையி லிருந்து விலகி, மனநல ஆலோசனைகள் வழங்கி வந்தார்.
இதற்கிடையில் அவருக்கு கிராமப்புறங்களில் மாணவ, மாணவிகளை சந்திக்கும் வாய்ப்பு வந்தது. அவர்கள் அனைவரும், போட்டித் தேர்வுகளுக்காக முயற்சி செய்து கொண்டு இருந்தனர். அதில் மாணவிகளுக்கு தேர்வுகளை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும், அவர்களால் நகரங்களை நோக்கி வர முடியாத சூழலில் இருந்தனர். நன்றாக படிக்கக்கூடியவர்கள், கல்வியின் தேவையை உணர்ந்து அதன் தேவையை புரிந்து வைத்திருந்தார்கள். படிக்கப் போதுமான வசதிகள் இல்லாததால், வீட்டிற் குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய சூழலில் தள்ளப் பட்டிருந்தனர். இதற்காகவே நான் காஞ்சிபுரத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மய்யம் ஒன்றை துவங்கினார்.
அதில் பெண்கள் பலர் இணைந்து, தேர்ச்சி பெற்று தற்போது அரசு வேலைகளில் உள்ளனர். இதுவரை 11 பேர் காவல் துறையில் முக்கிய பொறுப்பில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து திருநங்கைகளுக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்; என்று விரும்பினார். அவர் களுக்கும் போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளித்தார். அதில் ஒருவர் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் பல ஊர்களுக்கு சென்று அங்கிருக்கும் மக்களுக்கு சட்டங்கள் குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறார்.
பெண்கள் படித்து வேலைக்குப் போனாலும் அவர்கள் மீது இன்றும் பல இடங்களில் வன்முறைகள் நடக்கின்றன. பெண்கள் தங்களுடைய உடல் மீது நடத்தப்படுகிற வன்முறைகள் குறித்து வெளியே சொல்லவே பயப்படு கின்றனர். காரணம், தங்களுக்கு நடந்த அநீதிகளை எதிர்த்து வெளியே சொன்னால் அவரின் குடும்பம் மற்றும் சமூகம் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதில்லை. அவர்களுக்கே ஒழுக்கம் சார்ந்த வகுப்புகளை எடுக்கின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் ஆண்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. ஒரு கணவன் தன் மனைவியை அடிப்பதற்கு காரணமே வேண்டாம் என நினைக்கிறான். இதை நமது சமூகமும் கேள்வி கேட்பதில்லை.
ஆண்கள் தவறே செய்தாலும் அவர்களை ஆதரிக்க ஒரு கூட்டம் இருப்பதால் தான் அதனை துணிந்து செய்கிறார்கள். இதனாலேயே தான் செய்வது சரி என்று நினைத்து பெண்களை கட்டுப்படுத்துகிறார்கள். இதில் இருந்து பெண்கள் வெளியே வர அவர்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். இதே போல குழந்தைகள் மீது நடக்கும் வன்முறைகளை தடுக்க இருக்கும் போக்ஸோ வழக்குகள் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவருடைய மய்யத்தில் படிக்க வரும் பல பெண்கள் நிராதரவாக இருக்கிறார்கள். தங்களின் குடும்பத்திற்காக வேலை பார்த்துக் கொண்டே படிக்க வருகிறார்கள்.
தங்களின் உழைப்பு அனைத்தும் குடும்பத்திற்காக என வாழ்கிறார்கள். கைம்பெண்களை இந்த சமூகம் நடத்தும் விதம் தான் இன்னமும் மோசமானது. அவர்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியாது. ஆண்களுடன் இயல்பாக பழக முடியாது. தங்களை அலங்கரிக்கக் கூடாது. இப்படி பல கட்டுப்பாடுகள் உண்டு. இந்த பெண்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். “படித்திருக்கும் பெண்களுக்கு வேலை வாய்ப்பினை அமைத்து தருகிறார். படிக்காதவர்களுக்கு சுயதொழில் கற்றுக் கொடுக்கிறார்’’ கைம்பெண்களுக்கு அரசு தரக்கூடிய சலுகைகள் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறார். இவ்வாறு பல விதங்களில் பெண்களுக்கு உதவுகிறார்.