தந்தை பெரியார் எந்தப் பரிசையும் விரும்பியதில்லை; பதவிகளையும் விரும்பியதில்லை- அவருக்கு உற்சாகமே எதிரிகளுடைய எதிர்ப்புதான்!
‘‘பெரியார்: நாம் அறிந்திராத அறிவு!” தொடர் சொற்பொழிவின் முதல் நாளில் தமிழர் தலைவர்
சென்னை, ஜன.8 பிற மொழியில் தந்தை பெரியாருடைய கொள்கைகளை எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பினை அன்றைக்கு நாம் பெற்றிருந்தால், எத்தனை நோபல் பரிசுகள் வேண்டுமானாலும், அவருடைய காலடியில் குவித்திருக்கலாம். ஆனால், அவர் எந்தப் பரிசையும் விரும்பியதில்லை. பதவிகளையும் விரும்பியதில்லை. அவருக்கு உற்சாகமே எதிரிகளுடைய எதிர்ப்பு. அந்த எதிர்ப்பைப் பார்க்கும்பொழுது மேலும் மேலும் சிங்கம்போல கர்ஜிக்கிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘பெரியார்: நாம் அறிந்திராத அறிவு’’ –
காணொலி சிறப்புக் கூட்டம்!
‘‘பெரியார்: நாம் அறிந்திராத அறிவு!” தொடர் சொற்பொழிவின் முதல் நாளில் (30.12.2023) நடை பெற்ற காணொலி சிறப்புக் கூட்டத்தில் தொடக்கவு ரையை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் உரையாற்றியதும், திராவிடர் கழ கத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். 6.1.2024 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த அவரது சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:
மற்றவர்களின் சமத்துவத்திற்காகப் போராடுகின்ற அறிவு – போராடிய அறிவு!
எனவே, புரட்சிக்கவிஞர் அவர்கள், அய்யாவைப் பற்றி சொன்ன அந்த வார்த்தைகள் ‘‘அறிந்திராத அறிவு” என்பது எவ்வளவு ஆழமானது – காரணம், அது சுதந்திரமான அறிவு – மற்றவர்களின் சுதந்திரத்தை அங்கீகரிக்கின்ற அறிவு. மற்றவர்களின் சமத்துவத்திற் காகப் போராடுகின்ற அறிவு – போராடிய அறிவு.
மற்றவர்களுடைய சகோதரத்துவத்திற்காக, பாசத் திற்காக, மனிதன் மாற்றமடைவதற்காக அவர் உரு வாக்கிய மிகப்பெரிய தத்துவங்களாகும்.
தோண்டத் தோண்ட
சுரந்துகொண்டே இருக்கிறது
எனவேதான், அந்த அறிவு என்பது மண்டைச் சுரப்பாக இருக்கிறது. சுரந்துகொண்டே இருக்கிறது. மேலும் மேலும் அந்த சுரப்பு வந்துகொண்டே இருக் கிறது. தோண்டிக் கொண்டிருக்கிறார். தோண்டத் தோண்ட சுரந்துகொண்டே இருக்கிறது – அதுதானே சுரப்பு. ‘‘தொட்டனைத்தூறும் மணற்கேணி” போல, சுதந்திர அறிவை அய்யா அவர்கள் பயன்படுத்திய காரணத்தினால்தான்.
பகுத்தறிவு வெளிச்சம் ஒளி தரவேண்டிய நேரத்தில் ஒளி தருகிறது!
எந்த ஒரு பிரச்சினையைப்பற்றி அவர்கள் பேச வந்தாலும், ‘‘பகுத்தறிவுப் பகலவன்” என்று நாம் அழைக் கின்றோம். எப்படி சூரிய வெளிச்சம் வேகமாகப் பரவி உடலில் சூடேற்றுகிறதோ, அதைப் போன்று அந்தப் பகுத்தறிவு வெளிச்சம் ஒளி தரவேண்டிய நேரத்தில் ஒளி தருகிறது – இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கிறோம்.
அப்படிப் பார்க்கின்ற நேரத்தில், நாம் அய்யா அவர்களை பொதுநிலையில் இருந்து பார்க்கவேண்டும்.
எத்தனை நோபல் பரிசுகள் வேண்டுமானாலும், அவருக்குக் குவித்திருக்கலாம்!
ஒன்றே ஒன்று, அய்யா அவர்களுடைய கருத்துகளை நீண்ட நாள்களுக்கு முன்பே ஆங் கிலப்படுத்தி, பிற மொழியில் அவருடைய கொள் கைகளை எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பினை அன்றைக்கு நாம் பெற்றிருந்தால், எத்தனை நோபல் பரிசுகள் வேண்டுமானாலும், அவருக்குக் குவித்திருக்கலாம். ஆனால், அவர் எந்தப் பரிசையும் விரும்பியதில்லை. பதவிகளையும் விரும்பியதில்லை.
பெரியாருக்கு உற்சாகமே
எதிரிகளுடைய எதிர்ப்புதான்!
அவருக்கு உற்சாகமே எதிரிகளுடைய எதிர்ப்பு. அந்த எதிர்ப்பைப் பார்க்கும்பொழுது கடுப்பில்லாமல், மேலும் மேலும் சிங்கம்போல கர்ஜிக்கிறார்.
ஆகவேதான், அவருடைய தோழர்கள், தொண்டர் கள் போன்றவர்கள் எல்லாம் அவரை மதிப்பிடு செய் யும்பொழுது, சாதாரணமாக மதிப்பீடு செய்யவில்லை.
எனவேதான் எந்த முகாமிலிருந்தாலும், அவருடைய அறிவு நாணயம் என்பது இருக்கிறதே, அது சாதாரண மானதல்ல!
கொள்கையில் இரு துருவங்கள்!
ராஜகோபாலாச்சாரியார் அவர்களைப் பொறுத்த வரையில், தந்தை பெரியாரும், அவரும் இருபெரும் நண்பர்கள்தான் – கொள்கையில் இரு துருவங்களாக இருந்தாலும்!
ராஜாஜி அவர்களை உச்சந்தலையிலிருந்து உள்ளங் கால் வரையில் அறிவு பெற்ற மிகப்பெரிய அறிவாளி என்று சொல்வார்கள்.
ஆனால், அப்படிப்பட்ட ராஜகோபாலச்சாரியார் அவர்கள், காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்தில், ‘வ.ரா.’ அவர்கள் ஒரு நிகழ்வினை சொல்லுகிறார்.
‘‘காங்கிரஸ் மாநாடு நடக்கிறது – அந்த மாநாட்டில், அவருக்கு எதிரணியில் இருந்து ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்துப் பேசுகிறார்கள். அது எங்கே தோற்கடிக்கப்பட்டு விடுமோ என்று ராஜகோபாலாச்சாரியார் அச்சப்படுகிறார், பயப்படுகிறார், எப்பொழுது?
தந்தை பெரியார் அவர்கள் 1920 ஆம் ஆண்டு காங்கிரசில் கட்சியில் இருந்தபொழுது.
ஆச்சாரியாருக்கு அத்தியேந்திர சீடராக இருந்தவர் தந்தை பெரியார்!
மாநாட்டு மேடைக்குப் பலர் பேச அழைக்கப் படுகிறார்கள். அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு- எதிர்ப்பு என்று பேசுகிறார்கள். பெரியார் அவர்கள் எப்பொழுதுமே ஆச்சாரியாருக்கு மிகப்பெரிய அத்தியேந்திர சீடராக ஒரு காலத்தில் இருந்தவர்.
ஆகவே, ராஜகோபாலாச்சாரியார் என்ன சொல்லு கிறாரோ, அதனை பெரியார் அவர்கள் கேட்பார்.
ஆச்சாரியார், இன்றைக்கு ராஜாஜி என்று அழைக் கப்படுகின்ற ராஜகோபாலாச்சாரியார் அவர்கள், தந்தை பெரியாரைப் பார்த்து, ‘‘நாயக்கரே, நீங்கள் நான் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசவேண்டும்” என்று சொல்கிறார்.
எதிரிகளுடைய எண்ணம்
தோல்வி அடைகிறது!
பெரியார் அவர்கள் எழுந்து, இந்தத் தீர்மானத்தை ஏன் ஆதரிக்கவேண்டும் என்பதை – எதிரிகளுக்குப் பதில் சொல்லக்கூடிய வகையில் பேசுகிறார். பெரியார் அவர்களின் பேச்சைக் கேட்டவர்கள், அந்தத் தீர் மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கிறார்கள்.
ஆச்சாரியார் அவர்களால் கொண்டு வரப்பட்ட தீர்மானம், அவருக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டு, வெற்றியடைகிறது. எதிரிகளுடைய எண்ணம் தோல்வி அடைகிறது.
எல்லோருக்கும் பெரிய வியப்பு. எல்லோருக்கும் ஆச்சரியம். ஆச்சாரியார் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடையும் என்று நினைத்திருந்தார்கள்.
கடைசியாக ராமசாமி நாயக்கர் பேசினார்; (அந்தக் காலத்தில் அவருக்கு இருந்த பெயர்.)
என்னை ஏன் பேசச் சொன்னீர்கள்?
அதற்குக் காரணம் என்ன?
ஆச்சாரியார் அவர்கள் அந்த மாநாட்டில் பேசிவிட்டு அமர்கிறார். அருகிலிருந்த தந்தை பெரியார் அவர்கள், அன்றைய ராமசாமி நாயக்கர், திரும்பி ஆச்சாரியாரைப் பார்த்து, ‘‘என்னை எதற்காக தீர்மானத்தை ஆதரித்துப் பேசச் சொன்னீர்கள்? ஏன் அவர்கள் இந்தத் தீர் மானத்தை எதிர்க்கிறார்கள்; அவர்களுக்கு எதிராக என்னை ஏன் பேசச் சொன்னீர்கள்? அதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்.
அதைத்தான் நீங்கள் மேடையிலேயே மிக அழகாக, என்னைவிட தெளிவாக விளக்கிவிட்டீர்களே, அதை நான் மீண்டும் சொல்லவேண்டிய அவசியமில்லையே! என்று ஆச்சாரியார் சொல்கிறார்.”
அதனை ‘வ.ரா.’ பதிவு செய்திருக்கிறார்.
இப்படி ‘‘அறிந்திராத அறிவு அவர்” என்பதற்கு மிகப் பெரிய அளவிற்கு இன்னொரு செய்தியை சொல்கிறேன்.
பெரியாருடைய உரையைக் கேட்டேன்;
பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்டேன்!
1948 ஆம் ஆண்டில் வ.ரா.வினுடைய கருத் தைச் சொன்னேன். அதே காலகட்டத்தில் மிக முக்கியமாக அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் உரையைப்பற்றி சொன்னேன்.
‘‘என்னை ‘அஞ்சாநெஞ்சன்’ என்று அழைக் கிறீர்களே, இந்த அஞ்சாநெஞ்சனுக்கு அறிவு வந்தது எப்படி என்றால், பெரியாரால்!
இந்த அஞ்சாநெஞ்சு எனக்கு எப்படி ஏற்பட் டது? எதிர்ப்பைக் கண்டு எப்படி இவ்வளவு வேகமாகப் பேசுகிறேன் என்றால், பெரியாருடைய உரையைக் கேட்டேன். பெரியாரால் பக்குவப் படுத்தப்பட்டேன். ஆகவேதான், எனக்கு இந்தப் பெயர்” என்றார்.
அது வெறும் வியப்பாக இல்லை.
திராவிடர் ஆட்சியினுடைய சாதனைகளில் தலையாய சாதனை!
ஒரு கல்லூரிக்குப் போகிறார். சேலத்தில், நகராட்சி நடத்திய ஒரே ஒரு கல்லூரி. இந்தியாவிலேயே வேறு எங்கேயும் முனிசிபாலிட்டி நடத்திய கல்லூரி இல்லை. இன்றைக்கு அது மாநகராட்சியாக மாறியிருக்கிறது. அன்றைக்கு அது நகராட்சியாக இருந்தது – அந்த நகராட்சி ஒரு தனிப் பள்ளிக்கூடத்தையே நடத்தியது. அதுதான் நீதிக்கட்சிக் காலத்தில் இருக்கக்கூடிய திராவி டர் ஆட்சியினுடைய சாதனைகளில் தலையாய சாதனையாகும்.
முனிசிபாலிட்டி ஒரு கல்லூரியை நடத்தக்கூடிய அளவிற்கு அன்றைக்கு இந்த இயக்கமும், இந்தக் கொள்கையும், கல்வியும் பரவவேண்டும் என்று நினைக் கக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்ற ஒரு சூழ்நிலை இருந்தது.
சேலம் முனிசிபல் கல்லூரிக்குத்
தலைவராக இருந்த ஏ.இராமசாமி கவுண்டர்
அப்பொழுது அந்தக் கல்லூரிக்குப் போகின்ற நேரத்தில், அங்கே தத்துவத் துறை இருக்கிறது. அப் பொழுது சேலம் முனிசிபல் கல்லூரிக்குத் தலைவராக இருந்தவர் ஏ.இராமசாமி கவுண்டர் அவர்கள். அவர் நாமம் போட்டிருப்பார். ஆனால், மிகப்பெரிய அளவிற்கு இன உணர்வாளர். சமூகநீதியில் ஆழமான நம்பிக்கை உள்ளவர். தந்தை பெரியாரிடத்தில் மிக முக்கியமான அளவிற்கு எல்லையற்ற ஈடுபாடு கொண்டவர்.
பெரியாருடைய நண்பர்களில் ஒருவர். பெரியாரை விரும்பியவர்களில் பலவகையானவர்கள் உண்டு. எதிர்மறையானவர்கள்கூட ஈர்க்கப்படுவது உண்டு.
பிரின்சிபல் ஏ.ராமசாமி கவுண்டர் – அவருடைய மாணவர்கள்தான் டாக்டர் வ.செ.குழந்தைசாமி போன்ற, மிகப்பெரிய உலகியல் அறிஞர்கள்.
அமைச்சராக இருந்த தோழர் இராசாராம் போன்ற வர்கள் எல்லாம் அங்கே படித்தவர்கள்தான். இப்படி பல பேர் உண்டு. ‘பூந்தோட்டம்’ என்ற தலைப்பில் பத்திரிகையைத் தொடங்கி, திருநாவுக்கரசு என்ற பெயர் வைத்துக்கொண்டு அங்கே படித்தவர்கள் உண்டு.
சிங்கப்பூர் அரசாங்கத்தில் ‘தமிழ்முரசு’ ஆசிரியராக இருந்து, பிறகு தமிழ்முரசை நிலைநாட்டியவர். இப்படி பல மாணவர்கள் உண்டு.
ஏ.ராமசாமி அவர்களுடைய வாழ்விணையர் கனகம்மையார் ராமசாமி!
அந்தக் கல்லூரியின் பிரிசின்பாலாக இருந்த ஏ.ராம சாமி அவர்களுக்கு, தந்தை பெரியார் அவர்கள் நெருக்கமான நண்பர். ஏ.ராமசாமி அவர்களுடைய வாழ்விணையர் கனகம்மையார் ராமசாமி அவர்கள், திராவிட இயக்க தாய்மார்களில், மிகப்பெரிய கொள்கை வீராங்கனைகளில் ஒருவர். அவரைப்பற்றிக்கூட நம் முடைய கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் அண்மையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அந்தக் கல்லூரியில், பிலாசபி டிபார்ட்மெண்ட் (Philosophy Department) என்று சொல்லக்கூடிய தத்துவ துறைக்குத் தலைவராக இருந்தவர் ஒரு பார்ப்பனர்.
தத்துவத் துறை மாணவர்கள் மத்தியில் உரையாற்றவேண்டும் என்கிறார்!
அவர், தந்தை பெரியாரிடம் கேட்கிறார், ‘‘அய்யா நீங்கள் தத்துவத்தைப்பற்றி எங்களுடைய கல்லூரியில், தத்துவத் துறை மாணவர்கள் மத்தியில் (ஸ்டூண்ட்ஸ் ஆஃப் பிலாசபி – பி.ஏ. சப்ஜெக்ட்) – மாணவர்களுக்காக தத்துவக் கலைக் கழகம் இருக்கிறது (பிலாசபி அசோ சியேசன்) அதில் நீங்கள் வந்து உரையாற்றவேண்டும்” என்றார்கள்.
கல்லூரி மாணவர்களை, இளைஞர்களை சந்திப்பதில், தந்தை பெரியாருக்கு எப்பொழுதுமே ஒரு தனித்த ஆர்வம் உண்டு.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், கல்லூரி முதல்வரும், தந்தை பெரியாருடைய உரையை கேட்டுக்கொண் டிருக்கிறார்.
நாம் அறிந்திராத அறிவு எவ்வளவு ஆழமானது – எவ்வளவு விரிந்தது என்பதை உணர முடிகின்றது!
இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக தந்தை பெரியார், என்ன தலைப்பில் பேசப் போகிறார் என்பதுகூட யாருக்கும் தெரியாது. பேச அழைத்தார்கள், அந்த உரை ஒரு சுதந் திர நினைப்பு – சுதந்திர அனுபவம் – சுதந்திர உணர்ச்சி – இவற்றைக் கொண்ட சுதந்திரமான மனிதர் என்ற அந்தக் கருத்தாழமிக்க மண்டைச் சுரப்பு எப்படிப் பட்டது? நாம் அறிந்திராத அறிவு எவ்வளவு ஆழமானது – எவ்வளவு விரிந்தது என்பதை உணர முடிகின்றது.
‘‘நாம் அறிந்திராத அறிவு” – மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று சொல்லக்கூடிய அறிவு.
தந்தை பெரியார் அவர்கள், அவருடைய அறிவை விரிவு செய்வதைத் தாண்டி, செறிவு செய்தார்!
அந்த அறிவுபற்றி புரட்சிக்கவிஞரேகூட, இன்னொரு இடத்தில் சொல்லும்பொழுது ஒரு வார்த்தையைச் சொல்லியிருக்கிறார்.
‘‘அறிவை விரிவு செய் – அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் -விழுங்கு உலகை!”
என்று சொல்கிறார்.
அறிவை விரிவு செய்யச் சொன்னார் புரட்சிக் கவிஞர்; ஆனால், தந்தை பெரியார் அவர்கள், அவருடைய அறிவை விரிவு செய்வதைத் தாண்டி, செறிவு செய்தார்.
அவருடைய அறிவை செறிவு செய்தார் என் பதைவிட, நம்முடைய அறிவை செறிவு செய்து கொண்டிருப்பதையே தன்னுடைய வாழ்நாள் பணியாகக் கருதினார்.
எனவேதான், அவர் பகுத்தறிவுப் பகலவன் என்று வரலாற்றில் என்றைக்கும் நிலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அன்றைய காலகட்டத்தில் உரைகளைப் பதிவு செய்யக்கூடிய கருவிகள் எல்லாம் கிடையாது!
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் மகிழ்ச்சி யாக அந்தக் கல்லூரியில் உரையாற்றினார். ‘‘கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?” என்று தமிழில் ஒரு பழ மொழி சொல்வார்கள், அதுபோல, அருமையாக, தத்துவ விளக்கமாகப் பேசினார். அந்தக் காலத்தில், உரைகளைப் பதிவு செய்யக்கூடிய கருவிகள் எல்லாம் கிடையாது. இப்பொழுது இருக்கின்ற நவீன கருவிகள் போன்றெல் லாம் கிடையாது.
இன்றைக்கு நான் இந்தியாவில் உள்ள தமிழ்நாட் டிலிருந்து காணொலிமூலம் உரையாற்றுகிறேன்; என் உரையை, அமெரிக்காவில் இருக்கின்ற பேராசிரியர் வேலாயுதம் போன்ற பல நண்பர்கள் கேட்டுக்கொண் டிருக்கிறார்கள்! அதேபோல, பல ஊர்களில் உள்ள வர்களும் என் உரையைக் கேட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
இந்த உரையைப் பதிவு செய்து, தேவைப்படும்பொழுது கேட்டுக்கொள்வார்கள்.
உள்ளே இருக்கின்றவர்களைவிட, வெளியில் இருக் கின்றவர்கள் உரையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியாரை எதிர்க்கவேண்டும் என்பவர்கள்கூட இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்!
இது ஒன்றும் ஆயுத பூஜை கொண்டாடியதனுடைய பலன் இல்லை. பகுத்தறிவின் பலன்தான்! நம்முடைய கருத்தை ஏற்காதவர்கள்கூட, நம்முடைய கருத்தை எதிர்க்கவேண்டும், பெரியாரை எதிர்க்கவேண்டும் என் பவர்கள்கூட இந்த உரையைக் கேட்டுக் கொண் டிருப்பார்கள்.
இன்றைக்குப் பல இடங்களில் பார்த்தீர்களேயானால், கோவில் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. அந்த விழாக்களை ஒளிபரப்பும் தொலைக் காட்சிகளில் வர்ணனைகள் செய்யப்படுகின்றன. ‘‘இதோ வந்து விட்டது – அதோ வந்துவிட்டது” என்று.
‘தத்துவ விளக்கம்‘’ என்ற தலைப்பில்
வெளிவந்த நூல்!
இன்றைக்குக்கூட சுப்ரபாதத்தை அவர்கள் ஒலி பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னால், இந்த நாட்டில் ஒரு மூடநம்பிக்கையைப் பரப்புவதற்குக் கூட அறிவியல் ரீதியாகப் பயன்படுத்தக் கூடிய அளவில் இருக்கும்பொழுது, ‘‘நாம் அறிந்திராத அறிவாக” பெரியாருடைய அறிந்திராத அறிவு இருக்கிறதே, அது எவ்வளவு தெளிவானது – செறிவானது என்பதற்கு அடையாளம் ‘‘தத்துவ விளக்கம்” என்ற தலைப்பில் பல பதிப்புகளாக வெளிவந்த நூல் – ஆங்கிலத்தில், கன்னட மொழியில், பல மொழிகளில் அந்த நூல் முதன்முதலாக மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது!
மிகப்பெரிய தத்துவ அறிஞர்கள்கூட இந்தக் கருத்தை, இப்படி அணுகியிருப்பார்களா, என்பது சந்தேகமே!
மதம் வேறு – தத்துவம் வேறு!
இன்றைக்கு ஒரு பெரிய செய்தி – இப்பொழுது இருக்கின்ற ஒன்றிய காவி ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், புராணங்களை வரலாறாக மாற்றுகிறார்கள்; அதேபோல, மதத்தை தத்துவமாக ஆக்குகிறார்கள். மதம் வேறு – தத்துவம் வேறு.
பிலாசிபி அன்ட் ரிலிஜியன் என்று சொன்னால், ஒன் றுக்கு இன்னொன்று இணை போன்று மாற்றுகிறார்கள்.
தத்துவம் என்பது அறிவு. அறிவுப்பூர்வமாக – உதாரணத்தோடு உங்களுக்குச் சொல்லவேண்டுமானால் – பிஎச்.டி., என்று டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள்.
பிஎச்.டி., என்பது டாக்டர் ஆஃப் பிலாசபி. Doctor of Philosophy)
மடை திறந்த வெள்ளம்போல,
ஒன்றின் பின் ஒன்றாக…
ஆனால், பிலாசபி என்று சொல்லும்பொழுது, தத்துவம்- தத்துவம் என்பது அறிவு. அறிவினுடைய தொகுப்பு. அந்த அறிவு என்பது – அறிந்திராத அறிவினுடைய விளைவுதான் – அந்தத் தத்துவக் கழகத்தில் தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும் பொழுது, மடை திறந்த வெள்ளம்போல, ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்ந்து தத்துவ விளக்கம் வந்துகொண்டே இருந்தது.
அவருடைய அந்த உரையின் தொடக்கத்தை மட்டும் சொல்லுகிறேன் – எவ்வளவு காலத்திற்கு வேண் டுமானாலும், இதைச் சொல்லிக் கொண்டே சுவைக்கலாம்.
பல மொழிகளிலும்
மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது
1948 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பேசிய பேச்சாகும் அது.
இன்றைக்கு எத்தனை லட்சக்கணக்கான மக்களின் மத்தியில் சென்றிருக்கிறது என்பதைப் பாருங்கள். பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது.
கருநாடகத் தோழர் சுந்தரமூர்த்தி!
முதன்முறையாக, கருநாடகத்தில் தோழர் சுந்தர மூர்த்தி என்பவர்தான் இந்நூலை (தத்துவ விளக்கம்) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
அப்பொழுது கருநாடகத் தலைநகராக இருந்த பெங்களூருவில் வெளியிட்டார். பிறகு, பல மொழிகளில் வெளியிடப்பட்டு இருக்கின்ற அந்த உரையை பெரியார் அவர்கள் தொடங்கும்பொழுதே, மிக முக்கியமாக ஒரு பார்ப்பனர் ஹெட் ஆஃப் தி டிபார்ட்மெண்ட் – துறையின் தலைவர் – பெரியாரை அறிமுகப்படுத்துகிறார்.
அப்படி அறிமுகப்படுத்தியவுடனே, தந்தை பெரியார் அவர்கள் பேசிய பேச்சு எப்படிப்பட்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
பெரியாரின் தத்துவ விளக்க உரை!
பெரியார் பேசுகிறார்:
‘‘தலைவர் அவர்களே,
பிரின்ஸ்பால் இராமசாமி அவர்களே!
இன்று இந்தச் சேலம் காலேஜ் தத்துவக் கலைக் கழகத்தின் சார்பாக நான் பேசவேண்டும் என்று அக்கழகத்தாரால் அழைக்கப்பட்டு இருக் கிறேன். இங்கு மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றும் பலதிறப்பட்ட பொதுமக்களும் ஏராள மாய்க் கூடியிருக்கிறீர்கள். உங்கள் யாவருக்கும் புரியம்படியோ, திருப்தி ஏற்படும்படியோ பேசு வது கஷ்டமான காரியமாகும். அதிலும், தத்துவக் கலைச் சார்புக் கூட்டத்தில் தத்துவங்களைப்பற்றிப் பேசவேண்டியது முதல் உரிமை. ஆதலால், இப்படிப்பட்டக் கூட்டத்தில் தத்துவ விசா ரணையைப்பற்றிப் பேசுவது மிகமிகக் கஷ்டமான காரியம்” என்கிறார்.
தத்துவம் வேறு – மதம் வேறு.
ஆனால், இன்றைக்கு இருக்கின்ற கோளாறு – அறிவி யலை – போலி அறிவியலுக்குச் சமமாக ஆக்குகிறார்கள்.
அறிவியல் என்பது வானவியல் – விண்வெளிக்கு ராக்கெட்டை விடுகிறார்கள்.
ஆனால், போலி அறிவியல் என்பது அறிவியல் அல்ல – அது ஜூடோ சயின்ஸ். அதில் இருக்கின்ற கிரகங்களின் கணக்கே மிகவும் வித்தியாசமானதாகும்.
அதுபோன்று, இந்த மூன்றையும் இப்பொழுது குழப்பிக் கொண்டிருப்பதுதான் இன்றைய ஒன்றிய ஆட்சி.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், தந்தை பெரியார் உரையைத் தொடர்கிறார்.
‘‘தத்துவக் காட்சி, தத்துவ உணர்வு என்பன உண்மை. அதாவது, உள்ளதை உள்ளபடி காண் பதும் அறிவதுமாகும். இயற்கை ஞானம் என்றும் சொல்லலாம்.” யாராவது சொல்லியிருக்கிறார்களா?
படிக்காதவன் என்றாலும், அவன் கற்காதவன் ஆக முடியாது – அவனை அறிவில்லாதவன் என்று சொல்ல முடியாது!
இதுவரையில் தத்துவத்திற்கு இப்படி ஒரு தெளிவான விளக்கம் – எளிய மக்களுக்கு – கடைகோடி மனிதனுக்கு, படிப்பறிவு இல்லை என்று சொல்லக்கூடிய மனிதனுக்குப் புரியக் கூடிய அளவுக்கு யாராவது சொல்லி இருக் கிறார்களா? படிக்காதவன் என்றாலும், அவன் கற்காத வன் ஆக முடியாது – அவனை அறிவில்லாதவன் என்று சொல்ல முடியாது.
படிப்பு வேறு – அறிவு வேறு என்று தந்தை பெரியார் அவர்கள் பல நேரங்களில் சொல்வார்.
இயற்கை ஞானம் என்கிறார். ‘‘முதுமுனைவர்” பட் டத்தைப் பல்கலைக் கழகங்கள் கொடுக்கும்பொழுதுகூட, தனித்தன்மை உள்ளவர்களையெல்லாம் கண்டெடுத்து கொடுக்கிறார்கள்.
இப்பொழுதுகூட ஒரு பெரிய கேள்வி- ‘‘என்ன இவருக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்கவேண்டுமா?” என்று சிலர் கேட்கிறார்கள்.
இயற்கை ஞானத்தோடு மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள் – அதற்குரிய தகுதிக்குரியவர்கள் என்று சொன்னால், அதுதான் உண்மையான தத்துவ விசா ரணையினுடைய, தத்துவ ஆராய்ச்சியினுடைய பயன்.
எனவே, இந்த தத்துவத்தைப்பற்றி சொல்கின்ற நேரத்தில், எப்படிப்பட்ட உண்மையை, எவ்வளவு ஆழமான தொடக்கத்தை, எவ்வளவு அடித்தளம் அமைத்துக்கொண்டு மிக தெளிவாகச் சொல்கிறார்.
பெரியாருடைய அறிந்திராத அறிவை நாம் புரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பைப் பெறுகிறோம்
மேலும் தொடர்கிறார் தந்தை பெரியார்:
‘‘நாம் தத்துவத்தையும், இயற்கையையும், வேறுபடுத்திய காட்சியையும், குணத்தையும், உணர்வையும் கொண்டவர்களாக இருக்கிறோம். இப்படிப்பட்ட நமக்கு வெறும் பச்சை உண்மை – தத்துவம் என்பது சங்கடமான ஒன்றாகும்.”
இந்த வார்த்தைகளை மட்டும் கேட்டால், அவ்வளவு எளிதில் புரியாது. அதற்குப் பின் பெரியார் அவர்கள் விளக்கிச் சொல்லியிருப்பார். அவற்றை கேட்கும் பொழுதுதான், ‘‘இவ்வளவு ஆழமாக செய்தி இருக் கிறதா?” என்று நினைக்கின்றபொழுதுதான், அவருடைய அறிந்திராத அறிவை நாம் புரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பைப் பெறுகிறோம்.
அந்த நிலையை, மிக ஆழமான அந்த சிந்தனையை நாளையும் துய்ப்போம். இந்தத் தத்துவத்திற்கு மிக முக்கியமான ஓர் அடிப்படை – வாத – பிரதிவாதங்கள் என்று சொல்வார்கள்.
தத்துவார்த்தமாக வளர்க்கக் கூடியது தர்க்கம்.
கேள்விகளுக்குப் பதில் சொல்லக்கூடிய முறை.
அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லக்கூடிய தர்க்கம் – லாஜிக் என்று சொல்வது எப்படிப்பட்டது?
வாழ்நாள் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் கேள்வி கேட்டு, ஆழமாக சிந்திக்க வைத்தார்!
அதை பெரியார் அவர்கள், எவ்வளவு லாவகமாக வாழ்நாள் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் கேள்வி கேட்டு, சிந்திக்க வைத்து, பிறரையும் ஆழமாக சிந்திக்க வைத்தார் என்பதை நாளைக்குப் பார்ப்போம்!
‘அறிந்திராத அறிவை’ நாம் அறிந்துகொண்டிருக் கின்றோம் என்ற ஒரு மகிழ்ச்சியோடு நாம் விடை பெறுகிறோம்.
இன்னும் அறிந்துகொள்ளவேண்டியது ஏராளம்.
‘‘கற்றது கையளவு – கல்லாதது உலகளவு” என்று சொன்ன மொழியைப்போல, நாம் புரிந்தது எள்ளளவு – புரியாதது மிகப்பெரிய அளவு என்பதின் விளக்கம் நாளையும் தொடரும்.
மீண்டும் மீண்டும் ஆழமாக உய்த்துப் படிக்கும்போதுதான்…
பெரியாரைப் படிக்கும்பொழுதும், மீண்டும் மீண்டும் ஆழமாக உய்த்துப் படிக்கும்போதும், பெரியாரை உணரும்போதும்தான், நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்த உரையின் முழு நிகழ்ச்சியை காணொளியாக காணுங்கள் “பெரியார் வலைக்காட்சி” YouTube பக்கத்தில்….
Link : https://www.youtube.com/live/2RvQr_dasCI?si=b08fq5JcGpB1cJgV