2030-க்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு!
செயல் திட்ட அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!
சென்னை, ஜன.8 சென்னையில் நேற்றும் (7.1.2024), இன்றும் (8.1.2024) பன்னாடுகளிலிருந்து வந்துள்ள தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. முதல் நாளே முதலீடு ரூ.5.5 லட்சம் கோடி குவிந்தது. பல் லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்புக்கும் வழிவகுத்தது. 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை அடைவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டைத் தொடங்கி வைத்து உறுதியும் அளித்தார்.
உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்கவிழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்ய வளாகத்தில் நேற்று (7.1.2024) நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றுப் பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட் டாளர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் ஒன்றிய ஜவுளி, வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ஒரு லட்சம் கோடி டாலர்!
நேற்றைய மாநாட்டின்போது, பல்வேறு நிறுவனங் களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட் டன. மேலும் 2030-க்குள் டிரில்லியன் டாலர் (ஒரு லட்சம் கோடி டாலர்) பொருளாதார இலக்கை எட்டும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டின் முதல் நாளான நேற்றே (7.1.2024), ரூ.5.5 லட்சம் கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை எட்டியுள்ளதாக தொழிற்துறை உயரதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் நடைபெற்றுவரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் The Startup TN Pavillion பன்னாட்டு பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
மேலும், முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் பல் வேறு முன்னணி நிறுவனங்கள் உள்பட 100-க்கும் மேற் பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தொழில்துறை செயலாளர் அருண் ராய் தெரிவித்துள்ளார். நேற்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று வரை நடைபெறவுள்ள நிலையில், முதல் நாளில் மட்டும் ரூ.5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி, காஞ்சிபுரம், சிறீபெரும்புதூரில் தொழிற்சாலைகள்!
முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், ஹூண் டாய் நிறுவனம் என பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாட்டில் முதலீடு செய் துள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இரும்பு தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைய இருப்பதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் நிலை ஏற் பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் மின்சார கார் பேட்டரி தயாரிப்பு நிறு வனம் தொடங்கப் படுவதன் மூலம் அங்கும் ஆயிரக் கணக்கானோர் வேலை வாய்ப்பை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிறீபெரும்புதூரில் ஹூண்டாய் நிறுவனம் ஆலை விரிவாக்க பணியை மேற்கொள்ள உள்ளது. கிருஷ்ணகிரியிலும் டாடா நிறுவனம் தங்களது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளது. இதனால் அந்த மாவட்ட மக்களும் பயன் அடைய உள்ளனர்.
40,500 பேருக்கு வேலை வாய்ப்பு!
கோத்ரேஜ் நிறுவனம் செங்கல்பட்டில் புதிய ஆலையை தொடங்க உள்ளதன் மூலம் அங்கும் வேலைவாய்ப்பு பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகள் குவிந்துள்ளதால் 40,500 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் நிசாபா வழங்கினார்.
மேக்ஸ்விஷன் கண் மருத்துவமனை(Maxivision Super Speciality Eye Hospitals Private Limited) தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீடு செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: நிறுவனங்கள் மற்றும் அதன் முதலீடு – வேலைவாய்ப்பு விவரம்:
குறிப்பாக ஹூண்டாய், ஓலா, கோத்ரேஜ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்கவும், விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளன. இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை அறிவித்துள்ளன.
அவை பின்வருமாறு :
எந்தெந்த நிறுவனங்கள்
First Solar :
முதலீடு ரூ.5600 கோடி – வேலை வாய்ப்பு 1,100 பேர் – காஞ்சிபுரம்
JSW Renewable :
முதலீடு ரூ.12,000 கோடி – வேலை வாய்ப்பு 6,600 பேர் – தூத்துக்குடி & திருநெல்வேலி
Tata Electronics :
முதலீடு ரூ.12,082 கோடி – வேலை வாய்ப்பு 40,500 பேர் – கிருஷ்ணகிரி
TVS Groups :
முதலீடு ரூ.5,000 கோடி – வேலை வாய்ப்பு 500 பேர்
Mitsubishi :
முதலீடு ரூ.200 கோடி – வேலை வாய்ப்பு 50 பேர் – திருவள்ளூர்
Hyundai :
முதலீடு ரூ.6,180 கோடி – காஞ்சிபுரம்
Vinfast :
முதலீடு ரூ.16,000 கோடி – தூத்துக்குடி
Godrej Consumer :
முதலீடு ரூ.515 கோடி – செங்கல்பட்டு
Pegatron :
முதலீடு ரூ.1000 கோடி – வேலை வாய்ப்பு 8000 பேர் – செங்கல்பட்டு
உள்பட ஏராளமான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
பல்வேறு நாடுகளும் முன்வருகை!
உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வில், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் தமிழ்நாட்டு அரசுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்துள்ளன. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டன.
தலைமைத்துவம் – Leadership, நீடித்த நிலைத்தன்மை Sustainability, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி -Inclusivity என்ற கருப்பொருள்களில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.5 லட்சம் கோடி என்ற இலக்கு முதல் நாளிலேயே எட்டப்பட்டதாக தொழில்துறைச் செயலர் அருண்ராய் தெரிவித்துள்ளார். மாநாட்டின் முதல் நாளான நேற்று (7.1.2024) 100-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும் அருண் ராய் தெரிவித்துள்ளார்.
இந்த முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தொழில்முனைவோர்களின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், The Startup TN Pavillion 8000 சதுர அடியில் 23 வெவ்வேறு துறைகளின் 41 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் 10 ஸ்டார்ட்அப்களும் அடங்கும். மேலும் 20 அரங்குகள் அரசின் அங்கீகாரம் பெற்றவை. இவை தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகத்தின் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்நாடு ஆதி திராவிட – பழங்குடியின மானிய நிதி மற்றும் தமிழ்நாடு தொடக்க விதை நிதி (TANSEED) ஆகியவற்றின் கீழ் பயனடைந்த அரங்குகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த அரங்குகள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் 8000 சதுர அடியில் அமைக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட அமர்வுகள் மூலம், முதலீட்டு வாய்ப்புகளைத் தேடும் நம்பிக்கைக்குரிய 200 முதலீட்டாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, வணிக சந்திப்புகள் மூலம் கூட்டணி வர்த்தகங்களை ஊக்கப்படுத்தும் திட்டத்தோடும் செயல்படுகிறது.
30 புதுமைத் தயாரிப்புகள்!
குறிப்பாக 30 புதுமையான தயாரிப்புகள் இந்த அரங்கில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பார்வையாளர்கள், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு அரங்கிலும் சிறப்பு பேச்சாளராக வல்லுநர்களின் உரைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுசி பெர்க்லி, சென்டர் ஃபார் கார்ப்பரேட் இன்னோவேஷனின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் சாலமன் டார்வின், தலித் இந்தியன் சேம்பர் ஆஃப் காமெர்சின் நிறுவன தலைவர் மிலிந்த் காம்ப்ளே, ஸ்டார்ட் அப் ஜெனோம் நிறுவனர் மார்க் பென்செல், தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் ஆரோக்கியசாமி வேலுமணி உள்ளிட்டோர் இந்த அரங்குகளில் உரையாற்றும் முக்கிய நபர்கள் ஆவர்.
இந்த மாநாட்டில், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கினை எட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கை, தமிழ்நாடு குறை கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை 2024-அய் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பல்வேறு நிறுவனங்களின் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.