சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் தமிழ்நாடு அரசின் கெசட்டில் இடம்பெற்றிருக்கிறது என்பது நமக்குப் பெருமை!
தந்தை பெரியார் சுட்டிக்காட்டிச் சென்ற பாதையில்தான் கலைஞர் ஆட்சியை நடத்தினார்; தளபதியும் அவ்வழியையே தொடருகிறார்!
‘‘தமிழன் தன்மானத்தோடு வாழவேண்டும்; சுயமரியாதையோடு வாழவேண்டும்” என்று சொன்னவர் தந்தை பெரியார்!
திருநெல்வேலி, அக்.18 சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் தமிழ்நாடு அரசின் கெசட்டில் இடம் பெற்றிருக்கிறது என்பது நமக்குப் பெருமை! தந்தை பெரியார் சுட்டிக்காட்டிச் சென்ற பாதையில்தான் கலைஞர் ஆட்சியை நடத்தினார்; தளபதியும் அவ்வழி யையே தொடருகிறார்! தமிழன் தன்மானத்தோடு வாழவேண்டும்; சுயமரியாதையோடு வாழவேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார் என்றார் தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் தலைவர் ஆவுடையப்பன் அவர்கள்.
திருநெல்வேலியில் முப்பெரும் விழா!
கடந்த 16.10.2023 அன்று மாலை திருநெல்வேலியில் நடைபெற்ற சேரன்மாதேவி நூற்றாண்டு விழா – பத்தமடை ந.பரமசிவம் அவர்களுக்குப் பாராட்டு விழா – ‘‘தாய்வீட்டில் கலைஞர்” நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் தலைவர் ஆவுடையப்பன் அவர்கள் தந்தை பெரியார் படத் தினைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
நூறு ஆண்டுகளுக்கு முன்பு
தந்தை பெரியார் தொடங்கிய போராட்டம்தான் குருகுலப் போராட்டம்!
உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்மூரில் நடைபெறுகிறது இந்த நிகழ்ச்சி. நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குருகுலத்தில் நடைபெற்ற நிகழ்வு – அங்கே எந்த அளவிற்கு ஜாதி வாரியாக மாண வர்கள் பிரிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட ஜாதி – பார்ப்பனர்கள் என்று பிரித்து, தண்ணீர் பானைகள் தனித்தனி, சாப்பாடு தனித்தனி, சாப்பிடும் இடமும் தனித்தனி என்று ஒருகாலத்தில் இங்கே இருந்தது.
அப்படி ஒதுக்குவது தவறு, அது நியாயம் அல்ல. மனிதர்கள் அனைவரும் சமமாகக் கருதப்படவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் அன்று எடுத்த போராட்டம்தான் இந்த குருகுலப் போராட்டம்.
தமிழ்நாடு அரசின் கெசட்டில் இடம்பெற்றிருக்கிறது சேரன்மாதேவி!
அதன்மூலமாக இந்த சேரன்மாதேவிக்கு என்ன பெருமை என்னவென்றால், வரலாற்றில் நமக்கு இடம் இருக்கிறது. நம்முடைய கெசட்டில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்றால்,
‘‘E.V.Ramasamy and his supporters came out of the Congress Committee protesting against the Congress stand in the Gurukulam affair and he started Self-Respect Movement Genesis of the Birth of Dravidian Political Party in Tamil Nadu.”
‘‘குருகுலம் விவகாரத்தில் காங்கிரசின் நிலைப் பாட்டை எதிர்த்து காங்கிரசு கமிட்டியில் இருந்து வெளியே வந்த ஈ.வெ.ராமசாமி, அவருக்கு ஆதர வாக இருந்தவர்களோடு தமிழ்நாட்டில் திராவிட அரசியல் கட்சியின் பிறப்பிற்கு அடிப்படையான சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.”
சேரன்மாதேவியில்தான் அது நடந்தது. இன்றைக்குத் ‘திராவிட இயக்கம்’, ‘திராவிடம்’, ‘திராவிட மாடல்’ என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே, அது எங்கே இருந்து தொடங்கியது என்றால், சேரன்மாதேவியில் இருந்துதான் தொடங்கியிருக்கிறது.
இது நமக்கெல்லாம் கிடைத்திருக்கின்ற பெருமை. இந்தப் புத்தகத்தை ஆசிரியர் அண்ணன்தான் எழுதி யிருக்கிறார்.
இந்தத் தகவல் இந்தப் புத்தகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசினுடைய கெசட்டிலும் இருக்கிறது.
திராவிட இயக்கம் வந்ததினுடைய பின்னணி குருகுலப் போராட்டம்தான்!
திராவிட இயக்கம் வந்ததினுடைய பின்னணி என்ன வென்றால், குருகுலப் போராட்டம். அப்போராட்டம் எங்கே நடந்தது? சேரன்மாதேவியில் நடந்தது.
அந்தப் போராட்டத்திற்குப் பிறகுதான், திராவிட இயக்கமே வருகிறது. ஆகவே, நமக்குக் கிடைக்கின்ற ஒரு வரலாறு, சேரன்மாதேவிக்கு எப்பொழுதும் அது இருக்கிறது என்பதை நான் அன்போடு தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
அன்றைக்குத் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண் ணாவும், நம்முடைய கலைஞரும் நமக்கு வழிகாட்டிச் சென்ற காரணத்தினால்தான், நாம் இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் முன்னணியில் இருக்கிறோம்.
பெண்களுக்கெல்லாம் உரிமை வேண்டும்; பெண்ணுரிமை போற்றப்படவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.
தந்தை பெரியார் சொன்னதை, நம்முடைய கலைஞர் அவர்கள் நிறைவேற்றினார்.
தந்தை பெரியார் சொன்னதை, இன்றைய தினம் நம்முடைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி அவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்.
தந்தை பெரியார் சுட்டிக்காட்டிச் சென்ற வழி முறைதான்!
இன்றைக்குத் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், தந்தை பெரியார் சுட்டிக்காட்டிச் சென்ற அந்த வழி முறையை, இன்று கடைப்பிடிக்கின்ற காரணத்தினால் தான்.
எல்லாத் துறைகளிலும் முதல் மாநிலமாக இருக்கக் கூடிய மாநிலம் எது என்றால், தமிழ்நாடு. காரணம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் சுட்டிக்காட்டிச் சென்ற அந்த வழியில் நாம் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் என்பதை நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் பாகுபாடு!
இங்கே நடைபெற்ற குருகுலப் போராட்டம் நமக் கெல்லாம் ஒரு வழிகாட்டியாக இருந்துகொண்டு இருக் கிறது. எந்த அளவிற்கு அது மனிதர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது என்பதை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
பார்ப்பனர்களுக்குத் தனி சாப்பாடு, சாப்பிடம் இடம், குடிப்பதற்குத் தண்ணீர் பானை தனி, பாட முறை அவர்களுக்கு வேறு.
ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சாப்பாடு தனி, தண்ணீர் பானை, பாடமுறை வேறு என்று இனப் பாகுபாட்டை செய்தனர்.
தமிழன் தன்மானத்தோடு வாழவேண்டும்; சுயமரியாதையோடு வாழவேண்டும்!
நம்முடைய மக்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த குருகுலத்தை நடத்தி, நம்முடைய மக்களை இழிவுபடுத்திய நிகழ்ச்சிதான் அங்கே நடை பெற்றது என்பதை நான் சுட்டிக்காட்டி, அதையெல்லாம் இன்றைய தினம் தூக்கி எறிந்து, தமிழன் தன்மானத்தோடு வாழவேண்டும்; சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டியிருக்கின்ற தந்தை பெரியாருடைய புகழைப் பாராட்டி, வாழ்த்தி, அண்ணன் பத்தமடை பரமசிவம் அவர்கள் தி.மு. கழகத் திற்காக பல தியாகங்களைச் செய்தவர் – அவருக்கு என்னுடைய பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்து விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் தலை வர் ஆவுடையப்பன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.