மின் கட்டண உயர்வுக்கு காரண கர்த்தா யார்?

Viduthalai
3 Min Read

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு – மின்சாரம் என்றாலே ‘ஷாக்’ அடிக்கிறது என்று வாய்க் கூசாமல் ஆட்சியைப் பற்றிக் குறை கூறுவது எதிர்க்கட்சிகளின் அன்றாடப் பிழைப்பாகி விட்டது. இதற்கான மூல ஊற்று எங்கே இருக்கிறது? என்பது பற்றித் தெரிந்து பேசுகிறார்களா? அல்லது தெரியாமல் பேசுகிறார்களா? என்பது முக்கியக் கேள்வியாகும்.

இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் அதானி நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் செய்த மெகா ஊழலே, இந்தியாவில் மின் கட்டணம் உயரக் காரணம் என்பது இப்போது  வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனம் மூலம் அதானி குழும பங்குகளை வாங்கி விற்று 2 பேர் கொள்ளை லாபம் ஈட்டியதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த பிப்ரவரி மாதம் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு, பங்குகள் விலையை உயர்த்தியதாக ஹிண்டன்பர்க் அமைப்பு குற்றம் சாட்டியது.

இந்த விவகாரம் டில்லி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இதேபோல், அமைப்பு ரீதியான குற்றங்கள் மற்றும் ஊழலை கண்டறிந்து வெளியிடும் ‘ஓ.சி.சி.ஆர்.பி.’ என்ற அமைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் அதானி குழுமத்தின் மற்றொரு முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் 2-ஆம் பாகமாக கருதப்படும் அந்த அறிக்கையில், வெளிநாட்டு நிறுவனம் மூலம் அதானி பங்குகளை மறைமுக முதலீட்டாளர்கள் வாங்கி விற்ற 2 நிகழ்வுகளை அம்பலப்படுத்தியது. நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு, கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அதானி குழுமத்தின் சந்தை மூலதனம் 8 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு 260 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக ‘ஓ.சி.சி.ஆர்.பி.’ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னணி பத்திரி கையான “பைனான்சியல் டைம்ஸ்” அதானி குழுமம் குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தோனேசியாவில் இருந்து குறைந்த விலைக்கு நிலக்கரி வாங்கும் அதானி நிறுவனம், அதனை தனது குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்குக் கொண்டு வந்ததும், 52 சதவிகித லாபத்திற்கு விற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஜனவரியில் இந்தோனேசியாவில் 74 ஆயிரத்து 820 டன் நிலக்கரியை, 16 கோடி ரூபாய்க்கு வாங்கிய அதானி நிறுவனம், இந்தியா கொண்டு வந்ததும், 2 மடங்கு உயர்த்தி, 35 கோடி ரூபாயாக விலை அதிகரித்து அரசுக்கு விற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம்,  12 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தைவானில் ஹை லிங்கோஸ், துபாயில் டாரஸ், சிங்கப்பூரில் பான் ஆசியா டிரேட்லிங்க் எனும் போலி நிறுவனங்கள் மூலம் நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்ளை லாபம் பார்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் செய்த இத்தகைய மோசடிகளால் இந்தியாவில் மின் கட்டணம் உயர வழி வகுத்துள்ளதாகவும் இதன் பாதிப்பு – நாட்டின் ஒவ்வொரு சாமானிய மக்களின் தலையிலும் விழுந்துள்ளது. அதானி நிலக்கரி ஊழல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், ஒன்றிய பிஜேபி அரசின் அழுத்தத்தால் இந்த விசாரணையை புலனாய்வு அமைப்புகள் மூடி மறைத்ததாக “பைனான்சியல் டைம்ஸ்” கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதானி நிறுவனங்களின் மோசடிகளை மூடிமறைக்க ஒன்றிய அரசு என்னதான் முயன்றாலும், மோடியின் பணக்கார நண்பரின் ஊழல்கள் ஒவ்வொரு நாளும் அம்பலப்பட்டு வருவதைத் தடுக்க முடியாது” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை, 52 சதவிகிதம் விலை உயர்த்தி, அதானி நிறுவனம் விற்பனை செய்துள்ளது சாதாரணமானதுதானா? இதன் மூலம் அதானி நிறுவனம்  12 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை லாபம் பார்த்துள்ளது. இந்த மெகா ஊழலில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் யார்? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி எதற்குத்தான் வாய் திறந்தார்? அதானி என்று பெயர் சுட்டிக் காட்டப்பட்டாலே, அவை எல்லாம் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டு விடுகிறது! என்ன ஜனநாயகமோ, வெங்காயமோ!

இதற்கெல்லாம் ஒரே முடிவுதான் 2024 மக்களவைத் தேர்தல்!

மாநில அரசின் பக்கம் கோபத்தைக் காட்டாமல் இதற் கெல்லாம் மூல காரணமாக இருக்கக் கூடிய ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதில் அக்கறை காட்டுவதே சரியானதாக இருக்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *