வாழ்விணையருக்கு விழா எடுத்து – ஆண்களைப் பக்கத்தில் உட்கார வைக்கவேண்டும்!
ஜனவரி 17: பெரியார் திடலில் நடைபெறும் விழாவில், ‘‘பெரியார் விருது’’ நம்முடைய பவள விழா நாயகர் கவியருவி அப்துல்காதருக்கு வழங்கப்படும்!
கவிமாமணி அப்துல் காதர் பவள விழாவில் – விழா மலரை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு
ஆம்பூர், ஜன.7 தமிழ்ப் பெயர் வைக்கக் கூடிய ஓர் இயக்கத்தை மீண்டும் தொடங்கவேண்டும்! வாழ்விணை யருக்கு விழா எடுத்து – ஆண்களைப் பக்கத்தில் உட்கார வைக்கவேண்டும்! இந்த ஆண்டு, ஜனவரி 17 ஆம் தேதி, பெரியார் திடலில் நடைபெறும் விழாவில், ‘‘பெரியார் விருது’’ நம்முடைய பவள விழா நாயகர் கவியருவி அப்துல்காதருக்கு வழங்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கவிமாமணி அப்துல் காதர் பவள விழா!
ஆம்பூரில் நேற்று (6.1.2024) மாலை நடைபெற்ற கவிமாமணி அப்துல்காதர் அவர்களின் பவள விழாவில், விழா மலரை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப் புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
தமிழ் மானத்திற்கு என்றைக்குமே அச்சாரமாக இருக்கக்கூடிய, ஒரு தனித் தமிழ்ப் போராளி!
மிகுந்த பெருமைக்கும், பாராட்டுதலுக்கும் உரிய நம்முடைய கவி அருவியாக, தமிழ்கூறும் நல்லுலகத்தில் அனைத்துக் கருத்துள்ளவர்களாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டு, ஒரு தலைசிறந்த சமூக நீதிக்கான தமிழ் உணர் வுக்காக, மனித நேயத்திற்காகப் பாடுபடக் கூடிய ஒரு தமிழ்ப் போராளி – தமிழ் மானத்திற்கு என்றைக்குமே அச்சாரமாக இருக்கக்கூடிய, ஒரு தனித் தமிழ்ப் போராளி என்ற பெருமைக்குரியவராக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் நம்முடைய அய்யா பேராசிரியர் அப்துல் காதர் அவர்களுடைய பவள விழா என்று சொன்னாலும், அவருடைய 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா என்று சொன்னாலும் – அவருக்கு முன்னுரிமை கொடுப்பதை விட, அவருடைய வாழ்விணையராக இருக்கக்கூடிய அன்புச் சகோதரியார் அவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.
முதலில் பெண்களுக்கு முன்னுரிமை – அது சலுகையல்ல – அது உரிமை!
75 ஆண்டுகாலத்திற்கு அவருடைய பங்கு அதிகமாக இருக்கிறது. அப்துல் காதர் அவர்களால் எழுதிக் கொண்டே இருக்க முடிகிறது; சிந்தித்துக் கொண்டே இருக்க முடிகிறது; நம்மையும் சிந்திக்க வைத்துக் கொண்டே இருக்க முடிகிறது.
ஆகவேதான், முதலில் பெண்களுக்கு முன்னுரிமை – அது சலுகையல்ல – அது உரிமை. ஆகவே, அந்த அடிப்படையில், அன்புச் செல்வர்களே, மணமக்களே என்றுகூட அவர்களைச் சொல்லலாம். அன்றைக்கு நாம் அதைப் பார்த்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்திருக்காது.
இது ஒரு தனித்தமிழ் உரிமை பெறக்கூடிய மறுமலர்ச்சி விழா!
அன்றைக்குக்கூட, அவருடைய மார்க்க முறையில், இரண்டு பேரும் மணமக்களாக அமர்ந்திருக்கின்ற காட்சி நமக்குக் கிடைத்திருக்காது. ஆனால், இன்றைக்கு சற்று மாறுபட்ட நிலையில், அவருடைய தொண்டு நம் மையெல்லாம் ஒன்று சேர்த்ததோடு, அவர்கள் இருவரையும் ஒன்றாகக் காணக்கூடிய வாய்ப்பையும் தந்திருக்கிறது என்றால், இது ஒரு தனித்தமிழ் உரிமை பெறக்கூடிய மறுமலர்ச்சி விழா!
அப்படிப்பட்ட விழாவிற்கு வந்திருக்கக் கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
அப்துல்காதர் அவர்கள்மீது அந்த அளவிற்குப் பற்றும் பாசமும் உண்டு
என்னுடைய சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை எங்கள் தலைமைக் கழகத்தினர் அடுத்த ஆண்டுவரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நம்முடைய வணங்காமுடி அவர் களும், பேராசிரியர் அவர்களும் இந்த நிகழ்வில் நான் கலந்துகொள்ளவேண்டும் என்று சொன்னார்கள். அதன்காரணமாக, இவ்விழாவில் பங்கேற்க ஓடோடி வந்திருக்கிறேன். ஏனென்றால், அப்துல்காதர் அவர்கள் மீது அந்த அளவிற்கு எனக்குப் பற்றும் பாசமும் உண்டு.
நம்முடைய விழா நாயகர் என்பவர் என்றைக்கும் வீழா நாயகர். அந்த விழா நாயகர் அவர்கள், சிறப்பான வகையில், பல கவிஞர்களை ஈர்க்கக் கூடியவர்.
அவருடைய கருத்துகள் சில எதிர்க்காற்றாகவும் இருக்கும்!
என்னைப் பொறுத்தவரையில், அவருடைய கருத்துகள் சில எதிர்க்காற்றாகவும் இருக்கும். எனவே, எல்லாமே எங்களுக்கு உடன்பாடாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை.
தந்தை பெரியாருடைய தொண்டன் நான். ஆகவே, எந்தக் கருத்தாக இருந்தாலும், பாராட்டவேண்டியவர் களைப் பாராட்ட வேண்டும்; கண்டிக்க வேண்டியவர் களைத் தயங்காமல் கண்டிக்கவேண்டும். இது எங் களுடைய இயல்பு. அதனால் வருகின்ற விளைவுகளைப் பற்றி நாங்கள் என்றைக்கும் கவலைப்பட்டதில்லை.
சிவக்கொழுந்தும், பெரியார் கொழுந்தும் அருகருகே இருக்கக் கூடிய வாய்ப்பு!
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைய விழா என்பது மிகவும் சிறப்பான விழாவாகும். இவ்விழாவிற்குத் தலைமை தாங்கியிருக்கக்கூடியவர் அய்யா சிவக் கொழுந்து அவர்கள். சிவக்கொழுந்தும், பெரியார் கொழுந்தும் அருகருகே இருக்கக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.
எங்களை இணைப்பது தமிழ்!எங்களை இணைப்பது தமிழ் இன உணர்வு!
மற்றவை அல்ல!
பண்பாடு, எல்லாவற்றையும் தாண்டிய மனிதநேயம்! அது மதங்களைக் கடந்தது; மனங்களை ஒத்தது!
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு ஏராளமான தமிழ்ப் பேராசிரியர்களும், சான்றோர்களும் இங்கே வந்திருக்கின்றீர்கள்.
தமிழ் நம்மை ஒன்றுபடுத்தியிருக்கிறது!
யார் என்ன ஜாதி? யார் என்ன மதம்? என்று நம்மைப் பிரிப்பதில்லை. தமிழ் நம்மை ஒன்றுபடுத்தியிருக்கிறது.
இந்தத் தமிழ் மானம் ஓங்கவேண்டும்; இந்தத் தமிழ் இன உணர்வு சிறப்பாக இருக்கவேண்டும்.
அதுதான் அப்துல்காதர் அவர்களை, தமிழருவி அவர்களைப் பாராட்டுகிறோம்.
பல நேரங்களில் ‘‘திசைகளெட்டும் புகழ்” என்று சொல்லுகிறோம். இவர் எட்டுத் திசைகளையும் இப் பொழுது இணைத்தவராக இருக்கிறார்.
எல்லோரையும் இணைக்கக் கூடிய ஆற்றல்- அவருடைய அறிவுக்கு, ஆற்றலுக்கு ஆளுமைக்கு உண்டு!
தெற்கே பிறந்தவர்; படித்தவர்; சின்னமனூரில் தொடங்கி, அது வாணியம்பாடியாக இருந்தாலும் அல் லது தமிழ்கூறும் நல்லுலகம் வெளிநாடுகளாக இருந்தா லும், அத்துணை பேர் மத்தியிலும் அவரை அறிந் திருக் கிறார்கள் என்று சொன்னால், எல்லோரையும் இணைக் கக் கூடிய ஆற்றல் அவருடைய அறிவுக்கு உண்டு – அவருடைய ஆற்றலுக்கு உண்டு – அவருடைய ஆளுமைக்கு உண்டு.
செந்நாப்புலவர் என்கிற ஒரு சொல் உண்டு. அந்தச் சொல்லுக்கு முழுப் பொருள் என்னவென்றால், நம்மு டைய தமிழருவிதான்.
எனவே, அவர்கள் பல்லாண்டுகாலம் வாழவேண்டும். பல நேரங்களில், நூறு ஆண்டுகள் வாழவேண்டும் என்று சொல்வது மிகவும் பழைமையாகிவிட்டது. நூறாண்டு என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது இப்பொழுது- அது அறிவியலுடைய சாதனை.
தமிழ் போல – தன்மானம் போல – இனமானம் போல!
வாகனங்களில் எந்தப் பாகம் தேய்ந்து போகிறதோ, அதைக் கழற்றிப் போட்டுவிட்டு, புதிதாக பாகத்தை இணைத்து, ஓட்டிக் கொண்டிருக்கின்றோம். அதுபோல, இன்றைக்கு நீங்கள் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வாழலாம்; வாழவேண்டும்; தமிழ் போல – தன்மானம் போல – இனமானம் போல.
தந்தை பெரியார் சொன்னார், மனிதருக்கு அழகு என்ன? என்று சொல்லும்பொழுது, ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்றார். மற்றவர்கள் அழகைப் பார்ப்பதற்கும், பெரியார் கண்ணோட்டத்தோடு அழகைப் பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு.
அழகு என்றால், ஒப்பனையைத்தான் பலர் சொல்கிறார்கள்; தோற்றத்தைத்தான் சொல்கிறார்கள்.
ஆனால், அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், ‘‘மானமும், அறிவும் மனிதருக்கு அழகு” என்று சொன்னார்.
ஒரு குறிப்பிட்ட ஆளை அவர் சொல்லவில்லை; மனிதன் என்று யார் இருக்கிறார்களோ, அடையாளம் அந்த மனிதருக்கு இருக்கிறது – ஆனால், அந்த அடையாளத்தையும் தாண்டி, அழகாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அவருடைய செந்நா எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கிறது
மானமும் அறிவும் இரண்டும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொல்கிறார். அந்த இரண்டும் சிறப்பாக இருந்து, மற்றவர்களுக்கும் அவை வரவேண்டும் என்ற பணியைத்தான் அப்துல்காதர் அவர்களுடைய எழுதுகோல் எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறது. அவருடைய செந்நா எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கிறது.
எனவே அவர்கள் நூறாண்டைக் கடந்தும் வாழ வேண்டும்; அவருடைய தொண்டு சமுதாயத்திற்குக் கிடைக்கவேண்டும்.
இல்லறம் – அதைவிட்டால், பழைய காலத்தில் துறவறம்.
துறவறம் எப்படிப்பட்டது என்பதை இன்றைக்குப் பார்க்கிறோம். துறவிகள் எப்படிப்பட்டவர்களாக இருக் கிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் சொல்லலாம். அதற்குப் பல மேடைகள் எனக்கு இருக்கிறது; அதற்கு இந்த மேடை தேவையில்லை.
ஆனால், அதே நேரத்தில், அதையும் தாண்டி இன்னொரு அறம் இருக்கிறது. அதுதான் தொண்டறம். அந்தத் தொண்டறம் என்பது யார் யாருக்கு எந்தெந்தத் துறையில் வலிமை இருக்கிறதோ, ஆற்றல் இருக்கிறதோ அந்த ஆற்றலை அவர்கள் மனித சமுதாயத்தினுடைய மேம்பாட்டிற்காக, மனித சமுதாயத்தினுடைய அறிவு விடுதலைக்காக, அவர்களுடைய ஆற்றலை அடை யாளப்படுத்துவதற்காக, மேம்படுத்துவதற்காக – அந்த ஆற்றலும், அறிவும் பயன்படவேண்டும்.
அந்த இலக்கணத்தில், அவர்களுடைய ஒவ்வொரு எழுத்தும், ஒவ்வொரு கருத்தும், பல நேரங்களில், மிக முக்கியமானவை. அந்த வகையில் பாராட்டவேண்டியது முக்கியம்.
தமிழின உணர்வை அப்படியே கொட்டி கொட்டி எழுதினார்!
ஈழத் தமிழர்களுடைய போராட்டங்கள் நடந்த நேரத்தில், அவரை அறியாதார் யாரும் கிடையாது. அப்போது, அவருடைய பேனா உதிர்த்தது வெறும் மை அல்ல நண்பர்களே – தமிழின உணர்வை அப்படியே கொட்டி கொட்டி அவர் எழுதினார்.
அந்த நேரத்திலேதான், அவரைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளவும், அந்த உணர்வைப் புரிந்துகொள் ளவும் முடிந்தது.
இதயத்தால் சிந்தித்து, மூளையால் எழுதக்கூடியவர்!
துடித்துப் போனார் – அவருடைய சிந்தனை என்பது – அவர் இதயத்தால் சிந்தித்து, மூளையால் எழுதக் கூடியவர்.
பல நேரங்களில், இதயத்தால் சிந்திப்பவர்கள் மிகக் குறைவு. சிந்திப்பது என்பது மூளையைப் பொறுத்தது என்றால், அது சட்டப்பூர்வமாகத்தான் இருக்கும். ஆனால், இதயத்திலிருந்து சிந்திக்கின்றபொழுது, அது விளக்குகளை முன்னால் வைக்கக் கூடியது. அப்படிப் பட்ட நம்முடைய கவியருவி அவர்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும்.
அருவிகள், அப்துல்காதர்கள் இப்பொழுது அதிகம் தேவை சமூகத்திற்கு!
தமிழ்த் தொண்டுக்கு எல்லை கிடையாது. புரட்சிக் கவிஞர் சொன்னார், தமிழ்த் தொண்டு என்றால், அது அறிவுத் தொண்டாக இருக்கவேண்டும். இன்றைக்கு உங்களுடைய எழுத்துகள் இதுவரையில், சிந்தனை யாளர்களை உருவாக்கி இருக்கிறது. இளைஞர்களை எழுச்சி பெற்றவர்களாக ஆக்கியிருக்கிறது.
ஆனால், தொண்டு என்பது முன்பு இருந்ததைவிட, இப்பொழுதுதான் அதிகம் தேவைப்படுகிறது. எனவே தான், கவியருவிகள், அப்துல்காதர்கள் இப்பொழுது அதிகம் தேவை சமூகத்திற்கு.
ஏனென்றால், இன்றைக்கு நாம் பார்க்கிறோம்; என்னிடத்திலே கையெழுத்து வாங்குவதற்கும் அல்லது ஒளிப்படம் எடுத்துக் கொள்வதற்கும் பல அன்பர்கள், உறவுக்காரர்களைப்போல, கொள்கை உறவுகள், தமி ழுறவுகள் வருகிறார்கள்; பிள்ளைகள் மிகவும் அன்போடு வருகிறார்கள் -அப்படிப்பட்டவர்களிடம் ஒரு கேள்வி கேட்போம்.
உங்கள் பெயர் என்ன? என்ன படிக்கிறீர்கள்? என்று கேட்போம்.
தமிழகத்தின் தமிழ்த் தெருவில்
தமிழ்தான் இல்லை: புரட்சிக்கவிஞர்!
அப்பொழுது அவர்கள் பெயரைச் சொல்லும்பொழுது ‘ஷ்’, ‘புஷ்’ என்று சொல்வார்கள். தமிழ்ப் பெயரே இல்லை.
‘‘ஆணி விற்போன் முதலாக
அணிவிற்போன் ஈறாக
அனைவர் போக்கும்
நாணமற்ற தல்லாமல்
நந்தமிழின் நலங்காக்கும்
செய்கை யாமோ?
உணவுதரு விடுதிதனைக்
“கிளப்’என வேண்டும் போலும்
உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்கு “சில்குஷாப்’
எனும் பலகை தொங்குவதால்
சிறப்புப் போலும்
மணக்க வரும் தென்றலிலே
குளிரா இல்லை? தோப்பில்
நிழலா இல்லை!
தணிப்பரிதாம் துன்பமிது
தமிழகத்தின் தமிழ்த் தெருவில்
தமிழ்தான் இல்லை
தமிழ்நாட்டின் உப்பைத் தின்
றீரன்றோ கணக்காயத்
தந்தை மாரே!” என்றார் புரட்சிக்கவிஞர் அவர்கள்.
குடியேற்றம் கு.மு.அண்ணல் தங்கோ
அப்படிப்பட்ட அந்தத் தமிழ்ப் பெயர் வருவதில்லை. எனவேதான், நாங்கள் நடத்துகின்ற ‘உண்மை’ இதழில், ஒரு காலத்தில், இந்தப் பகுதியிலிருந்துதான் அவர் வந்தவர், ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன் – அவருடைய நூற்றாண்டும் விழாவும் வரவிருக்கிறது. குடியேற்றம் கு.மு.அண்ணல் தங்கோ அவர்கள் கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறார்.
சாரங்கபாணியாக இருந்த நான் – வீரமணியாக மாறினேன்!
அவர், பழைய பெயர்களையெல்லாம் தமிழ்ப் பெயர்களாக மாற்றினார். அவருடைய கருத்தினால்தான், சாரங்கபாணியாக இருந்த நான் – வீரமணியாகக் காட்சியளிக்கக் கூடியவனாக இருக்கிறேன்.
அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்களுக்கு ஏற்பட்ட உணர்வு, அதைப் பெரிதாக்கினார். நம்முடைய வேர்களை மறந்துவிட்டால், நம்முடைய அடையாளத் தைத் துறந்துவிட்டால், அல்லது அலட்சியப்படுத்தி விட்டால், நமக்கு இழப்பு வேறு இருக்க முடியாது.
அந்த உணர்வோடு பார்த்தால், இன்றைக்குத் தமிழ்க் குழந்தைகளின் பெயர்கள் வாயில் நுழையவில்லை.
எனவேதான், 90 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஓர் இயக்கம் இப்பொழுது மீண்டும், தேவைப்படுகிறது. இன்றைக்கு ஏன் நாம் அவர்களைப் பாராட்டுகிறோம் என்றால், செய்த பணிக்காக ஒரு பாராட்டு – செய்ய வேண்டிய பணிக்காக இது அச்சாரப் பாராட்டு.
இனிமேலும் அதை நாம் செய்யவேண்டும். இங்கே அறிஞர் பெருமக்கள், தமிழ்ச் சான்றோர்கள் பல வகையில் இருக்கக்கூடிய அறிவார்ந்த அரங்கமாக இந்த அரங்கம் இருப்பதால், இதுதான் சரியான வாய்ப்பு என்று கருதி, உங்கள் அனுமதியோடு இதைச் சொல்கிறேன்.
தமிழ்ப் பெயர் வைக்கக்கூடிய ஓர் இயக்கத்தை மீண்டும் தொடங்கவேண்டும்!
நம்முடைய மக்கள், குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் வைக்கக்கூடிய ஒரு பெரிய இயக்கத்தை மீண்டும் நாம் கட்சி வேறுபாடில்லாமல், அரசியல் மாறு பாடில்லாமல் தொடங்கவேண்டும்.
இதைச் சொல்வதற்கு வெட்கக்கேடாக இருக்கிறது – தமிழ்நாட்டில், குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வையுங்கள் என்று ஓரியக்கம் நடத்தவேண்டும் என்று சொன்னாலே, நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது வேறா? என்று நினைக்கக்கூடிய அளவில் இருக்கிறது.
வாயில் நுழையாத பெயர்கள்; வடமொழிப் பெயர் கள். நமக்கு மொழி என்பது பிரச்சினையல்ல; நமது உணர்வில், உணர்ச்சியில் பிரச்சினை என்பதுதான் மிகவும் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.
கலைஞர் அரும்பாடுபட்டு, தமிழ் மொழியை செம்மொழியாக்கினார்!
வாழுகின்ற செம்மொழி, நம்முடைய தமிழ்மொழி. கலைஞர் அரும்பாடுபட்டு, தமிழ் மொழியை செம்மொழி என்று அதிகாரப்பூர்வமாக ஆக்கினார்கள். அதுதான், மற்ற வடமொழிக்கேகூட வழிகாட்டியது.
ஒன்றிய அரசினுடைய, அதற்குரிய ஆணை வந்த பிறகுதான், சமஸ்கிருதத்திற்கு செம்மொழித் தகுதி வேண்டும் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் அந்த உணர்வே அவர்களுக்கு வந்தது. அதற்குப் பிறகு வேறு சிலர், எங்கள் மொழிக்கும் செம்மொழித் தகுதி வேண்டும் என்று சொன்னார்கள்.
நீதிமன்றங்களில் தமிழ் இருக்கவேண்டும் என்று நாம் வாதாடுகிறோம்!
ஆனால், நாம் ‘‘எம்மொழி செம்மொழி” என்று சொன்னால் மட்டும் போதுமா?
கோவில்களில் உள்ளே பேசும் மொழியில் என்ன பேசுகிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அதே போன்று நீதிமன்றங்களில் தமிழ் இருக்கவேண்டும் என்று நாம் வாதாடுகிறோம். அப்படி வாதாடுவது என்பது நியாய மானதாகும். ஏனென்றால், கட்சிக்காரருக்கே தெரியாது.
எனவே, எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்பது இன்றைக்கு இருக்கிறதா? என்றால், இல்லை. இங்கும் தமிழ் இருக்கிறதா? என்று கேள்வி கேட்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்.
எனவேதான், இன்றைக்கு நம்முடைய விழா நாயகர் போன்றவர்களுடைய தேவையும், அவருடைய தொண் டறமும் பலமடங்கு முன்பு இருந்ததைவிட தேவைப் படுகிறது.
களப் போராளியாக நிற்பதற்கு என்றைக்கும் அவர் தயாராக இருக்கக் கூடியவர்!
ஏனென்றால், அவர் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல, வெறும் கவிஞர் மட்டுமல்ல, கோபாவேசத்தோடு களப் போராளியாக நிற்பதற்கு என்றைக்கும் அவர் தயாராக இருக்கக் கூடியவர்.
எங்களுக்கு மாறுபட்ட கருத்தும் அவர் எழுதியதில் உண்டு; அதனை நான் மறைக்க விரும்பவில்லை. ஆனால், எது நம்மைப் பிரிக்கிறது என்பது முக்கியமல்ல; தந்தை பெரியார் அவர்கள் இன உணர்வோடு சொன் னார், ‘‘எது நம்மை இணைக்கிறது என்பதுதான் இந்தச் சமூகத்திற்குத் தேவையே தவிர, எது நம்மைப் பிரிக்கிறது என்பது நமக்குத் தேவையில்லை” என்றார்.
பிரிப்பதை அலட்சியப்படுத்துவோம்; இணைப்பதை அகலப்படுத்துவோம் – அதுதான் மிகவும் முக்கியம்.
மீண்டும் புதிய புதிய களங்கள் தேவைப்படுகின்றன!
அந்த வகையில், நாம் அனைவரும் அவரை ஓர் உள்ளத்தோடு பாராட்டுகிறோம். எனவே, அவரைப் பாராட்டுவது என்பது இது பாராட்டு விழா என்பதற்காக அல்ல.
அவர் நீண்ட காலம் தொண்டறச் செம்மலாகவே திகழவேண்டும். அவருடைய ஒவ்வொரு எழுத்தும் அடுத்த கட்டத்தை நோக்கி நம்மை எழுச்சி பெற வைக்கவேண்டும் என்று சொல்லும்பொழுது, மீண்டும் புதிய புதிய களங்கள் தேவைப்படுகின்றன.
அந்தப் புதிய களங்களுக்குத் தளவாடங்கள் உங்களுடைய எழுத்துகள்.
போர்க் கருவி என்பது
காலத்திற்குக் காலம் மாறுபடும்
அந்தப் புதிய பாசறைக்குப் போர்க் கருவிகள் உங்கள் எழுத்துக்கள்.
தமிழ்மொழியைப்பற்றி தந்தை பெரியார் சொல்லு கிறபொழுது, மற்றவர்கள் சொல்வதற்கும், அவருடைய மொழிப் பார்வைக்கும் வேறுபாடு உண்டு.
மொழி என்பது ஒரு போர்க் கருவியாக இருக்க வேண்டும் என்று சொன்னார் தந்தை பெரியார்.
போர்க் கருவி என்பது காலத்திற்குக் காலம் மாறு படும். அறிவியல் ரீதியாக வேறுபடும் – வளர்ச்சி அடையும்.
அதுபோன்றுதான், நம்முடைய மொழியை நாம் ஆக்கிக் கொண்டே போகவேண்டும்.
இன்னும் பழந்தமிழைப் பேசி, அந்தப் பெருமையை சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. இன் றைக்குப் புதிய நிலையில், அந்தத் தமிழுக்கு என் னென்ன இடையூறுகள் இருக்கின்றன; தமிழ் மொழிக் குரியவை எங்கெங்கே உள்ளே போகவேண்டும் என்பதை இந்த அறிவார்ந்த அரங்கம்- ஆற்றல்வாய்ந்த சான்றோர்கள் பல துறைகளில் இருந்து வந்துள்ளவர்கள், நமது பாராட்டுக்குரியவர்கள், ஒவ்வொருவரும் அந்தத் தமிழ் இயக்கத்தை மீண்டும் உருவாக்கவேண்டும்.
தமிழ்கூறும் நல்லுலகம் என்று சொல்லுகிறபொழுது, அதில் பல நேரங்களில் தமிழ் இல்லை.
‘‘தமிழ் எனக்குத் தெரியாதுங்க” என்று சொல்வதை ஒரு பெரிய தகுதி போன்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
‘‘தமிழில் என்னால் பேச முடியவில்லை” என்று சொல்கிறார்கள்.
இளைஞர்களிடம் தமிழில் இருப்பதைக் கொடுத்து இதைப் படியுங்கள், மிகவும் முக்கியமானது என்று சொன்னால், ‘‘ஏங்க, இது ஆங்கிலத்தில் இருக்கா?” என்று கேட்கின்ற நிலையில், கல்லூரி மாணவர்கள் இருக்கிறார்கள்.
வெளிநாட்டுக்காரர்கள் அல்ல – நம்முடைய பிள்ளை களுக்கே அந்த சூழல் இருக்கிறது என்றால், அதைத் தொடர நாம் அனுமதிக்கலாமா?
ஆகவேதான், கவியருவி அவர்களுடைய திறமை யைப் பாராட்டுகிறோம். அவருடைய திறமையைப் பாராட்டுவதற்கு எத்தனையோ செய்திகள் இருக்கின்றன. நான், அவரை எதிர்க்காற்று என்று சொன்னேன்.
அந்த ‘‘எதிர்க்காற்று” என்ற தலைப்பிலேயே ஓர் அற்புதமான நூலைப் படைத்திருக்கிறார்.
அணிந்துரை பெரிய ஆய்வுரையாக அமைந்திருக்கிறது!
அந்நூலைப் படித்ததில், என்னென்ன சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தேனோ, அவை அத்தனையும் அணிந்துரையாக அந்நூலைப்பற்றி அய்யா புலவர் பத்மனாபன் அவர்கள் எழுதியிருக்கிறார். அந்த அணிந்துரை பெரிய ஆய்வுரையாக அமைந் திருக்கிறது.
காவியங்கள், காப்பியங்கள், பெருமைகள், மொழிப் பெருமை இவற்றையெல்லாம்விட, மனித குலத்தினு டைய அடிமைச் சமுதாயத்திற்கு அறிவை ஊட்டி, எழுச்சியை உண்டாக்கக் கூடிய அளவிற்கு இருக்க வேண்டும். சிந்தனையில் ஒரு வீரம், கேள்வி கேட்கக் கூடிய மனப்பான்மை என்பதை மய்யமாகக் கொண்டுதான் இந்தச் சமுதாயம் எழுந்து நிற்கவேண்டும்.
வீழ்வது முக்கியமல்ல;
எழுவது அதைவிட முக்கியம்!
வீழ்வது முக்கியமல்ல; எழுவது அதைவிட முக்கியம். விழுவார்கள், எல்லோரும் விழுவார்கள். ரொம்ப முதுமை என்றால், விழுவார்கள். அதனால்தான், தமிழ் மொழியை இளமை, இளமை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்குமுன் தோன்றியது தமிழ்மொழி என்று சொன்னாலும், இளமை மொழி என்றுதான் தமிழ்மொழியைச் சொல்கிறோம்.
நாம் கீழே விழாமல் இருந்தாலும், பின்னாலிருந்து நம்மைப் பிடித்துத் தள்ளுவதற்கு நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள். அதனால், நாம் முன்னாலும் பார்க்க வேண்டும்; பின்னாலும் பார்க்கவேண்டும்; நாலா பக்கமும் பார்க்கவேண்டி இருக்கிறது.
அதற்கெல்லாம் துணை போல, அவருடைய ஆயுதங்கள், அவருடைய கருத்தாழங்கள், கருத்தாக் கங்கள், படைப்புகள் இருக்கின்றன.
அதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்லுகிறேன்.
எதிர்க்காற்று என்று சொன்னேன் அல்லவா – ஏனென்றால், எப்பொழுதும் வீசக் கூடிய காற்றைவிட, எதிர்க்காற்று என்று வரும்பொழுது அது நம்மால் எதிர்கொள்ள வேண்டிய ஒன்று.
‘‘எதிர்க்காற்று” என்ற தலைப்பே மிக அற்புதமான தலைப்பாகும்.
‘‘ஒரு நாயின் பிரார்த்தனை!’’
கவியருவி, தமிழருவி பேசுகிறார்::
‘‘ஒரு நாயின் பிரார்த்தனை!” என்பது தலைப்பு.
அவர்கள்
வந்தார்கள் மந்தைகளோடு
மேய்ச்சல் நிலம் தேடி.
அவர்கள்
வருகைக்கு முன்
எங்கள் நிலம்
எங்கள் வசம் இருந்தது.
அவர்கள்
வருகைக்குப்பின்
எங்கள் நிலம்,
அவர்கள் வசம்.
நாங்கள்
சொந்த நிலத்தில்
மந்தைகளாக இன்று.
கட்டியவனுக்குக்
கருவறை சொந்தமில்லை வந்து
ஒட்டியவனுக்கே
உறவாட உரிமை
ஆதி திராவிட மாணவி,
அருந்தினாள் தண்ணீரை
ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்துஎன
ஆசிரியன் கோலால் அடிக்க
கண்திறக்க வேண்டியவனாலேயே
கண் குருடானது!
கேடு கெட்ட ஆட்சியில்,
விலைவாசி
விண்ணைத் தொட்டது
சேலம் கட்டிநாயக்கன்பட்டி
மண்ணைத் தொட்டது
தனம் என்ற தாழ்த்தப்பட்ட பிஞ்சுப்
பெண்ணைத் தொட்டது
ஆம்!
ஒரு குவளைத் தண்ணீரின் விலை
ஒரு கண் என்றல்லவா ஆகிவிட்டது.
குவளைக் கண்
குவளைக் கண் என்று
புலவர்கள் சொன்னது
புரிந்துவிட்டது
ஒரு குவளை
ஒரு கண்ணைப் பறித்துவிட்டதே!
தலித் பெண் வீட்டு
ரொட்டித் தின்றதால்
கொல்லப்பட்ட
உயர்ஜாதி வீட்டு நாய்
குரைப்பு மொழியில்
கும்பிட்டுச் சொன்னது:
‘‘இறைவா!
அடுத்த பிறவியில்
அருள்கூர்ந்து
என்னை
மனிதனாகப் படைக்காதே!”
தலித் பெண்
தழலாய்ச் சொல்கிறாள்:
‘‘தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்களே!
நீங்கள் உண்மையிலேயே தீட்டுக்கஞ்சி
தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்களாயிருந்தால்
தயைகூர்ந்து காற்றைச் சுவாசிக்காதீர்கள்!
அதில் எங்கள் மூச்சுக் காற்றும்
முற்றுமாய்க் கலந்திருக்கிறது!”
இதற்கு யார் பதில் சொல்ல முடியும்?
எழுத்தைச் சொடுக்கி, சாட்டையாக்கி, சமுதாயத்தில் சிந்திக்க வைக்கக் கூடியவர்!
இப்படி எழுத்தைச் சொடுக்கி, சாட்டையாக்கி, சமுதாயத்தில் சிந்திக்க வைக்கக் கூடியவர்களை சிந்திக்க வைக்கக் கூடிய காரணத்தினால்தான், எங்கள் விழா நாயகரே, பவள விழா நாயகரே, நீங்கள் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து இந்த சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டும்.
உங்களைப் பாராட்டுவதைவிட, முன்னுரிமையோடு அன்பிற்குரிய சகோதரியார் அவர்களை நாங்கள் அனை வரின் சார்பாகப் பாராட்டுகின்றோம்.
ஏனென்றால், நீங்கள் இவ்வளவு காலம் தொண்டு செய்வதற்கு, அந்த நல்லறம், இல்லறம் பயன்பட்டு இருக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம்.
நீண்ட நாள்களுக்கு முன்பே திராவிடர் கழகம் சொல்லியிருக்கிறது!
நம்முடைய நாட்டிலே, விழாக்கள்கூட, மணிவிழாக் களாக இருந்தாலும், பவள விழாக்களாக இருந்தாலும், ஆண்களை வைத்துதான், பெண்களை பக்கத்தில் அமர வைக்கிறார்கள். இதை மாற்றவேண்டும் என்று நீண்ட நாள்களுக்கு முன்பே திராவிடர் கழகம் சொல்லி யிருக்கிறது.
முகவை ராஜமாணிக்கம் என்பவரை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யில் இருந்தவர். நல்ல சிந்தனையாளர். அவர் ஒருமுறை என்னோடு பேசிக் கொண்டிருந்தபொழுது, அவருக்குப் பவள விழா வரவிருக்கிறது என்று சொன்னார்.
அப்பொழுது நான் கேட்டேன், ‘‘சரிங்க, உங்க வீட்டு அம்மாவிற்கு எப்பொழுது பவள விழா?” என்று.
ஓராண்டு கழித்துதான் வருகிறது என்றார்.
கொஞ்சம் பொறுத்திருங்கள்; அவர்களுக்கு முதலில் விழா எடுத்து, அவங்க பக்கத்தில் உங்களை உட்கார வைக்கலாம் என்றேன்.
வாழ்விணையருக்கு விழா எடுத்து, ஆண்களைப் பக்கத்தில் உட்கார வைக்கவேண்டும்!
இதுவரை ஆண்களுக்கு விழா எடுக்கும்பொழுது, அவர்களது வாழ்விணையரை பக்கத்தில் உட்கார வைக்கிறோமே தவிர, வாழ்விணையருக்கு விழா எடுத்து, அவருக்குப் பக்கத்தில் ஆண்களை உட்கார வைக்கவேண்டும்.
எனவேதான், பாலியல் பேதமில்லாமல், வேறுவகை யான பேதமில்லாமல் – தாய்மை, தாய்மை என்று அந்த அளவிற்குப் பேசுகிறோமே, அந்தத் தாய்மையும், வாய்மையும் கலந்திருக்கவேண்டுமானால் – இனிமேல் விழாக் கொண்டாடுகின்ற அருமைத் தோழர்களே, உங்கள் வாழ்விணையர்கள் இருந்தால், அவர்களை முன்னிலைப்படுத்தி, நீங்கள் பக்கத்திலே அமருங்கள்.
இருவரையும் வாழ்த்தி, அனைவரும் வாழ்த்துகின்ற நேரத்தில், உங்கள் வாழ்த்துகளோடு இணைத்து, அவருடைய தொண்டாற்றல் நிறைய வரவேண்டும் என்று சொல்லி, ஓர் அறிவிப்பை இன்றைக்குச் சொல் கிறேன்.
அவரைப்பற்றி விழாக்குழுவினர் எடுத்த குறிப்பைப் பார்த்தேன்.
வேர்கள் பலமாவதற்காக, விழுதுகளை பலப்படுத்தக் கூடியவர்!
2002 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டுகள் வரை அவர் ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவர் எதையும் விருதுக்காக சொல்லக்கூடியவர் அல்ல. விழுதுகளை பலப்படுத்தக் கூடியவர். வேர்கள் பலமாவதற்காக, விழுதுகளை பலப்படுத்தக் கூடியவர்.
எனவே, அந்த விருதுப் பட்டியலைப் பார்த்தபொழுது, எப்படி ‘‘பெரியார்” விருது கொடுக்காமல் விட்டுப் போய்விட்டது என்று நாங்கள் நினைத்தோம்.
ஜனவரி 17 இல் ‘‘பெரியார் விருது’’ நம்முடைய பவள விழா நாயகருக்கு வழங்கப்படும்!
இந்த ஆண்டு, ஜனவரி 17 ஆம் தேதி, பெரியார் திடலில் நடைபெறும் விழாவில், ‘‘பெரியார் விருது” நம்முடைய பவள விழா நாயகருக்கு வழங்கப்படும்.
அந்த விழாவிற்கு. இருவரும் வரவேண்டும். வாய்ப்பிருக்கின்றவர்கள் அந்த விழாவிற்கு வரவேண்டும். இந்த விழாவிற்கு அது போனஸ் விழா!
தமிழ் இன உணர்வு ஓங்கட்டும்!
வளர்க நம்முடைய இல்லறத் தம்பதிகள்!
தமிழ்த் தொண்டு வளர்க!
தந்தை பெரியார் வாழ்க!
பகுத்தறிவு வளர்க!
தமிழ் இன உணர்வு ஓங்கட்டும்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.