தந்தை பெரியார் அவர்களைப்பற்றி, நம்மைப் போன்ற அவரது உணர்வாளர்கள் அல்லது அவரைப் படிக்கின்ற மாணவர்கள் எடுத்துச் சொல்வதைவிட,, வேற்று முகாமிலே இருக்கக்கூடிய ஒருவர், தொலைதூரத்துப் பார்வையோடு,
ஒரு பொதுநிலையில் இருந்து வலுவான பார்வையோடு அவர்கள்
எப்படி பார்க்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்!
சென்னை, ஜன.6 தந்தை பெரியார் அவர்களைப்பற்றி, நாம் ‘‘அறிந்திராத அறிவு” என்பதைப்பற்றி, நம்மைப் போன்ற அவரது உணர்வாளர்கள் அல்லது அவரைப் படிக்கின்ற மாணவர்களாகிய உங்களைப் போன்றவர்கள் எடுத்துச் சொல்வதைவிட, வேற்று முகாமிலே இருக் கக்கூடிய ஒருவர், தொலைதூரத்துப் பார்வையோடு, அதேநேரத்தில், ஒரு பொதுநிலையில் இருந்து வலுவான பார்வையோடு அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என் பதை எண்ணிப் பார்க்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘பெரியார்: நாம் அறிந்திராத அறிவு’’ –
காணொலி சிறப்புக் கூட்டம்!
‘‘பெரியார்: நாம் அறிந்திராத அறிவு!” தொடர் சொற்பொழிவின் முதல் நாளில் (30.12.2023) நடைபெற்ற காணொலி சிறப்புக் கூட்டத்தில் தொடக்கவுரையை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றியதும், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
எதிர்ப்பையும் தாண்டி பெரியார் வெல்லுகிறார்
அப்படிப்பட்ட தலைவர் தந்தை பெரியார் அவர் களுடைய ‘‘அறிந்திராத அறிவு” – பல காலகட்டத்தில் எவ்வளவு எதிர்ப்பு? ஆனால், எதிர்ப்பையும் தாண்டி அவர் வெல்லுகிறார்.
நாட்டு இடைவெளி எல்லைகளைக் கடந்து, வயது இடைவெளி எல்லைகளைத் தாண்டியது!
வாழ்ந்த காலத்தைவிட, உடலால் அவர்கள் சுற்றுப் பயணம் செய்ததைவிட, கொள்கையால் அவர்கள் தற் போது நிகழ்த்தும் சுற்றுப்பயணம் என்பது இருக்கிறதே, அது இன்னமும் விரிவான சுற்றுப் பயணமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகின்ற சுற்றுப் பயணமாக, நாட்டு இடைவெளி எல்லைகளைக் கடந்து, வயது இடைவெளி எல்லைகளைத் தாண்டியது என்று சொல்லக்கூடிய வகையில், மிக அற்புதமான ஒரு பயணம் என்கிற சிறப்பான வாய்ப்பைப் பெற்றிருக்கின்றது.
ஆகவேதான், இந்தத் தலைப்பைப் பார்க்கின்ற நேரத்தில், அதைச் சுட்டிக்காட்டவேண்டும் என்று நினைத்தேன்.
பெரியார் பற்றாளர்கள் மட்டும்தான் அவரை இப்படி அளந்தார்கள் என்று சொல்ல முடியாது.
எந்தப் பார்ப்பனியத்தை, கடுமையாக அவர் எதிர்த் துப் போராடுகிறாரோ, அந்தப் பார்ப்பன சமுதாயத் தைச் சார்ந்த அவருக்கு – அறிஞர் அண்ணா அவர்கள் பொருத்தமான தலைப்பைக் கொடுத்தார் ‘‘அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா.” என்று. உங்களில் சிலராவது கேள்விப்பட்டு இருப்பீர்கள். பலர் அறிந்திருக்கலாம், அறியாமல் இருந்திருக்கலாம்.
‘‘வ.ரா’ என்கிற வ.ராமசாமி அய்யங்கார்!
‘‘வ.ரா’ என்கிற வ.ராமசாமி அய்யங்கார், 1948 இல் ‘‘தமிழ்நாட்டு பெரியார்கள்” என்று பல கட்டுரைகளின் தொகுப்பாக நூல் ஒன்றை எழுதினார். அதில் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி ஒரு தனிப் பகுதியே எழுதினார்.
‘இயற்கையின் புதல்வர்’ ராமசாமி பெரியார்!
சில தலைவர்களை, அந்தக் காலத்திலேயே அவர் தேர்ந்தெடுத்தார். 1948 இல் என்று சொன்னால், நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும் – ஏறத்தாழ 75 ஆண்டு களுக்கு முன்பு, ‘‘ராமசாமி பெரியார்” என்கிற தலைப்பில் அவர் எழுதியதை, ‘‘‘இயற்கையின் புதல்வர்’ ராமசாமி பெரியார்” என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கின்றோம்.
இப்புத்தகத்தின் முதல் பதிப்பு 1948 ஆம் ஆண்டு தமிழ்ப் பண்ணை வெளியீடாக, தோழர் சின்ன அண்ணா மலை அவர்களால் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு திராவிடர் கழக இயக்க வெளியீடாக 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
அந்தப் புத்தகத்தில் வ.ரா. அவர்களுடைய எழுத்து நடை என்பது ஒரு தனித்தன்மையானது, இலக்கியத்தில். அவர் ஒரு புரட்சிகரமான சிந்தனையாளர்.
பத்தாம்பசலி கருத்துகளில் அவருக்கு உடன்பாடு இல்லை. பழைமையை நியாயப்படுத்தாத ஒரு தனித் தன்மையானவர்.
வேற்று முகாமிலே இருக்கக்கூடிய ஒருவர், தொலைதூரத்துப் பார்வையோடு…
தந்தை பெரியார் அவர்களைப்பற்றி, நாம் ‘‘அறிந்திராத அறிவு” என்பதைப்பற்றி, நம்மைப் போன்ற அவரது உணர்வாளர்கள் அல்லது அவரைப் படிக்கின்ற மாணவர்களாகிய உங்களைப் போன்றவர்கள் எடுத்துச் சொல்வதைவிட, வேற்று முகாமிலே இருக்கக்கூடிய ஒருவர், தொலைதூரத்துப் பார்வையோடு, அதேநேரத் தில், ஒரு பொதுநிலையில் இருந்து வலுவான பார்வை யோடு அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
வ.ரா. பேசுகிறார், எழுதுகிறார்!
வ.ரா. பேசுகிறார், எழுதுகிறார், கேளுங்கள்!
‘‘ஒரு சாரார் கூசாமல் திட்டவும், மற்றொரு சாரார் ‘‘வானுற’ ஏத்தி வாழ்த்தவும் செய்யும்படி யாக, என்ன சூட்சம சக்தி நாயக்கரிடம் இருக் கிறது? அந்த சூட்சமத்தைத் தெரிந்துகொண்டால், நாயக்கரின் விசித்திர வாழ்விற்கு – விபரீத வாழ்வு என்று சொல்லுகிறவர்களுமுண்டு – திறவு கோலைக் கண்டதுபோலாகும்.
இந்த அதிசய மனிதன் எவ்வாறு தோன்றி னார்? ‘காலம்’ என்று கண்ணீர் விடுகிறார் ஒரு கிழவர். ‘காலம்’ என்று களித்துக் கும்மியடித்துக் குதிக்கிறான் ஓர் இளைஞன். கிழவனும், குமரனும் மன ஒற்றுமையுடன் வாழ முடியாது என்கிறார் கவி. சபாஷ்! இயமனுடைய நாள் என்று கூத் தடிக்கும் கிழவனும், குமரனும் எவ்வாறு மனச் சந்திப்புடன் வாழ முடியும்? சந்தித்தால், சண்டை யைத் தவிர வேறு எவ்வித விளைவும் தோன்றாது. நாய்க்கரைப்பற்றிய அன்புக்கும், அவதூறுக்கும் மேற்கூறியதை காரணமாகச் சொல்லலாம்.
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது என் பார்கள். பள்ளிப் படிப்பு ‘‘பங்கா பியூனுக்கு”கூட இப்பொழுது உபயோகப்படுவதில்லை. நாயக்கர் ‘‘டிம்க்கி” அடிக்காமல், பள்ளிக் கூடத்துக்குச் சரிவர பால்யத்தில் போயிருந்தாரானால், அவர் ‘‘பத்தோடு பதினொன்று, அத்தோடு அது வொன்று” என்ற சங்கதியில் முடிந்திருப்பார்.
‘‘நீளமும், அகலமும், ஆழமுமுள்ள பட்டங் களை வரிசைக் கிரமமாக பெயரின் முன்னும், பின்னும் ஒட்டிக்கொண்டும், அச்சடித்து வைத்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பட்டதாரி களை யாருக்குத் தெரியும்? ‘‘நேற்று இருந்தார், சற்றுமுன்கூட இருந்தாரே” என்று வர்ணிக்கப் படும் பெருங்கூட்டத்தைச் சேராத பாக்கியம், இந்த உலகில் சிலருக்குத்தான் உண்டு. குரு போதிக்கும் வித்தை, முழக்கோலால் அளக்கக் கூடிய ‘‘சர்டிபிகேட்” (நற்சாட்சிப் பத்திரம்) உடன் முற்றிற்று. அதற்கு செலவழிந்த பணத்துக்காகக் கடன்காரன், வீட்டு வாயிற்படியில் வந்து நிற்காத வரையில்!
நாயக்கருக்குப் பெயரைக் கொடுத்து, பெயரை ஸ்தாபித்தது, குருவில்லாத வித்தையாகும். தற் போதைய படிப்பு, இயற்கையைப் பழிக்கிற நடிப்பு என்பது என்னுடைய கருத்து. அவ்வப்போது, படிக்காத மேதாவிகளை இயற்கை தோற்றுவித்து, மார்பைக்கூடக் கோணலாகப் பார்த்துக் கொள் ளும் படிப்பாளி பட்டதாரிகளைப் பழிக்கும் காட்சியை, அற்புதம் என்று சொல்லுவதா அல்லது அவசியம் என்று சொல்லுவதா? பள்ளிப் படிப்புக்கும், நாயக்கரின் ‘‘மேதை”க்கும் துளிக்கூட சம்பந்தம் கிடையாது. (ஸ்னானப்ராப்தி என்று வைதிகப் போக்கில் விடலாமா என்று எண் ணினேன். சமூகப் புரட்சிக்காரரான நாயக்கரின் நினைவு வந்ததும், அதை எழுத பேனா ‘‘மக்கர்” செய்துவிட்டது).
நாயக்கரின் தகப்பனார் ஏழையல்ல; ஆனால், முன் யோசனைக்காரர். சம்பாதிக்கத் தெரியாத அல்லது மனமில்லாத பிள்ளைகளிடம் அவருக்கு அவநம்பிக்கை என்று சொல்லவும் வேண்டுமா? எனவே, சொத்தை தர்ம சொத்தாக ஆக்கி விட் டார். ஆனால், ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட் டைத் தாழ்ப்பாள்தான் முடிவு. எனவே, தகப் பனாரின் கோணல் புத்திக்கு, நாயக்கரின் நாட்டுச் சுற்றுப் பிரயாணம் (கையில் காசில்லாமல், அது வும் பால்யத்தில்) ஆணித்தரமான பதிலாகும்.”
– இவ்வாறு ‘வ.ரா.’ அய்யங்கார் அவர்கள் எழுதி யுள்ளார்.
நமக்கு விளக்குவது
எவ்வளவு பெரிய வாய்ப்பு!
இப்படி பல செய்திகள் இருக்கின்றன. இப்படிப் பொதுவானவர்கள் மட்டுமல்ல, எதிர்முகாமில் இருக்கக் கூடியவர்கள், புது கோணத்திலே, நாம் அறிந்திராத அறிவைப்பற்றி அவர்கள் தெரிந்துகொண்டு, நமக்கு விளக்குவது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
அஞ்சாநெஞ்சன் தளபதி
பட்டுக்கோட்டை அழகிரிசாமி!
அதற்கடுத்தது, மிக முக்கியமானது – தந்தை பெரியார் அவர்களுடைய தளபதிகளிலேயே சுயமரியாதை இயக்கத்தை மிகப்பெரிய அளவிற்கு வளர்த்தவர்களிலேயே, தந்தை பெரியார் அவர் களுடைய கொள்கைகளை இறுதிமூச்சு அடங்கு கின்ற வரையில், இம்மியளவு கூட மாறாமல், தன் னுடைய தலைமைக்கு முழுக்க முழுக்க விசுவாசம் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாகவும், கொஞ்சம்கூட அந்தப் பாதையிலிருந்து ஒரு எள்மூக்கு முனையளவுகூட நகராத அளவிற்கு வாழ்ந்த ஒருவர் அஞ்சாநெஞ்சன் தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி ஆவார்.
அவரைப்பற்றி நீங்கள் எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவர்கள் எல்லாம் உழைத்துக் கட்டிய மேடை – நாம் இன்றைக்குப் பேசுகின்ற மேடையாகும்.
அவர் சிந்திய ரத்தம் – அவருடைய வேகம், அவரு டைய விவேகம், அவருடைய பரப்புரைகள் நமக்கெல் லாம் பாடப் புத்தகங்கள்.
‘‘இதோ பெரியாரில் பெரியார்!’’
அப்படிப்பட்ட நிலையில், 1948 இல் திருவண்ணா மலையில் நடந்த ஒரு மாநாடு. அந்த காலகட்டத்தில் அவர் பேசிய உரையினை புத்தகமாக (‘‘இதோ பெரியாரில் பெரியார்”) நாம் வெளியிட்டு இருக்கின்றோம்.
இது தந்தை பெரியார் அவர்களைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டியவர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகமாகும்.
1948 இல் திருவண்ணாமலையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் அய்யாவின் படத்தினை திறந்து வைக்கிறார்.
எத்தனை முறை படித்தாலும்
சலிப்பு ஏற்படுவதில்லை!
அந்த மாநாட்டில் அஞ்சாநெஞ்சன் தளபதி பட்டுக் கோட்டை அழகிரிசாமி அவர்கள் பேசிய பேச்சுதான் ‘‘இதோ பெரியாரில் பெரியார்” புத்தகமாக வெளியிடப் பட்டது. இந்தப் புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும் சலிப்பு ஏற்படுவதில்லை. ஒரு பெரிய மெருகு ஏற்படு கிறது. புரிந்துகொள்வதில் உற்சாகம் தொற்றிக் கொள் கிறது.
தளபதி அழகிரி அவர்கள் ராகம் போட்டு பேசுவார். ஆறரை அடி உயரமுள்ள அவர், அணிந்து கொண் டிருக்கும் ஜிப்பாவிற்குள் கைவிட்டுக்கொண்டு. நல்ல குரல் வளத்தோடு ஓங்கி கர்ஜிப்பார். ‘‘தோழா!” என்று அவர் இழுத்துப் பேசுகின்ற பேச்சைக் கேட்கின்ற வாய்ப்பு நான் சிறுவனாக இருந்தபொழுது கிடைத்த பெரு வாய்ப்பாகும்.
பட்டுக்கோட்டை அழகிரிசாமி பேசுகிறார்!
அப்படிப்பட்ட அஞ்சாநெஞ்சன் தளபதி பட்டுக் கோட்டை அழகிரிசாமி அவர்கள் பேசுகிறார்:
‘‘அன்பர்களே, அன்னாரின் இடையறாத் தொண்டின் சிறப்பை நாம் உணர்ந்திருக்கிறோமா? உணரும் நிலையிலாயினும் இருக்கிறோமா? இல்லை, இல்லை, இல்லை என்றுதான் கூறத் துணிகிறது. என் மனது. ஆம்! அன்னவர் சுமார் 30 வருட காலமாக நம்மை மனிதராக்க எடுத்துக் கொண்டுள்ள முயற்சியை இன்றும் உணர்ந் தோமில்லை. அவ்வளவு மடையர்கள்; மிருக வாழ்வு வாழ்பவர்கள் நாம். இப்படிப்பட்ட மக்கள் வாழும் நாட்டைக் கொடிய நெடுங்கடல்தான் பொங்கி அழித்தாலென்ன? அல்லது ஒரு பெரிய பூகம்பம்தான் ஏற்பட்டு அத்தனை பேரும் அழிந்து போனால் என்ன? அப்படி நாசமடைந் தாலும் ஒரு அறிவுள்ள சமூகமாவது பின்னர் தோன்ற வழி பிறக்குமே. இப்பெரியாரின் உழைப்பை யாரோ மறக்க முடியும்? தம் உழைப் பின் பலனை இவர் காண்பதெப்போது என்று நீங்கள் துடிக்க வேண்டாமா? உங்கள் சக்திகளை யெல்லாம் இப்பெரியாருக்கு நீங்கள் அடிமைப் படுத்த வேண்டாமா? அப்படித்தான் செய்யா விட்டாலும், இவரது உழைப்பின் சிறப்பை உணருமளவுக்கு உன் அறிவு மாற்றானுக்கு அடிமைப்பட்டு இருந்தாலும், அல்லது அறிவு மடமையிருளில் மழுங்கிக் கிடந்தாலும் சற்று ஒதுங்கியாவது இருக்கவேண்டாமா? இவரை ஏசுபவர்கள் எத்தனைபேர்! இவரைப் பழிப்ப வரும், தூற்றுபவரும் எத்தனைப் பேர்? நமக் குள்ளாகவே ‘‘கக்கிரி புக்கிரி” என்று பூசல் விளை விப்பவர்கள் எத்தனை பேர்? இத்தனையையும் சகித்துக் கொண்டு இவர் இன்னும் உயிரோடும் இருக்கிறார் என்றால், அதன் பொருளென்ன? இதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவற்றை எல்லாம் சட்டை செய்யாது வாழ இவ ரென்ன சிங்கமா? கரடியா? அல்லது நகராது கொத்தும் பாம்பா? என்பதுதான் எனக்குப் புரியவில்லை.
உடல் இவ்வளவு தளர்ந்திருந்தாலும், இத் தளர்வு, இவரது பேச்சில் காண முடியவில்லையே! கூட்டம் முடிந்ததும், இன்று கூட்டம் மிக அருமை என்று கூறிவிடுங்களேன்! எவ்வளவு உற்சாகத் தோடு எவ்வளவு பெருமிதத்தோடு சற்றுக் கனைக்கிறார் பாருங்கள்! தோள் தட்டி, தொடை தட்டித் தொண்டாற்ற வாருங்கள் என்றழைக்கும் இளங்குமரனைவிடச் சற்று அதிகமாகவே கர் ஜிக்கிறாரே, இவ்வீர புருஷர். இதற்குக் காரணம் என்ன? இவரது உணர்ச்சி, உணர்ச்சியின் வேகம் இவைதான் காரணம். இவரது உணர்ச்சியின் வேகத்தை கருத்தெழுச்சியின் ஆழத்தை, அவற் றின் அறிவை நம்மால் என்றுமே சரியாக அளக்க முடியவில்லையே. நாம் எவ்வளவுதான் ஆழத் துக்குச் சென்று துளாவினாலும், ஆழமறியாத முத்துக் குளிக்கும் தோழன் ஏதோ ரொம்ப ஆழத்தில் சென்றுவிட்டோம் என்று கருதித் தன் வலையை வீசிக் கிடைத்தவற்றைப் பிடித்து அதை மேலிழுக்க, அதன் பளுவைக் கண்டு ஏதோ நிறைய முத்துச்சிப்பிகள் கொணர்ந்துவிட் டதாகக் கருதி மகிழ, கடைசியில் அவை அத் தனையும் பாம்பும், நண்டுமாக இருக்குமானால், அவன் எப்படி அவதியுறுவானோ – தன் அறியாமைக்கு வருந்தி, அதேபோல் நாமும் பெரியாரின் ஆழத்தை நம்மால் உணர முடிய வில்லையே என்று வருந்தியழுவதோடு, அவரது ஆழ்ந்த கருத்துகளை அப்படியே பின்பற்றவேண் டியது அவசியம் என்ற முடிவுக்குத்தானே வர வேண்டி இருக்கிறது. அவரது கருத்துகள் கடலினுள் முத்துச் சிப்பி போன்றன. நம்முடைய கருத்துகளோ கடலினுள் நண்டு, நத்தை போல் வனவே ஆகும்.”
மேற்கண்டவாறு அஞ்சாநெஞ்சன் தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
(தொடரும்)