சென்னை, ஜன.6 பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரிசி, சர்க் கரை, முழு கரும்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசும் வழங் கப்படும் என்று ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பொங்கல் பரிசு விநியோகத்தை முன்னிட்டு உரிமைத்தொகை பெறும் 1.15 கோடி மகளிருக்கு இம்மாதம் 10 ஆம் தேதியே தொகை விடுவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொங்கல் விழாவை பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பல ஆண்டுகளாக, நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு ரூ.2,500 வழங்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் தொடக் கத்தில் ரொக்கப் பரிசு வழங்கப்படவில்லை. அதற்குப் பதில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மளிகைப் பொருள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந் தாண்டும் அதேபோல் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதற்கிடையில், கடந்த டிச.3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல், அதைத்தொடர்ந்து டிச.17, 18 தேதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகியவற்றை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு அதிக பாதிப்புக்கு ரூ.6,000 மற்றும் சிறிய அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.1,000 நிவாரணம் அறிவித்தது. அந்த தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி, பொங்கல் தொகுப்பில் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்து வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
2.19 கோடி அரிசி அட்டைகள்
அதில், 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ.35.20 விலையில் ஒரு கிலோ அரிசியும், ரூ.40.61 செலவில் ஒரு கிலோ சர்க்கரையும், ரூ.33 செலவில் ஒரு கரும்பும் கொள்முதல் செய்ய, ரூ.238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ஒதுக்கப்பட்டு, நிர்வாக ஒப்புதலும் வழங்கப்பட்டது. ஆனால், அந்த அரசாணையில் ரொக்கத் தொகை குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.
இந்நிலையில், தீவிர ஆலோசனைக்குப்பிறகு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.1,000 ரொக்கம் வழங் கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித் துளளார்.
இதுகுறித்து நேற்று (5.1.2024) தமிழ்நாடு அரசு வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு விழா – பொங்கல் விழாவாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்துக்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத் தும் ஒரு நாளாகவும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த ஜன.2 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறி வித்திருந்தது.
இலவச வேட்டி, சேலை
முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத் தால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப் பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக் கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாட, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத் துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர் கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை
ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த மாதம் பொங்கலுக்கு முன்னதாக, அதாவது, வரும் ஜன.10 ஆம் தேதியே உரிமைத் தொகை பெற்றுவரும் 1.15 கோடி மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடரும் கட்டுப்பாடுகள்
தமிழ்நாடு அரசு சார்பில் கடந்தாண்டு வரை 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகளால், பொங்கல் பரிசு பெறுவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என தெரிகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், கார் வைத் திருப்போர் என பல்வேறு வகைகளில் பயனாளிகள் வடிகட்டப்பட்டனர். இதையடுத்து, வெள்ள நிவாரணம் வழங்கப்படும் போதும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது பொங்கல் பரிசுத் தொகைக்கும், தரவு அடிப்படையிலான நிர்வாகம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குரூப் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் போனஸ்!
தமிழ்நாடு அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் மேனாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (5.1.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங் களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் விழாவை முன்னிட்டு, போனஸ் மற்றும் பொங்கல் பரிசு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த பணி யாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்புக்கு போனஸ் (மிகை ஊதியம்) வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் 2022-2023 ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாள்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து சில்லறை செலவினத்தின்கீழ் மாத அடிப் படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.1,000 சிறப்பு போனஸ் வழங்கப்படும்.
ரூ.167.68 கோடி செலவு
இதுதவிர, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதி யர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், மேனாள் கிராம பணியமைப்பு (மேனாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு ரூ.167.68 கோடி செலவு ஏற்படும்.
இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.