மனிதன் விண்ணுக்கு செல்கிறான் – ககன்யான் சோதனை விண்கலம் விண்ணில் பாய்கிறது

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, அக் 19. விண்ணில் 400 கிலோ மீட்டர் சுற்றுவட்டப் பாதைக்கு மனிதக் குழுவினரை அனுப்பி, அவர்களைப் பத்திரமாக பூமிக்குக் திருப்பி அழைத்து வரும் ககன்யான் திட்டத்தை வருகிற 2025-ஆம் ஆண்டு செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டு உள்ளது. 

இந்த பணியின் மூலம், மனித விண்வெளிப் பயணத் திறனை வெளிப்படுத்த இஸ்ரோ திட்டமிட் டுள்ளது. இதற்கான சோதனை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி சோதனை செய்ய இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. அதன்படி முதல் சோதனை ராக்கெட் வருகிற அக்.21-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து டிவி-டி1 ராக்கெட் மூலம், ‘குரூ மாட்யூலுடன் கூடிய குரூ எஸ்கேப் சிஸ்டம்’ என்று அழைக்கப்படும் விண் வெளி வீரர்கள் ஆபத்தான நேரங்களில் தப்பிக்கும் வசதியுடன் கூடிய அமரும் பகுதியை விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.

இந்த சோதனைக்கு டிவி-டி1 என்ற ஒரே ஒரு உந்து சக்தி (பூஸ்டர்) கொண்ட திரவ எரிபொருள் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படு கிறது. இது பூமியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் உயரம் வரை விண்ணுக்கு செல்லும் சக்தி படைத்தது. இதில் சோதனைகளுக்காக சிஎம்.பேரிங் மற் றும் இன்டர்பேஸ் அடாப்டர்களுடன் குரு மாட்யூல் மற்றும் குரு எஸ்கேப் சிஸ்டம்களுடன் அவற்றின் வேகமாக செயல்படும் திட மோட்டார்களும் பொருத்தப்பட்டு உள்ளன. ‘குரூ மாட்யூலுடன் கூடிய குரூ எஸ்கேப் சிஸ்டம்’ என்று அழைக்கப்படும்’ விண்வெளி வீரர்கள் ஆபத்தான நேரங்களில் தப்பிக்கும் வசதியுடன் கூடிய அமரும் பகுதி’ ராக்கெட்டின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும். பூமியில் இருந்து ராக்கெட் புறப்பட்டு சுமார் 17 கிலோ மீட்டர் உயரத்தில் சென்ற உடன் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்து விடுகிறது. இதனை பாராசூட்டுகள் சுமந்து வந்து, சிறீஹரிகோட்டாவில் இருந்து 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் வங்கக் கடலில் பத்திரமாக தரை இறக்கி சோதனை பார்க்கப்படுகிறது.

 இந்த முதல் கட்ட சோதனையில் வீரர்கள் அமரும் பகுதி பத்திரமாக திட்டமிட்ட இலக்கு வரை சென்று மீண்டும் சேதமடையாமல் கடலில் பத்திரமாக தரை இறங்குகிறதா? என்று சோதித்து பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் விழுந்த உடன் இதனை இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் இதனை மீட்டு மீண்டும் இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். ராக்கெட் ஏவப்படுவதை சிறீஅரி கோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் உள்ள பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து பொதுமக்களும், மாணவர் களும் பார்வையிட அனுமதிக்கப் படுகிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் https://lvg.shar.gov.in  என்ற இணையதள முகவரியில் பெயர் உள்ளிட்ட விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *