கும்பகோணம், அக். 20 – கபிஸ்தலம் மணி மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா- மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா எழுச்சியோடு நடை பெற்றது.
திருவையாறில் இருந்து கபிஸ்தலம் வழியாக கும்ப கோணம் செல்லும் சாலையில் அமைந்திருப்பது மணி மெட்ரிகுலேஷன் பள்ளி. இந்தப் பள்ளியில் கபிஸ்தலம் பெரியார் கல்வி சமூகப் பணி அறக்கட்டளை, பாபநாசம் திராவிடர் சமுதாய நலக்கல்வி அறக்கட்டளை, பாபநாசம் இமயம் கல்வி சமூகப் பணி அறக்கட்டளை, தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் ஆகியோர் இணைந்து தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 4.10.2023 அன்று தஞ்சாவூர் மாவட்ட பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆர்வத்தோடு வந்த மாணவர்கள்
14.10.2023 அன்று காலை 9 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 29 பள்ளிகள், 10 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் 362 பேர் போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமுடன் மணி மெட்ரிகுலேசன் பள்ளிக்கு வருகைபுரிந்தனர். பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் அனைத்து மாணவர்களையும் வரவேற்று அவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிக்கான விண்ணப்ப படிவங்களை கொடுத்து நிரப்பச் செய்தனர். படிவம் பூர்த்தி செய்து கொடுத்த மாணவர்கள் போட்டி தேர்வு நடைபெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தனித்தனி அறைகளில் சென்று அமர்ந்தனர்.
தமிழ் புலமையும் திராவிட சிந்தனையும், தந்தை பெரியார் மீது பற்றுதலும் கொண்ட பெருமக்கள் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என 15 க்கும் மேற்பட்ட பெருமக்கள் நடுவர் பணியினை மேற்கொண்டு போட்டிகளை ஒழுங்குபடுத்தி நடத்தினர்.
காலை 10 மணி அளவில் போட்டியில் பங்கு கொண்ட மாணவர்கள், போட்டி நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்கள், நடுவர்கள், மாணவர்களு டைய பெற்றோர் என அனைவருக்கும் தேநீர் வழங்கப் பட்டு போட்டிகள் தொடங்கப்பட்டன.
ஆரியத்தை விரட்ட உறுதி!
ஒவ்வொரு அறையிலும் தந்தை பெரியார் வரலாறு, அவர் நடத்திய போராட்டங்கள், அவரின் சிந்தனையால் சமூகம் அடைந்த பயன்கள், பெரியாருக்கு முன் இருந்த சமூக அவலங்கள், அதை பெரியார் எவ்வாறெல்லாம் துடைத்தெறிந்தார் என பல்வேறு கருத்துக்களை ஆறாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் தொடங்கி கல்லூரி மாண வர்கள் வரை அனைவரும் அனல் பறக்கும் பேச்சால் ஆரியத்தை விரட்ட உறுதியேற்போம் என்று உணர்த்தும் வகையில் மிகச் சிறந்த கருத்துக்களை வெளிப்படுத்தி உரையாற்றினர். கட்டுரை போட்டியிலும் காவிய படைப்புகளாக தந்தை பெரியாரின் கொள்கைகளை குறைவு ஏதும் இன்றி மிகச் சிறப்பாக எழுதி மாணவர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவிற்கு கட்டுரைகளை தீட்டி இருந்தனர்.
காலை 10 மணி தொடங்கி மதியம் 2 மணி வரை மணி மெட்ரிகுலேசன் பள்ளியில் திரும்பும் திசையெங் கும் பெரியார், பெரியார், பெரியார் என்று கருத்துக்களை பேசிய மாணவர்களும், கருத்துக்களை கேட்டவர்களும் களைப்பாற மதியம் 2 மணி அளவில் அறுசுவை உணவு வழங்கப்படது.
மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் ஆசிரி யர் கோபு.பழனிவேல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் நூலைப் படி சங்கத்தமிழ் நூலை படி என்ற பாடலை பாடி மாணவர்கள் எழுச்சிபெறும் வகையில் ஊக்கப் படுத்தி பாராட்டுரை நிகழ்த்த மாலை 4 மணியளவில் பரிசளிப்பு விழா இனிதே தொடங்கியது. மணி மெட்ரி குலேஷன் பள்ளியின் தாளாளர் சு.களியமூர்த்தி அனை வரையும் வரவேற்று உரையாற்றினார், பெரியார் கல்வி சமூகப் பணி அறக்கட்டளை தலைமை அறங்காவலர் க.கலியமூர்த்தி தலைமையேற்று உரையாற்றினார். குடந்தை கழக மாவட்ட செயலாளர் சு.துரைராசு, குடந்தை கழக மாவட்ட துணை தலைவர் வ.அழகுவேல், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ.மோகன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், குடந்தை கழக மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம் மதி, தஞ்சை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலை வர் ஆசிரியர் ச.அழகிரி ஆகியோர் பாராட்டுரையாற் றினர்.
பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் அவர்கள் மாணவர்களும், பெற்றோர்களும் இந்த பெரியார் சிந்தனைகளை ஏற்பதால் என்னென்ன மாற்றங்கள் நிகழும், நாம் இன்றைக்கு மிகவும் வசதி வாய்ப்பாக வாழ்கிறோம் என்றால் அதற்கு தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் பல்வேறு வகையில் உதவி புரிந்திருக்கின்றன என்று பல்வேறு தகவல்களை எடுத்துக்கூறி அனைவரையும் உற்சாகப்படுத்தி போட்டி யில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தி சிறப்புரையாற்றினார். திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளை நிர்வாகச் செயலாளர் ஏ.கைலாசம் நன்றியுரையாற்றினார்.
பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளை நடுவர்களாக இருந்து மிக நேர்த்தியாக நடத்திய வலங் கைமான் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரை யாளர் பொறியாளர் கா.சிவக்குமார், பூண்டி புஷ்பம் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் செ.தேன்மொழி, இணை பேராசிரியர் முனைவர் ஆ.முத்தமிழ், திரு வோணம் ஒன்றிய ப.க. அமைப்பாளர் ஆசிரியர் சி நாகநாதன், பேராசிரியர் ம.சேதுராமன், தஞ்சை ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா.வீரக்குமார், பட்டதாரி ஆசிரியர் நா.அசோக், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் அரங்க. வைரமுடி, சு.திருஞான சம்பந்தம், குடந்தை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.இராசேந்திரன், கலை எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர் இரா.மதியழகன், மாவட்ட வன அலுவலர் (ஓய்வு) முனைவர் மா.செல்வம், திருவையாறு அரசர் கல்லூரி பேராசிரியர் முனைவர் செ.மகேஸ்வரி, தமிழ் பல்கலைகழக ஆய்வு மாணவர் தி.இளஞ்செழியன், தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி நூலகர் முனைவர் வே.இராஜவேல், பெரியார் மணியம்மை பல்கலை கழகம் சசந்துரு, ஆசிரியர் ச.லோகநாதன், சி.ஷி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் து.தமிழ்மணி, கிரஸெண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி தமிழாசிரியர் ஜெ.கலையரசி, அல்அமீன் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் கி.லெனின், மாவட்ட துணை செயலாளர் ஆ.தமிழ்மணி, ஒக்கநாடு மேலையூர் இடைநிலை ஆசிரியர் எஸ்.கோவிந்தராசு, ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி போராசிரியர் முனைவர் ஆர்.அகிலா, தலைமை ஆசிரியர் (ஓய்வு) தங்க.வெற்றிவேந்தன், லயன் சங்க செயலாளர் குணசேகரன், பாபநாசம் நகர செயலாளர் வெ.இளங்கோவன், மாவட்ட தொழிற்சங்க பொறுப்பாளர் கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட மகளிர் அணி தலைவர் திரிபுரசுந்தரி, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் கோ. பெரியார்கண்ணன், கா.ஜனார்த்தனன், திருவிடை மருதூர் சங்கர், வலங்கைமான் பவானி சங்கர், நெடுந்தரு இனியன், ஜெயராமன் மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், அனைத்து பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு பயனாடை அணிவித்து புத்தகம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட 362 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் புத்தகம் வழங்கப்பட்து.