ஜனவரி
ஜன. 3: தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வரும் ‘சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல் படுத்தக் கோரி விளக்கச் சிறப்புக் கூட்டம்’ சென்னை பெரியார் திடலில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் கி.வீரமணி, வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோர் உரையாற்றினர்.
ஜன. 16: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடை பெற்ற விழாவில் சமூக நீதிக்காகப் பாடுபடுகிறவர்களைச் சிறப்பிக்க வழங்கப்படும் தமிழ்நாடு அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார். ரூ.5 லட்சம் காசோலையும் அளிக்கப்பட்டது.
ஜன. 17: சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 29 ஆம் ஆண்டு விழா – திராவிடர் திருநாள் பொங்கல் விழா சிறப்புடன் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளின் வெற்றியாளர் களுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். பல்துறை வித்தகர்களுக்கு பெரியார் விருதுகள் வழங்கப் பட்டன.
பிப்ரவரி
பிப். 3: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களின் 54 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஈரோட்டில் தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கு அமைச்சர்கள் பங்கேற்க மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிப். 11: திராவிடர் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றம் – உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி, பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் நீதிபதிகள் நியமனங் களை ஒன்றிய அரசு செய்து வருவதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடை பெற்றது. பல்வேறு கட்சியினரும் பங்கேற்றனர்.
மார்ச்
மார்ச் 1: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தம் 70 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முதலமைச் சருக்குப் பொன்னாடை அணிவித்து, புத்தகங்கள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
மார்ச் 10: அன்னை மணியம்மையாரின் 104 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – பெரியார் திடலில் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், தந்தை பெரியார் அன்னை மணியம் மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங் களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி கழகத் தோழர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
மார்ச் 16: அன்னை மணியம்மையார் 45 ஆம் நினைவு நாளினையொட்டி சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் சிலை பீடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
மார்ச் 23: நாத்திகன் மாவீரன் பகத்சிங் நினைவு நாளினையொட்டி சென்னை பெரியார் திடலில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொரு ளாளர் வீ. குமரேசன் மற்றும் தோழர்கள் புடைசூழ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஏப்ரல்
ஏப். 8: டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்ததைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சை தலைமை அஞ்சலகம் எதிரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்த நிலையில், ஒன்றிய அரசு திட்டத்தைக் கைவிட்டதாக 8.4.2023 அன்றே அறிவித்தது. தமிழ்நாட்டின் உரி மையை நிலைநாட்டியதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவித்தும், இனி மாநில அரசின் ஒத்திசைவு இன்றி தன்னிச்சையாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது என்பதை வலி யுறுத்தும் வகையிலும் திட்டமிட்டபடி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஏப். 14: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தஞ்சாவூரில் கழகத் தோழர்கள் புடை சூழ அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஏப். 27: வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயரின் 172 ஆம் பிறந்த நாளில் சென்னை மாநகராட்சி மன்றம் (ரிப்பன் பில்டிங்) முகப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
மே
மே 11: சென்னை பெரியார் திடலில் அன்னை நாகம்மையாரின் 90ஆம் ஆண்டு நினைவு நாளினை யொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் அம்மையாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மே 13: ஈரோடு மல்லிகை அரங்கத்தில் கோவை சிற்றரசு நினைவு மேடையில் கழகப் பொதுக்குழுக் கூட்டம் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நூற்றாண்டு விழா தீர்மானத்தை தமிழர் தலைவர் முன் மொழிந்தார்.
ஜூன்
ஜூன் 1: ‘விடுதலை’ 89 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை யில் ‘விடுதலை களஞ்சியம்’ முதல் தொகுதி வெளியீட்டு விழா – ‘விடுதலை’ 89ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
ஜூன் 8: சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்யக் கோரியும், டில்லியில் போராடி வரும் வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஜூன் 27: திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90 வயதில் 80 ஆண்டு காலப் பொதுவாழ்வை எடுத்துக் காட்டுகின்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி திரா விடர் கழகத்தின் சார்பில் சென்னை தியாகராயர் நகர் தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.
ஜூலை
ஜூலை 14: வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாய்ப்பு பறிபோவதால் – ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞர ணியினர் தமிழ்நாடெங்கும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜூலை 23: மலேசிய திராவிடர் கழகத்தின் 77 ஆவது பொதுக்குழுக் கூட்டம் கோலாலம்பூரில் மலேசிய திராவிடர் கழகத்தின் தலைவர் ‘டத்தோ’ ச.த. அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பொன்வாசகம், துணைத் தலைவர் பாரதி, துணைச் செயலாளர் நாகேந்திரன் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.
ஆகஸ்ட்
ஆக. 7: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து முழக்கம் எழுப்பி மரியாதை செலுத்தினார்.
ஆக. 12: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோருக்கு இழைக்கப்படும் சமூக அநீதிக்கு எதிராக ஒன்றிய அரசைக் கண்டித்து பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆக. 15: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலக கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் தமிழ் நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங் காற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களுக்கு “தகைசால் தமிழர்” விருது டன் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார்.
ஆக. 28: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக கிருட்டினகிரியில் பெரியார் மய்யம், தந்தை பெரியார் சிலை திறப்பு, அண்ணல் அம்பேத்கர் நூலகம் திறப்பு நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடந்தேறின. பெரியர் மய்யத்தை ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார்.
செப்டம்பர்
செப். 5: சிதம்பரம்நடராசர் கோவிலை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரக் கோரி சிதம்பரத்தில் நடந்த மக்கள் திரள் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், அனைத்துக் கட்சித் தலைவர்கள் உரை – தமிழர் தலைவர் சிறப்புரையாற்றினார்.
செப். 6: தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம்அருகே கழக சார்பில் நடந்த “விஸ்வகர்மா யோஜனா” கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கண்டன உரையாற்றினார்.
செப். 8: சென்னை – சர். பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்ற நடிகமணி டி.வி.நாராயணசாமி நூற்றாண்டு விழாவிற்குத் தலைமை வகித்து தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்றினார். பல்துறை அறிஞர்களும் கலந்து கொண்டனர்.
செப். 17: தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாளில் தமிழர் தலைவர் தலைமையில் பெரியார் நினைவிடத்தில் கழகத் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைக்கப்பட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது. பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் கருத்தரங்கம், நாடகம், பட்டிமன்றம் இன எழுச்சிப் பறை முழக்கம் எனப்பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழர் தலைவர் பிறந்த நாள் பேருரை ஆற்றினார்.
செப். 29: சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் “சுயமரியாதைச் சுட ரொளி” சிவகங்கை வழக்குரைஞர் இரா.சண்முக நாதன் நூற்றாண்டு விழாவையொட்டி, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழாவிற்குத் தலைமை வகித்து, இரா.சண்முகநாதன் படத்தினைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
அக்டோபர்
அக். 1: சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிட இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி. ஆசைத் தம்பி அவர்களின் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரையாற்றினார்.
அக். 6: தஞ்சாவூரில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. அமைச் சர்கள், பல்துறை அறிஞர்கள் பங்கேற்பு.
அக். 9: மருத்துவக் கல்வியில் – கல்லூரிகளில் ஒன் றிய அரசின் அறிவிப்புகளைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கழகத் தலை வர் ஆசிரியர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக். 14: சென்னை பெரியார் திடலில், நடிகவேள் இராதா மன்றத்தில் தளபதி அர்ச்சுனன் படத்தினைத் திறந்து வைத்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அனைத்துக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் விழாவில் கருத்துரை வழங்கினர்.
அக். 16: சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நூற்றாண்டு விழாப் பேருரையுடன் சேரன் மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா எழுச்சியுடன் நடைபெற்றது. விழாவில் தி.மு.க. அறச் செம்மல் பத்தமடை ந.பரமசிவம் பாராட்டப்பட்டார்.
அக். 20: திருச்சி – புத்தூர் நால்ரோடில், கழகத் தலைவர் ஆசிரியருக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு பிரச்சார ஊர்தியின் திறவு கோலை வழங்கினார்.
அக். 25: குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வ கர்மா போஜனா என்ற ஒன்றிய அரசின் சதித்திட்டத்தை எதிர்த்து, தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் மேற்கொண்ட முதற்கட்டப் பரப்புரைப் பயணம் நாகப்பட்டினத்தில் தொடங்கியது.
நவம்பர்
நவ. 5: குலத்தொழிலைத் திணிக்கும் “விஸ்வகர்மா யோஜனாவா”, “மனுதர்ம யோஜனாவா” பெரும் பயண நிறைவுக் கூட்டம் மதுரை மாநகர் ஒபுளா படித்துறையில் தமிழர் தலைவர் சிறப்புரையோடு எழுச்சியுடன் நடை பெற்றது.
நவ. 6: சிதம்பரத்தில், கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்த “ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரையாற்றினார்.
நவ. 19: புதுச்சேரியில், பகுத்தறிவாளர் கழக அமைப்புகளின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் தகைசால் தமிழர் ஆசிரியர் அவர்கள் கருத்துரையாற்றினார்.
நவ. 20: சென்னை பெரியார் திடலில் நீதிக்கட்சியின் 107ஆம் ஆண்டு விழாவில் கவிஞர் கலி.பூங்குன்றன், டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் அ.கருணா னந்தன், சே.மெ.மதிவதனி ஆகியோர் உரையாற்றினர். விழாவிற்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் நிறைவுரை.
நவ. 23: திருவாரூர் – மத்தியப் பல்கலைக்கழக நுழைவுவாயிலில் நடைபெற்ற “மத்திய பல்கலைக் கழகமா? சங்பரிவாரின் கூடாரமா?” எனக் கேள்வி எழுப்பி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை, பெரியார் திடலில், அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில கழக மகளிரணி மேனாள் செயலாளர் க.பார்வதி அம்மையார் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் இரங்கலுரையாற்றினார்.
நவ. 27: சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் மேனாள் பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சிலை யைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நன்றி தெரிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்.
டிசம்பர்
டிச. 2: தமிழர் தலைவரின் பிறந்த நாள் உலகெங்கும் கழகக் குடும்பத்தவர்களால் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் உள்ள தமிழர் தலைவரின் இல்லத்திற்குச் சென்று அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தார். அமைச்சர்களும், கழகப் பொறுப்பாளர்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்தினர்.
டிச. 6: தமிழர் தலைவரின் வழிகாட்டுதல்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கற்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் திராவிடர் கழகம் – பெரியார் தொண்டறம் அணி சார்பில் மேற் கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் தொடங்கின. ஏராளமான பேருக்கு உணவும், பொருள்களும் வழங்கப்பட்டன. இயல்பு நிலை திரும்பும் வரை இப்பணிகள் தொடர்ந்தன.
டிச. 11: சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் சிறப்பாக நடைபெற்றன. கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழர் தலைவரின் பிறந்த நாள் மலர் வெளியிடப் பட்டது. விடுதலை சந்தா தமிழர் தலைவரிடம் வழங்கப் பட்டது.
டிச. 18: “தந்தை பெரியாரின் இறுதி முழக்கமும் – நமது உறுதி முழக்கமும்” சிறப்புக் கூட்டம், சென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்றினார்.
டிச. 19: தமிழர் தலைவரின் வழிகாட்டுதல்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிடர் கழகம் – பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள் உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கி, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இயல்பு நிலை திரும்பும் வரை இப்பணிகள் தொடர்ந் தன.
டிச. 24: தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி சென்னையில் நடந்தது. தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் கருத்தரங்கம் – மாலை சென்னை கோட்டூர்புரத்தில் தமிழர் தலைவர் நிறைவுரையாற்றிய நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றன.
டிச. 29:சென்னை பெரியார் திடலில், “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழாவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முன்னிலையில் நூல்களை இரு மாநில முதலமைச்சர்களும் வெளியிட்டனர். அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
டிச. 30: தமிழர் தலைவர் விடுத்த வேண்டு கோளின் படி 19.12.2023 அன்று தொடங்கி நடத்தப்பட்ட தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் – உறுதி யேற்புப் பொதுக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டன (30.12.2023).