கடந்த 30.12.2023 அன்று அயோத்தியில் பல கோடி ரூபாய் செலவில் விமான நிலையத்தைத் திறந்தார் பிரதமர் மோடி. ஏற்கெனவே அயோத்தி என்று இருந்த ரயில் நிலையத்திற்கு அயோத்தி தாம் என்று பெயர் சூட்டி அங்கிருந்து நாடு முழுவதும் செல்லும் பல வந்தே பாரத் ரயில் களுக்கு காணொளியில் பச்சைக்கொடி காட்டு கிறார். அதன் பிறகு அயோத்தியில் 12 கிலோ மீட்டர் ‘ரோடு ஷோ’ செல்கிறார்.
அன்று மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு மட்டுமே ரூ 200 கோடிக்கு மேல் செலவானதாக உள்ளூர் பாஜகவினர் பெருமையோடு கூறு கின்றனர்.
அதே அயோத்தியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கான்பூரில் வீடற்ற முதிய வர்கள் சுடுகாட்டில் எரியும் பிணங்களுக்கு நடுவே தூங்குகின்றனர். காரணம் கேட்டால் ‘‘இங்கே கதகதப்பாக உள்ளது, பெரிய சுடுகாடு என்பதால் ஒரு நாளைக்கு 10 பிணம் எரியும். ஆகையால் வெப்பம் எப்போதும் கிடைக்கும்” என்கிறார்கள்.
வீடு இல்லையா என்று கேட்டால், ‘‘தகரத்தாலும், கற்களாலும் எழுப்பப்பட்ட தங்குமிடத்தில் நாய் பூனை கூட வராது; வயதான நாங்கள் எப்படி தூங்கமுடியும்” என்று கேட்கின்றனர்.
உலகத் தலைவர்கள் வரிசையில் மோடிதான் முதல் மனிதர் என்று மாதம் ஒருமுறையாவது ஊடகங்கள் ‘உதார்’ விடுகின்றன. அந்த மோடியின் கட்சி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் ஜனங்களும், பிணங்களும் கலந்து உறங்குகின்றனர்.
– மின்சாரம் –