சென்னை, டிச.30- கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு, ஊர்வலம் மற்றும் உடல் அடக்கத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
கலங்கிய மு.க.ஸ்டாலின்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்டு தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலங்கிப் போனார். மனவேதனை அடைந்தார். எனவே, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழாவை ரத்து செய்தார். சென்னை பெரியார் திடலில் 10 நிமிடத்தில் எளிமையாக இந்த விழா நடந்து முடிந்தது.
சென்னை சாலிகிராமம் இல்லத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருந்தபோது முதல் அரசியல் கட்சித் தலைவராக நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கண்ணீர்விட்டு கதறி அழுத பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினார்.
விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உருக்கமான அறிக்கையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், தமிழ் உணர்வும், தாராள மனமும் கொண்ட உன்னத மனிதர், கேப்டன் என தமிழ் மக்களால் அழைக்கப் படுகின்ற என்னுடைய அன்பு நண்பர் விஜயகாந் தின் மறைவு தமிழ்நாட்டுக்கும், திரையுலகிற்கும் பேரிழப்பு ஆகும் என்று தெரிவித்தார். மேலும் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
நெகிழ்ச்சி
விஜயகாந்த் உடலை தே.மு.தி.க. தலைமை அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்வதற்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மாநகராட்சி ஆணையர் மூலம் உரிய அனுமதி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
விஜயகாந்த் உடல் இறுதி நிகழ்விலும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு இறுதி மரியாதையை செலுத்தினார்.
விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டது முதல் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த ஏற்பாடுகள் தே.மு.தி.க.வினரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
விஜயகாந்த் மாற்றுக் கட்சியை சேர்ந்த தலைவர் என்ற எண்ணம் இல்லாமல் அவருடைய இறுதிப்பயணத்தில் குறைபாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அக்கறை பொதுமக்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டப்படுகிறது.