பிறரை மட்டம் தட்டிப் பேசுவதில் வல்லவர் “சோ”. படத்தில் ‘திருதிரு’ என்று முழிப்பது போல மேடையிலும் ஒருமுறை முழிக்க நேர்ந்துள்ளது.
‘துக்ளக்’ வாசகர்கள் அவரை அகில உலக மேதை எனப் பாராட்டுவதோடு அவர் சொல்வதே வேதவாக்கு என்றும் எண்ணுவார்கள். ஆனால் அவரது பேச்சை அவரே மறந்து போன ஒரு செய்தி உண்டு.
மியூசிக் அகாடமி ஹாலில் ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தின் நூறாவது நாள் விழா நடைபெற்றது. அப்போது முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அவர்களை தலைமைதாங்க அழைத்திருந்தார். கலைஞர் நாடகத்தைப் பார்த்துவிட்டு, “சோ என்னைத் தன் முதல் நாடகத்திற்கு கூப்பிடவில்லை. ஏனென்றால் முதல் நாடகத்திற்கு என்னை அழைத்தால் எங்கே நான் குறைகளை எடுத்துக்கூறி, அவற்றைத் தான் திருத்தி அமைக்க வேண்டி வருமோ என்னும் பயம் அவருக்கு’ என்று பொருள் படும்படி பேசினார்.
‘ஆம். முதல் நாடகத்தில் நடிகர்கள் ஏதாவது வசனங்களை மறந்து போகலாம். நூறாவது நாடகத்தில் அப்படி அல்ல பேசிப்பேசி மறக்க மாட்டார்கள். கலைஞர் ஒன்றைக்கூட விடாமல் அதைக் கேட்டு ரசிக்கட்டுமே என்று தான் 99 நாடகங்கள் நடந்த பிறகு இந்த நூறாவது நாடகத்திற்கு அழைத்தேன்’ என்றார் சோ.
முடிவுரையில் கலைஞர் பேசும்போது, “சோ இந்த நாடகத்தை நகைச்சுவைக்காக எழுதியிருக்கிறார். நீங்கள் யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார். உடனே சோ எழுந்து, கலைஞர் அவர்கள் அப்போது பேச்சுச் சுவைக்காக, இப்படிச் சொன்னாரே தவிர, அதை உண்மையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார். மேலும் இந்த நாடகத்தில் ஓர் இடத்தில் “ஒரு பெண் நாட்டை ஆளமுடியாது” என்று வசனம் வருகிறது.
இதை கலைஞர் தன் பேச்சின்போது கடுமையாக ஆட்சேபித்தார். உடனே சோ எழுந்து,” இது என் அபிப்ராயம். எவ்வளவுமுறை வேண்டுமானாலும் சொல்லுவேன்” என்றார். சாமர்த்தியமாகப் பேசியதாக நினைத்துக் கொண்டிருந்த சோ ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டும் கலைஞருக்கு பதிலளிக்க முடியவில்லை. கலைஞர் சொன்னார், “இந்த நாடகத்தில் அமைச்சர்களுக்கு விழாக்களுக்குத் தலைமை தாங்கவே நேரம் சரியாக இருக்கிறது என்று பொருள்படும்படியாகச் சில காட்சிகள் வந்தன. நாங்கள் என்ன செய்வோம்…. மக்கள் அழைக்கிறார்கள், நாங்கள் வருகிறோம். இந்த நாடக விழாவிற்குக்கூட. “சோ” அழைத்துதான் நான் வந்தேன். “அது என் தவறா?” என்றார் கலைஞர். இதற்கு எப்படிப் பதில் அளிப்பது என்று தெரியாமல் கலைஞரிடம் சிரித்துக்கொண்டு திரு திரு என விழித்தார் சோ.