விடுதலைக்குப் பிறகான காலகட்டத்தில் வானொலித்துறை பார்ப்பனர்கள் கைகளில் கிடைத்து விட்டது என்பதற்காக அவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களுக்கும் அடித்த கொட்டங்களுக்கும் அளவேயில்லை. நாட்டிலுள்ள 35 பெரிய வானொலி நிலையங்களிலும் 12 சிறிய துணை நிலையங்களிலும் பெரும்பாலானவை அவர்கள் கையுள் ஒடுங்கிக் கிடக்கின்றன.
ஒவ்வொரு நாள் காலையிலும் அருள் வாக்கு என்னும் பெயரால் அவர்களின் வேத, புராணப் பொய்யுரை புளுகுரைகளே பெரிதும் பரப்பப்படுகின்றன. இல்லை திணிக்கப் பெறுகின்றன என்றே சொல்லலாம். பிற சமயச் சமன்பாடு என்னும் போர்வையில் ஓரிருக் கால் இசுலாமிய, கிறித்தவ மதக் கருத்துகள் சொல்லப் பெறுகின்றன. எனினும் அவற்றை யெல்லாம் எடுத்து விழுங்கும் அளவுக்கு இவர்களின் வேத புராணக் கருத்துகள் வலிந்து ஒலிபரப்பப் பெறுகின்றன. அதுவுமின்றி இடையிடையே ஒலிபரப்பும் நிகழ்ச்சி களும் கருத்தளவிலோ மொழியளவிலோ தமிழ் இனத்திற்கு எதிர்ப்பாகவே இருக்கின்றன. அவற்றில் வரும் கதைகள், பாட்டுகள், நாடகங்கள், உரையாடல்கள் அனைத்தும் பார்ப்பனர் வீட்டுப் பழக்க வழக்கங்களை அடியொட்டியும், அவர் வழங்கும் சிதைவுச் சொற்களையும், இழுப்புச் சொற்களையும் கொண்டுமே விளங்குகின்றன.
வானொலிப் பாடல்களைக்கேட்கவே முடியவில்லை..தமிழில் இசையும் இல்லை, நல்ல கருத்துள்ள பாடல்களுமில்லை என்று மக்கள் தாமே உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே புராணத் திரைப்படப் பாடல்களை தொடர்ந்து ஒலிபரப்பினர் தமிழ்மொழியை, இசை, உரை, நாடகம் அனைத்துத் துறையிலும் இழிவுபடுத்த வேண்டுமென்பது இவர்கள் கருத்து. கருநாடக இசை என்பதாகக் கூறித் தெலுங்குத் தியாகராயர் பாடல்களே திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்படுகின்றன. இவை இரண்டையும் மாறி மாறி ஒலிபரப்புவதில் அவர்களுக்கு ஓர் உள்நோக்கம் இருப்பதாகவும் கூறலாம். தமிழ் மொழிப் பாடல்களைப் பகடி செய்வது போலும், தமிழ்ப் பாடல்கள் என்றால் இப்படித் தான் கீழ்த்தரமாக இருக்கும் என்று காட்டுவது போலும், மிகவும் இழிவான பொருள் தரும் இழுப்பிசைப் பாடல்களையே பொறுக்கி ஒலிபரப்புவது, அவர்களின் சமயக் கருத்துகள் நிறைந்த தெலுங்கிசைப் பாடல்களில் ஓர் உயர்ச்சியைக் காட்டுவதற்காகவே ஆகும். இல்லை யெனில், இக்காலத் திரைப்படப் பாடல் களிலேயே ஓரளவு உயர்ந்த பொருள் கொண்டபாடல்களும் இருக்க அவற்றை விட்டு விட்டு, இழிந்த இசையும் பொருளும் கொண்ட பாடல்களையே பொறுக்கிப் போடுவார்களா? நம்மவற்றின் இழிவையும் அவர்களின் சிறப்பையுமே விளம்பரப் படுத்துவது அவர்களின் பல்வேறு தந்திர முறைகளுள் ஒன்றாகும். அவர்களுக்கு எது பிடித்ததோ, சார்பானதோ அதைப் பனிமலை என்பார்கள்.
அவர்களுக்கு எதைப் பிடிக்காதோ, எது சார்பு இல்லாததோ, அதைக் குப்பைமேடு என்பார்கள். அவர்கள் கதைகளும் அவ்வாறான நோக்கில் வரைந்தவைதாம். இராமனை மாந்தருள் மிகவுயர்ந்தவனாகக் கற்பிப்பார்கள். இராவணனை (அவன் ஆரியர்களுக்கு மாறானவன் என்பதால்) மிகவும் தாழ்ந்தவனாகக் கற்பித்து உரைப்பார்கள். வானொலிப் பாடல்கள் தேர்விலும் அதில் வரும் கதை, நாடகங்கள், பாட்டுகள் இவற்றைக் கொண்டும் இவர்களுக்குத் தமிழ்மொழியின் மேல் உள்ள வெறுப்பையும் சமசுக்கிருதத்திலும் இவர்களின் இதிகாசங்களில் கொண்ட வெறியையும் நன்கு தெரிந்துகொள்ளலாம் வேத, புராண, ஒலிபரப்புதல் செய்ததைத் தன்மானத் தமிழர்கள் நன்கு உணர்ந்திருக்கலாம்.
சென்னை, திருச்சி, புதுவை ஆகிய மூன்று வானொலி நிலையங்களிலும், டில்லியில் உள்ள ‘விவித பாரதி’யிலும் பெரும்பாலும் ஆரியப் பார்ப்பனர்களே கொட்டமடித்து வருகின்றனர். அவற்றில் உள்ளபார்ப்பனத்திகள் பேசுகின்ற திண்ணைப் பேச்சுகளைத் தன்மானமுள்ள எந்தத் தமிழனாலும் காதுகொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. மொழிப் பற்றும், இனப் பற்றும் அற்ற தமிழின முண்டங்கள் சிலரின் தலையாட்டுதல்களே தமிழர்களின் ஒருமித்த கருத்துகளாகிவிட முடியாது.
புதுவை வானொலி நிலையத்தில் காலை நேரத்தில் ‘கிள்ளைகளே கேளுங்கள்’ என்னும் பகுதியில் அங்குள்ள பார்ப்பனத்தி ஒருத்தி ஒருநாள் கீழ்வருமாறு பள்ளி செல்லும் பிள்ளைக்கு அறிவு(!)றுத்தினாள்.
என்ன குழந்தைகளே! காலையில் ஸ்நானம் பண்ணி டிரஸ், செய்துகொண்டு ஸ்கூலுக்குப் புறப்பட்டுட்டீங்களா? உங்கள் புக்ஸ், நோட்புக்ஸ், பென்சில், பேனாக்களை யெல்லாம் டயம் டேபிள் பிரகாரம் கரெக்டா எடுத்து வச்சீட்டிங்களா? டிபன் சாப்பிடறதுக்குள்ளே நான் சொல்றதையுங் கேளுங்க’ என்று தொடங்கி ‘அவாள்’ பார்ப்பனச் சேரி மொழியிலே இரண்டு மூன்று நிமிடங்களிலே நஞ்சையே கொட்டினாள். இப் பார்ப்பனப் பெண் ஏதோ ஆங்கிலேயக் குழந்தைகட்குச் சொல்வது போல் தோன்றியதே தவிர, தமிழ்நாட்டில் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்குச் சொன்னதாகத் தெரியவில்லை. குளித்தலை ஸ்நானம் என்றதையும், உடையுடுத்தலை டிரஸ் செய்தல் என்றதையும், புத்தகங்களையும், சுவடிகளையும் புக்ஸ், நோட்புக்ஸ் என்றதையும் பிற சொற்களையும் கேட்கும்பொழுது இவள் தமிழைக் கெடுப்பதற்காக வேண்டுமென்றே சொன்னதாகத் தெரிகின்றதே தவிர, அங்குள்ள ஆங்கிலச் சொற்களுக்குரிய தமிழ்ச் சொற்கள் அவளுக்குத் தெரியாமல் அப்படிச் சொல்லிவிட்டாள் என்று நினைக்கத் தோன்றவில்லை.
இன்னொரு முறை அதே வானொலியில் அந்தப் பார்ப்பனத்தியே ‘மார்கழி’ மாதம் அதிகாலையில் எழுந்து குளித்துப் பாவைப் பாடல்களைப் பாராயணம் பண்ணினா, புயல் அடிக்காது; கடல் பொங்காது; பசுக்களெல்லாம் குடங் குடமாகப் பால் பொழியும்; பயிர் களெல்லாம் வானத்தளவு வளர்ந்து பயன் தரும்” என்று கூறுவதைக் கேட்க நேர்ந்தது.
அதற்குச் சில நாட்கள் முன்னர்தான் தமிழ்நாடு கடுமையான புயலாலும், மழையாலும் மிகவும் துன்புற்றது. அந்த நேரத்தை எவ்வாறு தம் பழங் கருத்துகளுக்குப் பக்கத் துணையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் பார்ப்பனர் என்பதைப் பாருங்கள். இராமாயண, பாரதக் காலத்தில் உள்ள மக்களாக தம்மைக் கருதிக் கொண்டு அவள்புளுகினதைக் கேட்கையில் ஒருபுறம் எரிச்சலும், ஒருபுறம் வருத்தமும்வந்தன. இவ்வளவு உயர்ந்த கருவி இவர்களின் கைகளில் கிடைத்துக் கொண்டு, எவையெவற்றிற்கோ பயன்பட்டுச் சீரழிகின்றதே என்பதில் எரிச்சலும், நிலவு மண்டிலக் காலத்திலும் நம்மவர்களை இந்த ஆரியப் பார்ப்பனர்கள் இப்படி ஏமாற்றுவார்களானால் நம் முன்னோர்களை எப்படி ஏமாற்றி யிருப்பார்கள் என்பதில் வருத்தமுமே எஞ்சின.
மேலும் வானொலியில் நடக்கும் அழிம்புகளைச் சொல்வதானால் ஏடே கொள்ளாது. அதில் கொள்ளை போகும் பணம் தமிழ்மொழியை அழிக்கவும், தமிழர்களை ஒடுக்கவுமே செலவிடப்பெறும் தமிழர் பணமாகும். அப்பணத்தைப் பார்ப்பனர்கள் பங்குபோட்டுக் கொள்ளும் வகைகளைச் சொல்லி முடியாது. எவ்வளவு சிறந்த மொழிப் புலவரானாலும் இசைப் புலவரானாலும் தன்மானமுள்ள தமிழர்களானால் அவ் வானொலி நிலையங்களின் முற்றங்களிலும் ஒதுங்க முடியாது. தமிழ்நாட்டின் தனிப்பெரும் புலவர்களாகிய மறைமலையடிகள், பாவாணர் ஆகியோரின் குரல்களை இவ் வானொலி நிலையங்கள் ஒருமுறைகூடப் பயன்படுத்திக் கொண்டதே இல்லை.
ஆரியப் பார்ப்பனரின் தமிழ் அடிவருடிகளே வானொலி நிலைய நிகழ்ச்சிகளுக்கு அங்காந்து கிடந்து இடம் பிடிக்கின்றனர். பார்ப்பனரின் யானை வாய்களுக்குத் தப்பி விழும் எச்சில்களே இவ்வெறும்புகளுக்கு நல்லுணவாகப் பயன்படுகின்றன. அப்பெருமையில் இவர்கள் தலை கால் புரியாமல் நடந்துகொள்ளுகின்ற வகைகள், இவ் வேதுங்கெட்ட தமிழர்களுக்கும், அவர்களின் கைகளில் உள்ள உலகின் உயர்ந்த மொழியாகிய தமிழுக்கும் மறைமுகமாக கேடுகளாகவே விளங்குகின்றன. இவ்வானொலிப் புலவர்கள் வடமொழிப் பெயர்களாகக் காட்டுகின்ற இசைப்பெயர்கள் முழுவதும் திரிக்கப் பெற்ற தூய தமிழிசைப் பெயர்களே என்பதைத் தமிழிசை வல்லோர் நன்கு உணர்வர். இசைப்பேரரசு, பண்ணாராய்ச்சிப் பாவாணர், குடந்தை சுந்தரரேசனார் இவ்வகையில் செய்து வருகின்ற ஆய்வுரைக்கு எந்தப் பார்ப்பானும் செவிமடுத்ததாகத் தெரியவில்லை. அவர்களுக்கு முந்தைய விபுலானந்த அடிகளின் அரும்பெரும் ஆய்வுரைகளும் புறக்கணிக்கப் பெறுகின்றன.
இற்றை கருநாடக இசை முழுவதும் தூய தென்தமிழ் இசையேயாகும் எனத் தம் துண்மாண் நுழைபுல வன்மையால், உரக்கப் பேசி மெய்ப்பித்துவருகின்றார் என்னும் கரணியத்தாலேயே, இசைப் பேரறிஞர் குடந்தை சுந்தரேசனார்க்கு வானொலியிலும், பிற இசை நிகழ்ச்சி களிலும் இப்பார்ப்பனர்கள் இடம் தருவதே இல்லை. இதையறிந்து ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு புழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை. நாம் தமிழுக்கோ தமிழினத்திற்கோ ஆக்கம் உண்டாகும்படி பட்டிமன்றமோ, மாநாடோ ஊரே வியக்குமளவிற்கு நடத்தி வானொலித் துறைக்குச் செய்தியறிவித்துக் கொண்டாலும்கூட, அவர்கள் வந்து அதைப் பதிவதும் இல்லை; வானொலியில் ஒலிபரப்புவதும் இல்லை.ஆனால் அவர்கள் இன ஆக்கத்திற்கும் பெருமைக்கும் உகந்தவாறு, இராமாயணச் சொற்பொழிவோ, பாரதக் கதைப் பட்டி மன்றமோ, போன்று ‘அவாள்’ இன நிகழ்ச்சிகள் எது நடந்தாலும் ஒரு நிகழ்ச்சியைக்கூட விடுவதில்லை. எங்கேனும் ஒரு சிறிய இடிந்த கோவில் புதுப்பிக்கப் பெற்றுக் குடமுழுக்குச் செய்யப் பெற்றால்கூட அத்தனை நிகழ்ச்சிகளையும் ஏதோ ஓர் ஊசைப் பார்ப்பானையோ, பார்ப்பனத்தியையோ விட்டு நேர்முக வர்ணனை செய்து வானொலியில் போட்டுவிடுவார்கள்.
ஒருமுறைக்கு இருமுறைகூட அத்தகைய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப் பெறுவதை ஊன்றிக் கவனிப்பார் அறிந்திருக்கலாம். அவர்கள் வீட்டுச் சமையல் திறங்கள் கூட, அம்மாமிகளால் அன்றாடம் வானொலியில் திக்கித் திக்கிச் சொல்லப்பெற்று அமர்க்களத்தப்படுகின்றது என் றால், பிறவற்றிற்குக் கேட்கவே வேண்டிய தில்லை. ‘கிரிக்கெட்’ என்னும் மட்டைப் பந்து விளையாட்டின் நேர்முக வர்ணனையை வானொலியில் போடுவதுங்கூட அவாள் இனத்துக்கான ஒரு பொழுது போக்கிற்காகவே ஆகும். அக்காலங்களில் சிறிய வானொலிப் பெட்டியும் கையுமாக அலையும் அவாள் இனச் சில்லுண்டிகளும் இப்பி இளைஞர்களும் இளம் பெண்டிரும் தெருவுக்குத்தெரு, அலுவலகத்திற்கு அலுவலகம் அடிக்கும் கொட்டங்களுக்கு அளவே இல்லை.
நம் இளைஞர்கள் அதில் அவ்வளவு ஈடுபாடு காட்டுவதே இல்லை. சிற்சில இடங்களில் அவர்களுடைய பகடிப் பேச்சுக்கு ஆளாகக் கூடாதே என்பதற்காக அவர்களுடன் சேர்ந்து தலையாட்டும் இளைஞர்களைக் கூட அரிதாகத்தான் பார்க்கவியலும். அண்மையில் தஞ்சையில் உ.த.க. நடத்திய தமிழன் பிறந்தகக் கருத்தரங்குச் செய்தியை வானொலிக்கும் தமிழின செய்தித்தாளுக்கும் அறிவித்திருந்தும் அதைப்பற்றி ஒரு செய்தியும் போடாத வானொலியும் பார்ப்பன இதழ்களும் திருவனந்தபுரத்தில் அய்ந்து நாட்கள் நடத்திய இராமாயண ஆராய்ச்சி மாநாட்டைப் பற்றியசெய்திகளை மிகுந்த அளவில் விளம்பரப்படுத்தின.
மொத்தத்தில் சொன்னால் வானொலி நிலையங்கள் பார்ப்பான் வீட்டுச் சமையலறைகள்! அவாள் இனம் சேர்ந்து அரட்டையடிக்கும் தெருத் திண்ணைகள்! அவர்கள் ஒருங்குகூடிப் பொழுதுபோக்கும் திருவல்லிக்கேணிக் கடற்கரைப் பகுதிகள் என்று சொல்லலாம்.பொதுவாக வானொலித் துறையிலும் சரி, கலை, இசை, நாடகத் துறையிலும் சரி ஒன்று பார்ப்பானாக இருத்தல் வேண்டும்; அன்றால் அவனடி தழுவிய தமிழக் கேடர்களாகவோ, அவன் வேத, புராண, இதிகாசக் கருத்துகளைப் பரப்பும் வகையில் பாடுபடுபவனாகவோ இருத்தல் வேண்டும்.
அப்பொழுதுதான் அவன் முன்னுக்கு வரமுடியும்; அப்பொழுதுதான் அவனை அவர்களுடைய தாளிகைகள் புகழும்; வானொலிகள் இடந்தரும்; நாடக மேடைகள், திரை மேடைகள் அவனுக்கு வழிவிடும். இல்லையெனில் அங்கங்கே அவனுக்குத் தாழிடப்படும். திரைப்பாட்டாசிரியர் கண்ணதாசன், தி.மு.க.வினின்று விலகி அவர்களைத் தழுவிக்கொண்ட பின்னரும், ஏ.பி.நாக ராசன் அவர்களின் புராணக் கருத்துக் கதைகளையே தொடர்ந்து படமெடுத்த பின்னரும், நாடக நடிகர் மனோகர் அவர்களைச் சார்ந்து அரங்கேற்றின பிறகும், திருவாட்டி இசைப்பேரரசி எம்.எசு.சுப்புலட்சுமி அவர்கள் இன மாகவே மாறிய பிறகுந்தான் அவர்களைப் பார்ப்பனர்கள் வானளாவப் புகழத் தொடங்கினர்.
ம.கோ.இராமச்சந்திரனை இராசாசி வாழ்த்திய பின்னரே பார்ப்பனர் இதழ்கள் அவருக்கு விளம்பரங்கள் கொடுத்தன. அவர்களின் இனத்தில் ஒரு சிறுவனோ சிறுமியோ கலையுலகத்தில் கால் வைத்தாலும் சரி, அவர்களைப் பற்றி அவர்களின் இதழ்கள் எழுதுகின்ற பாராட்டுரைகளும், புகழ்ச்சி மாலைகளும், நம் இனத்தவரின் மிகச் சிறந்த கலைஞர் ஒருவருக்குக் கூடக் கிடைப்பதில்லை. இவ்வாறு கலைத்துறையும் வானொ லித் துறையும் பார்ப்பனரின் அனைத் ததிகார வல்லாண்மையின் கீழ், நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யப்படும் சூழ்ச்சிக்கிடையில் சிக்குண்டு ஆட்பட்டிருப்பதைப் பார்க்கும் போது தமிழர்கள் இனி எதிர்காலக் கலையுலகத்தில் இடம் பெறுவார்களா?, இடம் பெற்றால் முன்னுக்கு வரு வார்களா என்று எண்ணவே அச்சமாக விருக்கின்றது.
நூல் வெளியீடுகளிலும் பார்ப்பனர்கள் நுழைந்து குழப்பாமல் இல்லை. செய்தித் தாள் துறையில் இவர்கள் எப்படி உள்ளே புகுந்து குட்டையைக் குழப்புகின்றனரோ, அப்படியே நூல் வெளியீட்டுத் துறையிலும் மிக மும்முரமாக ஈடுபட்டுத் தம் பழைய வேத, புராண, இதிகாசங்களுக்கே மிகுந்த விளம்பரங்களைச் செய்து வருகின்றனர். பொதுவாகவே இவர்கள் எழுதுகின்ற தமிழ்நடையோ கருத்துகளை வெளிப்படுத்தும் முறையோ தனி – அந்நடையைக் கொண்டே கருத்துகளை வெளிப்படுத்தும் முறையைக் கொண்டே இவர்களின் உட்கிடையை உணர்ந்துகொள்ளலாம். ‘காவிரித் தண்ணீர்’ என்று இவர்கள் எழுதுவதே இல்லை.
‘காவிரி ஜலம்’ என்றுதான் தினமணி எழுதும். அண்மையில் தினமணியில் பொங்கல் திருவிழா மகர சங்கராந்தி என்றே குறிக்கப் பெற்றது, இராசாசி நினைவாலயத்துக்கு இவர்கள் தரும் விளம்பரம், காந்தியாருக்குக் கூடத் தந்ததில்லை. ‘தமிழகத்தில் இராசாசி காலடிபட்ட இடங்களையெல்லாம் புண்ணிய தலமாகக் கருதவேண்டும்’ என்று ‘சுதந்திர’க் கட்சி சா.கணேசன் வெளிப்படுத்திய கருத்தை இவர்கள் மிகப் பெருமையுடன் வெளியிட்டுக் கொண்டனர். (சா. கணேசன் மூளையில் இவ்வளவுஅடிமைத்தனம் புகுந்திருக்கக் கூடாது) துக்ளக்கில் ‘சோ’ இவர்கள் இனத் தலைவர் இராசாசியைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.
“இராசாசியைப் பாராட்டுவதற்கோ அல்லது அவரிடம் குற்றம் காண் பதற்கோ அவருக்கு நிகரானவர்கள் யாரும் இந்நாட்டில் இல்லாமல் போய் விட்டார்கள்…. மனம், சிந்தனை, வாக்கு, செயல் எல்லாவற்றிலும் பரிபூரணத் துய்மையுடன் விளங்கிய ஒரு அசாதாரணமான மனிதரை மிகச் சாதாரணமாக மதித்துவிட்ட மடத்தனத்தின் விளைவுகளிலிருந்து இந்த நாடு என்று விடுபடுமோ தெரியாது. இராசாசி தெய்வ நம்பிக்கை மிகுந்தவர். அந்த ஒரு கரணியத்திற்காகவாவது அவர் வாழ்ந்த இந்த ‘பூமி’யை இறைவன் காப்பாற்றட்டும்”.எப்படி? துக்ளக் ‘சோ’வின் தூக்கி வைத்துப் பேசும் தன்மை, ‘அவாள்’ இனத்துத் தலைவர் என்றால் உலகத்துக்கே தெய்வம்; அவர்களைவிட மேம்பட்டவன் ஒருவனும் இருக்க முடியாது; அல்லது இருக்கவும் கூடாது என்பது பார்ப்பனர்களின் ஒருமித்த கருத்து.இராசாசிக்கென்றே சில தனித்தன்மைகள் உண்டு.
அவை அவருக்குத் தான் சொந்தம். அவர் தன்மைகள் பிறர்க்கு எப்படி வரும்? பெரியார் இராமசாமியின் தனித்தன்மைகள் எப்படி துக்ளக் இராமசாமிக்கு வரமுடியாதோ, அப்படியே இராசாசியின் தன்மைகள் ஒரு கந்தசாமிக்குவரமுடியாது. மற்றபடி இராசாசி என்ன உலகத்துக்கே, அல்லது இந்தியாவுக்கே தெய்வமா? அவரைப் போல் நாட்டிற்கு உழைத்தவர்கள் இல்லையா? பார்ப்பன இனத்தலைவர் ஒருவர் இறந்துபோனால், அவர் வாழ்ந்ததற்காக இறைவன் இந்தப் பூமியைக் காப்பாற்றட்டும் என்றால் அவர் இருந்தபோது ஏன் இதைக் காப்பாற்றவில்லை? ‘துக்ளக்’ சோ ஏன் இறைவனிடம் அப்பொழுது பரிந்துரை செய்யவில்லை. இறைவன் என்றால் அவன் பார்ப்பன இனத்துக்கு மட்டுந்தானா சொந்தம்? அவர்களுடைய பாட்டனா அவன்? இவற்றிலிருந்தெல்லாம் என்ன தெரிய வருகிறது என்றால் அவர்கள் எழுதும் எழுத்தெல்லாம் அச்சாகி வருவதற்கான வாய்ப்புகளை அவர்கள் வலிய ஏற்படுத்திக்கொண்டு, மக்களை எந்த அளவில் என்றென்றும் மடயர்களாகவே, தங்கள் நல்வாழ்வுக்குத் துணை போகின்றவர்களாகவே மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை நம் மக்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும் என்பதுதான்.
சொல்வதைச் சொன்னால் கேட் பாருக்குக் கொஞ்சமேனும் மதி இருக்கத்தான் செய்யும். அவர்கள் சொல்லுவதைக் கொஞ்சம் கவனித்தால் போதும்; எந்த நோக்கத்தில் அவர்கள் சொல்லுகின்றார்கள். எந்த நோக்கத்திற்காகச் சொல்கின்றார்கள் என்பனவெல்லாம் விளங்கிக்கொள்ள முடியும்.