சபரிமலை சென்ற இடத்தில் ஆற்றில் மூழ்கி சென்னை பக்தர்கள் 2 பேர் பலி!
பத்தனம்திட்டா, டிச.29- சபரி மலைக்கு சென்ற இடத்தில் ஆற்றில் மூழ்கி, சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 2 பேர் பலியானார்கள்.
சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 40 பேர் கடந்த சில நாள்களுக்கு முன் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்றனர். 27.12.2023 அன்று தரிசனம் முடித்து விட்டு, கேரள மாநிலம் செங்கனூர் ரெயில் நிலையம் அருகே உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். பின்னர் ஒரு குழுவினர் சென்னைக்கு ரெயிலில் திரும்பினர். மற்றொரு பிரிவினர் இரவு 7 மணிக்கு சென்னை திரும்ப திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் அறையில் தங்கியிருந்த அய்யப்ப பக்தர் கள் 2 பேர் அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றனர். ஆற்றில் குளித்தபோது, இருவரும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கரையில் இருந்தவர்களை நோக்கி சத்தமிட்டுள்ளனர். இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர் களை மீட்கும் முயற்சியில் ஈடு பட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியை அடையவே, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அவர்களை தேடும் பணியை முடுக்கி விட்டனர். இதற்கிடையே ஆற்றில் மூழ்கிய 2 பேரும், 27.12.2023 அன்று இரவு 8 மணியளவில் பிணமாக மீட்கப்பட் டனர்.