கவிஞர் கருணானந்தம்
ஊற்றுக்கண் அடைபட்டு விட்டது. இனி அறிவு ஊற்றுச் சுரந்து புதிதாக நீர்பெருக வழியில்லை. ஏற்கெனவே சுரந்து பெருகிய நீர்தான் அருவியாய் இழிந்து ஓடைகளில் ததும்பி வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. வற்றாத செல்வம் வறண்டது; வறுமை திரண்டது; வெறுமை நிறைந்தது!
புத்தி மார்க்கம் கண்டதால் புத்தரெனப் பெயர் பெற்றார் சித்தார்த்தர். மக்களிடையே புகுந்து மடமை ஒழிக்கப் பாடுபட்டார். அவர் கொள்கை இன்று உல கெலாம் பரந்து கிடக்கின்றது; ஓரளவு மாறுதல்களுக் குள்ளான போதிலும்! பகுத்தறிவு மார்க்கங்கண்ட இராமசாமி, மக்க ளிடையே புகுந்து அவர்களுக்காக அயராது பாடுபட்டதால் தந்தை பெரியார் ஆனார். இன்று அவர் கொள்கைகள் உலகத்தால் வியப்புடன் ஆராயப்படுகின்றன. மனிதாபிமான அடிப்படையில் அமைந்த அவர் கொள்கைகள்தாம் இன்று தமிழ் நாட்டை ஆள்வதோடு எதிர்கால உலகை ஆளவும் போகின்றன. அவரில்லாத நேரத்தில் அந்தப் பெரு மகனாரின் சிறப்புகளை நினைவு கூர்வதுதான் பொருத்த முடையதாகும்.
பெருந்தன்மைக் குணம், பரந்த உள்ளம்,இரக்க மிகு. பண்பு, இளகிய மெல்லிதயம் இவை பலாச்சுளை போல் உள்ளிருக்க; முள் நிறைந்த பலாத்தோல் போல் புறத்தே காணப்பெறும் மேடைத் தோற்றத்தின் முரட்டுத்தன்மை, மூடமதியைச் சாடும் வேகம். அநீதி எனில் பொங்கி எழும் சீற்றம், அச்சந் தயைதாட்சண் யத்திற்கடங்காத ஆண்மைத் திண்மை இவற்றை மட்டுமே பார்த்து அணுகிட அஞ்சி நெருங்காதோரே அநேகர், பெரியாரிடம்!
திருச்சியிலுள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத் துறையும் மழலைகளைப் போலவே, இந்தத் தமிழ்நாட்டுக் கோடானு கோடி பின்னடைந்த மக் களையும் தவிக்கவிட்டுப் போன ஏந்தலின் எண் ணிலா அருளாட்சித் திறன்களை எண்ணுதல் இன்பந் தருவதாகும்; அன்போடியைந்த நன்றிக் கடனாற்று தலுமாகும்!
யாருக்காவது பெரியார் பொருளுதவி செய்தால்- (பலருக்குச் செய்துள்ளார் வெளியில் தெரியாமல், தனது டைரியில் குறித்துக் கொண்டு) – அதைச் சொல்லிக் காட்டி வெளிப் படுத்தவே மாட்டார். ஆனால்,பண விஷயத்தில் யாராவது நாணயக் குறைவாக நடந்தால், அவர்களை மன்னிக்கவே மாட்டார். தவறு செய்தவர் நேர்மையாக தாமே ஒத்துக் கொண்டால், அத்தோடு மறந்து விடுவார். நாணயங் காக்கும் பெரியார்!
தாம் செய்து வருவது நன்றி கிட்டாத பணி – Thankless job – என்பது நன்கு தெரிந்திருந்தும்,சமுதாய நலனுக்காக அதையே தொடர்ந்து செய்து வந்தார். அதனால், நிச்சயம் தம்மிடம் நன்றியோடு நடந்து கொள்ளக் கடமைப்பட்டோர் கூட மறந்து விட்டால், அதைப் பொருட்படுத்தும் பழக்கமே இல்லாது போயிற்று, பெரியாரிடம்! அதே நேரத்தில் தமக்கு யாரும் உதவி செய்தால் அல்லது செய்வதாகச் சொல்லி விட்டால் கூடப்போதும்- அவருக்குத் தாம் மிகவும் கடன்பட்டதாக எண்ணிக் கொள்வார். உதாரண மாகக், காரில் செல்லும் போது, பாதை தெரியாமல் வழிப்போக்கரிடம் கேட்டு, அவர் சொன்னால், அவ ருக்குத் தாமே நன்றி – (Thanks) சொல்லிய பின்புதான் ஓட்டுநர் காரை எடுக்க அனுமதிப்பார் பெரியார்.
பொதுப் பணியில் ஈடுபடுவோர் தமது சொந்த (Self) மான அவமானங்களை ஒரு பொருட்டடாய்க் கருதக் கூடாது என்பது தன்மானத் தந்தை பெரி யாரின் கொள்கை. திருக் குறளில் வேறு எதை விரும்பா விட்டாலும் கூட குடிசெய் வார்க்கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக்கெடும்” என்ற குறளை அவர் மிகவும் விரும்புவார்.
அவர், பதவிகளைத் துச்சமாக மதித்தார். ஆனால் பதவிகளில் இருப்போரைப் பெரிதும் மதித்தார். இதற்கு எடுத்துக் காட்டுகள் பெரியாரின் வாழ்க்கையில் ஏராளமாக உண்டு. அவரைச் சென்னை மாகாணத்தின் பிரதமராக இருக்கச் சொல்லி 1939-ஆம் ஆண்டிலேயே கவர்னர் வேண்டினார். இராஜாஜியும் கேட்டுக் கொண்டார் – பதவிக் கூண்டில் சிக்கிக்கொள்ள அந்தச் சுதந்திரச் சிங்கம் விரும்பியதேயில்லை! பெரியார் பொது வாழ்க்கையில் இறங்கிய நாளிலிருந்து, தமிழ்நாட்டில் முதலமைச்சர்களாக வீற்றிருந்தவர்கள் அத்தனை பேருமே அவருடைய நண்பர் களாகவோ, தோழர்களாகவோ, தொண்டர்களாகவோ தான் இருந்திருக்கிறார்கள். தம்மைவிட வயதில் குறைந்தவர்களாக இருப் பினும், தம்மைக் காணவருவோர் யாவரே யாயினும், பெரியார் எழுந்து நின்று, இருகைகூப்பி வணங்கி, “வாங்க வாங்க” என்று பரிவோடும் மரியாதையோடும் அழைத்து, அமரச் செய்வார். வெளிவாயில் வரை சென்று, அவர்களை வழியனுப்பி வைப் பார். முன்பே அறிமுகமானவர் களாக இருப்பின், அவர்கள் பெற்றோர், குடும்பத்தார், சுற்றத்தார், மற்றும் ஊரார் எல்லாரையும் நினைவு கூர்ந்து, நலம் விசாரிப்பார் பெரியார்.
பதவியிலிருப்போரை நாம் மதித்து நடந்தால்தான் அவர்களை மக்கள் மதிப்பார்கள் என்று கருதி, “அய்யா வாங்க!” என்று பணிவோடு பேசுவார் பெரியார். ‘பெரியவர் என்ன சொன்னார்? அய்யா ஏதாவது பேசினாரா?’ என்று, அமைச்சர்களைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் வயது பற்றிக் கருதாமல், பதவி பற்றிக் கருதி, அவர்களில்லாத நேரத்திலும் மரியாதையோடு விசாரிப்பார். குன்றக் குடி அடிகளாரிடம் 1953-ஆம் ஆண்டு முதல் பெரி யாருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கொள்கை, நடைமுறைகளில் இருவரும் இரு வேறு துருவங் களாயினும், இருவரது று இலட்சியமும் ஒன்றே யாதலின், அன்போடு பழகி வந்தனர். பெரியாரை விட அடிகளார் 45 வயது இளையவர். எனினும் அடிகளாரைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மகா சந்நிதானம் சுவாமி அவர்களைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்’ என்று தான் பெரியார் சொல்லுவார்.
யாராவது வந்திருக்கும்போது பெரியார் தமக்கு அருகிலுள்ள ஒரு பத்திரிகையைப் படிக்க ஆரம் பித்து விட்டால், அதிலிருந்தே சாடை புரிந்து கொள்ள வேண்டும்; போகச் சொல்கிறார் என்று! மேலும், வருபவர் பெரியாரை முகத்துக்கு நேரே ஏதாவது கூறிப் புகழத் தொடங்கினால், அதனால் மயங்கி விடமாட்டார்; ஆனால், ஆள்
ஏதோ ஏமாற் றப் பார்க்கிறார் என்று எச்சரிக்கை ஆகி விடுவார்!
சாப்பாட்டு நேரத்தில் விருந்தினர் வந்துவிட்டால் பெரியார் மிகவும் மகிழ்ச்சி கொள்வார். பொது வாகவே, மற்ற நேரங்களை விடக் குதூகலத்துடன் பெரியாரைக் காணக் கூடிய வேளையே, உணவு கொள்ளும் வேளை தான்!”அம்மா!” என்று அழைத்து – நாகம்மையார் காலத் திலும் சரி, மணியம் மையார் காலத்திலும் சரி – அவர்களுக்கு உடனே உணவு பரிமாறச் சொல்வார். தலைவர்கள் வீட்டில் நண்பர்களையோ, தொண்டர்களையோ அலுவல கப் பணியாளர்களையோ சாப்பிடச் சொல்லும் பழக்கம் அந்தக்காலத்தில் பெரியாரிடம் மட்டுமே இருந்தது!
சாப்பிடுவோரின் உண்கலத்தை நன்கு கவனித்து, அவர் எதை விரும்பிச் சாப்பிடுகிறாரோ அதை மீண்டும் பரிமாறச் செய்வார் பெரியார். இறுதிவரை அவர் எதையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுகின்றாரா என்றும் கவனிப்பார். கலத்தில் ஏதாவது விட்டுச் சென்றால், ‘பண்டத்தைப் பாழாக்கலாமா?’ என்று மிகவும் கோபித்துக்கொள்வார். அவருடைய பழக் கமே, தமது உண்கலத்தில் பரிமாறப்பட்ட உணவை மீதியாக்காமல் சாப்பிட்டு, அஜீரணத்தால் அவதிப் படுவது தானே! நேற்று ஒரு பண்டத்தைச் சாப்பிட்டு, அது செரிக்காமல் தொந்தரவு கொடுக்கிறது என்று தெரிந்தாலும், இன்றும் அதே பண்டம் வைக்கப் பட்டால், மறுக்காமல் சாப்பிட்டுத் துன்பப்படுவது வாடிக்கை, பெரியாருக்கு.
வெளியூர்ப் பயணங்களின்போது தம்முடன் வருகின்ற தோழர்கள், உதவியாளர்கள், ஓட்டுநர்கள் முதலியோரும் சாப் பிட்டார்களா என்று தெரிந்து கொள்வார். பெரும்பாலும் உடன் அமர்த்திக் கொண்டே உண்பார்; அல்லது அவர்கள் சாப்பாடு முடிந்த பிறகே புறப்படுவார். இதுவும் பெரியாரின் தனிப் பண்பாடாகும்.
துவக்க நாட்களில் குதிரை பூட்டிய சாரட்டு வண்டியில் சவாரி செய்தவர், பிறகு ஒரு கார் வைத்திருந்தார். இடைக் காலத்தில் 1944 வரை ஈரோட்டில் ஒரு சாதாரண ஒற்றை மாட்டு வண்டி தான் பெரியாரிடம் இருந்தது; யுத்த காலமாக இருந்ததால் கார் வைத்துக் கொள்ளவில்லை. இரயிலில் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்து வந்தார். வேறு யாராவது அவருக்காக இரண்டாம் வகுப்பு அல்லது முதல் வகுப்பு பயணச்சீட்டு வாங்கி வந்துவிட்டால்கூட, வருத்தப்படு வார்; அதைத் திருப்பித் தந்து, மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்வார்; அதில் மிச்சமாகும் பணத்தை நிதியில் சேர்த்து விடுவார் பெரியார் ரயில் வண்டி வருவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே நிலையத்தை அடைந்து விடுவார். இதை யாராவது தாமதப்படுத்தினால், அவர்கள் பெரியாரின் கடுங்கோபத்துக்கு ஆளாக வேண்டும்!
குறிப்பிட்ட நேரம் தவறாமல் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லும் றிuஸீநீtuணீறீவீtஹ் என்னும் பண்பினை அவரளவு சரியாகக் கடைப்பிடித்த தலைவர் உலகிலேயே வேறு எவருமிலர்.
அதே போல், தாம் ஒத்துக்கொண்ட நிகழ்ச்சி களுக்கும் கட்டாயம் எந்தச் சூழ்நிலையிலும் தவறாமல் சென்று விடுவார்.
காலை 6 மணிக்குமேல் பெரியார் உறங்குவ தில்லை. காலைக் கடன்களை முடிக்கும் போதே சில பத்திரிகை களைப் படித்து முடித்துவிடுவார். இரண்டு மூன்று இட்லியும் காப்பியும் காலை உண்டி – மீண்டும் பத்திரிகை படித்தல், பேசிக்கொண்டிருத்தல், புத்தகம் படித்தல், எழுதுதல், பார்த்துப் பதில் வரைதல். மதிய உணவு கட்டாயம் புலாலுடன். பின்னர் சிறிது பொழுது கண் அயர்தல். பிஸ்கட், மலைவாழைப்பழம், காப்பி – சிற்றுண்டி. பயண நேரங்களில் வேனிலேயே உண்ணல், உறங்கல்! இரவுணவு பெரும்பாலும் இட்லி. ஓய்வாகச் சாய்ந்துகிடப்பது அவர் வாழ்க்கையில் நடவாத ஒன்று. கார் பேட்டரி ஓட்டத்தில் சார்ஜ் ஆவதுபோல், பெரியாருடைய உடலும் உழைப்பில்தான் உற்சாகம் பெற்றது.
5 முழ வேட்டி (பின்னாட்களில் கயிலி); உடம்பில் உள்ளே மெல்லிய வெள்ளைத்துணியில் அரைக் கைச்சட்டை அதிலுள்ள பையில் மணிபர்ஸ்! மேலே முக்கால்கை கருப்புச் சட்டை (1945 முதல்); அதன் பைகளில் – டயரி, கண்ணாடிக் கூடு, முக்கிய காகி தங்கள், தடியான பேனா, பின்னாட்களில் ஒரு பெரிய லென்ஸ்-ஆகியவை. மேலே, துடைப்பதற்காகும் துண்டு ஒன்று; எப்போதும் நீங்காத பிரம்புக் கைத்தடி; குளிர் காலத்தில் ஒரு கம்பளிச்சால்வை; செருப்புகள்; பழைய ஃபிரேமில் அடங்கிய மூக்குக் கண்ணாடி – குளிப்பதும், துணிகளைத் துவைப்பதும், உடை மாற்றுவதும் அன்றாடக் கடமைகளாகக் கருதியோ, அவரே விரும்பியோ செய்து கொண்டதில்லை, என்றுமே! அம்மை யாரின் தொண்டில் இவையும் இணைந்தவை!
“நான் (decency) சுத்தம், கண்ணுக்கு வெறுப் பில்லாத ரம்மியம் வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஆனால் அதிகப் பணம்கொண்ட, -மக்கள் கவனத்தை ஈர்க்கத்தக்க ஃபாஷன் நகை, துணி வெட்டு போன்ற அலங்காரத்தால் அல்ல; (ஷிவீனீஜீறீமீ) சாதாரணக் குறைந்த தன்மையில் முடியும் என்று சொல்வேன்” என்கிறார் பெரியார்.
கருமித்தனம் அல்லது கஞ்சத்தனம் இவற்றிலிருந்து வேறுபட்டதல்லவா சிக்கனம்? இது சேமிப்புக்கு அடிப் படையாயிற்றே! சிக்கனமாயிருந்து சேமித்த சொத்துகள், இன்று எப்படிப் பல்கிப் பெருகிச் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு ஆதாரமாக நிறைந்து விளங்குகின்றன! பெரியார் என்ற தனி மனிதரின் எளிமைதானே இதற்குக் காரணம்?
(தொடரும்)