போராட்டக்காலத்தில் இரண்டு முறை பெரியார் கைது செய்யப்பட்டார். முதல்முறை அருவிக்குத்தி என்ற ஊரின் காவல் நிலையச் சிறையில் ஒரு மாதகாலம் சிறை தண் டனை அனுபவித்தார். இரண்டாம் முறை வழங்கப்பட்ட நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு ஒருமாத காலம் திருவனந்தபுரம் சிறையில் கழித்தார்.
வைக்கம் போராட்டம் நடந்தது மொத்தம் 603 நாட்கள். இதில் 141 நாட்கள் தந்தை பெரியார் அவர்கள் பங்கெடுத் தார்கள். அதில் 74 நாட்கள் சிறையில் இருந்தார்கள். வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தமிழ் நாட்டில் இருந்து 7 முறை கேரளத்துக்குச் சென்றுள்ளார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்களுக்கு என்ன சிறப்பு என்றால் – இந்த போராட்டத்தில் கைதான மற்ற தலைவர்கள் அனைவரும் அரசியல் கைதிகளாக நடத்தப்பட்டார்கள். ஆனால் பெரியாரை மிகமோசமாக நடத்தினார்கள். கையி லும் காலிலும் விலங்கு போட்டு – கழுத்தில் மரப்பலகையை மாட்டி – அடைத்து வைத்திருந்தார்கள். இதே போராட் டத்தில் கைதாகிச் சிறையில் இருந்த தலைவர்களில் ஒரு வரான கே.பி.கேசவ மேனன் அவர்கள் ‘பந்தனத்தில் நின்னு’ என்ற தலைப்பில் மலையாளத்தில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.
தந்தை பெரியார் சிறையில் பட்ட சித்தரவதைகள்
அதன் சில வரிகளை மட்டும் நான் படிக்கிறேன்… ” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் – ஈரோடு முனிசிபல் கவுன்சிலின் சேர்மனாக இருந்தவரும் – ஒரு பெரும் பணக்காரரும் – உத்தம தேசாபிமானியுமான – ஈ.வெ.ராமசாமி அவர்களுக்குக் காலில் சங்கிலி மாட்டப் பட்டு இருந்தது. கைதிகளது தொப்பி மாட்டப்பட்டு இருந்தது. முழங்கால் வரையில் வேட்டி அணிந்திருந்தார். கழுத்தில் மரக்கட்டையை மாட்டி கொள்ளைக்காரர்கள் மற்றும் கொலைகாரர்களுடன் வைக்கப்பட்டுள்ளார். கேரளத்தின் தீண்டாமை ஜாதிக்காரர்களது சுதந்திரத்துக் காகத் தமிழ்நாட்டின் மேல்குலத்தைச் சேர்ந்த இந்து ஒருவர் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தது எங்களுக்கு புத்துயிர் தந்தது” – என்று கே.பி.கேசவ மேனன் எழுதி இருக்கிறார்கள். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், உடனே ஈரோடு திரும்பாமல் வைக்கம் சென்று மீண்டும் போராடினார் பெரியார்.
போராட்டக்காரர்களுக்கும் மன்னருக்குமான பேச்சு வார்த்தையை நடத்திய அண்ணல் காந்தியடிகள் அவர்கள், தந்தை பெரியாரிடம் கலந்துரையாடல் நடத்திய பிறகே திருவிதாங்கூர் ராணியைச் சென்று சந்தித்தார்.