வைக்கம் போராட்டம் என்பது பல்வேறு மனித உரிமைப் போர்களுக்கான தாய்ப் போராட்டமும் – கலங்கரை விளக்கமுமாகும்!
எளிமையாக – அதேநேரத்தில் மிகவும் பொருத்தமாக தந்தை பெரியார் நினைவிடத்தில்
தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள் பங்கேற்றமைக்கு நன்றி! நன்றி!!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை, டிச.28 வைக்கம் போராட் டத்தின் நூற்றாண்டு விழா – தமிழ்நாடு, கேரளா முதலமைச்சர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் பங்கேற்று மலரினையும், நூலையும் வெளியிட்டது வரலாற்றுக் கல்வெட்டாகும். வைக்கம் போராட்டம் என்பது பல்வேறு மனித உரிமைப் போராட்டங்களுக்கான தாய்ப் போராட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்..
இன்று (28.12.2023) தந்தை பெரியார் நினைவிடத்தில் நடந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் கேரள மாநிலம் வைக்கத்தில் நடத்திய மனித உரிமைப் போராட்டத்தின் நூற்றாண்டு சிறப்பு விழாவிற்குப் பிறகு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
முழுக்க முழுக்க கேரள உரையாகவே தமிழ்நாடு முதலமைச்சர் நிகழ்த்தியது பல பேரை அதிசயத்தில் ஆழ்த்தியது!
வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களுடைய போராட்டம் 1924 ஆம் ஆண்டில் தொடங்கி நடந்த வைக்கம் சத்தியாகிரகம் என்ற வரலாற்றுக்குரிய மனித உரிமைப் போர்! அதனை நூற் றாண்டு விழாவாகக் கொண்டாட வேண் டும் என்று, முதலில் கேரள மாநிலத்தில், கேரள அரசு ஏற்பாடு செய்து, நம்முடைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்கே ஆற்றிய உரை, மலையாளத்தவர்களால் பாராட்டப்படக் கூடிய அளவிற்கு, முழுக்க முழுக்க கேரள உரையாகவே அவர் நிகழ்த்தியது பல பேரை அதிசயத்தில் ஆழ்த்தியது.
பொது அரங்கில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது!
அதற்கடுத்தபடியாக, இப்பொழுது தமிழ்நாடு அரசின் சார்பாக, கேரள முதலமைச்சர் பெருமதிப்பிற்குரிய பினராயி விஜயன் அவர்களும், நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சி பொது அரங்கில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களுடைய மறைவு காரணமாக, அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல், மிக எளிய முறையில், சாதாரணமாக புத்தக வெளியீடு தந்தை பெரியார் அவர்களுடைய நினைவிடத்திலேயே நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது, பொருத்தமாக!
பெரியார் நினைவிடத்தில்வைக்கம் நூற்றாண்டு மலர் – புத்தகம் வெளியீடு!
பெரியார் நினைவிடத்திற்கு, இரண்டு முதலமைச்சர்களும் வருகை தந்து, கேரள அரசின் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பாகவும் தந்தை பெரியார் அவர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மரியாதை செலுத்தியது மட்டுமல்லாமல், வைக்கம் நூற்றாண்டுக்குரிய மலரினையும், நூலையும் வெளியிட்டார்கள். இது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும்! அதேநேரத்தில், அவர்கள் ஆற்றவிருந்த உரைகள், ஆற்றப்படவில்லை சூழ்நிலையின் காரணமாக – அதேநேரத்தில், அந்த உரைகள் வெளியிடப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வரலாற்று நிகழ்ச்சி என்பது என்றென்றைக்கும் காலத்தை வென்ற ஒரு நிகழ்ச்சியாக இருக்கும்.
பொய்ப் பிரச்சாரத்தைப் பரப்பக் கூடியவர்களுக்குப் பதிலடி!
தந்தை பெரியாருடைய வைக்கம் போராட்டத்தில், பெரியாரே கலந்து கொள்ளவில்லை என்கிற பொய்ப் பிரச்சாரத்தைப் பரப்பக் கூடியவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குப் பதிலளிப்பதைப்போல, இரண்டு அரசுகளும் (கேரளா, தமிழ்நாடு) விழா எடுத்துள்ளன. ஏற்கெனவே 30 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையார் ஜெய லலிதா ஆட்சியில் (30.1.1994) இருந்தபொழுது, வைக்கத்தில் திறக்கப்பட்ட பெரியார் சிலை, அந்த இடம் கொஞ்சம் சிதலமடைந்த நிலையில், நம்முடைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மின்னல் வேகத்தில், அதற்குரிய நிதியை ஒதுக்கி, படிப்பகம், நூலகம், கல்வி அரங்கம் – ஆய்வரங்கம் போன்று ஒரு பெரிய அரங்கத்தை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் அதைத் திறக்கவிருக்கிறார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன் பெண்கள் பொதுப் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பினை உருவாக்கினார்!
தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் வீரராகத் திகழ்ந்தாலும், டி.கே.மாதவன் அவர்களால் தொடங்கப்பெற்று, காங்கிரஸ் தலைவர்கள் மற்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட அந்தப் போராட்டத்தில், அன்னை நாகம்மையார் போன்ற பெண்கள் அந்தக் காலத்திலேயே, ஒரு நூற்றாண்டுக்கு முன், பொதுப் போராட்டத்தில் பங்கேற்றனர் என்பது வரலாற்றில் முக்கிய வைர வரிகள்!
வைக்கம் போராட்டத்தினுடைய தனித்தன்மை என்னவென்று சொன்னால், மற்ற போராட்டங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நோக்கத்தோடு நடத்தப்பட்டு, அதோடு முடிந்துவிடும். ஆனால், வைக்கம் போராட்டத்தின் நோக்கம் என்பது விரிவடைந்து, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகக்கூடிய அளவிற்கு, இரண்டு மாநிலங்களிலும் (கேரளா, தமிழ்நாடு) அது நடைமுறைக்கு வருவதற்கு வித்திட்ட ஒன்றாகும்.
வைக்கம் போராட்டம் ஒரு வரலாற்றுச் சின்னம்!
மற்ற போராட்டங்கள் வெறும் வினையாக நடக்கக் கூடிய போராட் டங்கள்; வைக்கம் போராட்டம் ஒரு முத்தான போராட்டம். அதனுடைய விளைவாகத்தான் ஏராளமான கோவில்களில் தாழ்த்தப்பட்டவர் களுக்குக் கதவுகள் திறக்கப்பட்டன; மற்றவர்களுக்கான நுழைவுகள் கிடைத்தன. தெருக்களில் ஆரம்பித்த அந்த நுழைவு, கோவிலுக்குள்ளே நுழைவு என்ற அளவிற்கு வளர்ந்து, அதற்குப் பிறகு கருவறைக்குள்ளேயும் போகக்கூடிய அளவிற்கு, ஜாதி, தீண்டாமையை ஒழிக்கக் கூடிய அளவிற்கு, அது வளர்ந்தது.
இப்படி பல விளைவுகளை ஏற்படுத்திய வைக்கம் போராட்டம் என்பது ஒரு வரலாற்றுச் சின்னம்!
பல போராட்டங்களுக்குத் தாய் போராட்டம்,கலங்கரை விளக்கம்!
எனவே, வைக்கம் போராட்டம் என்பது வெறும் ஒரு போராட்டமல்ல; பல போராட்டங்களுக்குத் தாய் போராட்டமாகவும், கலங்கரை விளக்கமாகவும் அமைந்திருக்கின்ற போராட்டமாகும்.
அந்தப் போராட்டத்தை இன்றைய ‘திராவிட மாடல்’ அரசு ஆட்சியில் இருக்கின்ற காரணத்தினால், முழுமையாக மக்களுக்கு எடுத்துச் சொல்லி, ஜாதி, தீண்டாமை, வருணா சிரம தர்மம் – அதனுடையக் கொடுமைகள் எப்படிப்பட்டவை என்பதையெல்லாம் மக்க ளுக்கு நாள்தோறும் விளக்கக் கூடிய ஓர் அறிவார்ந்த காட்சியகங்களையும் அமைத்து, வரலாற்றை நிலைப்படுத்தும் வகையில் பங்கேற்றுள்ள இரண்டு முதலமைச்சர்களுக்கும் – திராவிடர் கழகம் மட்டுமல்ல, அனைத்து மனித உரிமையாளர்கள் சார்பாகவும் எங்களு டைய அன்பிற்குரிய நன்றியை, பாராட்டை, வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வரலாற்றில் கல்வெட்டாய் நிற்கக்கூடிய ஒரு நிகழ்வு!
இது ஒரு வரலாற்று நிகழ்வு – வரலாற்றில் காலங்காலமாகக் கல்வெட்டாய் நிற்கக்கூடிய ஒரு நிகழ்வு!
இதற்காக ஒத்துழைத்த அமைச்சரவை யினர், அனைத்து இயக்கத்தினர், கட்சி வேறு பாடில்லாமல் ஒத்துழைத்த சான்றோர்ப் பெரு மக்கள் அத்துணைப் பேருக்கும் திராவிடர் கழகமும், மனித உரிமைப் போராளிகளும் நன்றி செலுத்துகிறார்கள்.
இரண்டு முதலமைச்சர்களுக்கும் நன்றி!
ஏற்கெனவே 30 ஆண்டுகளுக்கு முன்பு சிலை வைத்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கும் நன்றி!
அங்கே, தன்னுடைய சொந்த இடத்தில் ஒரு பகுதியைக் கொடுத்த எம்.ஜி.ஆர். ஜானகி அவர்களுக்கும் நன்றி!
ஒத்துழைப்புக் கொடுத்த அத்துணைப் பேருக்கும், திராவிடர் கழகத்தின் சார்பிலும், பெரியார் தொண்டர்களின் சார்பிலும், மனித உரிமையாளர்களின் சார்பிலும் எங்களுடைய மனமார்ந்த, உளப்பூர்வ நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வரலாற்றில் ஒரு வைரக்கல்!
எளிமையான நிகழ்ச்சி என்றாலும், வர லாற்றில் எப்பொழுதும் மறக்க முடியாத ஓர் இனிமையான நிகழ்ச்சியும்கூட – வரலாற்றில் ஒரு வைரக்கல்லாக என்றைக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கும்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.