“இந்துத்துவ எம்.ஜி.ஆர்.” என்ற தலைப்பில் ஆர்.எஸ். வார இதழான விஜயபாரதம் (21.10.2016) ஒரு பக்க அளவுக்குப் பெட்டிச் செய்திகளாக அடுக்கி இருக்கிறது.
கடைசி காலத்தில் எம்.ஜி.ஆர். மூகாம்பிகைப் பக்தராக மாறியது உண்மையாக இருக்கலாம்.
அதே நேரத்தில் தந்தை பெரியார் பற்றியும், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கராச்சாரியார் குறித்தும் என்னென்னவெல்லாம் பேசினார் எம்.ஜி. ஆர்., ஆதாரங்களோடு இதோ!
👉 எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகும் மத பாரபட்சத்தை அண்டவிட்டதில்லை. பெரும்பான்மையினர் என்பதற் காக ஹிந்துக்களை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்றோ, சிறுபான்மையினர் என்பதற்காக முஸ்லிம்களை தாஜா செய்ய வேண்டும் என்றோ எம்.ஜி.ஆர். ஒருபோதும் நினைத்தது இல்லை.
👉 பரங்கிமலை தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில், ‘தோமையர் மலை’ என்று அதைப் பெயர் மாற்றம் செய்துவிடும் சர்ச் விஷமத்தை முறியடித்தார்.
👉 வேலூர் ஆலயத்தில் ஜலகண்டேஸ்வரர் மீண்டும் எழுந்தருளியதற்கு காரணமானவை ஹிந்து அமைப்புகள். சட்டமன்றத்தில் ஹிந்து விரோத கூச்சல் எழுந்தது. “மற்ற மதத்தினருக்கு அமைப்பு இருக்கலாமா னால் ஹிந்துக்களுக்கு அமைப்பு இருக்கக் கூடாதா?” என் முதல்வர் எம்.ஜி.ஆர். எழுப்பிய கேள்விக்குப் பின் அடங்கினார்கள்.
👉எம்.ஜி.ஆர். ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர். திமுகவில் இருந்த காலகட்டத்தில் கூட தன்னை நாத் திகன் என்று அவர் ஒருபோதும் கூறிக்கொண்டதில்லை.
👉கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கும் இஸ்லாமிய மசூதி களுக்கும் அரசு பணத்தை எம்.ஜி.ஆர். அநாவசியமாக வாரி வழங்கியதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஹிந்து கோயில்களுக்கு கும்பாபிஷேகமும் சம்புரோ க்ஷணமும் தங்குதடையின்றி நடைபெற அவர் வழி வகை செய்தார்.
👉 மண்டைக்காட்டில் கிறிஸ்தவ வெறியர்கள் பகவதி அம்மனின் பக்தைகள் கடலில் நீராடப் போனபோது மானபங்கம் செய்ததைக் கேள்விப்பட்டு கொதித்துப்போன எம்.ஜி.ஆர். “தமிழனை தமிழ்நாட் டில் தடுப்பதா?” என்று கர்ஜித்தார்.
👉”நான் ஏன் பிறந்தேன்” என்ற தனது ‘ஆனந்த விகடன்’ தொடரில் ஹிந்துக்கள் போற்றும் பசுவை பாதுகாப்பது முக்கியம் என வலியுறுத்தினார்.
👉 கஞ்சாத் தோட்டத்தில் ரோஜாமலராக வந்தார் எம்.ஜி.ஆர். ஒடுக்குமுறைக்கு உள்ளாகி நிற்கும் ஹிந்து சமுதாயம் அந்த நல்ல ஹிந்துவை நினைத்துப் பார்க் கிறது.
👉 ‘ஹிந்துக்களை நிந்திப்பவர்கள் முற்போக்குவாதி கள், ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் பிற்போக்குவாதிகள்’ என்ற மாயை எம்ஜிஆரிடம் இல்லை. இப்போதைய அரசியல்வாதிகள் பலர் இந்த மாயையின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளனர். எம்.ஜி.ஆர். போன்ற ஒரு முதல்வர் அவருக்கு முன்பும் சரி பின்பும் சரி தமிழர்களுக்கு வாய்க்கவில்லை.
👉சென்னை கதீட்ரல் சாலை பெயர் மாற்றப் பட்டபோது சர்ச் அமைப்புகள் பெரிய ரகளை நடத்தி தடுத்தன. அதை சுட்டிக்காட்டிய எம்.ஜி.ஆர். ஹிந்துக் கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக கண்டனக் குரல் எழுப்ப வேண்டும், மனுக்கள் குவிய வேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வழிவகை சொல்லிக் கொடுத்தார்.
– – – – –
எம்.ஜி.ஆர். வீசிய பதிலடிக் குண்டுகள் என்ன?
28.6.1970 ஞாயிறு காலை 9.15 மணிக்கு சென்னை பாலர் அரங்கில், செங்கற்பட்டு மாவட்டம் ஆண்டார் குப்பம் கிராமம் ((வீரசைவ குடும்பத்தைச் சேர்ந்த) திரு.ஏ.கே.ரகுபதிக்கும், மதுரை அடுத்த வௌத்தூர் கிராமத்திலுள்ள நரிக்குறவர் குடும்பத்தைச் சார்ந்த திரு. எல்.ஆறுமுகம் சிங் குமாரத்தியும், மதுரை என்.எம்ஆர். சுப்பராமன் ஆதரவு பெற்றவருமான எம்.ஏ.ஞானசுந் தரிக்கும் தி.மு.க.கழக பொருளாளர் எம்.ஜி.இராமச்சந் திரன் எம்.எல்.ஏ. தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.என்.வி.நடராசன் அவர் களால் கலப்புத் திருமணம் நடத்தப்பட்டது.
வாழ்நாளிலேயே வெற்றி பெற்றவர்
மணவிழாத் தலைவர் திரு எம்.ஜி.ஆர். பேசும் போது கூறியதாவது:-
இந்த மணவிழா அய்யா முன்னிலையில் அண்ணா வாழ்த்து வழங்கி நடைபெறவேண்டியது ஆகும்; எவ் வளவுதான் சட்டம் கண்டிப்பு வந்தாலும் உள்ளத்தால் மாறுதல் ஏற்பட்டால் தான் அது பயன்படும் – தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாய சீர்திருத்தப் பணி யைத் துவக்கிய காலம் பலத்த எதிர்ப்பும் ஏளனமும் மிகுந்த காலம் – இன்று அவர்கள் வாழ்நாளிலேயே அவரது கொள்கைகளின் வெற்றிகளைக் காணும் பெருமித நிலையில் உள்ளார்கள் – சமூகத்தில் ஒரு சிலர் ஆதிக்கம் பெறத்தான் ஜாதி புகுத்தப்பட்டது.
ஆதிக்கக்காரர்கள் எதிர்ப்பைச் சமாளித்து இன்று அய்யா வெற்றி பெற்று இருக்கிறார். உள்ளத்தில் மாறு தல் ஏற்படுத்துவது என்பது பெருஞ்சாதனையாகும். உயர் ஜாதிக்காரர்கள் என்றால் அவர் ஒழுக்கவாதி என்பதல்ல பொருள், வாழ்க்கையை அவர்கள் எப்படி நடத்துக்கிறார்கள் என்பதே முக்கியம். இந்த மணமக்கள் சமுதாய மாறுதலுக்கு தக்க அடையாளமாகத் திகழ் கிறார்கள். அய்யா அவர்களது தியாகத்திற்குத் தலை வணங்குவது தான் – மரியாதை செலுத்துவதுதான் – இத்தகைய விழாவில் நம் கடமையாகும் என்று குறிப் பிட்டார்.
அடுத்து மணமக்களை வாழ்த்திப் புரட்சித் திருமணமாக இது நடைபெற்றது குறித்து திருவாளர் க.அறிவழகன் எம்.எல்.சி. ‘விடுதலை‘ ஆசிரியர் கி.வீரமணி, சா.கணேசன் எம்.சி., ஏ.பி.ஜனார்த்தனம் எம்.எல்சி., வி.ஜி.சந்தோஷம் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். தலைவர் முடிவுரைக்குப்பின் 10.30 மணி அளவில் விழா முடிவுற்றது. திரு.கமலக்கண்ணன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
– விடுதலை, 28.6.1970
– – – – –
மருத்துவத்தால் குணமாகாதது அய்யப்பனை வணங்கினால் குணமாகுமா?
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடை பெற்ற விழா ஒன்றிலே கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் நல்ல அளவுக்கு அய்யப்ப கிறுக்கர்களுக்குச் சூடு கொடுத்துப் பேசி உள்ளார்.
“மருத்துவத்தால் குணமாகாத நோய்களை அய்யப் பன் கோயில் திருநீறு குணமாக்கிவிடும் என்ற நம்பிக் கையைச் சிலர் பரப்பி வருகின்றனர். இந்த எண்ணம் வலுப்பெறுமானால், பிறகு மருத்துவமனைகளை இழுத்து மூடிவிட்டு, டாக்டர்களை விபூதி விற்பனை யாளர்களாக நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
கடவுள் நம்பிக்கை அறிவியல் துறையில் தலை யிட்டு பாமர மக்களைக் கெடுத்துவிடக் கூடாது. படித்த வர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள்.
“திருநீறு” குணமாக்குமா?
இப்படி கோவிலுக்குச் செலவழிக்கும் பணத்தை மருத்துவமனைகளுக்குக் கொடுத்துதவினால் எத்த னையோ ஏழை நோயாளிகள் குணம் அடைவார்கள்.
டாக்டர்களின் திறமைக்கு உத்தரவாதம் வேண்டும்; அவர்களின் திறமையைக் கேவலப்படுத்தும் வகையில் “திருநீறு குணமாக்கிவிடும்” என்று சொல்பவர்களை என்ன சொல்வது?” என்று மிக அழகாக நம் நாட்டுக் கோயில் மூடநம்பிக்கையாளர்களைப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்பு மிகு எம்.ஜி.ஆர்.
(15.2.1979, ‘உண்மை’ தலையங்கம்)
– – – – –
ஆஸ்திக சமாஜத்தில் நாத்திகம் பற்றி எம்.ஜி.ஆர். பேசியது என்ன?
ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். 10.4.1976 அன்று கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய உரை குறித்து சிலர் எகிறிக் குதிக்கிறார்கள். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை விவாதத்துக்கு அழைத்து அவர்கள் கருத்தைக் கேட்டு பதில் கூறும் ஆற்றல் பகுத்தறிவாளர் களுக்கே உண்டு என்பதை எத்தனையோ நிகழ்ச்சிகள் நடத்தி நிரூபித்துக் காட்டப்பட்டுள்ளன. ஆஸ்திக சமாஜத்தில், வந்து பேசுகிறவர்கள் எல்லாம், பட்டை அடித்துக் கொண்டு, காவி உடை தரித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்றால், அதற்கு எம்.ஜி.ஆர். போன்றவர்களை அழைத்திருக்கவே வேண்டாமே! அவரவர்கள் கருத்தைக் கூறினாலே, “மதத்தைப் புண்படுத்தும்” பேச்சு என்று கூறுவார்களேயானால், மதம் “சுயசிந்தனையை” தடுக்கிறது என்ற பகுத்தறி வாளர்களின் கருத்துக்கு அவர்கள் கட்டியங் கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள்!
ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். பேசியதுதான் என்ன? அவர் பேசிய பேச்சுக்களில் ஒரு சில பகுதி களையும், ஆஸ்திக சமாஜத்தில் நடந்த நிகழ்ச்சியையும் கீழே தந்துள்ளோம்).
ஆஸ்திக சமாஜத்தில் நாத்திகத்துக்காக வாதாடுகிற வர்களைச் சார்ந்தவன் என்று பெயர் தரப்பட்டிருக்கிற எம்.ஜி.ராமச்சந்திரனை அழைத்துள்ளீர்கள். ஆத்திக சமாஜத்தில் எம்.ஜி.ராமச்சந்திரனா? இந்தக் கேள்வி சிலருக்கு திகைப்பாக இருக்கக்கூடும். ஆத்திகம் பற்றியும் நாத்திகம் பற்றியும் இதே மேடையில் நிறையப் படித்தவர்கள், நன்கு ஆராய்ந்தவர்கள் நிறையப் பேசியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதைக் கேட்கும் வாய்ப்பை நான் பெற்றதில்லை. இவர்களும் அந்த வாய்ப்பை எனக்குத் தந்ததில்லை – இனிமேல் தருவார்கள் என்று கருதுகிறேன். எனக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் தருவார்கள் என்று கருதுகிறேன். ஏனென்றால், பொதுமக்களுக்குத் தெரி யாத எந்தக் கருத்தும், எத்தகைய தத்துவமும் வரவேற்பு பெற முடியாது
“பரலோகத்தில்” நம்பிக்கை உண்டா?
பரலோகத்தை நம்பாதவர்களையும், ஈஸ்வரனை வணங்காதவர்களையும், நாதப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் நாத்திகர்கள் என்று குறிப் பிட்டார்கள். பரலோகத்தை நம்பப் போகிறோமா, ஈஸ் வரனை வணங்கப் போகிறோமா, நாதப்பிரமாணத்தை ஏற்கப் போகிறோமா அதுவல்ல பிரச்சினை. கருமம், நாதோபாசம், ஞானம் இவற்றை ஆத்திகக் கோட்பாடு களாகக் கூறினார்களே – அதை ஏற்றுக் கொண்டவர்கள் அவற்றைக் கடைப்பிடிக்கிறார்களா?
“கருமம்” எது?
நான் இங்கே மனம் திறந்து சில கேள்விகளை வெளிப்படையாகக் கேட்க விரும்புகிறேன். “கருமம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்களே, எதை? இன்றைய தினம் இந்த 70ஆம் ஆண்டிலும் அவரவர் கருமத்தை யார் ஒழுங்காகச் செய்கிறார்கள்? சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் ஆத்திகன் என்று சொல்லிக் கொள்ப வர்களில் எத்தனை பேர் அதற்குரிய கருமத்தை ஒழுங் காக நிறைவேற்றுகிறார்கள்?
வேஷம் போடுவதா?
நான் வேதனையோடு சொல்கிறேன். ஆத்திகர் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களில் நூற்றுக்கு 95 பேர் கடவுளை நம்புவதாக வேஷம் போடுகிறார்கள்.
சமாஜத் தலைவர்
எம்.ஜி.ஆர். இவ்வாறு பேசி முடிந்ததும், அந்த சமாஜத்தின் தலைவரான ரத்தினம் அய்யர் என்பவர் பேச வந்தார்.
அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர். எத்தனையோ தருமங்களை செய்துள்ளார். அவர் நாத்திகராக இருந் தால் தருமம் செய்ய வேண்டும் என்ற சிந்தனையே வராது. நிச்சயமாகச் சொல்கிறேன். சத்தியமாகச் சொல்கிறேன்.
நாத்திகர்கள் கடவுள் இல்லை இல்லை என்று சொல்லத்தான் ஆத்திகம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறிவிட்டு, தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவங்களை மிகவும் தாக்கிப் பேசினார்.
எம்.ஜி.ஆர். குறுக்கீடு
அப்போது எம்.ஜி.ஆர். எழுந்து ஒலிபெருக்கியை பிடித்துக் கொண்டு “இடைமறித்துப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று கூறி, ரத்தினம் அய்யர் நான் கொடுப்பதாகப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நாத்திகர்கள் தரமாட் டார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் என்னை நினைத்து இதைச் சொல்லவில்லை. பொதுவாகவே இதைச் சொல்கிறேன்.
நாத்திகம் பரவப் பரவத்தான் ஆத்திகமும் பரவுகிறது என்று கூறிய அவர் பிறகு பெரியாரின் நாத்திகக் கருத்துக்களை ஏன் தாக்க வேண்டும்?
சமாஜத் தலைவர்: உண்மைதான்… உண்மைதான்…
எம்.ஜி.ஆர்.: ஆஸ்திகம் என்ற சொல்லில் உள்ள “ஆஸ்தி” என்பதற்கு “உள்ளது” என்று ஒரு பொருள் கூறப்படுகிறது. “உள்ளது” என்று கூறுவதற்கு ஒரு ஆள் இருந்தால் “இல்லை” என்று மறுப்பவர்களும் இருக் கவே செய்வார்கள்.
சமாஜத் தலைவர்: உண்மைதான்… உண்மைதான்…
எம்.ஜி.ஆர்.: ஜாதி உண்டு என்று சொல்பவர்கள் இருக்கும் வரை ஜாதி இல்லை என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். பணக்காரர்கள் வேண்டும் என்று சொல்பவர்கள் இருந்தால் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருப்பார்கள்.
இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
நன்றி: தென்னகம்
விடுதலை, 20.4.1976
– – – – –
எம்.ஜி.ஆர். – சங்கராச்சாரியார் மோதல்
சங்கராச்சாரி நடத்திய இந்து சமயக் கலை விழாவில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் – சங்கராச்சாரியார் ஜெயேந் திர சரஸ்வதியை அருகில் வைத்துக் கொண்டே இந்து முன்னணி, இந்து ஒற்றுமைப் பற்றி தெரிவித்த கருத்துகள்:
சென்னை காமராஜ் திடலில் நடைபெற்ற இந்து சமய கலை விழாவில், இறுதி நாளாகிய 3.4.1983 அன்று எம்.ஜி.ஆருக்கும் சங்கராச்சாரியாருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது உரையில்:- நாகர்கோயிலில் இந்து முன்னணியினர் மாநாடும், ஊர்வலமும் ஏற்பாடு செய்திருந்தனர். அம்மாநாட்டில் டாக்டர் கரன்சிங் அவர்கள் கலந்து கொள்கிறார் என்று தெரிந்திருந்தும்கூட, அவற்றைத் தடை செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்ட தென்றால், அதற்குக் காரணம், அங்கு மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டும் காரியங்கள் நடைபெற்றதுதான்.
அந்த மாநாட்டின் முக்கியஸ்தராக இருந்த தாணு லிங்க நாடாரை இன்றைக்கு வேறு ஒரு காரணத்திற்காக இந்துக்களே எதிர்க்கிறார்கள். இந்த நிலையில் இந்துக் களிடையே ஒற்றுமை எங்கே இருக்கின்றது என்று கேட்டார்.
– விடுதலை, 4.4.1983
– – – – –
இந்து முன்னணி – ஆர்.எஸ்.எஸ்.சுக்கு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். எச்சரிக்கை!
ஆர். எஸ்.எஸ்., இந்து முன்னணிகளுக்கு, தமிழக முதலமைச்சர் இன்று சட்ட மன்றத்தில் கடும் எச்சரிக்கை விடுத்தார். (29.3.1982)
“மக்களைப் பிளவுபடுத்தும் இவர்களின் நடவடிக்கை கள் உடனே நிறுத்தப்பட்டாக வேண்டும்; அரசு இதை அனுமதிக்காது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மடாதிபதிகள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டுமே தவிர, வேறு வழிகளைப் பின்பற்றக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
காவல்துறை மான்யத்தின் மீதான விவாதத்துக்கு சட்ட மன்றத்தில் கீழ்க்கண்டவாறு முதலமைச்சர் பதிலளித்தார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
மதவாதிகள் அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப் படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவு படுத்த நினைப்பதை -இந்த அரசு அனுமதிக்காது என் பதை தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்து கிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? என்று சிந்திக்க வேண்டும்.
இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல் லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகி றேன். இதுபோன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல் மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ளவேண்டும். தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது. (காஞ்சி சங்கராச் சாரியார் இந்து முன்னணிக்காரர்களையும், ஆர்.எஸ். எஸ்.காரர்களையும் தூண்டிவிட்டுப் பேசிவருவது வாசகர்கள் அறிந்ததே.)
நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத் தல் பயிற்சி கொடுக்கிறார்களே – அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாகச் சொல்கிறேன்; ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண் டும். ஏற்கெனவே என்.சி.சி., – சாரணர் பயிற்சிகள் இருக் கின்றன. அந்தப் பயிற்சியே போதும்; ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை.
மக்கள் நலன் காக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காகப் பாடுபடக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எனவே, மதவாதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம்.
அரசு விதித்துள்ள 144 தடையை மீறுவோம் என்றார்கள். தடையை அவர்கள் மீறிச் செயல்பட்டால், அரசு அதைச் சமாளிக்கும்: அரசு அதற்குத் தயாராக இருக்கிறது.”
இவ்வாறு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தனது பதில் உரையில் குறிப்பிட்டார்.
– ‘விடுதலை‘, 29.3.1982
எம்.ஜி.ஆரின் இந்தக் கருத்துகளுக்கு ‘விஜயபாரதம்’ வகையறாக்கள் பதில் சொல்லுமா?