பெரியாரின் அருமையைக் காலம் கடந்தே உணர்ந்துள்ளோம் – வட மாநிலங்கள் முழுமையும் கொண்டு செல்வோம்!
பஞ்சாபில் பல்வேறு அமைப்பினரும் முழக்கம்!
மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது!
அமிர்தசரஸ், டிச.27 ‘Collected Works of Periyar E.V.R.’ என்ற நமது கழகம் வெளியிட்ட நூல், பஞ்சாப் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, அதன் வெளியீட்டு விழாவும் பஞ்சாப் ஜலந்தர் நகரில் நடைபெற்றது. ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளைக் காலம் கடந்து நாம் அறிந்திருந்தாலும், இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான அவரின் கருத்துகளை வட மாநிலங்கள் முழுவதும் பரப்புவோம்” என்று கல்வியாளர்களும், சிந்தனையாளர்களும் முழங் கினர்.
தந்தை பெரியாரின் உரைகளையும், கட்டுரைகளை யும் தொகுத்து ‘Collected Works of Periyar E.V.R.’ என்ற தலைப்பில் 1981 ஆம் ஆண்டு நம் இயக்கம் ஓர் ஆங்கில நூல் வெளியிட்டு, பல மறுபதிப்புகளையும் கண்டுள்ளது. இந்த நூலை டாக்டர் ஜஸ்வந்த் ராய், பஞ்சாபி மொழியில் மொழி பெயர்த்துள்ளார் – ‘‘பெரியார் ரச்னாவலி- புதுயுக சாக்ரடீஸ்” என்னும் தலைப்பில். இந்த நூலின் வெளி யீட்டு விழாவும், விவாதக் கருத்தரங்கும் பஞ்சாப் மாநில ஜலந்தர் நகரில் செவ்வாய்க் கிழமை டிசம்பர் 26, 2023 அன்று நடைபெற்றுள்ளது. ‘ஆதார் சங்ராமி லெஹர்’ என்னும் அமைப்பு இந்த விழாவுக்கு ஏற்பாடு செய் திருந்தது. தேஷ் பகத் யாத்கார் மண்டபத்தில் ‘கத்ரி ஷஹீத் விஷ்ணு கணேஷ் பிங்லே’ அரங்கில் (ஜலந்தர்) இந்த விழா நடைபெற்றுள்ளது வெகு சிறப்பாக.
தந்தை பெரியார் நூல்
பஞ்சாப் மொழியில் மொழி பெயர்ப்பு!
குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தின் மேனாள் தலைவர் கரம்ஜித் சிங்கின் தலைமையில் விழா நடந் துள்ளது. பஞ்சாபி எழுத்தாளர்கள் மய்யக் குழுவின் துணைத் தலைவரும், ‘நவன் ஜமானா’ இலக்கிய இதழின் ஆசிரியருமான மூதறிஞர் டாக்டர் ஹர்ஜிந்தர் சிங் அத்வால் மற்றும் ‘சங்ராமி லெஹர்’ பத்திரிகையின் ஆசி ரியர் மங்கத்ராம் பாஸ்லாவும் முன்னிலை வகித்தனர். மேலும் பல பிரமுகர்கள் விழா மேடையை அலங்கரித் துள்ளனர்.
மொழி பெயர்ப்பாளர் ஜஸ்வந்த் ராய், பஞ்சாப் மாநில ஹோஷியார்புர் நகரத்தில் மாகாண மொழியியல் துணை அதிகாரியாகப் பணிபுரிந்துவரும் எழுத்தாளர். நூல் வெளியீட்டின்போது தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் அவர் மேடையில் வாசித்துள்ளார். தந்தை பெரியார்பற்றிய அந்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு
அந்த நிகழ் வில் அவர் கூறியது:
பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்
‘‘சுயமரியாதை இயக் கம் என்ற பெயரில் பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் மனிதாபிமான உரிமைகளுக்காகப் போராடியவர். பொதுத் தொண்டில் ஈடுபட்டு சமூகச் சீர்திருத்தம் ஒன்றையே தன் பிரதான லட்சியமாகக் கருதி, அரும்பாடுபட்டவர் அவர். அவருடைய படைப்புகளும், சொற் பொழிவுகளும் கடவுள், ஆன்மா, ஜோசியம் போன்ற பல்வேறு விஷ யங்களைச் சார்ந்து இருந் துள்ளன.”
‘‘மக்களின் நலனுக் காகப் போராடி, பலமுறை கைது செய்யப்பட்டு சிறைவாசங்களில் சொல் லொணாத் துயரை அனுபவித்தவர் பெரியார். நூற்றுக்கணக் கான போராட்டங்களில் ஈடுபட்டு ஈடு இணையற்ற இயக்கப் பணிகளுக்காக தன்னையே வருத்திக் கொண்டவர் அவர். அவற்றைச் சார்ந்த விவ ரங்கள் யாவும் தற்போது வெளியிடப்பட்ட என் மொழி பெயர்ப்பு நூலில் விளக்க மாக இடம்பெற் றுள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.
நிகழ்வில் முன்னிலை வகித்த அர்ஜிந்தர் அத் வால் தந்தை பெரியாரின் கொள்கைகளை விளக்கி உரை யாற்றுகையில்,
‘‘பகுத்தறிவின்மை அடிமைத்தனத்திற்கு வழி வகுக்கும்; அடிமைத்தனத்தால் வறுமை பெருகும். அதுவே சுரண்டல் சமுதாய அமைப்பை உருவாக்கி விடும் என்று பெரியார் கூறி வந்தார். அது மறுக்க முடியாத உண்மை” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
இந்தக் காலகட்டத்திற்குத் தேவையானவை பெரியாரின் கருத்துகள்!
‘‘பெரியார் மூடநம்பிக்கைகள், பகுத்தறிவின்மை, விதி, ஜோதிடம், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றை யெல்லாம் கடுமையாக எதிர்த்து வந்தார். அவருடைய சிந்தனையும், உறுதி முழக்கங்களும், அவரது அஞ்சாநெஞ்சில் மலர்ந்த கொள்கைகளும் அன்று போலவே இன்றும் தேவைப்படுகின்றன. முக்கியமாக இன்றைய காலக்கட்டத்திற்கே அவை மிகவும் ஏற்புடைவையாக உள்ளன.”
‘‘பெரியார் சிந்தனை பல பஞ்சாப் குருக்கள், பகத்கள், துறவிகள், பூலே, அம்பேத்கர், மங்குராம் முகோவாலியா மற்றும் அமரர் பகத்சிங் போன்றோரின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முன்னோடியாக இருந்துள்ளது” என்றும் கூறினார் அர்ஜிந்தர் அத்வால்.
வரலாற்றாளரும், தொண்டறப் பிரமுகருமான சரண் ஜிலால் கங்கனிவால் என்பவரும் இந்த நிகழ்வின்போது தந்தை பெரியாருக்குப் புகழ் பாமாலை சூட்டி உரையாற்றினார்.
இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டு காலகட்டத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கப் போராட்டங்களுடன் பெரியாரின் போராட்டங்களை ஒப்பிட்டு அவர் சிறப்பாக உரையாற்றினார்.
பெரியாரின் அருமையைக்
காலம் கடந்தே உணர்ந்துள்ளோம்!
‘சங்ராமி லெஹர்’ பத்திரிகையின் ஆசிரியர் மங்கத் ராம் பாஸ்லா உரையாற்றியபோது,
‘‘பெரியாரின் பெருமையையும், சிறப்பையும் நம்மில் பலர் காலம் கடந்தே உணர்ந்திருக்கின்றோம். போகட் டும், இனிவரும் காலத்திலாவது நாம் அவரது சிந்த னையை முன்னெடுப்போம். பரப்புரைகளால் அனை வரையும் புரிந்துகொள்ள வைப்போம். பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் சார்ந்து நாம் தீவிரமாகப் போராட நேரும்போதெல்லாம் பெரியாரை நினைவு கூர்ந்து நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வோம். இது இன்று நம் எல்லோருடைய உறுதி முழக்க மாக இருக்கட்டும்” என்று வெகு அழகாகக் கூறினார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக கேள்வி நேரம் அமைந்த போது, அரங்கில் கூடியிருந்தவர்களின் பல கேள்வி களுக்கு மொழியாக்க நூலின் ஆசிரியர் டாக்டர் ஜஸ் வந்த் ராய் சுருக்கமாகவும், சுவையாகவும் பதிலளித்தார். நூல் வெளியீடு நிகழ்ந்த பின் RMPI கட்சியின் வலைதளம் நிறுவப்பட்டது. டாக்டர் கரம்ஜித்சிங் தனது தலைமையுரையின்போது இவ்வாறு கூறினார்.
வடமாநிலங்கள் முழுவதும்
பரப்புவோம்!
‘‘இந்த மொழியாக்க நூல் வாயிலாக நூலாசிரியர் டாக்டர் ஜஸ்வந்த் ராய், பெரியாரின் சிந்தனைகளையும், கொள்கைகளையும் வட இந்தியா மேலும் ஆழமாகவும், நுணுக்கமாகவும் புரிந்துகொள்ள வைத்துவிட்டார். வடநாடு முழுவதும் இந்த நூல் பெரியாரின் சிறப்புகளை பரந்து விரியச் செய்யும்” என்றார்.
கரம்ஜித்சிங் அவர்கள் மேலும் கூறியதாவது:
‘‘பவுத்தம், சமூகம், கல்வி, மகளிர், மாணவர்கள், பொருளாதாரம் சார்ந்த பெரியாரின் சிந்தனைகள் யாவும் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியவை.”
தந்தை பெரியார் உலகமயமாகி விட்டதை நிரூபித்தனர்!
தலைமை வகித்த கரம்ஜித் சிங் அவர்கள் விவாதக் கருத்தரங்கில் பெரியார்பற்றிய மேலும் பல சிறப்புகளைக் குறிப்பிட்டுப் பேசினார். மேடை நிர்வாகத்தை மஹிபால் என்பவர் சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின்போது, பிரபல பஞ்சாபிக் கவிஞர் மதன் வீராவும் கலந்துகொண்டார். பகவந்த் ரஸுல்புரி, சதீஷ்ரானா உள்பட பல சமூகத் தொண்டறப் பிரமுகர்களும் விவாதத்தில் கலந்துகொண் டனர். பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களும், இலக்கியவாதிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்று தந்தை பெரியார் உலகமயமாகி விட்டதை நிரூபித்தனர் என் றாலும் மிகையாகாது. அம்பேத்கர் இயக்கம் என்னும் அமைப்பைச் சேர்ந்த இடதுசாரிக் கண்ணோட்டத் தொண்டர்களும் வருகை புரிந்து நிகழ்வைச் சிறப் பித்தனர். நூலாசிரியர் ஜஸ்வந்த் ராய் மேற்கண்ட நிகழ்ச்சிபற்றிய முழு விவரங்களையும் வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது மற்றொரு சிறப்பு.
நமது அறிவாசான் தந்தை பெரியார் உடலால் மறைந் தாலும், உணர்வால், லட்சியங்களால், சுயமரியாதை ஞானசூரியனாய் உலகின் பற்பல பாகங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்பதை பஞ்சாப் மண்ணில் நிகழ்ந்த இந்த நூல் வெளியீட்டு விழா உறுதிப்படுத்தி யுள்ளது.