திருச்சி – புத்தூர் நான்கு சாலையில் நேற்று (20.10.2023) மாலை நடைபெற்ற விழா – வாழ்விலே ஒரு திருநாள்!
“ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்” – தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழா தான் அது!
எத்தனையோ வேன்கள் அவர் மேற்கொண்டு தீர வேண்டிய பிரச்சாரப் பயணங்களுக்காக வழங்கப்பட்டதுண்டு.
பழுதில்லாக் கொள்கைகளுக்காக பழுதற்ற பயணத்தை மேற்கொண்ட வாகனங்கள் இவை!
இதே திருச்சியிலே இதற்கு முன் இரண்டு முறை பிரச்சார வாகனங்கள் அளிக்கப்பட்டதுண்டு; அந்த வகையில் இது மூன்றாவது வாகனமாகும்.
எதற்காக இந்த வாகனங்கள் தமிழர் தலைவருக்கு வழங்கப்பட்டு வருகின்றன?
“தகைசால் தமிழர்” ஆசிரியர் அவர்களே இதற்கான காரணத்தை அந்த விழா மேடையிலே சொன்னார்.
“ஓய்வு எடுக்காதே! உமது பிரச்சாரம் நாட்டுக்கு மேலும் தேவை – தேவை! ஓடிக் கொண்டே இரு, உன் பிரச்சாரத்தை நிறுத்தாதே! என்று என்னை வேலை வாங்குவதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது” என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை!
திருச்சி மாநகரம் முழுவதுமே கழகக் கொடிகள் பறந்து விழா வுக்கு வரவேற்பு கூறியது எனலாம் – சிறப்பான ஏற்பாடுகள் என்பதைவிட நேர்த்தியான கொள்கைத் திருவிழா!
ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லும் தலைவர்களுக்கு – தோழர்களுக்கு ஆசிரியர் அவர்கள் சொல்லும் பதில்.
‘மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்க விடுவதில்லையே!’ என்பதுதான்.
தந்தை பெரியாரின் கொள்கைகள் தமிழ்நாட்டையும் தாண்டி இந்தியத் துணைக் கண்டத்திற்கே தேவைப்படும் இன்றியமையாத ஒன்றாகி விட்டது.
எந்த சமூக நீதிக்காக தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினாரோ, அந்தக் காங்கிரஸ் சமூக நீதிக் கொள் கைக்காகக் கம்பீரமாகக் குரல் கொடுக்கத் துவங்கி விட்டது.
மக்களவை உறுப்பினரும், அகில இந்தியக் காங்கிரசின் மேனாள் தலைவருமான இராகுல் காந்தி அவர்களுடைய உரைகளில் எல்லாம் சமூகநீதி என்பது மய்யமிட்டு வருகிறது.
ஒன்றிய அரசில் 90 செயலாளர்கள் இருக்கின்றனர் என்றால் அதில் வெறும் மூன்று பேர்கள் தான் இதரப் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அவர் தெரிவித்த கருத்து புயலாக அகில இந்திய அளவில் வீசப் போகிறது. நடக்க விருக்கும் மக்களவைத் தேர்தலில் விழுமிய பிரச்சினையாக மக்கள் மத்தியில் இது அலை அலையாக வீசப் போகிறது.
செய்தியாளர்கள் சந்திப்பில் உங்களில் எத்தனைப் பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது இதர பிற்படுத்தப்பட்டவர்கள்?’ என்று வினா எழுப்பினாரே இளந்தலைவர் இராகுல் காந்தி. ஒருவரும் இல்லை என்பது தான் பதில்!
ஆம், தந்தை பெரியாரால், திராவிட இயக்கத்தால் இந்தத் திசையில் எப்பொழுதுமே எழுப்பப்படும் கேள்வியாகும்.
இக்கேள்வி இப்பொழுது இந்தியா முழுவதும் எழுப்பப் படும் கூர்முனையான கேள்வியாக எழுந்து நிற்கிறது. ஜாதிவாரி கணக்கெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அகில இந்திய அளவில் செங்குத்தாக எழுந்து நிற்கிறது என்றால் இதன் பின்னணியில் நிற்பது.. சமூகநீதிதான்! இதனைத் தெளிவாகப் புரிந்து கொண்ட நிலையில்தான் – சமூகநீதிக்கு எதிரான ஆர்.எஸ்.எஸைத் தாய் வீடாகக் கொண்ட ஒன்றிய பிஜேபி அரசு – இந்தப் பிரச்சினையில் போகாத ஊருக்கு இல்லாத வழியைக் காட்டிக் கொண்டு இருக்கிறது.
சென்னையில் கடந்த 14ஆம் தேதி தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட மகளிர் உரிமை மாநாட்டில் முழங்கிய அகில இந்திய அளவிலான முன்னணிப் பெண்களின் உரைகளில் எல்லாம் தந்தை பெரியாரின் பெயர் உச்சரிக்கப்பட்டது மட்டுமல்ல. அவர்தம் கொள்கைகளும் முன்னிறுத்தப்பட்டுள்ளன.
பிரியங்கா காந்தி தந்தை பெரியார் அவர்கள் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள்” என்ற நூலை எடுத்துக் காட்டிப் பேசினார் என்றால் நூல்களின் ஆதிக்கக் கயிறு அறுபடப் போகிறது என்பதற்கான அசைக்க முடியாத அறிகுறி அது!
ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணத்துக்கான பிரச்சார ஊர்தியின் சாவியை, நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் – மண்ணின் மைந்தர் மாண்புமிகு கே.என். நேரு அவர்கள் அளித்ததோடு மறைந்த முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் அணுகுமுறையையொட்டி ஒரு சவரன் தங்க நாணயத்தையும் ஆசிரியரிடம் அளித்த அந்தக் காட்சி கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் உள்ளத்திலே நெகிழ்ச்சி கலந்த உணர்ச்சி யாழ் நரம்பினை மீட்டியது. ஆம் அது ஓர் அபூர்வ இராகமாகும்.
விழாவில் பேசிய அத்தனைக் கட்சித் தலைவர்களும் தமிழ்நாடு பெரியார் மண்ணென்றும், பெரியாரைத் தொடர்ந்து தொய்வு இல்லாமல் அந்தக் கொள்கைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் – ஏனெனில் பிற்போக்கு – பாசிசக் காவி மேகம் – சூழ்ந்திருக்கும் ஒரு கால கட்டத்தில், தமிழர் தலைவரின் பிரச்சாரம் பெரும் அளவுக்குத் தேவைப்படுவதை விழாவில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளின் ஒவ்வொரு தலைவர்களும் உளமார எடுத்துச் சொன்னபோது – வெள்ளம்போல் கூடியிருந்த ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழர்களின் உள்ளங்களில் எல்லாம் ‘தகைசால் தமிழர்’ தலைவரின் பெரும் பயணத்தில் பங்கு கொள்ளவும் அவர் இடும் கட்டளைகளைக் கண்ணை மூடிக் கொண்டு, பின்பற்றிச் செயலாற்றவுமான பெரும் ஊக்கத்தை அளித்தது என்றே கருத வேண்டும். இப்பொழுது ‘விடுதலை’ சந்தா சேர்ப்பு முன்னிலை வகிக்கிறது – இந்த பே(£)ராயுதம் இப்பொழுது தேவை! தேவையே!!
பத்து வயதில் பார்த்து ‘இவரே எம் தலைவர் ஆசான்!’ என்று நெஞ்சில் வரித்துக் கொண்ட நம் தலைவர் விழா நாயகர் நமது ஆசிரியர் அவர்கள்” என் இறுதி மூச்சு அடங்கும் வரை தந்தை பெரியார் பணி முடித்துக் கிடப்பதே எம் பணி!” என்று சொன்னது உருக்கமானது. ஆம், இவர் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும், மூளையின் ஒவ்வொரு கட்டளையும் அதையே தான் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறது.
சமுதாயத்தை மட்டுமல்ல – அரசியலையும் வழி நடத்த வேண்டிய தந்தை பெரியாரின் கொள்கைத் தூதராக நம் தலைவர் நூற்றாண்டும் கடந்து வாழ வேண்டும் என்று தலைவர்கள் வாழ்த்தியதோடு – சமூகநீதியாளர்கள் சமதர்ம சமத்துவக் கொள்கையாளர்களின் எதிர்பார்ப்பும், வாழத்தும் அதுவேதான்; வீரமணி வென்றிடுக!
“வென்றிடுக! வெற்றிமணி ஒலித்திடுக!” என்ற முத்தமிழ் அறிஞரின் நல்லெண்ண வரிகளையும் நினைவூட்டி வாயார, மனமார, கையார வாழ்த்துவோம் – வாழ்த்துவோம்
வாழ்க பெரியார்!
ஆசிரியர் வீரமணி வென்றிடுக!