90 வயதில் 80ஆண்டு பொது வாழ்வுக்கு சொந்தக்காரரான
ஆசிரியர் அவர்களுக்கு பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழாவின் மாட்சி
திருச்சி, அக். 21- “ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்” தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர் களுக்கு பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழா நேற்று (20.10.2023) திருச்சி புத்தூர் நால் ரோட்டில் நடைபெற்றது.
இம்முறை எங்கள் வாக்கு இந்தியா கூட்டணி வெற்றிக்கே!
கருஞ்சட்டைகள் புடைசூழ மாபெரும் மாநாடு போல் நடைபெற்ற, வரலாற்று சிறப்பு வாய்ந்த கொள்கைப் பெருவிழாவில் மக்கள் கலை இலக்கிய மய்யக் கலைக்குழு சார்பில் தோழர் கோவன் தலைமையில் பொருள் பொதிந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு பாடலின் மூலமும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கினை அம்பலப்படுத்தினர். மேலும் இதுவரை ஒரு முறை கூட வாக்களிக்காத நாங்கள் இம்முறை இந்தியா கூட்டணி வெற்றிக்கு வாக்களிக்க இருக்கிறோம் என்று தோழர் கோவன் அறிவித்தார்.
“திராவிடர் மாடல்” ஒலி ஒளி காட்சிகள்!
அதனைத் தொடர்ந்து பெரியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் உருவாக்கப்பட்ட “திராவிடர் மாடல்” ஒளி ஒலி நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிட இயக்க சாதனைகள், தந்தை பெரியாரின் அடியொற்றி செயல்பட்ட அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், அவர்கள் வழியில் இன்று ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியின் சிறப்புகள் ஆகியவற்றைகளை நடத்தியதோடு முழு தொகுப்பாக வழங்கினர்.
நிகழ்வில் திராவிடர் கழகத் தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர் வரவேற்புரை ஆற்றினார். திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை உரை ஆற்றினார்.
வியப்பே வியக்கும் ஆசிரியரின் பிரச்சாரப் பெரும் பயணங்கள்!
கேட்பவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் கழகத் தலைவர் ஆசிரியரின் பிரச்சாரப் பெரும் பயணங்கள் குறித்தும், அவர் பயன்படுத்திய வாகனங்கள் பற்றியும் பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் அறிமுக உரை ஆற்றினார். அவரது உரையில்: ஆசிரியர் அவர்களுக்கு பெரியார் கொடுத்த வாகனம் தொடங்கி 1981, 1987, 1994, 1995, 2000, 2007, 2012, 2017ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட வாகனங்களைப் பட்டியலிட்டார். அவருக்கு கொடுக்கப்பட்ட வாகனங்கள் எல்லாம் ஓய்வுக்கு சென்று விட்டன ஆனால் ஆசிரியர் இன்னும் ஓடுகிறார் என்றார். ஆசிரியரின் பயண விவரத்தை அவர் விவரித்த போது வியப்பின் உச்சத்தில் அனைவரும் இருந்தனர்.
நிகழ்வின் முத்தாய்ப்பாக ஆசிரியரோடு கடந்த 26 ஆண்டு காலமாக பிரச்சாரப் பயணத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடக்காமல் பாதுகாத்து, சிறந்து விளங்கும் ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து பாராட்டு செய்யப்பட்டது. பிரச்சார வாகனத்தில் மட்டும் 5லட்சத்து 68ஆயிரம் கிலோ மீட்டர் ஆசிரியர் பயணம் மேற்கொண்டு இருக்கிறார் என்ற செய்தி யாரையும் வியப்பில் ஆழ்த்தாமல் இருக்காது. இம்முறை வாகனம் வாங்க 40 நன்கொடை யாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதம் கொடுத்த தகவலை தெரிவித்தார். பிரச்சார வாகனம் சிறப்பாக அமைந்து முழு வடிவம் பெற்று வருவதற்கு காரணமாக அமைந்த பொறியாளர்கள் அ.கபிலன், எ.சிற்றரசு ஆகியோருக்கு பாராட்டு செய்யப்பட்டது. ஆசிரியரோடு தொடர்ந்து 28 ஆண்டுகளாக பிரச்சாரப் பயணத்தில் நிழற் படக் கலைஞராகப் பயணிக்கும் போட்டோ சிவக்குமார் அவர்களுக்கும், கடந்த ஆறு வருடங்களாக ஆசிரியரின் பிரச்சாரப் பயணங்களில் மிகப் பெரும் உதவியாக இருந்து வரும் பிராட்லா அவர்களுக்கும், 40 நன்கொடையாளர் களுக்கும் பயனாடை அணிவித்து பாராட்டு செய்யப்பட்டது.
90 வயதில் 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கை!
யாருக்கு உண்டு இந்த விகிதாச்சாரம்?
நிகழ்வில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் தொடக்க உரை ஆற்றினார். அவரது உரையில் :
நமக்கெல்லாம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக இது அமையும் என்றார். இந்த நிகழ்வுக்காக பல்வேறு தலைவர்களை அழைத்து பேசியபோது ‘நாங்கள் எல்லாம் ஆசிரியர் ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லுகி றோம். இந்த நேரத்தில் அவரை அதிக வேலை வாங்க வேண்டுமா?’ என்று அன்பாக கூறியதை எடுத்துரைத்து, பத்து வயதில் மேடை ஏறி , ஒலிபெருக்கி முன்னால் நின்று மக்களை சந்தித்து இன்று தமிழர் தலைவராக இருக்கும் ஆசிரியர் அவர்களை பயணம் செய்யக்கூடாது; ஓய்வெடுங்கள் என்று சொல்லக்கூடிய தைரியம் எங்களுக்கு இல்லை நீங்கள் வேண்டுமானால் சொல்லுங்கள் என்று கூறியதை நினைவு படுத்தினார்.
ஆசிரியர் சொல்வது போல் மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை. நாட்டில் நடக்கும் நாட்டு நடப்புகளைப் பார்த்துவிட்டு எப்படி ஓய்வெடுக்க முடியும் என்று ஆசிரியர் கேட்பதைக் கூறி, ஓய்வென்றால் அது துருவுக்கு சமம் என்று சொன்ன பெரியாரின் தொண்டன் ஆகிய நான் எப்படி ஓய்வெடுக்க முடியும்? எனது கடைசி மூச்சு இருக்கின்ற வரை பயணிப்பேன் என்றுதான் ஆசிரியர் சொல்வார் என்றார்.
90 வயதில் 80 ஆண்டுகள் பொது வாழ்க்கை என்ற விகிதாச்சாரம் இதுவரை யாருக்கும் இல்லை. பெரியாரை ஏற்று, திராவிட சித்தாந்தத்தை ஏற்ற தமிழர் தலைவருக்கு மட்டும் தான் அது உண்டு என்றார். அந்தத் தலைவரின் கொள்கை இந்தியா முழுமைக்கும் தேவை. அதற்காகத்தான் “ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்” என்ற தலைப்பில் இந்த வேன் வழங்கப்படுகிறது என்றார்.
எங்கள் எல்லோருக்கும் கீ(key)
கொடுக்கும் வீரமணி!
“கடிகாரமும் கூட ஓடத் தவறிடும், இவரின் கால்களோ என்றுமே ஓடிடும்” என்ற வரிகளை நினைவு கூர்ந்து, “கி.வீரமணி என்றால் எங்கள் எல்லோருக்கும் கீ (key) கொடுக்கும் வீரமணி” என்று கலைஞர் கூறியதை நினைவு படுத்தி, “தேர்தலில் நிற்கவில்லை என்றாலும் யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்று சொல்லும் தலைவராக ஆசிரியர் இருக்கிறார் – அவரின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும்” என்று நிறைவு செய்தார்.
இதைவிட ஒரு பெருமை
எங்களுக்கு இல்லை:
பிரச்சார ஊர்தியின் திறவுகோல் வழங்கி நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
அவரது உரையில்:
“ஆசிரியருக்கு வழங்கப்படும் பிரச்சார ஊர்தியின் திறவுகோலை வழங்கும் வாய்ப்பை எங்களுக்கு கொடுத்திருக் கிறார்கள். இதைவிட ஒரு பெருமை எங்களுக்கு இல்லை” என்றார். “ஆசிரியர் பேசினால் கொள்கைகளை மிகக் கடுமை யாக பேசுவார் என்றெல்லாம் என்னிடம் சொல்லுவார்கள் ஆனால் நான் சொல்லுகிறேன் ஆசிரியர் அய்யா இருக்கிற காரணத்தினால் தான் இந்த ஆட்சி வந்தது” என்றார். கலைஞரை விட முதலமைச்சர் ஆபத்தானவர் என்று இன எதிரிகள் சொல்லுகிறார்கள் என்றால் அத்தகைய கொள் கையை முதலமைச்சர் பேசுகிறார். ஆசிரியர் பேசுகின்ற கொள்கைகளைத்தான் முதலமைச்சர் பேசுகிறார் என்றும், முதலமைச்சரிடம் இந்த நிகழ்ச்சிக்கு செல்வதை தெரிவித்த போது ‘ஏன் அவர் ஓய்வெடுக்காமல் இருக்கிறார்? அவரை ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள் அவரின் பணி நமக்குத் தேவை’ என்று கூறியதைத் தெரிவித்தார்.
ஆசிரியரைப் பார்த்ததாலேயே நான்கு முறை அமைச்சர் ஆகிவிட்டேன்!
மேலும் நிகழ்வின் தொடக்கத்தில் நடைபெற்ற “திராவிடர் மாடல்” ஒலி ஒளி நிகழ்வினை விவரித்து “திமுக கூட இப்படி ஒரு பிரச்சார நாடகத்தை எங்கும் நடத்தவில்லை” என்றார். “ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் பெரியார் கொடுத்த ஆதரவு, திராவிடர் கழகம் கொடுத்த ஆதரவு” என்றார். இன்றைக்கு தமிழ்நாட்டின் ஆட்சிக்கு சிறு அசம்பாவிதம் ஏற்பட்டால் கூட திராவிடர் கழகம் தான் ஆதரவாக நிற்கிறது, ஆசிரியர் தான் ஆதரவு தருகிறார்” என்றார்.
ஆசிரியரின் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் அந்தப் பயணங்களில் எங்கள் பயணமும் இணைந்திருக்க வேண்டும் என்றார். கல்லூரிப் பருவத்தில் வாகனத்தில் ஆசிரியர் வருவதை பார்த்து இருக்கிறேன் என்றும், ஆசிரியர் அய்யாவை பார்த்ததாலேயே நான்கு முறை அமைச்சராகி விட்டேன் என்றார். நீங்கள் இருக்கின்ற வரை தான் இந்த இயக்கத்திற்கு பலம் என்றும் ஆசிரியரின் பயணம் தொடர வேண்டும் என்றும் கூறி நிறைவு செய்தார்.
வாகனங்கள் நின்று விட்டன.
ஆனால் இவர் நிற்கவில்லை!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் என் பெரியசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில்: திரா விடர் கழகத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல் லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இல்லாமல், ஆசிரியர் அய்யாவின் மகனாக நின்று கழகத்தின் தொண்டனாக நின்று பேசுகிறேன் என்று கூறும் தோழர் முத்தரசன் அவர்கள் உடல் நல இன்மை காரணமாக நிகழ்ச் சிக்கு வர முடியாத செய்தியை பதிவு செய்தார்.
பத்து வயதில் தொடங்கிய ஆசிரியரின் பயணம் 90 வயதிலும் தொடர்கிறது. நாட்டில் நடைபெறும் அரசியல் போக்கு மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்றும், ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கு இது குடியரசு நாடா என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், பிஜேபியின் பாசிசப் போக்கை எதேச்சதிகாரப் போக்கினை விவரித்து 90 வயதானாலும் தாம் தேர்ந்தெடுத்து இருக்கின்ற பயணம் ஈரோட்டுப் பாதையில் தான் அமைய வேண்டும் என்று ஆசிரியர் இருக்கிறார் என்றார். ஆசிரியர் அய்யாவுக்கு கொடுத்த வாகனங்கள் நின்று விட்டன. ஆனால் இவர் நிற்க வில்லை என்றார். ஆசிரியரின் பயணம் இந்தியா கூட்டணி யின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும், முன்பைவிட தற் போது வட மாநிலங்களில் பெரியாரை எப்படி தேடி வாசிக் கிறார்கள் என்பதை விவரித்து, பெரியார் இன்றும் வாழ்கிறார் என்றால் அது ஆசிரியரின் தொடர் பயணத்தால் அமைந்தது என்றார்.
இந்த வாகனம் வெற்றிப் பயணம் தரும் வாகனமாக அமைய வேண்டும் என்றும், இந்த வாகனம் வாங்குவதற்கு நன்கொடைகள் வழங்கியவர்கள் சாதாரண தொண்டினை செய்யவில்லை ; மகத்தான தொண்டினை செய்து இருக்கிறார் கள் என்று அனைவரையும் பாராட்டி நிறைவு செய்தார்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும்
முதலில் பதில் தரும் ஒரு இதழ் இருக்கிறது என்றால் அது ‘விடுதலை’ தான்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் ஆசிரியருக்கு ஒரு விழா என்றால் நிச்சயம் வர வேண்டும் என்ற உள்ளத்துடிப்பு தனக்கு உண்டு என்றும், பெரியாராக , காமராஜராக ஆசிரியர் நமக்கு காட்சியளிக்கிறார் என்றார்.
ஆசிரியரின் இளமைக்குக் காரணம் அவரது வாழ்வியல் முறை மட்டுமல்ல, அவர் ஏற்றுக்கொண்ட கொள்கையும் தான் காரணம் என்றார். இந்தியாவில் பல்வேறு பிரச்சினைகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும், அதனைப் பற்றி அரசியல் கட்சிகள் கருத்து சொல்வதற்கு முன்னால் அனைத்து பிரச்சினைகளுக்கும் பதில் தரக்கூடியவராக ஆசிரியர் இருக்கிறார் அந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் முதலில் பதில் தரும் ஒரு இதழ் இருக்கிறது என்றால் அது ‘விடுதலை’ தான் என்றார்.
வேறு கட்சிகள் அதைப்பற்றி சிந்திப்பதற்கு முன்பே பதில் சொல்லி விடுகிறார் ஆசிரியர் என்றார். குறிப்பாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு, விஸ்வகர்மா யோஜனா திட்டம் போன்ற வைகளைப் பற்றி ஆசிரியர் தான் முதலில் அறிக்கை வெளியிட்டார் என்பதை எடுத்துரைத்தார். ஆளும் ஒன்றிய அரசி னுடைய மக்கள் விரோத போக்கை எடுத்துரைத்து, அதனை அரசியல் கட்சிகள் எதிர்ப்பதை விட திராவிடர் கழகமும், ஆசிரியரும் எதிர்க்கக்கூடிய ஒரு சிறப்பான பணியை செய்து வருகிறார்கள் என்றார்.
தந்தை பெரியார் காமராசரை ஆதரித்த விதத்தை எடுத்துரைத்து எந்தவித சுயநலமும் அரசியல் ஆதாயமும் இல்லாமல் மக்களுக்காக காமராஜரை ஆதரித்தது தான் தமிழ்நாட்டின் சிறப்பு என்றும், அந்த காமராஜரின் சிறப்புகளை எல்லாம் ஒரு நூலாக வெளியிட்டவர் ஆசிரியர் என்றார். கீழ் இருப்பவர்களை எல்லாம் மேலே கொண்டு வந்து அவர்களுக்கு வரவேற்பு தருவது தான் பெரியாரின் சிறப்பு, ஆசிரியரின் சிறப்பு என்றார்.
தொடர்ந்து மோடியின் அட்டூழியங்களை எடுத்துரைத்து, இன்று இந்தியா முழுமைக்கும் திராவிடர் சித்தாந்தம் எவ் வளவு தேவை என்பதை எடுத்துரைத்தார். குறிப்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பினுடைய முக்கியத்துவத்தை பற்றி ராகுல் காந்தி அவர்கள் பேசிய விதத்தினை விளக்கி, ராகுல் காந்தி அவர்கள் தன்னையும், கட்சியையும் முன்னிலைப் படுத்தாமல் அரசமைப்புச் சட்டத்தை, ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்துகிறார் என்றார்.
ஆசிரியரின் வலிமை, நேர்மை, அவரின் பயணத்தின் தேவையை நன்கு புரிந்தவர்கள் நாங்கள் என்றார். ராகுல் காந்தி அவர்களை பெரியார் திடலுக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண்டும் என்பது ஆசிரியரின் விருப்பமும், எனது விருப்பமும் கூட, ராகுல் காந்தி நிச்சயம் வருவார் என்று கூறி நிறைவு செய்தார்.
ஆசிரியர் ஒரு இயற்கை மனிதர்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில்: பெரியார் பிறந்தது வேண்டு மானால் ஈரோடாக இருக்கலாம் . ஆனால் அவரது பய ணத்தை தொடங்கிய, உறுதுணையாக இருந்த இடம் திருச்சி என்றார். அப்படி திருச்சியில் தொடங்கிய பெரியாரின் அனைத்துப் பயணங்களும் வெற்றிப் பயணங்களாகவே அமைந்தன அதேபோல் ஆசிரியரின் பயணமும் வெற்றிப் பயணமாக அமையும் என்றார்.
வெற்றிப் பயணமாக மட்டுமின்றி சமூகத்தை, நாட்டைத் திருத்தி அமைக்க வேண்டிய பயணமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார். ஓய்வெடுக்க வேண்டும் என்கிறார்கள் ஆனால் ஆசிரியர் தேர்ந்தெடுத்துள்ள பாதை ஈரோட்டுப் பாதை அந்தப் பாதையில் பெரியார் வகுத்த திட்டங்கள் தான் நாட்டை திருத்தும் திட்டங்கள் என்றார்.
ஆசிரியர் அவர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும், கடல் கடந்தும் செல்ல வேண்டும் என்றார்.
உலக நாடுகளில் எல்லாம் பெரியார் அவர்களுக்கு விழா நடத்திய ஆசிரியர் அவர்களை குறிப்பிட்டு, உலகத்திற்கு சொந்தமானவர் பெரியார் என்பதை ஆசிரியர் நிரூபித் திருக்கிறார் என்றார்.
ஆசிரியர் ஒரு இயற்கை மனிதர். இயற்கையில் தானாக எதுவும் நின்று விடுவதில்லை அதே போல் ஆசிரியரின் பயணம் தொடர்ந்து நடக்கும். காரணம் அவர் இயற்கை மனிதர் என்றார். ஆசிரியரின் அற்புதமான பயணத்திற்கு வாகனம் வழங்கிட வேண்டும் என்று நன்கொடை வழங்கிய வர்களை பாராட்டி, 28 ஆண்டு காலம் அல்ல இன்னும் 200 ஆண்டுகள் காலமானாலும் ஓட்டுநர் எந்தவித அசம்பா விதமும் நடக்காமல் பார்த்துக் கொள்வார்.காரணம் பெரியார் போட்டு தந்த பாதையில் பயணிக்கிறார்கள் அந்தப் பாதையில் ஒருபோதும் அசம்பாவிதம் நடக்காது என்று பெருமையுடன் தெரிவித்தார்.
நீங்கள் செல்லும் இடமெல்லாம் இஸ்லாமிய சகோதரர்கள் வருவார்கள்!
ஆசிரியரின் பயணம் நீடித்த பயணமாக அமைய வேண்டும் என்று,ம் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி கேட்ட கேள்வியின் மூலம் பெரியாரின் கொள்கை இன்றைக்கு நாடாளுமன்றத்தை எட்டிவிட்டது. அது உலகம் முழுவதையும் எட்ட வேண்டும் என்பதை காட்டுகிறது என்றார். ஆசிரியர் செல்லக்கூடிய இடங்களில் அனைத்து இடங்களிலும் இஸ்லா மிய சமூகத்தினர் வருவார்கள் உங்களோடு நிற்பார்கள். ஓய்வில்லாமல் உங்கள் பயணம் தொடர வேண்டும் அது வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.
திராவிட சாலை; வாகனத்தில் செல்வது நமது வெகுமானம்!
ஊர்தி வழங்கும் விழாவின் வரலாற்று சாதனைக்கு பின்னிருக்கும், எளிய தொண்டர்கள்!
ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம் எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு திருச்சி நால்ரோட்டில் நேற்று (20.10.2023) பரப்புரைப் பயணத்திற்கான ஊர்தி வழங்கும் விழா ஒரு மாபெரும் மாநாடு போல நடைபெற்றது. அதில் நகர்ப்புறத் துறை வளர்ச்சி அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்கள் ஊர்தியின் திறவுகோலையும், ஒரு சவரன் தங்க நாணயத்தையும் வழங்கினார். ஒட்டுமொத்த பார்வையாளர் களின் உணர்ச்சிகரமான கரவொலிக்கிடையில் இது நிகழ்ந் தது. இந்த விழாவிற்காக பின்னணியில் இரு தோழர்களின் அயர்வில்லாத உழைப்பு ஒப்பு உவமை இல்லாதது.
பத்து நாளைக்கு முன்னதாகவே திருச்சி மாநகரம் முழுவதுமாக சங்கீதா, அமுதா, வசந்தி, பேபி, மகாமணி, இராஜசேகர், பொன்னுச்சாமி, அறிவுச்சுடர், குமரேசன், சங்கிலி, முத்து, கனகராஜ், பெருமாள், பிரவீன், தமிழ்மணி, அண்ணாதுரை, முபாரக் அலி, மோகன்தாஸ், கோகுல் ஆகியோர் கடைவீதிகளில் துண்டேந்தி நிதி திரட்டினர். இது வெறுமனே நிதி திரட்டுவதாக மட்டும் அமையாமல், மாபெரும் பிரச்சாரமாகவும் அமைந்து திருச்சி முழுவதுமே பேசு பொருளாகிவிட்டது. இதிலிருந்து தப்பியவர்களை நகர் முழுவதும் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் ஈர்த்தன. இதில் புகழேந்தி, அசோகன், முருகன் ஆகிய தோழர்கள் முழு ஈடுபாட்டுடன் சுவர் விளம்பரங்கள் செய்து மாநாட்டை மக்களிடம் கொண்டு சேர்த்திருந்திருந் தனர். பொறியாளர் கபிலன், ஆடிட்டர் ராமச்சந்திரன், பெரியார் மாளிகை தங்காத்தாள், துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், ஊமை ஜெயராமன், முல்லை மதிவாணன், மருத்துவர் கவுதமன், ஆடிட்டர் சண்முகம், திருமதி பர்வீன், டேவிட் செல்லத்துரை, பொறியாளர் எழிலன், வழக்குரைஞர் த.வீரசேகரன், பொருளாளர் வீ. குமரேசன், பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன், டாக்டர் தமிழ்மணி, வழக்குரைஞர் அமர்சிங், எடிசன் ராஜா, பேராவூரணி சிதம்பரம், தவமணி, பேராசிரியர் சுப்பிர மணியம், இளங்கோவன், பகுத்தறிவாளர் அரூர் ராஜேந் திரன் உள்ளிட்ட 40 பேராளர்கள் ஊர்திக்கு தலா ஒரு லட்சம் நிதி கொடுத்து இந்து வி££ சிறப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.
இந்த மகத்தான் உழைப்பின் பின்னணியில் ஊர்தி வழங்கும் விழா திராவிடர் கழக வரலாற்றின் ஒரு கல் வெட்டு போல் பதியப்பட்டு விட்டது. காரணம், இது 9ஆவது ஊர்தி என்று பெரியார் வீர விளையாட்டு கழகத் தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியம் மேடை யிலேயே அறிவித்தார். மேடையிலிருந்த அனைத்து தலை வர்களுமே இந்த வரலாற்றுக் குறிப்பை ஏற்பது போலவே பேசியிருந்தனர். ஆகவே இது வரலாறு ஒரு முத்திரை பதித்த சாதனையாக நிலைபெற்றுவிட்டது. இதில் பின்னணி யில் கண்ணுக்குத் தெரியாமல் கடைவீதியில் நிதி திரட்டிய வர்கள், சுவரெழுத்து எழுதியவர்கள், ஊர்திக்கு நிதி தந்த வர்கள் என அனைவரும் இந்த வரலாற்றுச் சாதனையில் தாங்களும் ஒரு நிரந்தர சிறப்பிடம் பெற்று விட்டனர்.
பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரை யாற்றினார். அவரது உரையில்: இந்த நிகழ்வு ஒரு வித்தியாச மான நிகழ்வு என்றும், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
50 ஆண்டுகள் கழித்தும் நான் சொல்வேன், ஆசிரியரின் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன் என்பதை என்று பெருமிதத்துடன் பதிவு செய்தார். ஆசிரியரின் பாதை என்பது சமத்துவம், சமூகநீதி, மாநில உரிமைகளை எடுத்துரைக்கும் பாதை என்றார். திராவிடத் தளபதியை நமக்கு அடையாளம் காட்டியவர் ஒரு ஆசிரியர் என்பதில் பள்ளிக்கல்வி துறையின் அமைச்சரான எனக்குப் பெருமை உண்டு என்றார்.
ஆசிரியர் அவர்களை பல நேரம் தந்தை பெரியார் அவர்கள் பாதுகாத்து இருக்கிறார் என்றார். குறிப்பாக “நீதி கெட்டது யாரால்?” என்ற புத்தகத்தை ஆசிரியர் எழுதிய போது நடந்தவற்றை விவரித்தார். பெரியார் ஆசிரியரை அரவணைத்தார் என்றால் எங்களது தலைவர் தளபதி அவர்களை நெருக்கடி நிலையில் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் ஆசிரியர் பாதுகாத்தார் என்றார். பெரியார், கலைஞர் அவர்களின் வயதைத் தாண்டியும் நமது ஆசிரியர் பயணிக்க வேண்டும் என்றார். அவர் செல்லும் சாலை திராவிட சாலை. அந்த திராவிட சாலையில் செல்வது வெறும் வாகனம் மட்டுமல்ல; நம் நாட்டிற்கு இனத்திற்குக் கிடைத்த வெகுமானம் செல்ல இருக்கிறது. இந்த உணர்வில் தான் நான் இங்கு கலந்து கொண்டேன் என்று கூறி நிறைவு செய்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திராவிடர் கழகத்துடன் இருக்கிறது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி அவர் கள் சிறப்புரை ஆற்றினார் அவரது உரையில்:
ஆசிரியரின் பயணங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை விவரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் திருச்சியில் நடத்திய ஸநாதன எதிர்ப்பு மாநாட்டின் நோக்கத்தை விவரித்தார்.
முதலமைச்சரின் சனாதன எதிர்ப்பு கருத்துக்கள் பேசப்பட காரணம் பெரியார் அவர்களின் வழிவந்த ஆசிரியர் என்றார். மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களின் உரை இன்றைக்கு இவ்வளவு பெரிய எதிர்ப்புகளுக்கு உட்படுத்தப் படுகிறது என்றால், அந்த ஸநாதன கருத்தினை எல்லோரும் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த உணர்வினை ஏற்படுத்தியது திராவிடர் கழகமும் ஆசிரியரும் என்றார்.
ஆசிரியரின் பயணம் சரியான பயணமாக அமைந்துள்ளது என்றும். இந்தப் பாதை, பயணம் தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுவதும் செல்ல வேண்டும் என்றார். அந்த பயணத்தில் நாங்களும் உங்களோடு இருக்கிறோம் என்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திராவிடர் கழகத்தோடு இருக்கிறோம் என்பதைவிட, இருக்கிறது என்பதுதான் உண்மை என்று கூறி நிறைவு செய்தார்.
திசை காட்டுகின்ற கலங்கரை விளக்கமாக இருந்து இந்தியாவுக்கு வழிகாட்டுங்கள்!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொரு ளாளர் மு.செந்திலதிபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
அவரது உரையில் :
பத்து வயதில் பெரியாரை சந்தித்து பெரியாரின் கொள் கையை ஏற்றுக்கொண்டு, எண்பது ஆண்டுகாலம் தொடர்ந்து அந்தப் பாதையில் ஆசிரியர் இருப்பதை விவரித்து, மானமும் அறிவும் உள்ள சமூகமாக இந்த சமூகத்தை மாற்ற வேண்டும் என்பதே பெரியாரின் பாதை. அந்த பாதையில் 80 ஆண்டுகளாக ஆசிரியர் பயணிக்கிறார் என்றார்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புத்தூர் பகுதியில் இந்த நிகழ்வு நடக்கிறது என்றும், முதன் முதலில் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்ட பிறகு நடைபெற்ற மாநாட்டில் 12 வயது சிறுவனாக ஆசிரியர் பேசியதை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து, சிறுவனாக “போர்க்களம் நோக்கி” என்று ஆசிரியர் பேசியதை நினைவுகூர்ந்து, இன்றும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ போர்க்களத்தில் நிற்கிறார் ஆசிரியர் என்றார்.
ஆசிரியரின் கரத்தைப் பிடித்து கண்களில் அவர் ஒத்திக் கொண்டதற்கு காரணம் ,இது சாதாரண கரம் அல்ல; பெரியாரை கரம் பிடித்த கரம்; கலைஞரின் கரம் பிடித்த கரம்; இந்திய சமூகநீதி தலைவர்களின் கரம் பிடித்த கரம்; இந்தியா வுக்கு வழிகாட்டும் தலைவர் ஆசிரியர் என்று சொன்ன வி.பி.சிங்கின் கரம் பிடித்த கரம் என்று உணர்ச்சியுடன் பதிவு செய்தார்.
சமூக நீதியில் ஆசிரியர் பயணம் குறித்து விவரித்து 69% இட ஒதுக்கீடு, நீட் எதிர்ப்பு, விஸ்வகர்மா யோஜனா எதிர்ப்பு என்ற ஆசிரியரின் தொடர் பயணங்களை விவரித்தார். இதழ் பணியில் 61 ஆண்டு காலம் ஒரு இதழின் ஆசிரியர் என்ற பெருமைக்கு உரியவர் நமது ஆசிரியர் என்றும், வி.பி.சிங் கூறியதை நினைவுபடுத்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு ஆசிரியர் இந்தியா முழுமைக்கும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், திசை காட்டுகின்ற கலங்கரை விளக்கமாக இருந்து, இந்தியாவுக்கு வழிகாட்டுங்கள் என்று கூறி நிறைவு செய்தார்.
இது வெறும் பிரச்சார வாகனம் அல்ல!
‘தீக்கதிர்’ நாளேட்டின் பொறுப்பாசிரியர் மதுக்கூர் ராம லிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
அவரது உரையில்:
ஆசிரியர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரச்சார வாகனம் ஒரு வாகனமாக மட்டும் அவருக்கு தெரியவில்லை என்றும், ஒரு ‘ஆம்புலன்ஸாக’ தெரிகிறது. காரணம் சமூக நீதி எங்கெல்லாம் அடிபட்டு இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த ஆம்புலன்ஸ் செல்லும் என்றார். தீயணைப்பு வாகனம் போல் தெரிகிறது மதவெறி தீ எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு இந்த வாகனம் செல்லும் என்றார். புல்டோசர் அரசியல் செய்யக்கூடியவர்களுக்கு எதிராக போர் குரலாக இந்த வாகனம் நிற்கும் என்றார்.
தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் எத்தனையோ மாநாடுகள் நடத்தி இருக்கிறோம். ஆனால் நாங்கள் நடத்திய ஒரு மாநாடு இந்தியா முழுமைக்கும் பேசுபொருள் ஆகிவிட்டது என்றும், அந்த ஸநாதன ஒழிப்பு மாநாட்டை தொடங்கி வைக்க ஆசிரியரை அழைத்தோம்.
ஸநாதன ஒழிப்பு மாநாட்டை தொடங்கி வைக்க ஆசிரிய ரைத் தவிர வேறு யார் வர முடியும் என்றார். ஆசிரியரின் வாழ்க்கை அவ்வளவு நேர்த்தியான வாழ்க்கை என்றும், தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறார். புதிய புத்தகத்தை எழுதிக் கொண்டே இருக்கிறார் என்றார்.
பார்க்கும்போதெல்லாம் தங்களுக்கு அவர் எழுதிய ஒரு புதிய புத்தகத்தை தருகிறார். எப்படி அவரால் இவ்வளவு எழுத முடிகிறது என்று ஆச்சரியம் மேல் எழுகிறது என்றார். ஆசிரியர் வாகனத்தின் மீது தாக்குதல்கள் நடைபெற்றிருக்கிறது என்றால் அவ்வளவு பெரிய தாக்குதலுக்கு எதிரிகள் இவரால் ஆளாகி இருக்கிறார்கள் என்று அர்த்தம் என்றார்.
இதுபோல் இன்னும் நாலு வாகனங்கள் நிச்சயம் ஆசிரியருக்கு தேவைப்படும் என்றார். ஆனால், பத்து வயதில் வந்த போது அவரிடம் இருந்த அதே வேகத்துடன் இந்த வாகனம் (ஆசிரியர்) மட்டும் தான் செயல்படுகிறது என்றார். காலையில் பெரியார் உலகத்தை சென்று பார்வையிடுகிறார், தொடர்ந்து தலைமைச் செயற்குழு, மாலை இந்த நிகழ்ச்சி என்று எப்படி ஆசிரியர் சுறுசுறுப்பாக செயல்படுகிறார் என்பதை விவரித்தார்.
“பெரியாரை உலகமயமாக்குவோம்” என்கிறார் ஆசிரியர். இன்றைக்கு நாடாளுமன்றத்தில் பெரியாரின் குரல் எப்படி ஒலித்து இருக்கிறது என்பதை விவரித்து, இது ஆசிரியர் அய்யாவின் பேச்சுகளுக்கும், எழுத்துக்களுக்கும் கிடைத்த வெற்றி என்றார். மதவெறிக்கு எதிரான போரில் இந்த வாகனம் நிற்கும் அதில் நாங்களும் நிற்போம் என்று கூறி நிறைவு செய்தார்.
நிகழ்வில் திருச்சி மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா கணேசன் நன்றி உரை ஆற்றினார்.
வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வினை கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரையாற்றி ஒருங்கிணைத்தார்.
தொகுப்பு: சே.மெ.மதிவதனி