சென்னை, டிச.24- 50 ஆண்டுகாலத்தில், பெரியார் வென்ற களங்கள் ஏராளம்! அதுபோலவே, தேர்தல் களத்திலும் வென்று, புதியதோர் இந்தியாவை உருவாக்கு வோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (24.12.2023) பகுத்தறிவுப் பகலவன் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள். சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
அனைவருக்கும் வணக்கம்! உலகம் முழுவதும் இன்றைக்குப் பெரியார் பயணம் செய்து கொண்டிருக்கிறார்!
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கை 50 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தாலும், அவருடைய கொள்கை சுற்றுப் பயணம், லட்சியம் முடிவுறாது – இந்தியாவைத் தாண்டி, தென்கிழக்கு ஆசியாவைத் தாண்டி உலகம் முழுவதும் இன்றைக்கு அவை பயணம் செய்து கொண்டிருக்கின்றன.
பெரியார் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல –
பெரியார் என்பவர் ஒரு தத்துவம் – ஒரு திருப்பம் –
ஒரு நூற்றாண்டு கால சகாப்தத்தை உருவாக்கி, மேலும் பல சகாப்தங்களுக்கு வழிகாட்டி நெறியாக இருக்கக்கூடிய அந்தத் தத்துவம், உலகம் முழுவதும் இன்றைக்குப் பயணம் செய்துகொண்டிருக்கின்றது.
பேராயுதமாக, போராயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்!
பெரியாரை பார்த்திராதவர்கள் உருவத்தால், கொள்கையால் ஈர்த்திருக்கிறார்கள், அவருடைய கொள் கையை பேராயுதமாக, போராயுதமாகப் பயன்படுத்து கிறார்கள்.
இந்த நேரத்திலும் பெரியார், பலருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். பெரியார் என்ற தத்துவம்தான், ஜாதிப் பிணி போக்கும் மருத்துவமாகும்.
அந்த ஜாதி, வருண தர்மத்தை ஆர்.எஸ்.எஸ்., ஹிந்துத்துவத்தை மீண்டும் இந்தியாவிலே அடைக்க வேண்டும், புதிதாகத் தழைக்கச் செய்யவேண்டும் என்ற சவால் இன்றைக்கும் பெரியாருடைய தத்துவத்திற்கு முன், பெரியார் அணிக்கு முன்னால் இருக்கிறது.
பெரியார் போராட்டக் களத்தில் நின்றாகவேண்டும்; வென்றாக வேண்டும்!
எனவேதான், இன்றைக்கும் பெரியார் போராட்டக் களத்தில் நின்றாகவேண்டும்; வென்றாக வேண்டும் என்ற அவசியத்தில் இருக்கிறார்கள்.
அதன்படி, இப்பொழுது உள்ள நிலை- தெளிவான ஓர் அறைகூவல். அதை பெரியார் ஏற்கிறார் – ஏற்பார் – வழக்கம்போல வெற்றி பெறுவார்.
சமூகநீதி இந்தியாவை உருவாக்குவோம்!
ஹிந்துத்துவ இந்தியாவை – வருண தர்மத்தைக் காக்கின்ற ஹிந்துத்துவ இந்தியாவை மாற்றி, ”அனை வருக்கும் அனைத்தும்” – ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பேதமிலா பெருவாழ்வு வாழக்கூடிய, ஒரு சமூகத்தை – சமூகநீதி இந்தியாவை உருவாக்குவோம்.
அந்த இந்தியா, திராவிட இந்தியா!
எனவே, இப்பொழுது போராட்டக் களம் தேர்தலாக இருந்தாலும்கூட, ஹிந்துத்துவ இந்தியாவிற்கும், பேதம் வளர்க்கும் ஹிந்துத்துவ இந்தியாவிற்கும், வருணத்தைப் பாதுகாக்கும்
ஹிந்துத்துவ இந்தியாவிற்கும் – அதேநேரத்தில், சமத்துவத்தை வலியுறுத்தக் கூடிய திராவிட இந்தியாவிற்கும் நடைபெறக்கூடிய போராட்ட மாக இந்தத் தேர்தல் களமும் அமைகிறது.
பெரியார், அதற்குரிய விடையைத் தருவார்!
மக்கள் மத்தியில் பெரிய புரட்சியை உண்டாக்கி வெல்வார்!!
தேர்தல் களத்திலும் வென்று, புதியதோர் இந் தியாவை உருவாக்குவோம்
இந்த 50 ஆண்டுகாலத்தில், அவர் வென்ற களங்கள் ஏராளம்! அதுபோலவே, தேர்தல் களத்திலும் வென்று, புதியதோர் இந்தியாவை உருவாக்குவோம் – இதுவே பெரியார் நினைவு நாள் செய்தியாகும்!
மழை வெள்ளப் பிரச்சினையை அரசியலாக்குகிறார்கள்!
செய்தியாளர்: மழை வெள்ளப் பாதிப்பு அரசியல் விவாதமாக மாறியிருக்கிறதே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: இதைவிட மனிதத் தன்மையற்ற, மக்கள் விரோத செயல் வேறு கிடையாது. இதற்கு வாக்குப் பெட்டிமூலம் தமிழ்நாட்டு மக்கள் தாராளமாக பதில் சொல்வார்கள்.
அதேநேரத்தில், மேடைகளிலும் அதனை எதிர்கொள்வார்கள்.
கொஞ்சநஞ்சம் துளிர்க்கலாம் என்று இருக்கின்ற அவர்களுடைய நம்பிக்கையை நாசப்படுத்துகின்ற நல்ல பணியை, இப்பொழுது காவிகள் இந்த மழை வெள்ளத்தைப் பயன்படுத்தி, காவிகள் செய்திருக் கிறார்கள்.
மிகப்பெரிய சாதகமாக மக்கள் ஆக்கிக் கொள்வார்கள்!
அதற்கு ஒரு நிதியமைச்சரே வழிகாட்டியிருக்கிறார். நிச்சயமாக, அவை அத்தனையையும் மிகப்பெரிய சாதகமாக மக்கள் ஆக்கிக் கொள்வார்கள்.
எவையெல்லாம் எங்கள்மீது வீசப்பட்ட அசிங் கங்களோ, குற்றங்களோ, அவையெல்லாம் திராவிடப் பயிர் வளரக்கூடிய உரங்களாக மாற்றப்பட்டதுதான் வரலாறு. இதுவும் அதுபோன்றதுதான்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடையே கூறினார்.