நூல்:
“பெரியார்’ மறைந்தார்.
பெரியார் வாழ்க
தொகுப்பாசிரியர்: கி.வீரமணி
திராவிடர் கழக வெளியீடு
பக்கங்கள் 360
நன்கொடை ரூ. 250/-
இங்கிலாந்து நாட்டின் அரசர்கள் மறைந்த போது வழக்கமாக சொல்லப்படுவது, The King is dead. Long live the King – அரசர் மறைந்தார். அரசர் வாழ்க! இதன் பொருள், அரசப் பொறுப்பில் இருந்த அரசர் மறைந்தார். ஆனால் அரசர் என்ற அமைப்பு நிலையானது. அது தொடரும். அதற்கு முடிவு இல்லை.
அதுபோல பெரியார் என்ற ஒரு தனி மனிதர் மறைந்து விட்டார். ஆனால் பெரியார் என்ற தத்துவம் மறையாது, என்றும் வாழும், வளரும்! என்ற அர்த்தத்தில் வைக்கப்பட்டதுதான் இந்த நூலின் சிறப்பான தலைப்பு.
இந்தியாவில் எந்த ஒரு தலைவருக்கும், இதுவரையில் இல்லாத வகையில் இப்படி ஒரு ஆவணம் தொகுக்கப்பட்டு நூலாக வெளி வந்தது இல்லை!
பெரியாரின் மறைவு பற்றியும், அந்த நாளில் நடந்த சம்பவங்கள் பற்றியும், பொதுமக்களின் உணர்ச்சிகள் பற்றியும், இறுதி ஊர்வலம் பற்றியும், அவரது இறுதி அடக்கம் பற்றியும், தலைவர்களின் இரங்கல்கள் பற்றியும் விரிவாக தகவல்கள் தரப்பட்டுள்ளன.
தினசரிகளில் வெளியான இரங்கல் செய்திகள், அரசு மரியாதை ஆணை, இறுதி ஊர்வல ஒளிப்படங்கள், பெரியார் மறைவுக்குப் பின்னே தலைவர்களின் பேட்டிகள் என – பெரியார் அடக்கம் வரை எல்லாம் அடக்கம் இந்த ஆவண நூலில்!
இந்த நூலில் மிகச் சிறந்த அத்தியாயமாக – ‘ பெரியார் பற்றி பெரியார் ‘ அமைந்துள்ளது.
பெரியார் தன்னைப் பற்றி கூறியதை, சிறப்பாக ஒவ்வொரு பக்கத்துக்கு ஒரு செய்தியும், ஒரு பெரியார் ஒளிப்படமும் என அழகுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் வடிவமைத்த தொகுப்பாசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி நம் பாராட்டுக்குரியவர்!
பெரியார் பற்றி பெரியார் – பகுதிகளிலிருந்து சில :
“எனது சீர்திருத்தம் எல்லாம் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து சரி என்று பட்டபடி நடவுங்கள் என்பதேயாகும்!”..(‘குடிஅரசு’ – 24.11.1940 )
“என் மனத் திருப்தியை முன்னிட்டே தான் நான் எந்த காரியத்தையும் செய்கிறேன். எனக்கு மனத் திருப்தி இல்லாமல் யாரையோ திருப்தி, அதிருப்தி செய்ய நான் எதுவும் செய்வதில்லை!”… (‘விடுதலை’ – 30.07.1953 )
என்னையே நீதிபதியாகக் கொண்டு எனக்கு சரி என்று பட்டதையும் தேவை என்று பட்டதையும் செய்தேன்!” … (‘விடுதலை’ – 17.06.1963 )
துறவிக்கு வேந்தன் துரும்பு என்பார்கள். எனக்கு வேந்தன் மாத்திரம் துரும்பல்ல. கடவுள் துரும்பு; வேத சாஸ்திரங்கள் துரும்பு; ஜாதி துரும்பு; அரசியலும் துரும்பு!”.. (‘விடுதலை’ – 15.10.1967)
மூடநம்பிக்கைகள் ஒழிய வேண்டுமென்கிற சீர்திருத்தவாதி ஆனதால், எனக்கு மதம் – கடவுள் – புராணப் பற்றோடு, நாட்டுப்பற்று, மொழிப் பற்று, இலக்கண இலக்கியப் பற்று கிடையாது. மனிதப் பற்று – சமுதாயப் பற்று ஒன்றுதான் எனக்கு உண்டு! “.. (‘விடுதலை’ – 07.08.1968)
அரிய தகவல்கள் நிறைய உள்ளன. அதில் மிக முக்கியமான தகவலாக எனக்குப் பட்டதை குறிப்பிடுகிறேன்.
அய்யாவுக்கு அரசு மரியாதை என்ற அத்தியாயத்தில் தந்துள்ள காட்சி:
முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர், தந்தை பெரியாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகளை நடத்த விரும்புகிறார். தலைமை செயலரை அழைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்கிறார்.
பெரியாரின் உடலை ராஜாஜி மண்ட பத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவும் சொல்கிறார். தலைமை செயலரோ, பெரியார் அரசுப் பொறுப்புகள் எதிலும் இல்லாத காரணத்தால், அரசு மரியாதை செய்வதற்கு விதிமுறைகளின்படிவழியில்லை என்கிறார்!
“காந்தியார் எந்த அரசுப் பொறுப்பில் இருந்தார்? அவருக்கு எந்த விதிமுறைகளின்படி அரசு மரியாதை தரப்பட்டது? எனவே, நாம் விரும்பியபடி பெரியாருக்கு அரசு மரியாதை தரப்பட்டே ஆகவேண்டும்.
அதனால் தி.மு.க. அரசு கலைக்கப்படக் கூடிய நிலை தோன்றுமானால், அதைவிட பெரிய பேறு எனக்கு இருக்க முடியாது!”… என தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, தந்தை பெரியாரின் தொண்டராக ஆணைகளை பிறப்பிக்க வைத்தார் கலைஞர்!
அதனால், பெரியாரின் இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடந்தேறியது!
வரலாற்று சிறப்புமிக்க தகவல் இது! ஒவ்வொரு பெரியாரியவாதியிடமும் இருக்க வேண்டிய நூல் இது!
தொண்டு செய்து பழுத்த பழம் !
தூய தாடி மார்பில் விழும் !
மண்டை சுரப்பை உலகு தொழும்!
மனக்குகையில் சிறுத்தை எழும் !
அவர் தாம் பெரியார் – பார் அவர் தாம் பெரியார் !
– புரட்சி கவிஞர் பாரதிதாசன்