150 ஆண்டுகள் பெய்யாத பெரு மழையும், வெள்ளமும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ள தீரா வேதனையும் ஆறாத் துயரும் துடைக்கப்பட தமிழ்நாடு அரசு – முதலமைச்சர், அமைச்சர் பெரு மக்கள், அதிகாரிகள் மற்றும் பல தொண்டற அமைப்புகள் வெள்ளம் வடிந்தாலும் – வடியாத கண்ணீர் வெள்ளத்தை வடிய வைக்கும் வகையில் பல நிவாரண உதவிகளை நீந்தியும், படகு விட்டும் உதவுவது சிறந்த பாராட்டத்தக்க மனிதநேயம்.
நமது தோழர்கள் பெரியார் தொண்டறக் குழுவினரும், மருத்துவக் குழுவினரும் சென்னை, திருவள்ளூர், செங்கற்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் உதவியது போல், பெரியார் மருத்துவக் குழுவினரும் முகாம்கள் அமைத்தும், மருந்துகளைத் தந்தும் உதவும் தொண்டறம் போற்றத்தக்கது; பின்பற்றத்தக்கது.
ஏராளமான இளைஞர்கள் பகுத்தறிவு பெரியாரிஸ்டுகள், ‘மனிதனை நினை’ என்ற தந்தை பெரியாரின் ஆக்கப் பூர்வ கட்டளைக்கு உருவம் தந்து செயல் வடிவம் காட்டியது பாராட்டத்தக்கது.
தொடரட்டும் தொண்டறப் பணிகள்!
தலைவர்,
திராவிடர் கழகம்