சூரியக் குடும்பத்தில் பூமியை போலவே அளவுள்ள புதிய கோள் ஒன்று இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பூமி (representational)
சூரியனைச் சுற்றி வரும் கோள்களின் எண்ணிக்கை விரைவில் ஒன்று அதிகரிக்கலாம் என சமீபத்திய ஆய் வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. ஜப்பான் ஆராய்ச்சி யாளர்கள் சூரிய மண்டலத்தின் தொலைதூரத்தில் மற்றொரு கோள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர். இது பிளானட் 9 அல்லது பிளானட் எக்ஸ் என்று அழைக்கப் படுகிறது. பல ஆண்டுகளாக உலகில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நெப்டியூனின் சுற்றுப் பாதைக்கு அப்பால் ஒரு கோளைத் தேடி வருகின்றனர்.
சூரியக் குடும்பம்
இது சூரியனில் இருந்து மிக மிக தொலைவில் உள்ளதால் அதை அடையாளம் காண்பதில் பல சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். நெப்டியூனுக்கு அப்பால் உள்ள வளி மண்டலம் கைபர் பெல்ட் பகுதி என அழைக்கப்படுகிறது. அது புளூட்டோ (புளூட்டோ குள்ள கிரகமாக 2006இல் தரமிறக்கப்பட்டது) உள்பட அய்ந்து மிகச் சிறிய கோள்களின் தாயகமாக அறியப்படுகிறது. ஆனால் அங்குதான் தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய கோள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளனர்.
நெப்டியூன் அல்லது பிற நட்சத்திர அமைப்புகளின் ஈர்ப்பு விசை போன்ற மாதிரிகள் கணக்கிடப்பட்ட பின்னரும், தாங்கள் எதிர்பார்த்த வடிவங்களுக்குப் பொருந்தாத சுற்றுப் பாதை கைபர் பெல்ட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஒரு புதிய கோள் அங்கு இருப்பதே வித்தியாசமான சுற்றுப் பாதைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சி யாளர்கள் கணித்துள்ளனர். மேலும் அது பூமியின் அளவில் உள்ளதாகவும் அது சூரியனில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால் அந்த கோள் முழுவதும் பனிக்கட்டியாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். எனவே இதை ‘சூப்பர் எர்த்’ என்றும் ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர்.
புதிய கோளின் ஆய்வுகள் இன்னும் ஆரம்பநிலையி லேயே உள்ளன. என்னதான் இதை ‘சூப்பர் எர்த்’ என்று குறிப்பிட்டாலும் அதை பிளானட் 9 என்று குறிப்பிட்டாலும் அதற்கு முன்பு அது இருக்கும் கைபர் பெல்ட் பகுதியை பற்றிய கூடுதல் ஆய்வு தேவை என்பதை ஆராய்ச்சி யாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அந்த தகவலைப் பெற முடிந்தால் புதிய கோளைப் பற்றிய ஆய்வுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.