செங்கல்பட்டு,டிச.21- நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி என எதிர்க்கட்சியினர் ஒன்றிய அரசைக் குற்றம்சாட்டினர். இதன் எதிரொலியாக மக்களவையில் 14 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேனாள் மாவட்ட செயலாளர் தமிழரசன் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் மண்டல செயலாளர் கிட்டு கலந்துகொண்டார். அதேபோல் திருப் போரூர் பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் அஞ்சல் நிலையம் முன்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.