* நாடாளுமன்ற பாதுகாப்புக் குறைபற்றி கேட்டால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 143 பேரை ‘‘சஸ்பெண்ட்” செய்வதா?
* ‘மிமிக்ரி’ செய்த எதிர்க்கட்சி உறுப்பினரின் செய்கையை ‘‘ஜாதிப் பிரச்சினையாக” திசை திருப்புவதா?
* ராகுல் காந்தியை ‘பப்பு’ என்று கேலி செய்தவர் பிரதமர் மோடி என்பது மறந்து போயிற்றா?
எதிர்க்கட்சி உறுப்பினர் ‘மிமிக்ரி’ செய்ததை பொறுப்பு வாய்ந்த ஆளும் தரப்பினரே ஜாதிப் பிரச்சினையாக மாற்றி, ஜாதி வெறியைக் கிளப்புவது ஜனநாயக நெறிமுறைக்கு உகந்ததல்ல; அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் குழிதோண்டிப் புதைக்கவேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குதல் – ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும் என்று திருமதி சோனியா காந்தி அம்மையார் அவர்கள் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு சரியான கூற்றாகும்!
பிரதமர் பொறுப்பை ஏற்ற மோடி – அரசமைப்புச் சட்ட வடிவத்தை விழுந்து வணங்கியதுண்டே!
இரண்டாம் முறையாக பதவியேற்கும்போது, பிரதமர் மோடி அவர்கள் மேடையை விட்டுக் கீழே இறங்கிச் சென்று, ‘அர சமைப்புச் சட்டம்’ என்று வரையறுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததை வணங்கி, கும்பிட்டுவிட்டுத்தான் மீண்டும் வந்து அமர்ந்தார்! அக்காட்சியை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
அதன் உண்மையான பொருள் அரசமைப்புச் சட்டத்தினை தனது அரசு முழுமையாக மதிக்கும்; அதன்படி நடந்துகொள்ளும் என்பதுதானே!
நமது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை – பீடிகையில் இந்த இறையாண்மை (சோசலிஸ்ட்), மதச்சார்பின்மை, ஜனநாயகக் குடியரசு ஆட்சி என்று தொடங்கி, ‘‘மக்களாகிய நாம் இந்தச் சட்டம் நமக்கு நாமே வழங்கிக் கொள்ளுகிற சட்டம்” என்று பிரகடனப்படுத்தி, அதன்மூலம், உண்மையான அதிகாரம் மக்களி டமே, மற்ற எவரிடமும் இல்லை என்பதை இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு தத்துவமாகவே (Constitutional Philosophy)பிரகடனப்படுத்தி உள்ளது!
விளக்கம் கேட்டால் வெளியேற்றுவதா?
மக்களின் அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன் றத்தின் மூலம் ஜனநாயக, குடியரசு ஆட்சி நடைபெறும் நிலையில், மக்களின் பிரதிநிதிகளான எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தையே அதிர்ச்சியடைத்தக்க நிகழ்வு நடந்தது ஏன்? எப்படி? என்று கேட்டு அறிந்துகொள்ள ஆளுமைத் தலைவர் பிரதமர் அல்லது சட்டம் – ஒழுங்குப் பொறுப்பு (குறிப்பாக டில்லி) உள்துறை அமைச்சரே அவைக்கு வந்து, தங்களுக்கு விளக்கம் தக்க முறையில் தரவேண்டும் என்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் கோருவது என்ன தேசிய குற்றமா? அல்லது தேச விரோத, ஜனநாயக விரோதமா?
வலியினால் அவதியுறுகிறவருக்குத் தேவைப்படும் உரிய சிகிச்சையைத் தரவேண்டுமே தவிர, ‘சத்தம் போடாதே’ என்று அவரது முதுகில் அடிப்பது நியாயமா?
அதுபோல, இப்பிரச்சினையில் வரலாறு காணாத வகையில் நேற்றுவரை 143 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து இத்தொடர் முழுவதும் கலந்துகொள்ளக் கூடாது என்று ‘‘சஸ்பெண்ட்” செய்யப்பட்டுள்ளது – மக்களால் ஏற்கத்தக்கதா?
அப்படி சஸ்பெண்ட் நிலையில், ஜனநாயக உரிமைகளை – இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளையே பறிக்கும் வகையில், 5 மசோதாக்கள், போதிய விவாதமேயின்றி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மட்டுமே உள்ள அவையில், அவசரக் கோலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன!
தனி மனிதர் செய்ததை – 
ஜாதிவெறியாக மாற்றுவதா?
முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ‘‘இப்படி 143 எதிர்க்கட்சி எம்.பி., க்களை சஸ்பெண்ட் செய்ததே இம்மாதிரி கொடுமையான பிரிவுகள் உள்ள (Draconian Laws) சட்டங்களை நிறைவேற்றச் செய்யப்பட்ட ஏற்பாடா?” என்று கேட்பதில் உள்ள நியாயமும், அர்த்தமும் புறந்தள்ளப்பட முடியாதவை அல்லவா?
மாநிலங்களவைத் தலைவர்பற்றி ஒரு உறுப்பினர் வெளியில் ‘மிமிக்ரி’ செய்தார் என்பதைக் கண்டிக்க அவருக்கோ, பிரதமர் போன்றவர்களுக்கோ உரிமை உண்டு. ஆனால், அந்த தனி மனிதர்பற்றிய ஒரு செயலை, அவர் சார்ந்த ‘ஜாட்’ ஜாதி மக்களையே இழிவுபடுத்திவிட்டார் என்று பழி சுமத்தி, ஜாதி வெறியைக் கிளறுவது எவ்வகையில் அரசியல் நியாயமாகும்?
சட்டம் – ஒழுங்கை நாட்டில் நிலைநாட்டும் பொறுப்புடைய ஆட்சியாளர்களே அதைச் செய்வது எவ்வகையில் ஏற்கத்தக்கது?
ராகுல் காந்தியை ‘பப்பு’ என்று 
கேலி செய்தவர் யார்?
அகில இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினருமான மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் இதுபற்றி எழுப்பிய கேள்வி மிகவும் ஆணித்தரமானது!
‘‘எனக்கு பல நேரங்களில் மாநிலங்களவைத் தலைவர், பேச வாய்ப்புத் தருவதில்லை. அதற்காக நான் அவர் தலித்து சமுதாயத் தைப் புறக்கணித்து அவமானப்படுத்துகின்றார் என்று அவர்மீது, ஜாதியைக் கிளப்பி குற்றம்சாட்டினால், அதை நீங்கள் எவராவது ஏற்பீர்களா?” என்று சம்மட்டி அடி கேள்வி கேட்டிருக்கிறார்!
2018 ஆம் ஆண்டில் பி.ஜே.பி. தலைமையிலான (என்.டி.ஏ.) தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிமீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது பிரதமர் மோடி என்ன செய்தார்?
ராகுல் காந்தியைப் பார்த்து ‘‘பப்பு” என்று சைகைமூலம் ‘மிமிக்ரி’ செய்யவில்லையா? பி.ஜே.பி. உறுப்பினர்கள் சிரித்து ஆரவாரம் செய்யவில்லையா?
அதற்கு, ‘‘மோடி ஜி நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள்; ஆனால், உங்களை நான் வெறுக்கவில்லை!” என்றாரே ராகுல்காந்தி, அந்தப் பெருந்தன்மை எங்கே? பிரதமர் உள்ளிட்ட பி.ஜே.பி.யினரின் பெருந்தன்மை எங்கே?
பா.ஜ.க.வின் அண்மைக்கால அரசு, திரிபுவாதம், திசை திருப்பல் போன்று நடந்து வருவதற்கு மாநிலங்களவைத் தலைவர் பற்றிய ஒரு கேலிப் பேச்சும்கூட ‘அரசியல் மூலதனமாக’ தங்களுக்குப் பயன்படவேண்டும் என்ற நினைப்பின் பார, தூர விளைவுகள் ஜாதிக் கலவரத் தூண்டுதல்போல் ஆகிவிட்டால், நாட்டு நலத்திற்கு அதைவிட பெரும் ஆபத்து என்னவாக இருக்க முடியும்?
அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை புதைகுழிக்கு அனுப்பவேண்டாம்!
தனி நபர் விமர்சனங்களை ஜாதி, மதத்திற்கு எதிரானதாகத் திருப்புதல் ஒருபோதும் ஆரோக்கிய அரசியல் ஆகாது!
அரசமைப்புச் சட்ட விழுமியங்களைப் புதைகுழிக்கு அனுப்ப – அதைப் பிழைக்க வைக்கவேண்டிய கடமையாளர்களான ஆட்சியாளர்களே முன்வந்தால், ஜனநாயகமே கேலிக்கூத்தாகி விடும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.12.2023

 
			 
		 
		 
		 
		 
		 
		 
		 
		![இ.மு.சுப்பிரமணியம் நினைவுநாள் [24.3.1975] இந்நாள் இ.மு.சுப்பிரமணியம் நினைவு நாள். ஆசிரியர் அறிக்கை](https://viduthalai.in/wp-content/uploads/2024/03/9-36-330x220.jpg) 
		