கோதாமேஸ்வர் மகாதேவ் கோயில். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ளது. அந்தக் கோயில் நிர்வாகம் அங்குள்ள கோயில் குளத்தில் குளித்தவர்கள் கேட்டுக்கொண்டால் அவர்களுக்குப் ‘பாவங்கள் தீர்ந்தன’ என்று சான்றிதழ் வழங்குகிறது. இந்தியாவிலேயே கோயில்களில், ‘பாவம் தீர்ந்தது’ என்று சான்றிதழ் கொடுக்கும் வழக்கம் இங்குதான் உள்ளது. இங்கு அதைக் கேட்டுப் பெறுபவர்கள் நாளுக்கு 300 பேர் என்கிறது கோவில் நிர்வாகம்.
தற்போது கோயில் நிர்வாகத்திற்கு மேலும் ஒரு சிக்கல் வந்து சேர்ந்துள்ளது. கோயில் குளக்கரையில் பல்வேறு பார்ப்பனர்கள் உட்கார்ந்து கொண்டு பூஜைகள் செய்து கொடுத்து, அவர்களும் பாவம் நீக்கிய சான்றிதழைக் கொடுக்கின்றனர். இதற்கு அவர்கள் காரணமாகக் கூறும் போது “குளத்தில் இறங்கி தலைமுழுகி வந்தால் மட்டும் போதாது; பார்ப்பன அர்ச்சகரை சந்தித்து மந்திரம் ஓதி அவர் கொடுக்கும் தீர்த்தம் மற்றும் பிரசாதம் பெற்றுக் கொண்ட பிறகு அவர்களுக்குத் தட்சணை வைத்து அவர்கள் மூலம் பெறப்படும் சான்றிதழ்தான் உண்மையானது” என்று கூறி வருகின்றனர். இதனால் கோவில் நிர்வாகம் குழப்பத்தில் உள்ளதாம். பார்ப்பனர்களைக் கட்டுப்படுத்தவும் முடியாமல், மக்களுக்குத் தகவல் சொல்லவும் முடியாமல் குழம்பி வருகிறதாம்.
இந்த நிலையில் புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. கோயில் நிர்வாகம். அதாவது, “இனிமேல் பாவம் நீக்கிய சான்றிதழ் பெறும் நபர்கள் வெளியாட்கள் யாரிடமும் ஏமாறவேண்டாம் கோயில் நிர்வாகம் மூலம். இனி நேரடியாக ‘வாட்ஸ் அப்’ மற்றும் மின்னஞ்சலில் சான்றிதழ் அனுப்பும் முறையையும் கொண்டுவந்துள்ளோம், நீங்கள் குளித்துவிட்டு கோயில் வாசலில் உள்ள க்யூ ஆர் கோட்டை தங்களின் கைப்பேசியில் ஸ்கேன் செய்தால், ஒரு படிவம் தென்படும் அதில் உங்களது பெயரைப் பதிவிட்டால் அடுத்த சில விநாடிகளில் உங்கள் பெயருக்கான பாவம் தீர்ந்து போனது என்ற சான்றிதழ் கைப்பேசியில் வந்துவிடும். மேலும் நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சலிலும் வந்துவிடும் இனிமேல் வெளியாட்கள் கொடுக்கும் சான்றிதழ்களால் பாவம் தீராது” என்று புதிதாக அறிவிப்பு ஒன்றை வைத்துள்ளது. இதற்குக் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரணம் அவர்கள் தான் ஊரிலிருந்து தங்களது உறவினர்களை அழைத்து வந்து கோயில் குளத்தில் மந்திரம் சொல்லி சான்றிதழ் கொடுக்கும் வேலைக்கு அமர்த்தி சான்றிதழ் கட்டுகளைக் கொடுத்து எத்தனை சான்றிதழ்கள் கொடுத்துள்ளார்களோ, அதற்கு ஏற்றாற் போல் சான்றிதழ் வாங்கும் நபர்களிடமிருந்து பெறப்படும் பணத்தில் ‘கமிசன்’ எடுத்துக் கொள்கின்றனர். நவீன க்யு ஆர் கோடு மூலம் ‘கமிசன்’ வாராமல் போகும் என்பதால் க்யூ ஆர் கோட்டின் மீது தார் ஊற்றி வைத்துள்ளனர்.
மேலும் சிலர் தங்களே சொந்தமாக க்யூ ஆர் கோட்டை உருவாக்கி, அதில் பணம் செலுத்துங்கள் சான்றிதழ் கொடுக்கிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றிவருவதால் கோவில் நிர்வாகம் திகைத்து நிற்கிறது.
மதம், கோயில் பக்தி என்பது எவ்வளவுக் கீழிறக்கத்திற்குச் சென்று விட்டது பார்த்தீர்களா?
“பக்தி என்பது ஒரு ஃபேஷன்; பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது” என்று 1976 மே மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறியதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.
பாவத்தைப் போக்க பணம் கொடுத்து சர்டிபிகேட் வாங்கலாம் என்றால், மனிதன் எந்தப் பாவத்தைச் செய்யத் தான் தயங்குவான்?
ஒழுக்கக் கேட்டை வளர்க்கத்தான் கோயிலும், கடவுளும் பார்ப்பனீயமும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
வாரா வாரம் ஆன்மிக இதழ்களை வெளியிடும் ஏடுகள் இதற்காக வெட்கப்பட வேண்டாமா?