நாங்கள் செய்யவேண்டிய பணிகளை திராவிடர்
கழகத் தோழர்கள் செய்வது பாராட்டத்தக்கது!
பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள், பெரியார் மருத்துவக் குழுமம் மருத்துவர்களுக்குத்
திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் தாயகம் கவி நன்றி, பாராட்டு!
சென்னை, டிச.20 ‘‘நாங்கள் செய்யவேண்டிய பணிகளை திராவிடர் கழகத் தோழர்கள் செய்வது பாராட்டத்தக்கது” என்று திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி அவர்கள், பெரியார் தொண்டறம் அணித் தோழர் கள், பெரியார் மருத்துவக் குழுமம் மருத்துவர்களுக்குத் நன்றி, பாராட்டு தெரிவித்து உரையாற்றினார்.
5 பகுதிகளில் மருத்துவ முகாம்கள்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 3, 4 ஆகிய இரண்டு நாட்களில் புயல் காரணமாக மேகவெடிப்பு ஏற்பட்டது போல் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத அதிகன மழையால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாயினர். ஒரு பக்கம் அரசும், மனித நேயம் உள்ளவர்கள் அனைவரும் இன்னொரு பக்கமாக இருந்து இப்பேரிடர் நிவாரணப் பணிகளில் தங்களை ஒப்படைத்துக் கொண்டனர். அதில் பெரியார் தொண்டறம் அணி, பெரியார் மருத்துவக் குழுமம் ஆகிய இரண்டு தொண்டு அமைப்புகளும் தங்களின் அதிகபட்ச உழைப்பை நல்கி, வாய்ப்பு உள்ளவர்களிடம் உதவிகள் பெற்று தேவைப்படும் 15 ஆயிரம் மக்களுக்கு அதைக் கொண்டு போய் சேர்த்தனர். இப்பணிகள் 6 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரையிலும், அடுத்து மருத்துவ முகாம் பணிகள் 16 ஆம் தேதி தொடங்கி 17 ஆகிய இரண்டு நாள்களும் 5 பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்தனர்.
திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் தாயகம் கவி
இப்பணிகளில் வடசென்னையில் வ.உ.சி. நகரில் கழகத் தோழர்கள், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் தாயகம் கவி அவர்களை அழைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். இதன்படியே மக்களுக்கு ஓரளவுக்கு மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு கிடைத்துவிட்டது.
சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உரையாற்றும் போது, ‘‘பெரியார் மருத்துவக் குழுமத்தின் மருத்துவ சேவைக்கு வெகுவாக நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். இந்தப் பணி நடத்தப்படுவதின்மூலம் எங்களுக் குரிய சுமை வெகுவாகக் குறைகின்றது. நாங்கள் மேற் கொள்ளவேண்டிய இப்பணிகளை திராவிடர் கழகத் தோழர்கள் செய்வது கண்டு பெரிதும் மகிழ்ச்சியடை கிறேன்” என்றார்.
ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம்!
ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்து அதிக மக்களிடம் மருத்துவ முகாம் நடக்கிறது என்பதை விளம்பரம் செய்தனர். இதனால் 1000 குடும்பங்களில் உள்ள அப்பகுதியில் 254 பேர் வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.
இதற்கு மூன்று நாட்கள் முன்பிருந்தேபெரியார் மருத்துவக் குழுமம் சார்பாக நடத்த விருக்கும் மருத்துவ முகாம்களுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறந்த மருத்துவர் களிடம் தற்போது மக்களுக்கு என்ன வகையான மருத்துவம் தேவை என்று கேட்டறிந்து அதற்கான பட்டியல் தயாரித்தல், அந்த மருந்துகளை பெறுவதற்கான நன்கொடையாளர்களை அணுகுவது, மருந்துகளை வாங்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் பெண் களுக்கு சானிட்டரி நாப்கின்கள் தேவைப்படுகின்றன என்று கோரிக்கையை ஏற்று அதற்கான முயற்சிகள் எடுத்து, Child Help Foundation மூலம் நாப்கின்கள் பெறப்பட்டன.
தொண்டு செய்த மருத்துவத் துறை தோழர்கள்
இதற்காக பெரியார் மருத்துவக் குழுமத்தின் செய லாளரும் மருத்துவருமான ச.மீனாம்பாள் வழிகாட்டுத லில் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மை யார் மருத்துவமனை மருத்துவர் பா.யுவேதா, மார்பகப் புற்றுநோய் நிபுணர்களான மருத்துவர்கள் அரவிந்த், தினேஷ், சென்னை முகப்பேர் ராஜம் மருத்துவமனை மருத்துவர் சகிலா, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவக் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் காந்திமதி, குழந்தைகள் நல மருத்துவர் திட்டக்குடி செந்தில், தேனி அரசு செவிலியர் கல்லூரியின் மேனாள் முதல்வர் பெரியார் செல்வி, சிறப்பு இதயநோய் நிபுணர் ஹரிஹரன், மருத்துவர்கள் நந்தா, அருண் சங்கர், செவிலியர்கள் ஷபானா, ஆக்னஸ், லோகசிரி, மீனா, அபிநயா, சுதாகர், அபி, அபிஷா, உமா, லூசி, ரூபினி, சகிலா, முருகம்மா, ‘ரேடியோ ஆன்காலஜிஸ்ட்’ சங்கீதா, எம்.எம்.சி. முதுநிலை மாணவர் சகீலா பேகம், ரேடியோ தெரபிஸ்ட் ஜான்கிசோர், உதயகுமார் ஆகி யோர் மருத்துவ முகாமை சிறப்பாக நடத்துவதற்கு தொண்டு செய்த மருத்துவத் துறை தோழர்களாவர்.
பணிகள் இத்துடன் ஓய்ந்துவிடவில்லை. அடுத்த முகாம் எங்கே நடத்தலாம் என்பது குறித்து ஒருங் கிணைப்பாளர்கள் ஆலோசித்து வருகிறார்கள் என் பதும் குறிப்பிடத்தக்கது.